சுஜாதாவின் சிறுகதை – “பொறுப்பு”

கௌரி கிருபானந்தன் அனுப்பி இருக்கிறார். அவருக்கு நன்றி!

நான் இந்த சிறுகதையைப் படித்ததில்லை. முதல் சில பாராக்களிலேயே முடிச்சு, முடிச்சு எப்படி அவிழப் போகிறது என்பது புரிந்துவிட்டாலும் அதை அவர் அடுக்கி இருக்கும் விதம் – எல்லாருடனுடம் சண்டை போடும் கணவனின் சித்திரம், ஹாக்கி மட்டை என்று கதையை செலுத்தி இருக்கும் தொழில் நுட்பம் (craft) மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எனக்கெல்லாம் முடிச்சு இரண்டு பாராவுக்கு மேல் போக வைப்பதற்குள் ததிங்கினத்தோம் ஆக இருக்கிறது. என்றாவது கை வரும் என்ற நம்பிக்கையில்தான் ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

16-02-1997-இல் குமுதத்தில் வெளியான சிறுகதை. அப்போது அவர் குமுதம் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன்.

பொறுப்பு

சுதாகர் சாலை விபத்தில் இறந்த செய்தியை அவன் மனைவியிடம் உடனே சொல்லி, அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர வேண்டிய பொறுப்பு என் தலையில் விழுந்தது.
ஆபீசில் ரமணன், செங்குட்டுவன், பிரெடரிக், முத்துசாமி அனைவரும் இந்தப் பொறுப்பை ஏற்கவோ, அட துணையாக என்னுடன் வரக்கூட மறுத்து விட்டார்கள்.
“இதெல்லாம் வெல்ஃபேர் டிபார்ட்மென்ட் வேலை. நீ ஏன் இதில் போய் மாட்டிக் கொள்கிறாய்? அந்தம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டா யார் பொறுப்பு?”
“இல்லைப்பா. சுதாகரின் உயிர் நண்பன் என்கிற தகுதியில் என்னை போகச் சொன்னார் ஜி.எம்.”
‘நண்பனா! சுதாகருக்கா? நீயா?”
“இவன்தாண்டா அந்த சிடுமூஞ்சிகிட்ட ஒண்ணு ரெண்டு வார்த்தையாவது பேசியிருக்கான்.”
உண்மைதான். சுதாகர் ஆபீசில் மற்றவரிடம் வலிந்து ஏதும் பேச மாட்டான். எட்டு கேள்விக்கு ஒரு பதில் சொல்லிவிட்டு தன் வேலையில் ஈடுபடுவான். எப்போதும் அவன் முகத்தில் ஒரு விரோதம் இருக்கும். அவன் அந்தரங்க எண்ணங்களின் உலகில் குறுக்கிடுவது போல். கிட்டே பழக எப்படிப்பட்டவன், அவனுக்கு ஏதாவது தனிப்பட்ட பொழுதுபோக்கு உண்டா, புத்தகம் படிப்பானா, மோர்சிங் வாசிப்பானா? எதுவும் ‘ஆபீஸ் நண்பன்’ என்று சொல்லப்படும் எனக்குக் கூடத் தெரிவதற்குள் இறந்து போய் விட்டான்.
என்ன பேசினோம் என்று நினைவு கூற முயற்சித்தேன். ம்ஹூம்! அடடா… இப்படி அல்பாயுசாக செத்துப் போகப் போகிறான் என்று தெரிந்திருந்தால் அவன் பேச்சை கவனித்திருக்கலாமே என்று தோன்றியது.
கணவன் இறந்த செய்தியை மனைவியிடம் அஞ்சல் செய்யும் பொறுப்பு வாழ்வில் மிக மிக அரிய சங்கடம். அதைச் சமாளிக்க எனக்கு அனுபவம் இல்லை.
மேலதிகாரி அனந்தாச்சாரி சொன்னார். “மெல்ல சொல்லு. அவங்க மனைவி கிராஜுவேட்னு பர்சனல் ரிகார்ட்ஸ்லிருந்து தெரியுது. அப்ளிகேஷன் போட்டா நம்ம ஆபீஸ்லேயே ஒரு வருஷத்துக்குள்ள வேலை கிடைக்கும்னு சொல்லு. கிராச்சுடி, பிராவிடண்ட் பண்டு எல்லா பணத்தையும் ஒண்ணாம் தேதி கொடுத்து விடுவோம்னு சொல்லு.”
சுதாகர் எங்கள் ஆபீசில் செலக்டிவ் கிரேடு அட்மினிஸ்ட்ரேட் அசிஸ்டன்டாக இருக்கிறான். மன்னிக்கவும். இருந்தான். அடுத்த ப்ரமோஷனில் ஆபீசராகும் தகுதி பெற்றிருப்பான். வயது சமார் முப்பத்தைந்து. இவ்வளவுதான் தெரியும். அவனை நான் ஆபீசுக்கு வெளியே இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். கல்யாணம் ஆனபோது, தீபாவளியில் நாங்க பிக்னிக் போனபோது. ஒரு ஓரத்தில், அலுமினிய நாற்காலி போட்டுக் கொண்டு காலை வேகமாக ஆட்டிக் கொண்டு சுதாகர் புத்தகம் படித்துக் கொண்டுக்க, இந்தப் பெண் அவனுக்கு எலுமிச்சை ரசம் கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. இறந்து போனவனைப் பற்றி சிறப்பாக நினைத்துப் பார்க்க எலுமிச்ச ரசம் போதுமா? அவள் பெயர் கூட ஞாபகமில்லை. அனந்தாச்சாரி சுலபமாகச் சொல்லிவிட்டார். ஆனால் துக்கச் செய்தி சொல்வது எப்படி என்று யாரும் புத்தகம் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. பிரெடரிக் சொன்னது போல் மயக்கம் போட்டு விழுந்து விட்டால்? அவளை கைத் தாங்ககல்லாக ஏந்திக் கொள்வது ரசாபாசமாக இருக்குமோ?
ஃபோன் பேசி முதலில் தெரிவித்து விடலாம் என்று நினைத்தேன். நேரில் சொல்வதுதான் முறை. உடனே மருத்துவ உதவி தேவையாக இருந்தால் ஆபீஸ் காரிலேயே அழைத்துச் செல்லலாம்.
தேனாம்பேட்டை சிக்னல் வழக்கம் போல் வேலை செய்யாமல் வண்டிகள் குழப்பமாக கடந்து கொண்டிருக்க முழுவதும் அடைத்திருந்தது. போலீஸ்காரர் எதிர் கடையில் நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். எல்லாம் ஒரே சமயத்தில் கடக்க முயற்சித்ததாலும், கிடைத்த சந்திலெல்லாம் இரு சக்கரிகள் மூக்கை நீட்டியதாலும் ஏற்பட்ட குழப்பம் நீங்க பத்து நிமிஷமாவது ஆகும் போல் இருந்தது. யோசித்தேன். செத்துப் போய்விட்ட செய்தியை அவளிடம் இப்போது சொல்ல வேண்டாம் என்று தீர்மானித்தேன்.
முதலில் அவள் அப்பா, அம்மா எங்கிருக்கிறார்கள் என்று கண்டு பிடித்து தந்தி கொடுத்து வர வழைத்து விட்டு அவர்கள் முன்னிலையில் மரணச் செய்தியை சொல்லலாம் என்று தீர்மானித்தேன்.
அது வரை?
சுதாகரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். கவலைப்படும்படியாக எதுவும் இல்லை. உங்களுக்கு தைரியம் சொல்லவே ஆபீசில் என்னை அனுப்பியிருக்கிறார்கள். துணைக்கு யாரும் இல்லையென்றால் எதற்கும் உங்கள் அப்பா, அம்மாவை வரவழைப்பது நல்லது. அவன் ஆஸ்பத்திரியிலிருந்து வரக் கொஞ்சம் நாளாகும். இப்படி சமாளிக்கலாம் என்று தோன்றியது.
சுதாகரின் வீடு பாலாஜி நகரில் ஒரு ராட்சச வளாகத்தில் இருந்தது. முன்னேற்கவே இருந்த ஃபிளாட் வாசலில் கோலம் ஒட்ட வைத்திருந்தது. ‘வெல்கம்’ என்று பழைய பாணி பலகையைப் பார்த்ததும் ‘திக்’ கென்றது.
கதவு திறந்தவள் கல்யாணத்திலும், பிக்னிக்கிலும் பார்த்ததிலிருந்து இரட்டிப்பு வேகத்தில் வயது கூடியிருந்தாள்.
புறக்கணித்த நரைக்கீற்று, கலைந்த கூந்தல். புடவைத் தலைப்பால் கன்னத்தை ஒத்திக் கொண்டு “அவர் இல்லையே? நீங்க யாரு?”
“என் பேர் ரங்கநாதன்மா! சுதாகரோட கலீக்.”
“அவர் ஆபீஸ்தானே போயிருக்கிறார்?”
“தெரியும் மிசஸ் சுதாகர். உட்கார்ந்துக்குங்க. ஒரு சின்ன அதிர்ச்சி தரக்கூடிய சேதி. பயப்படாதீங்க. உட்காருங்க முதல்ல.” எதற்குச் உட்காரச் சொல்கிறேன்?
“அவருக்கு ஏதாவது ஆயிடுத்தா?”
“ஒரு சாலை விபத்தில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கோம். பயப்படாதீங்க. உங்ககிட்ட சொல்லிட்டு வரச் சொன்னார்.”
“அவருக்கு ஒண்ணும் இல்லையே? பெரிசா அடிகிடி ஏதும் இல்லையே?”
“இ.. இல்லைதான்.”
“கண்ணாடி மாத்திக்கோங்கன்னு எத்தனை தேவை சொல்லியாச்சு? கேட்டாதானே? எல்லாத்லேயும் பிடிவாதம். அதும் மனைவி சொல்லிட்டா கேக்கவே கூடாதுன்னு வைராக்கியம். உக்காருங்க. காப்பி சாப்பிடறீங்களா?”
“இல்லம்மா. நான் உங்ககிட்ட சேதி சொல்லிவிட்டு உங்க ஒத்தாசைக்கு யாரும் இருக்காங்களான்னு பாத்துவிட்டு ஆபீசுக்கு போகணும்.”
“ரொம்ப தாங்க்ஸ். எந்த ஆஸ்பத்திரி?”
“ராயப்பேட்டா.”
“இப்போ உள்ளே விடுவாளோ, போய்ப் பார்க்கலாமோ?”
எப்படிச் சொல்வேன்? “பார்வையாளர் நேரம்னு சாயங்காலம் அஞ்சு மணிக்கு நானே வந்து அழைச்சுண்டு போறேன். அதுக்குள்ள தெரிஞ்சவா யாரையாவது..”
“பெரிசா அடிகிடி இல்லைதானே?”
“இல்லை” என்றேன். எனக்கு கழுத்துப் பக்கம் வியர்த்தது.
“ப்ராக்சரா?”
‘தெரியலை. நானே போய் இன்னும் டாக்டர் கிட்ட பேசலை.” (பேசியாகி விட்டது.”இந்தாள் அங்கேயே காலமாயிட்டாருங்க. ஒரே ஒரு நல்ல விஷயம். அதிகம் சபர் பண்ணாம போயிட்டார்.”) ஒரு பொய்யில் ஆரம்பித்து எத்தனை பொய்? “டாக்டர் சரியாய்டும்னு சொன்னாராம். உங்க அம்மா, அப்பா எங்க இருக்காங்க மிசஸ் சுதாகர்?”
‘ஹைதராபாத்தில். ஏன்?”
“இல்லை. நீங்க தனியா இருக்கிறதால உங்களுக்குத் துணையாய் அவங்களை போன் பண்ணி வர வழைக்கலாமேன்னு.”
“அவா இதுக்கெல்லாம் வரமாட்டா.”
“ஏன்?”
‘சண்டை போட்டுட்டார்.”
“……..”
“ஒரு ஸ்கூட்டர் விஷயத்தில் அதெல்லாம் எதுக்கு? பகைச்சுண்டாச்சு. அவரால் நானும் பகச்சுண்டாச்சு. பிறந்தாத்தோட எல்லா உறவுகளையும் துண்டிச்சுண்டாச்சு. திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்னுட்டா.”
“அப்படியா? சென்னைல இவருடைய உறவுக்காறாங்க யாரும் இல்லையா?”
“இருக்காங்க. நாத்தனார் அடையார்ல இருக்கா. ஒரு அண்ணா அசோக்நகர்ல.”
“அவங்களை கூட்டு வெச்சுக்கலாமே?”
“எதுக்கு?”
“சும்மா ஒரு…… ஒரு ஒத்தாசைக்குத்தான்.”
“அப்படி ஒண்ணும் சொல்லிக் கொள்ளும்படியா இல்லை உறவு.”
“அப்பா உங்களுக்கு ஒத்தாசைக்கு?”
“ஒத்தாசைன்னா நண்பர்கள்தான். இந்த பில்டிங்ல மாத்திரம் இருபத்துநாலு ப்ளாட்டு. அதில் இருபதாம் நம்பர் கூட மட்டும் தான் கல்யாணம் கார்த்தின்னா கொஞ்சம் போக்குவரத்து. மற்றவாளோட இவருக்கு ஏதாவது ஒரு காரணத்தில சண்டை. ஸ்கூட்டரை நிறுத்தறதில சண்டை. பசங்க பந்து அடிக்கறதில சண்டை. குப்பை போடறதில் சண்டை. இப்ப கூட இவர் ஆக்சிடென்ட் ஆயிருக்கோல்லியோ. போலீஸ்காரன் தப்பு, சரியா சிக்னல் காட்டலை. சைக்கிள்காரன்… ஏன் என் மேல கூட தப்பு சொன்னாலும் ஆச்சரியமில்லை. கார்த்தாலை சண்டை போட்டார். அதையே நினைச்சுண்டு போனேன்னு இப்படித்தான் சொல்வாரே தவிர, தான் சரியா ஓட்டலைன்னு ஒப்புக்கவே மாட்டார். நல்லவேளை நான் பின்னால இல்லை. கொஞ்ச நாள் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தாலாவது புத்தி வராதா பார்க்கலாம். ஒரு நிமிஷம் இருங்க” என்று உள்ளே சென்றாள்.
“காப்பி எல்லாம் வேண்டாம்மா.”
“செ.. செ.. அவர் கோவிச்சுப்பாரே, ஏன் காப்பி கொடுக்கலைன்னு?”
கோவிச்சுக்க மாட்டார்.
திரையை மறுபடி திறந்து, “இதில் வேடிக்கை என்னான்னா காபி கொடுத்தாலும் சில வேளைல கோவிச்சுப்பார்.”
அய்யோ தலையெழுத்து! எத்தனை மணி நேரம் இந்தப் பொய்யை நடத்த வேண்டி வரும்?
ஹாலில் மாட்டியிருந்த காலண்டர்களைப் பார்த்தேன். டி.வி. மேல், சுவரில் எல்லா போட்டோக்களிலும் சுதாகர் இருக்கான். குளிர்ப்பெட்டி மேல் சின்ன தொட்டியில் மீன்கள் கவனித்துக் கொண்டிருந்தன. அலமாரியில் காசெட்டுகள் அடுக்கியிருந்தன. மூலையில் ஒரு ஹாக்கி மட்டை மாட்டியிருந்தது. ஸ்கூட்டரின் டூல் பேக் அலமாரியில், கடிதங்களின் அருகில் இருந்தது. அவன் ஸ்கூட்டர் இன்னும் அங்கேயே கிடைக்குமா இல்லை இழுத்துப் போட்டிருப்பார்களா? சாலையில் தெரிந்த ரத்தக் கறையை மனதில் அழித்துக் கொண்டேன்/ அவள் கோப்பையில் காப்பி கொண்டு வந்து முக்காலியில் நகர்த்தி அதன் மேல் வைத்து, “டிவி போடலாம்னா அது ரிப்பேர். அதுக்குக் கூட நான்தான் காரணம். வெச்சு திருகிட்டேனாம். நிம்மதியா இருக்குன்னு பதினைஞ்சு நாளா ரிப்பேருக்குக் கொடுக்காம வெச்சிருக்கார்”
“உங்க கணவர் உறவுக்காரங்க மெட்ராஸ்லதான் இருக்காங்க இல்லை?”
“ஆமா. ஒரு அக்கா, ஒரு அண்ணா.”
‘அவங்கள்ள யாரையாவது உங்களுக்குத் துணையா வரச் சொல்லிடுங்களேன்.”
“ரெண்டு பேரோடையும் சண்டைன்னு சொன்னேனே.”
“அப்படியா?”
“அண்ணா சுவீகாரம் போயிட்டார். அவருக்கு சொத்து பிரிக்கறதில… என்ன பெரிய சொத்து? ஒரு ஓட்டை வீடு. அதுக்கு கோர்ட்டுக்கு நடைய நடந்தாச்சு. தனக்கு நெறைய எடுத்துண்டு இவருக்கு நாமம் போட்டான்னு. என்னவோ, நான் இதையெல்லாம் கேக்கறதே இல்லை. நான் உண்டு என் குழந்தைகள் உண்டு. ரெண்டையும் முனைஞ்சு படிக்க வெச்சுட்டம்னா கடமை முடிஞ்சது. உங்களை ஒண்ணு கேட்கணும் எனக்கு ஆபீஸ்ல கூட இப்படித்தான் இருப்பாரான்னு., எப்பப் பார்த்தாலும் கோவிச்சுண்டு.”
“இல்லைம்மா. அவர் வேலையை ஒழுங்கா செஞ்சுடுவார். அதிகம் பேச மாட்டார். அவ்வளவுதான்.”
“யாருமே வேண்டாம் அவருக்கு. உறவு வேண்டாம், சிநேகிதம் வேண்டாம். மணிக்கணக்கா மீனைப் பார்த்துண்டிருப்பார்.”
சைக்கிள் ரிக்ஷாகாரன் மணியை சப்தமிட, உள்ளே அந்தப் பெண் ஓடி வந்தாள்.
“என்னடி? இதான் மஞ்சு. மாமாவுக்கு அலோ சொல்லு.”
“மம்மி! இன்னிக்கு எனக்கு சுட்டி.”
“எதுக்குடி?”
“யாரோ செத்துப் போயிட்டா” என்று கைகொட்டி சிரித்தாள்.
“செத்துப் போனதுக்கு சிரிக்கக் கூடாது கண்ணு.”
“அழணுமா?”
“மாமாவுக்கு ரைம்ஸ் சொல்லு.”
“மாமா யாரு?”
“அப்பாவோட பிரண்டு. ஆபீஸ்ல வேலை செய்யறவர். உங்க பேரைக் கூட கேட்டு வேச்சுகலை. என்னவோ சொன்னீங்களே?”
“ரங்கநாதன்”
அந்தப் பெண் சுருக்கமாக இரட்டைப் பின்னல் பின்னி, உப்பலான கன்னத்துடன் நெற்றியில் பொட்டுடன் கடவுளின் அடையாளங்கள் இன்னும் பாக்கியிருந்தன. அய்யோ! எப்படி இவள் இந்த செய்தியை தாங்கிக் கொள்ளப் போகிறாள்?
“உங்களுக்கு கல்யாணம் ஆச்சா?” என்றாள் மனைவி.
“இல்லைம்மா. தங்கைக்கு கல்யாணம் தள்ளிண்டு போறது.”
“நிம்மதி. கல்யாணம் பண்ணிக்காதீங்கோ. நாங்கல்லாம் லோல்படறது போறும். ரொம்ப பாடு. பிள்ளைகளை வளர்க்கிறதும், மாத்தி மாத்தி அவர்களுக்கு உடம்புக்கு வரதும். அப்புறம் எதுக்கு கோவிச்சுப்பார், எதுக்கு கோவிச்சுக்க மாட்டார்னு இவரோட பதிமூணு வருஷம் குடித்தனம் பண்ணியிருக்கேன். இன்னும் எனக்குப் புரிபடலை. இதையெல்லாம் அவர்கிட்ட சொல்லிடாதீங்க. ஏற்கனவே முன்கோவம். அப்புறம் ஒரு மாசம் பேச மாட்டார்.”
நான் காப்பி அருந்திவிட்டு புறப்படத் தயாரானேன்.
“சாயங்காலம் ஆஸ்பத்திரிக்கு வரணுமா? டிஸ்சார்ஜ் பண்ணிடுவாளா? நான் வந்தா நீ ஏன் வந்தே? ஆசாமி செத்துத்தான் போயிட்டானான்னு கத்துவார்.”
செத்துதான் போயிட்டான் என்று இவளிடம் சொல்லும் பொறுப்பை ஏன் ஒத்திப் போடுகிறேன்? தனியாக ஒரு துயர மனைவியை சமாளிக்கும் அனுபவம் இலாததாலா? தைரியம் இல்லாததாலா? தயக்கமா?
“ஆஸ்பத்திரியிலிருந்து சாயங்காலத்துக்குள்ள வரமாட்டார். அதனால் யாரவது உறவுக்காரங்களை கூட்டு வெச்சுக்கறதுதான் நல்லது. அவர் பிரதர் அட்ரெஸ் சொல்லுங்க.”
முட்டாள் பெண்ணே! உனக்கு உள்ளுணர்வில் தெரியவில்லையா?’
“பிரதர் அட்ரெஸ் இல்லை. பரவாயில்லை. நான் ரோகிணியை, இருபதாம் நம்பர்லிருந்து கூட்டி வெச்சுக்கறேன். நீங்க என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. அவரை கவனிங்க.”
‘அப்ப ஒண்ணு பண்றேன் நான். ஆஸ்பத்திரி போயிட்டு..”
“நாங்க வந்து பார்க்கலாமான்னு கேட்டுருங்க”.
மற்றவன் மனைவியிடம் துக்கச் செய்தியை சொல்லும் போது மற்றொரு பெண் இருக்க வேண்டும். கட்டியணைத்து அழ ஒரு மார்பு வேண்டும். ஆபீசிலிருந்து மாலதி, சுதா, யாரையாவது போய் அழைத்து வந்து விடலாம் அதுதான் சரி. அதனால்தான் இன்னும் சொல்லாமல் மென்று முழுங்குகிறேன்.
புறப்படும்போது மூலையில் இருந்த அந்த ஹாக்கி மட்டையை மறுபடி பார்த்தேன். “சுதாகர் ஹாக்கி ஆடுவாரா?” என்றேன்.
“எப்பவோ ஆடியிருக்கார். இப்ப நாய் பூனையெல்லாம் அடிக்கறதுக்காக வெச்சிருக்கார்.”
அந்த பெண் ‘இதால அம்மாவையும் அடிப்பா. என்னையும் அடிப்பா அப்பா” என்றாள்.
மஞ்சு தன் மேல் சட்டையை உயர்த்தி திரும்பி “அம்மா அந்த தழும்பு காமி, மாமாவுக்கு முதுகுல.”
‘ஏய்.. பொய்யி, இவ ஏதோ சொல்றா” என்று என்னை அவசரமாகப் பார்த்து அவள் சட்டையை சரிப்படுத்தினாள்.
நான் புறப்பட்டு ஆபீஸ் காருக்குள் ஏறினேன். வாசல் வரை வந்து இருவருக்கும் நிற்க அந்தப் பெண் சின்ன விரல்களை விரித்து டாட்டா காட்டினாள்.
”‘போலாங்களா?”
“கொஞ்சம் இருப்பா.”
காரை விட்டு இறங்கி மீண்டும் அவளருகில் சென்றேன்.
“மன்னிச்சுக்கங்க. நான் உங்ககிட்ட உண்மையை மறைச்சேன். உங்க கணவர் சுதாகர் ஆக்சிடெண்டில் செத்துப் போயிட்டார். பாடியை மார்ச்சுவரில வெச்சிருக்காங்க” என்றேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம், எழுத்துக்கள், கௌரி பதிவுகள்

ரேடியோவில் பக்ஸ்

சில வாரங்களுக்கு முன் பக்ஸ் Itsdiff ரேடியோவில் முருகானந்தத்தோடு கொடுத்த நிகழ்ச்சி. புத்தகங்களைப் பற்றித்தான் (வேறென்ன?) பேச்சு. திருமலைராஜன், காவேரி அழைத்துப் பேசி இருக்கிறார்கள்.

“ஒரு பார்வையில் சென்னை நகரம்” – அசோகமித்திரன்

தோழி அருணாவின் மதிப்புரை. இந்த நொடி அவருடைய சடசடவென்ற பேச்சை மிஸ் செய்கிறேன். புத்தகம் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது, விலை அறுபது ரூபாய்.

அசோகமித்ரன் 1998-ஆம் ஆண்டு ஆறாம் திணை என்ற இணைய தளத்திற்காக சென்னையை பற்றிய கட்டுரைகள் எழுதும் பொழுது அவர் சென்னையில் ஏற்கனவே 50 வருடங்கள் வசித்திருக்கிறார். பின்னர் இக்கட்டுரைகள் ஒரு பார்வையில் சென்னை நகரம் என்று தொகுக்கப்பட்டு மனோகர் தேவதாஸின் கோட்டோவியங்களுடன் 2002-இல் புத்தகமாகவெளிவந்திருக்கிறது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகள், பூங்காக்கள், உணவகங்களைப் பற்றிய சுவையான பல தகவல்களை அவருக்கே உரிய தனி பாணி மற்றும் அங்கதத்துடன் சொல்கிறார். ஒரு தகவல் சார்ந்த கட்டுரையை கூட படு சுவாரசியமாக எழுதுவது எப்படி என்று நாமெல்லாம் கற்று கொள்ள முயற்சி செய்யலாம். ஒரு 100 வருட பயிற்சிக்கு பிறகு கொஞ்சம் பக்கத்தில் வரலாம்.

குரோம்பேட்டையில் ஷூக்களின் அடிப்பாகத்திற்கு உபயோகப்படுத்தப்படும் ஸோல்களுக்கான குரோம் தோல்கள் தயாரிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது; பார்க் டவுன் மெமோரியல் ஹால் இந்தியாவின் முதல் சுதந்திர போர் நடந்த 1857-ஆம் ஆண்டு கட்டப்பட்டது போன்ற அறிய தகவல்கள்; சைதாப்பேட்டையில் நிலவிய யானைக்கால் நோய், சென்னையில் அன்றைய பஸ்/ரயில் வசதி இல்லாமை ஆகியவற்றை தன் சுய குடும்ப சங்கடங்களுக்கு நடுவே வவரிக்கிறார்.

”தேனாம்பேட்டை நடனப் பெண்கள் சாத்தனூரிலும் மாமல்லபுரத்திலும் ஆடாத நாட்களில் ஸ்டூடியோக்களில் நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய சிரிப்புக்கும் உற்சாகத்திற்கும் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது. ஒவ்வொருவருக்கும் கலைமாமணி பரிசு கொடுத்தால் தகும்” போன்ற அன்றாட வாழ்க்கையின் அபத்தங்கள்; குரோம்பேட்டையில் என் நெருங்கிய உறவினர்கள் வீடு கட்டிக்கொண்டு போனபோது நான் மிகவும் அச்சப்பட்டேன். காரணம் அவர்கள் வீட்டில் எல்லோருக்குமே நீரிழிவு வியாதி. இவர்கள் எப்படி வைத்தியரிடம் போவார்கள்? உடல் நிலை நெருக்கடிகள் அவசியம் நேர்ந்திருக்கும். ஆனால் வெளியுலகத்தோடு இருந்த ஒரே தொடர்பான இரயில் நிலையத்துக்குத் தினம் நான்குமுறை நான்கு மைல் ஒற்றையடி பாதையில் நடந்து அல்லது சைக்கிளில் சென்று அவர்களுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது. கவலைப்பட்ட நான் மாதத்தில் பாதி நாட்கள் படுக்கையில் கிடக்கிறேன் போன்ற அங்கதங்கள் விரவிக்கிடக்கும் கட்டுரைகள்.

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் வசித்த லா.ச.ரா.வைப் பற்றி தேவி, அம்பாள், பாம்பு, புலி என இவர் எழுத்து பயமுறுத்தினாலும் அதே நேரத்தில் மனதைக் கிறங்க வைப்பவை. ஒரு பாராட்டு கூட்டத்தில் ஒரு வீட்டில் அவர் ருசியறிந்து காய்ந்த நார்த்தாங்காய் படைத்ததைக் கூறி அவர் கண் கலங்கினார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் கண் கலங்கியது. ஆழ்வார்பேட்டையில் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி இருவரும் எதிரும் புதிருமான வீடுகளில் வசிப்பவர்கள். இருவர் மகன்களும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள். இரு தந்தையரும் வீட்டில் இல்லை என்றால் அமெரிக்காதான் போயிருப்பார்கள் போன்ற சக எழுத்தாளர்கள் பற்றிய மெலிதான கிண்டல்கள்.

நான் சென்னையில் 15 வருடங்கள் வசித்திருக்கிறேன், அந்நகரின் சுவாரசிய சரித்திரத்தின் சில பகுதிகளை கூட அறியாமல். இக்கட்டுரைகள் எழுதிய கடந்த 14 ஆண்டுகளில், அதன் முந்தைய 50 ஆண்டுகளையும் விட நகரம் அசுர வேகத்தில் மாறி இருக்கிறது. அசோகமித்திரன் இப்போது அம்மாற்றத்தை பற்றி எழுதினால் எப்படி இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. மிக சுவாரசியமான புத்தகம். படியுங்கள். சென்னையின் வெயிலும், தற்போதைய குப்பையும், போக்குவரத்து நெரிசலும் எரிச்சல் படுத்தும் போது, அதன் கடந்த கால வரலாறு அந்த எரிச்சலை சமன் செய்யக்கூடும்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அருணா பதிவுகள், அசோகமித்திரன் பக்கம், தமிழ் அபுனைவுகள்

தெலுகு உரைநடை இலக்கியம்

இந்தப் பதிவை எழுதியவர் கௌரி கிருபானந்தன். கௌரி தெலுகு தமிழ் இரண்டும் நன்றாகத் தெரிந்தவர். தெலுகிலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து தெலுகுக்கும் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார். தெலுகு நவீன உரைநடை இலக்கியம் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை, தமிழர்களுக்காக ஒரு சின்ன கட்டுரை எழுதுங்களேன் என்று கேட்டிருந்தேன். அவரும் அனுப்பி இருக்கிறார். மிக்க நன்றி, கௌரி!

இங்கு குறிப்பிடப்பட்ட புத்தகங்களில் நான் படித்தது கன்யாசுல்கமும் சதுவு என்ற நாவலும்தான். இரண்டிலுமே முன்னோடி படைப்புகளுக்கு உடைய பலங்கள் பலவீனங்கள் இரண்டும் தெரியும். உண்மையைச் சொல்லப் போனால் அண்டை மாநிலத்து இலக்கியம் பற்றி நமக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான விஷயம்தான். அது என்னவோ மீண்டும் மீண்டும் கன்னட, வங்காள, மலையாளப் படைப்புகள்தான் வெளியே தெரிகின்றன!

தெலுகில் முதன்முதலில் எழுதப்பட்ட நாவல் “ராஜசேகர சரிதம்”, 1878 (கந்துகூரி வீரேச லிங்கம்.) இவர் ஒரு சீர்திருத்தவாதி. விதவை மறுமணம் ஒரு இயக்க அளவில் செயல்படுத்தியவர்.

குரஜாட அப்பாராவ் எழுதிய ‘தித்துபாடு’ (didhubaatu) 1910ல் வெளிவந்த சிறுகதையை தெலுகில் முதல் சிறுகதையாக ஆய்வாளர்கள் கருதி வந்தனர். அதற்கு முன்பே, பண்டாரு அச்சமாம்பா என்கிற பெண்மணி எழுதிய ‘தன த்ரயோதசி’ கதை 1902ல் வெளிவந்துள்ளதாக சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

1900-க்கு முன்பே எழுதப்பட்ட குரஜாட அப்பாராவின் ‘கன்யா சுல்கம்’ என்கிற நாடகம் ஒரு புரட்சியாகக் கருதப்படுகிறது. பணத்திற்கு ஆசைப்பட்டு பெண் குழந்தைகளை கிழவர்களுக்கு மணம் செய்து கொடுப்பது அக்காலத்தில் நிலவி வந்த ஒரு நடைமுறை. அதனை பெருமளவில் தாக்கி எழுதப்பட்ட இப்படைப்பு பலமுறை நாடகமாக மேடை ஏற்றப்பட்டுள்ளது. திரைப்படமாகவும் வெளிவந்தது. இதன் ஆங்கில மொழியாக்கம் ‘GIRLS FOR SALE’.

chalamஆரம்ப காலத்தில் பிரம்ம சமாஜ கலாச்சாரத்தின் பாதிப்பும், வங்காள இலக்கியத்தின் பாதிப்பும் தெலுகு இலக்கியத்தின் மீது பெரும் அளவில் இருந்திருக்கிறது. சலம் (Gudipaati Venkata Chalam) என்பவர் ஆண் பெண் உறவில் பெண்களுக்கும் சுதந்திரமான சிந்தனை இருக்க வேண்டும் என்றும், காதலும், மோகமும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பொறுத்து இருக்கும் என்ற கருத்தை வெளியிடும் விதமாக பல படைப்புகளை உருவாக்கினார். மைதானம், சசிரேகா, தெய்வம் இச்சின பார்யா, அமீனா இவருடைய படைப்புகளில் சில. அந்தக் காலத்தில் பெண்கள் இவற்றைப் படிப்பது தண்டனைக்கு உரிய விஷயமாக கருதப்பட்டது. இறுதி நாட்களில் ரமணரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு திருவண்ணாமலையில் ரமண ஆசிரமத்தில் தங்கி இருந்தார்.

விஸ்வநாத சத்யநாராயணவேயி படகலு” என்ற பெருங்காப்பியத்தை (1934) படைத்தார். அவர் சொல்லச் சொல்ல அவருடைய தம்பி 29 நாட்களில் 999 பக்கங்கள் எழுதினார். ஆந்திரா பல்கலைக்கழகத்தால் அறிவிக்கப்பட்ட போட்டியில் பரிசு பெற்று இருக்கிறது. “சகஸ்ர பண்” என்ற தலைப்பில் ஹிந்தியில் இதனை மொழி பெயர்த்தவர் முன்னாள் பிரதமர் திரு. பி.வி. நரசிம்ஹராவ். விஸ்வநாத சத்யநாராயண ஞானபீடம், மற்றும் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர். இவருடைய நடை தற்கால வாசகர்களுக்கு புரிவது கொஞ்சம் சிரமம்.

ரங்கநாயகம்மா என்பவர் பெண்களுக்கு நிகழும் அநீதியை எதிர்த்து, அவர்கள் விழிப்படைய வேண்டிய கட்டாயத்தை, வாழ்க்கையில் முன்னேற வேண்டிய அவசியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் பல படைப்புகளை உருவாக்கி உள்ளார். அவற்றுள் சில கிருஷ்ணவேணி, பேகமேடலு, பலிபீடம், ஸ்வீட் ஹோம், ஜானகி விமுக்தி. எழுபதுக்கு மேற்பட்ட வயதில் இவருடைய சமீபத்திய படைப்பு “கள்ளு தெரிசின சீதா”.

சிருஷ்டியில் ஆணும் பெண்ணும் சமம் என்றும், திருமண வாழ்க்கையில் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை கடைபிடித்தால் எல்லோரும் சந்தோஷமாக வாழ முடியும் என்ற கொள்கையை பின்பற்றி திருமதி யத்தனபூடி சுலோசனா ராணி அறுபதுக்கும் மேற்பட்ட நாவல்களை படைத்துள்ளார். இவருடைய அத்தனை படைப்புக்களுமே வெற்றி பெற்றதுடன் பல நாவல்கள் திரைப்படமாக வந்துள்ளன. இவருடைய முதல் நாவல் “செக்ரட்ரி” 1965 ல் வெளிவந்தது. இவருடைய படைப்புகள் முள்பாதை, செக்ரட்ரி, தொடுவானம், சங்கமம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சம்யுக்தா, மௌனராகம், சிநேகிதியே, விடியல், அன்னபூர்ணா என தமிழில் வெளிவந்துள்ளன. அந்தக் காலத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டார்கள். பள்ளிப் படிப்புடன் நிறுத்தி விடுவார்கள். பத்திரிகைகள் மற்றும் நாவல்களை படிப்பதுதான் அவர்களுடைய பொழுதுபோக்கு. அது போன்ற நிலையில் அவர்கள் கனவுலகில் சஞ்சரிக்கும் விதமாக, இனிமையான எதிர்பார்ப்புகள் நிறைந்தவையாக யத்தனபூடியின் நாவல்கள் அமைந்து இருந்தன. இவருடைய கதாநாயகன், கதாநாயகி மற்ற கதாபாத்திரங்களும் நமக்கு மத்தியில் உலா வருவது போல் தோன்றும்.

பெண்கள் கல்வி கற்று வேலைக்குப் போக ஆரம்பித்து சுய முன்னேற்றத்தைப் பற்றி யோசிக்கும் நிலை வந்தபோது எண்டமூரி வீரேந்திரநாத் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தார். பரபப்பான மர்மக் கதைகள், விஞ்ஞானக் கதைகள், மனோதத்துவ அடிப்படைக் கதைகள் என பல பரிமாணங்களில் அவருடைய படைப்புகள் வெளியாயின. மனிதர்களின் நடத்தையை விலாவாரியாக அலசி, அதற்கான காரணத்தையும் விவரிக்கும் இவரது சிறுகதைகள், நாவல்கள் வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். தமிழில் இவருடைய மொழி பெயர்ப்புகளுக்கு தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்தர்முகம், தளபதி, துளசிதளம், மீண்டும் துளசி, நிகிதா, பந்தம் பவித்ரம், காஸநோவா 99, கண்சிமிட்டும் விண்மீன்கள், பர்ணசாலை, பனிமலை, சாகர சங்கமம், காதல் செக், வர்ணஜாலம், பிரியமானவள், நெருப்புக்கோழிகள் த்ரில்லர், பணம், மனம் மைனஸ் பணம், சொல்லாத சொல்லுக்கு விலை ஏது, லேடீஸ் ஹாஸ்டல் மற்றும் பல புத்தகங்கள் வெற்றியை நோக்கிப் பயணம், பெண்கள் தனித்தன்மை வளர்த்துக் கொள்வது எப்படி, உங்கள் குழந்தைள் உங்களை நேசிக்க வேண்டும் என்றால், வெற்றிக்கு ஐந்து படிகள் போன்ற சுய முன்னேற்ற புத்தகங்களும் வெளிவந்துள்ளன. தெலுகில் வந்த ‘விஜயானிக்கு ஐது மெட்லு’ பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

வோல்கா என்ற புனைப்பெயர் கொண்ட லலிதகுமாரியின் “தோடு” என்ற படைப்பு(1993) சிறுகதைதான் என்றாலும் சமுதாயத்தில், மக்கள் மனதில் பெரிய அளவில் மாற்றம் உருவாவதற்கு முதல் படியாக அமைந்தது. இதனுடைய தமிழாக்கம் “துணை” என்ற தலைப்பில் தமிழோவியம்(2004) என்ற இணைய இதழில் வெளிவந்தது. ஒரு பெண் கணவனை இழந்து தனித்து இருப்பதற்கும், ஒரு ஆண் மனைவியை இழந்து தனித்து இருப்பதும் மேலோட்டமாக பார்க்கும் போது வாழ்க்கை துணை இழப்பு இருவருக்கும் ஒன்றுதான் என்றாலும், யதார்த்தத்தில் பார்க்கும் போது இருவரின் இழப்பு மாறுப்பட்டவை என்று புரியும். இதுதான் “தோடு” கதையின் கரு. வோல்காவின் மற்றொரு படைப்பு “மானவி” யின் தமிழாக்கம் திண்ணை இணைய இதழில் தொடராக வெளி வந்து வாசகர்களின் கவனம் பெற்றது. தெலுகில் இவருடைய படைப்புகள் kanneeti kerataala vennela, sakaja, raajakeeya kathalu, prayogam. இவருடைய படைப்புகள் பெண்ணியம் மட்டுமே கொண்டவை அல்ல. பெண்களுடைய பிரச்னைகளை, இரண்டாம் நிலையில் அவர்கள் நடத்தப்படும் முறையை, பெண்கள் தம்முடைய எண்ணங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை தம எழுத்துக்கள் மூலமாய் வலியுறுத்தி வருகிறார். சீதையை மையமாக கொண்ட vimuktha என்ற இவருடைய சமீபத்திய கதைத் தொகுப்பு புதிய பார்வையில் எழுதப்பட்டுள்ளது ஊர்மிளா, அகல்யா, சூர்பனகை மற்றும் ரேணுகா இவர்களை சீதை சந்தித்து உரையாடுதல் ராமாயண நிகழ்ச்சிகளை வேறு கண்ணோட்டத்தில் சித்தரிக்கின்றது ராஜ்ஜியத்தின் தலைவன் என்ற முறையில் ராமனுக்கு இருந்த கட்டுப்பாடுகள் பற்றிய கதையும் இதில் அடக்கம். இதன் தமிழாக்கம் வெளிவர இருக்கிறது.

டி. காமேஸ்வரி பெண்களின் பிரச்னைகள் மையமாக கொண்ட சிறுகதை, நாவல்களில் இறுதியில் தீர்வு இருக்கும் விதமாக எடுத்துச் செல்வார். இவருடைய இரண்டு நாவல்கள் “துணையைத் தேடி”, “வாழ்க்கையை நழுவவிடாதே” என்ற தலைப்புகளில் தமிழ் வாசகர்களுக்கு விருந்தும், மருந்துமாக அமைந்தன.

கொடவடிகண்டி குடும்பராவ் என்பவரின் படைப்பு “சதுவு“ என்ற நாவல் ‘படிப்பு” என்ற தலைப்பில் தமிழில் வெளி வந்துள்ளது. இவருடைய படைப்புகள் நடுத்தர வர்க்கத்து மக்களின் வாழ்கையை பிரதிபலிப்பதாக இருக்கும். “சந்தமாமா” என்ற குழந்தைகளின் மாத பத்திரிகையில் 1952 முதல் இறுதி மூச்சு வரையில் (1980) வேலை பார்த்து இருந்து அதனுடைய முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்தார்.

புச்சிபாபு, பாலகங்காதர் திலக், அடவி பாபிராஜு, C. நாராயண ரெட்டி, ஸ்ரீ. ஸ்ரீ., ஸ்ரீபாத சுப்பிரமணிய சாஸ்திரி, மல்லாதி ராமகிருஷ்ண சாஸ்திரி என்று எழுத்தாளர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். கொவ்வலி லக்ஷ்மி நரசிம்ஹா ராவ் வாழ்ந்தது அறுபத்தி மூன்று வருடங்கள்தான் என்றாலும் ஆயிரம் நாவல்களை எழுதி சாதனை படைத்திருக்கிறார். இவருடைய படைப்புகள் ரயில் நிலையத்தில் அதிகமாக காணப்பட்டதால் Railway Literature என்றும் அழைக்கப் பட்டன. கொம்மூரி சாம்பசிவராவ் என்பவர் துப்பறியும் நாவல்களை எழுதியவர். அவர் படைத்த டிடெக்டிவ் யுகந்தர் மற்றும் அசிஸ்டென்ட் ராஜூ பாத்திரங்கள் சுஜாதாவின் கணேஷ் மற்றும் வசந்த் போல் வாசகர்களின் மனதில் நிலையாக இடம் பெற்று விட்டன. தற்காலத்தில் வட்டார, தலித், சிறுபான்மை என்ற பிரிவுகளில் சிறுகதைகள் பிரபலமாகி வருகின்றன.

தெலுகு இலக்கியத்தில் எனக்குத் தெரிந்த வரையில் படைப்புகளை, எழுத்தாளர்களை குறிப்பிட்டு உள்ளேன். இன்னும் எத்தனையோ எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். காலம் கடந்து நிற்கும் படைப்புகள் இருக்கின்றன. மாறி வரும் வாசகர்களின் ரசனையும், பதிப்பாளர்களின் வியாபார நோக்கும், பத்திரிகைகளின் வணிகப் போக்கும் எழுத்தாளர்களின் ஆர்வத்தை ஓரளவுக்கு மட்டுபடுத்தத்தான் செய்கின்றன.

மீண்டும் ஆர்வி: சமீபத்தில் பாலா ரிச்மன் தொகுத்த “தென்னிந்திய மொழிகளில் ராமாயணத்தின் மறு ஆக்கங்கள்” என்று ஒரு புத்தகத்தைப் பார்த்தேன். இங்கே குறிப்பிடப்பட்ட சலம், வோல்கா இருவரின் சிறுகதைகளும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. சலம் எழுதிய சிறுகதையில் சீதையை அக்னிப்ரவேசம் செய்யச் சொன்னதும், உனக்கு ராவணனே மேல் என்று ராவணனின் சடலத்தோடு உடன்கட்டை ஏறிவிடுகிறாள்! வோல்கா எழுதிய ஒரு சிறுகதையில் வால்மீகி ஆசிரமத்தில் தங்கி இருக்கும் சீதை சூர்ப்பனகையை மீண்டும் சந்திக்கிறாள், நட்பு கொள்கிறாள். சீதையை ராமன் படுத்திய பாடு பல எழுத்தாளர்களை யோசிக்க வைத்திருக்கிறது! (சாஹித்ய அகாடமி விருது பெற்ற நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய சீதா ஜோசியம் என்ற நாடகமும் நினைவு வருகிறது.)

1970-இல் விஸ்வநாத சத்யநாராயணாவும் (ராமாயண கல்பவ்ருக்ஷா) 1988-இல் சி. நாராயண ரெட்டியும் (விஸ்வாம்பரா) ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். சாஹித்ய அகாடமி விருது பெற்ற தெலுகு எழுத்தாளர்களின் பட்டியல் இங்கே.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: கௌரி பதிவுகள், இந்திய இலக்கியம்

தொடர்புடைய பதிவுகள்: தெலுகு புத்தக சிபாரிசுகள்

ஜெயமோகனின் “நூறு நாற்காலிகள்” ஆங்கிலத்தில்

அமெரிக்காவில் வாழும் நிறைய தமிழ் வம்சாவளி குழந்தைகளுக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அப்பா அம்மா நச்சரித்து தமிழ் கற்றுக் கொடுத்தாலும் ஆங்கிலம் படிப்பதைப் போல சுலபமாகப் படிக்க வராது. நல்ல தமிழ் கதைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவது எப்போதுமே கொஞ்சம் சிரமம். என் பெண்ணுக்கு நான் கதைகளை சொல்வேன். ஜெயமோகனின் சில பல கதைகள் – வணங்கான், யானை டாக்டர் இத்யாதி – அவளை மிகவும் கவர்ந்தன. சிலவற்றை சொல்வது கஷ்டம் என்று கை கழுவி விட்டிருக்கிறேன்.

நண்பர் கோகுல் ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் கதையை A Hundred Chairs என்று மொழிபெயர்த்திருக்கிறார், இங்கே பிரசுரிக்க அனுமதியும் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி!

ஸ்ரேயாவுக்கு இந்த ஜாதீய அடக்குமுறை என்ற பின்னணி முழுதாகப் புரியுமா என்று எனக்கு கொஞ்சம் சந்தேகம்தான், பார்ப்போம்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: மொழிபெயர்ப்புகள், ஜெயமோகன் பக்கம், தமிழ் சிறுகதைகள்

தொடர்புடைய சுட்டி: ஜெயமோகனின் “அறம்” சீரிஸ் சிறுகதைகள்

இவர்கள் இலக்கியத்தில் அறம்

(30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை)

நண்பர்களே,

விதை ஒன்றை நான் அவதானித்த கொண்டிருந்த பொழுது வாழ்வியல் சார்ந்த ஒரு மேன்மையான உருவகத்தை அதனிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒரு விதை பூமிக்குள் விதைக்கப்படுகிறது. இரண்டு அங்கங்களுடன் அதன் வாழ்க்கை பயணம் துவங்குகிறது. இரண்டு வெவ்வேறு திசைகளில். ஒன்று, கீழ் திசை. தாழ்ந்த திசை. அது ஒரு இருண்ட இடம். புழுக்கமான இடம். இன்னும் சொல்லபோனால் புழுக்கள் நெளியும், ஜந்துக்கள் வசிக்கும் ஒரு இடம். அந்த விதை தனக்காக, தன்னை பூமியில் நிலைநிறுத்திக் கொள்ள, தன் சுயநலனுக்காக சஞ்சரிக்குமிடம். ஆனால் அதற்கு வேறு வழியில்லை. அப்படிதான் அது தன்னை நிலை நாட்டிக்கொண்டாக வேண்டியுள்ளது. பூமிக்குள் நடக்கும் அந்த போராட்டத்தில் மேலும் மேலும் வென்று, தன் இருத்தலை தாங்கி நிற்கும் உறுதியான வேர் பகுதியாக பரிணமிக்கிறது.

இரண்டாவது அங்கம் மேல் திசையில் வளர்கிறது. உயர்ந்த திசை. அது வெளிச்சமான இடம். காற்றோட்டம் நிறைந்தது. மகிழ்ச்சியான இடம். அது தன்னை பிறருக்காக அர்பணிக்குமிடம். அதாவது அது செடியாக வளரும் பொழுதே பிறருக்காக தன்னை அர்பணிக்க தொடங்குகிறது. விலங்குகள் முதல் மனிதர்கள் வரை தன்னை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. அது தன் இலைகளை தருகிறது. காய் கொடுக்கிறது, கனி கொடுக்கிறது. நிழல் கொடுக்கிறது. இறுதியில் மனிதன் தன்னை அழித்த பிறகும் பல வகையில் உதவிக்கொண்டிருக்கிறது. காகிதமாக, கதவாக, நாற்காலியாக, கட்டிலாக அல்லது எரிபொருளாக.

இது இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை முறை. சராசரி மனிதர்களின் வாழ்க்கை இரண்டாவது அங்கம் இல்லாத ஒரு ஊணமுற்ற வாழ்க்கை. நல்ல ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கை ஊணமற்றது. அவன் உலக லௌகீகம் என்ற இருண்ட, புழுக்கமான இடத்தில் தன்னை நிலை நாட்டிகொள்ள ஒரு புறம் போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகுக்காக தன்னை அர்பணிக்கவும் தொடங்கிவிடுகிறான். அந்த அர்பணிப்பின் பலனை அவன் மறைந்த பிறகும் உலகம் அனுபவிக்கிறது. அந்த அர்பணிப்பின் சமுதாய அங்கீகரிப்பே அவனுக்கு அது பெற்று தரும் பரிசுகளும், பதக்கங்களும்.

ஆனால் தவறிழைக்க வேண்டாம். நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் இலக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை மேற்கொள்ளவில்லை.  அவர்கள் தங்கள் எழுத்தின் உன்னதத்தையே இலக்காக கொண்டிருக்கிறார்கள். கலங்கிய நதி, தலை கீழ் விகிதம் என்றெல்லாம் இவர்கள் படைத்தது ஏதோ நான்கு பேருக்கு பொழுது போகட்டுமே, நமக்கும் பரிசு கிடைக்கட்டுமே என்பதற்காக அல்ல. அவை, தான் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள். அவர்களின் படைப்புகளை கூர்ந்து நோக்கும் பொழுது, அவை வாசகர்களின் நுண்ணுணர்வுகளுடன் உறவாடி, கலந்துறையாடி அவர்களின் வாழ்க்கையை அறம் நோக்கி திசை திருப்பும் முயற்சிகள் என்பது புலப்படும். அந்த முயற்சியின் உன்னதத்தையே தங்கள் இலக்காக கொண்டு பயணிக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் இதை Excellence என்று கூறுகிறார்கள். தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்து விட்டதாக நினைக்க மாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் மேன்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். அதாவது “Raising the Bar” என்கிறோமே-அதை அவர்களுக்கு அவர்களே செய்து கொள்கிறார்கள். வாசகர்களான நமக்கு இது ஒரு பெரும் கொடை. இது போன்ற படைப்பூக்கமே புதிய கதவுகளை நமக்கு திறக்கிறது. புதிய எல்லைகளை நம் முன் விரிக்கிறது. இதன் நன்மைகளை நாம் ஒரு சமுதாய சாத்தியமாக அமைத்துக் கொள்ள இலக்கிய வாசிப்பை ஒரு சமுதாயமாக வளர்த்துதெடுக்க வேண்டும்.

இவற்றை ஒரு தேர்ந்த வாசகன் புரிந்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு, ஏன் இலக்கியம் பக்கம் கவனம் செலுத்தவேண்டும்? லௌகீகவாதிகளுக்கு இலக்கியம் எம்முறையில் தொடர்புடையது? அப்படியே ஒரு தொடர்பை கண்டுகொண்டாலும், எவ்விதத்தில் தான் அது நடைமுறைக்கு சாத்தியம்? என்ற கேள்விகளே மிஞ்சுகிறது. அதற்கு லௌகீகவாதிகள் தாங்கள் பயணம் செய்யும் வேகத்தடத்திலிருந்து மெதுதடத்திற்கு தடம் மாறி சிந்திக்கவேண்டும். இன்று நாம் இருப்பின் அச்சாக கருதுவது என்ன? அல்லும் பகலும் அனவரதமும் நாம் சிந்திப்பது பொருள்-பணம். அந்த பொருளை ஈட்டித்தரும் தொழிலையோ அல்லது அந்தத் தொழிலால் வரும் பொருளையோதான் நாம் வாழ்க்கையாக உருமாற்றி அறத்தை நம்மிடமிருந்து அறுத்தெறிந்து வாழ்க்கையே நாம் தொலைத்து நிற்கிறோம். அதை நாம் நம் வாழ்க்கையின் பின் பகுதிகளிலேயே உணர்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது?

பணத்தையே குறியாகக் கொண்டு வாழும் பொழுது அதற்கு இடைஞ்சலாக கருதி நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை புறக்கணிக்கிறோம். பண்புகளை புறக்கணிக்கிறோம். பிறர் காட்டும் அன்பை புறக்கணிக்கிறோம். பிறரிடம் காட்ட வேண்டிய அன்பை புறக்கணிக்கிறோம். முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு நமது வாழ்க்கைமுறைகளையும் புறக்கணிக்கிறோம். நம் அடையாளத்தை புறக்கணிக்கிறோம். சொல்லப்போனால் இவற்றையெல்லாம் பிற்போக்கு என்று எள்ளி நகையாடி, இன்னும் மானுட உயர்பண்புகளையும், நம் அடையாளங்களையும் கடைபிடிப்பவர்களை அசௌகரியப் படுத்துகிறோம். அவமானப் படுத்துகிறோம். அந்த அசௌகர்ய, அவமானங்களால் மன வலுவற்ற சமுதாயத்தில் மெல்ல மெல்ல ஒட்டு மொத்த மக்களின் எண்ணங்களும் சீர்குலைந்து மானுட கலாச்சாரம் சிதைக்கப்பட்டு நாளடைவில் எப்படியும் வாழலாம் என்று நியாயப்படுத்தி, கடைபிடித்து, கடைபிடிக்கவைத்து சமுதாய அறத்தை வீழ்ச் செய்கிறோம்.

இப்பொழுது நாம் அப்படிப்பட்ட ஒரு புள்ளியில் தான் நின்று கொண்டிருக்கிறோம். சில தினங்களுக்கு முன்னர் நாஞ்சில் நாடனுடன், பி.ஏ.கேயுடனும் வெவ்வேறு சந்தர்பத்தில் உரையாடி கொண்டிருந்த பொழுது இருவருமே சமுதாய அறச் சரிவை பல வகையில் சிந்தித்து கொண்டிருப்பதாக கூறினார்கள். பல குணாதிசயங்களை பட்டியலிட்டார்கள்.

உதாரணமாக, தமிழர் ஒருவரின் வீட்டின் வழியே செல்லும் அறிமுகமில்லாத ஒருவன் வந்து தண்ணீர் கேட்டால் தண்ணீருக்கு பதில் மோர் கொடுக்கும் காலம் இருந்தது. வழிபோக்கன் ஒருவன் இரவு தங்க இடம் கேட்டால் வீட்டின் வாசல் பக்கம் உள்ள திண்ணையையாவது ஒழித்து கொடுக்கும் வழக்கம் இருந்த காலம் உண்டு. தமிழர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றிருந்த காலம் உண்டு. வீட்டிற்கு எவரேனும் வந்தால் அவரை உட்கார வைத்து பேசுவது வழக்கமாக இருந்தது.

இப்பொழுதெல்லாம் அறிமுகமில்லாதவன் ஆபத்தானவன் என்ற நொண்டிச்சாக்கை பேசி, நாம் முன் கதவை இரும்புத் தாழ் போடுகிறோம். ஆபத்து அன்றும் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஆபத்திற்கிடையே தான் அன்பை தக்கவைத்தார்கள். இது போன்ற அடிப்படை பண்பை தக்க வைத்தார்கள். மானுட அறத்தை தக்கவைத்தார்கள்.

இன்று நம் சமுதாய சூழலில் பலர் மாபெரும் சித்தாந்தவாதிகளின் வல்லமைக்கான சங்கற்பம், அப்ஜெக்டிவிஸம் போன்ற கருத்துகளை உள்நோக்கத்துடன் தங்கள் வசதிப்படி அறத்திற்கு எதிர்மறையாக திரித்தும், திரித்ததை வளர்த்தும் எடுத்து பரப்பி வருகிறார்கள். அப்படி பரப்பட்ட கொள்கைகளே மக்களிடம் ஊடுருவி இன்று சராசரி மக்கள் அறத்தை மறந்து சுயநலத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

இந்தப் போக்கை மறுபரிசீலனை செய்ய நம்மிடம் ஒரு கருவி இருக்கிறது. நாம் நம் தொழிலில் பலகாலங்கள் பணிபுரிந்த பிறகு Refresher course எனப்படும் வலுவூட்டும் ஆதரவு பயிற்சி கொடுக்கப்படும். இங்கு டிரைவிங் லைசென்ஸை புதுபிக்க வேண்டுமானால் கூட சில இடங்களில் இந்த வலுவூட்டுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இன்றைய சமுதாய சூழலில், பள்ளியில் படித்த அறக் கல்வியை கடந்து  வயது வந்தபிறகு அறம் பற்றி முறையான கல்வி நமக்கு கிடைப்பதில்லை.  அந்த வெற்றிடத்தை அறத்தை பிரச்சாரம் செய்யும் நல்ல இலக்கியங்கள் நிரப்புகிறது. பிஏகே அவர்களின் கலங்கிய நதி ரமேஷ் சந்திரனாகட்டும், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் சிவதானுவாகட்டும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டும் இல்லை. அவர்கள் அறத்தின் குறியீடு. அந்த இலக்கியங்கள் அறத்தின் சொல் வெளிப்பாடு. சங்க கால இலக்கியமான திருக்குறள், ஆத்திச்சுடி போன்றவற்றின் நவீன விரிவான வடிவம்.

இலக்கியங்கள் நம் வாழ்க்கையை நாம் மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. இப்படிப்பட்ட இலக்கியங்களை நாம் தேடி அடைந்தால் மிகவும் சிறப்பு. ஏன் தேடி அடைகிறோம் என்றால் அதனை ஏற்றுக் கொள்ளும் மன முதிர்ச்சியையும் பக்குவத்தையும் ஓரளவு அடைந்துவிட்டோம் என்பதாலேயே. இது தவிர, சந்தர்ப்ப வசத்தால் இலக்கியம் நம்மை அடைந்தாலும் தவறொன்றுமில்லை. ஆனால் அதை இறுகப்பற்றிக் கொள்ளவேண்டும்.  இன்றைய சூழலில், சமகாலத்தில், நாஞ்சில் நாடன், பிஏகே போன்ற எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் படைப்புகளை கொண்டாடினால் அது சமூகத்தில் அறத்தை நாம் மீண்டும் சென்றடையும் ஒரு வழியாகும். அதுவே அவர்களின் எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி, பதக்கம், பரிசு.

நன்றி.

நாஞ்சில் நாடனின் ஒரு பழைய பேட்டி

நாஞ்சில்நாடன் பேசியதை எல்லாம் பக்ஸ் சென்சார் செய்துவிட்டான். 🙂 அவரது இங்கே பேசிய பல கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்காக விகடனில் அவர் அளித்த பேட்டி ஒன்றை இங்கே மறு பிரசுரம் செய்திருக்கிறேன். பேட்டியில் உள்ளதை விட வலிமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார், அதற்காகப் போய் பக்ஸ் தயங்கி இருக்க வேண்டாம். 🙂 பேட்டியை அனுப்பிய உப்பிலி ஸ்ரீனிவாசுக்கும், விகடனுக்கும் நன்றி!

சக மனிதர்கள் மீதான அக்கறையும் சமூகம் மீதான கோபமுமே நாஞ்சில் நாடனின் எழுத்து. ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மத யானை’, ‘என்பிலதனை வெயில் காயும்’ எனத் தமிழின் முக்கிய நாவல்கள் படைத்தவர். ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள நாஞ்சில் நாடன், “என்னைப் பார்த்து எழுத வந்தவர்கள், எனக்கு முன்பு சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். இது தாமதமாக எனக்குக் கிடைத்த விருதுதான்!” – சிநேகமாகச் சிரிக்கிறார். இலக்கியம், சினிமா, அரசியல் எனப் பல தளங்களிலும் தன் கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார் நாஞ்சில்நாடன்.

“சாகித்ய அகாடமி விருது மகிழ்ச்சியா?”
“இது ஓர் அங்கீகாரம், அடையாளம். அவ்வளவுதான். அது இருக்கட்டும். அதனால் என்ன நிகழும்?
கேரளாவின் புகழ் பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயருக்கு ஞானபீட விருது கிடைத்தது. அவர் வீட்டுக்குப் பாராட்ட வந்து நின்ற கார்களில் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோணியின் காரும் ஒன்று. ஆனால், யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் ஓர் எழுத்தாளருக்கு ஞானபீட விருதே கிடைத்தாலும் முதலமைச்சர் வீடு தேடி வந்து பாராட்டுவாரா?
எழுத்தாளரே தன் சொந்த செலவில் சால்வையும் பூச்செண்டும் வாங்கிக்கொண்டு, புகைப்படக் கலைஞரையும் கூட்டிக் கொண்டு முதல்வர் இல்லத்துக்குச் செல்ல வேண்டும். மறு நாள் செய்தித்தாள்களில் அது செய்தியாக வரும், ‘ஞானபீட விருது வென்ற எழுத்தாளர், முதல்வரிடம் வாழ்த்து பெற்றார்!’ என்று. ஆக, முதல்வர் அப்போதும் எழுத்தாளரை வாழ்த்துவது இல்லை, முதல்வரிடம் எழுத்தாளன்தான் வாழ்த்துப் பெற வேண்டும்.
தமிழ்ச் சமூகம் சினிமாவுக்குப் பின்னால் அலைகிற சமூகம். இரண்டு காட்சிகளில் தலை முடியைக் கலைக்கும் நடிகனுக்குக் கொடுக்கும் மரியாதையை எழுத்தாளனுக்குத் தருவது இல்லை. நடிகர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் தருகின்றனவே, ஏதாவது ஓர் எழுத்தாளருக்கு எப்போதாவது டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறதா?”

“இப்போது இலக்கியத்தை சினிமாவுக்குள் நுழைவதற்கான விசிட்டிங் கார்டுபோல சிலர் பயன்படுத்துகிறார்களே, பிறகு, அவர்களே, ‘என் கதையைச் சிதைத்துவிட்டார்கள்’ என வருத்தம் தெரிவிப்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?”
“முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு நாவலை எடுத்துக்கொண்டால், அது முழுக்க முழுக்க எழுத்தாளனின் ராஜ்யம். ஆனால், சினிமா என்பது பலர் கூடி இழுக்கும் தேர். சினிமாவுக்குப் போகிற எழுத்தாளன் சினிமா வேறு, எழுத்து வேறு என்பதில் சரியான புரிதலுடன் இருக்க வேண்டும். நான் வட்டார வழக்கில் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவல் ‘சொல்ல மறந்த கதை’ என சினிமாவாக வெளியானபோது, அதில் ஒரு வட்டார வழக்குச் சொல் கூட இல்லை. ஆனால், அதுதான் சினிமா!
ஆறு பக்கங்கள் நான் எழுதித் தள்ளுவதை இயக்குநர் ஒரே ஒரு ஷாட்டின் மூலம் கடந்து விடுவார். இதை எல்லாம் கணக்கில் கொண்டு தான் என் கதையைச் சினிமாவாக மாற்றுவதற்கு நான் சம்மதிக்கிறேன். அதன் பிறகு, ‘நாவலைச் சினிமா சிதைத்துவிட்டது!’ என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை!”

“சினிமா இருக்கட்டும், அரசியலுக்குப் போகிற எழுத்தாளர்களை ஆதரிக்கிறீர்களா?”
“இல்லை. அரசியல் என்பது இப்போது ஒரு தொழில். சொல்லப்போனால், மிக மோசமான தொழில்!
ஊழல் பண்ணத் தெரிந்தவன், சாதி ரீதியாக அரசியல் பண்ணத் தெரிந்தவன், தன்மானத்தைத் துறக்கத் தெரிந்தவன் இவர்கள்தான் இன்றைய அரசியலுக்குத் தகுதியானவர்கள். ஒரு வேளை இலக்கியவாதிகள் அரசியலுக்குப் போனால், அரசியல் மேம்படுமே என்று கேட்கலாம். சினிமா எவ்வளவு தரம் கெட்டுப் போனாலும், படைப்பாளிகள் பங்கெடுக்கும்போது அதை மீட்டெடுக்க முடியும். ஆனால், அரசியல் மீள முடியாத ஒரு சாக்கடை. இப்போது அரசியலுக்குப் போன இலக்கியவாதிகளையே எடுத்துக் கொள்வோம். அவர்கள் எழுதித் தள்ளும் ஆதர்சங்களுக்கும் அவர்களின் அரசியலுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதில் விதிவிலக்குகளே இல்லை. மேலும், அரசியலுக்குப் போகிற இலக்கியவாதிகள் மீது இலக்கியவாதிகளுக்கே மரியாதை கிடையாது. சுருக்கமாகச் சொல்லப் போனால், குற்றம் செய்யக் கூசாத மனோபாவம்தான் அரசியலுக்குத் தேவை!”

“விஜயகாந்த், குஷ்பு, விஜய் போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதையாவது ரசிக்கிறீர்களா?”
“தமிழக அரசியல் என்பது சினிமா கவர்ச்சியின் உச்சம். நான்கு படங்களில் தலை காட்டுகிற நடிகர்கள், ஒரு கட்டத்தில் தான் முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைப்பதும் நம்புவதும் எனக்கு இன்னமும் ஒரு கலாசாரப் புதிராகவே இருக்கிறது. ஒரு குடிமகன் என்ற வகையில் ஒரு நடிகன் அரசியலுக்கு வருவது தப்பு இல்லைதான். ஆனால், ஓர் இசைக் கலைஞன், ஓவியன் இவர்களுக்கு எல்லாம் வராத மனத் துணிவு ஒரு சினிமா நடிகனுக்கு மட்டும் எப்படி வருகிறது என்பதுதான் கேள்வி. ஒரு கட்டத்தில் மக்களுக்கு அறிவுரை சொல்பவனாக நடிகன் மாறிவிடுகிறான். மக்களுக்குச் சொன்னால் கூடப் பரவாயில்லை, அறிஞர்களுக்கே அறிவுரை சொல்பவனாகவே நடிகன் மாறி விடுகிறான். படிப்பறிவில் பின் தங்கியுள்ள பீகார் போன்ற மாநிலங்கள் கூட சினிமா பைத்தியத்தால் சீரழியவில்லை. தமிழகம் அளவுக்கு வேறு எந்த மாநிலத்திலும் நாட்டு நடப்புகள் குறித்து இவ்வளவு அசிரத்தைகள் இல்லை!”

“சினிமா மட்டும்தான் தமிழ் கலாசாரத்துக்கு அபாயமானதா என்ன?”
“கலாசாரம் என்பது எப்போதும் நிலையான ஒன்று இல்லை. அது மாறிக் கொண்டே இருப்பது. ஆனால், மரபைக் கணக்கில் எடுக்காத கலாசார மாற்றம் பாழ். அற மதிப்பீடுகளும் ஒழுக்க விழுமியங்களும்தான் ஒரு பண்பாட்டின் வேர்கள். தமிழ் சினிமாதான் தமிழ் சமூகத்தின் மாபெரும் சாபக்கேடு. தமிழ் சமூகம் அளவுக்குச் சினிமாவின் கேடுகளை உள்வாங்கிக்கொண்ட சமூகம் வேறு எதுவும் கிடையாது. அது போக, அரசியலும் ஊடகமும் கல்வியும் நம் சமூகத்தை நாசம் செய்து கொண்டு இருக்கின்றன. கறிக் கோழியை வளர்ப்பதற்கும் குழந்தைகளை வளர்ப்பதற்கும் பெற்றோர்களிடம் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. பிராய்லர் கோழியை வளர்ப்பதைப்போல பிள்ளைகளை வளர்த்தால், அந்தச் சமூகம் எப்படி உருப்படும்? படிப்பு, வேலை இதைத் தவிர, மனித வாழ்க்கைக்கு அர்த்தங்களே இல்லையா? குறிக்கோள்களே இல்லையா? நமது சமூகம் எப்படி மதிப்பீடுகளை இழந்துகிடக்கிறது என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். சில நாட்களுக்கு முன் எனக்கு பி.எஸ்.என்.எல்.லில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. எடுத்துப் பேசினால், ‘ஹாய், மச்சான் சௌக்கியமா?’ என்றது. அது ஒரு பதிவு செய்யப்பட்ட குரல். எதிர்முனையில் இருப்பவர் யார்? எழுத்தாளரா, கொலைகாரரா, ஆசிரியரா, நோய்வாய்ப்பட்டவரா, அவருக்கு என்ன வயது இருக்கும் என்று எந்தக் குறைந்தபட்ச அறிவும் இல்லாமல் கூவுகிற வியாபாரக் குரல்கள் என்னை இம்சை செய்கின்றன!”

“இன்றைய மாணவர்களுக்கு அரசியல் உணர்வு இல்லாமல் இருக்கிறதே?”
“உண்மைதான். தேசிய உணர்வு, அதற்குப் பிறகு இந்தி எதிர்ப்புப் போராட்டம் எழுந்த காலத்தில், தமிழ் உணர்வு ஏற்பட்ட காலம் எங்கள் மாணவப் பருவக் காலம். ஆனால், இப்போது உள்ள மாணவர்களோ, ‘மானாட மயிலாட’ பார்ப்பதற்குச் செலவழிக்கும் மணித்துளிகளை செய்திகளைப் பார்ப்பதற்குச் செலவழிக்க மனம் இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் பின்பற்றக்கூடிய அளவுக்கு, இன்று எந்தத் தலைவனுக்குத் தகுதி இருக்கிறது? தேசியக் கொடி பறக்கும் காரில் உட்காரும் தகுதி கூட இல்லாதவர்கள்தான் இன்றைய தலைவர்கள். நயவஞ்சகர்களை, துரோகிகளை எப்படிப் பின்பற்ற முடியும்?
இன்று ஸ்பெக்ட்ரமில் 1,76,000 கோடி ஊழல் என்பதை ஜோக்காகப் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சுரணை அற்றவர்களாக மாறிவிட்டோம். ஒரு புதுப்படம் வெளியானால், முதல் ஏழு நாட்கள் இருக்கையை நிரப்புபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தானாம். உணர்ச்சிவசப்படுவதும் போராடுவதும்தான் இளைய தலைமுறையின் இயல்பே. ஆனால், இன்றோ எது நடந்தாலும் ஈரத்தில் ஊறிக் கிடக்கும் எருமையைப்போல இருக்கிறான் இளைஞன்.
எல்லோருக்குமே படிக்க வேண்டும் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, எந்தக் குறிக்கோளும் இருப்பதாகத் தெரியவில்லை!”

“ஈழப் பிரச்னை ஒரு படைப்பாளியாக உங்களை எப்படிப் பாதித்தது?”
“வெகுவாக! அடுத்து வெளிவர இருக்கிற என்னுடைய ‘பச்சை நாய்கள்’ என்னும் கவிதைத் தொகுப்பில் ஈழம் சார்ந்த அரசியல் கவிதைகள் நிறைய இருக்கும். நான் ஒரு படைப்பாளி. என்னுடைய மறுப்பைப் படைப்பாகத்தான் பதிவு செய்ய முடியும். ஆனால், பல படைப்பாளிகள் தங்கள் எதிர்ப்புகளையும் உணர்வுகளையும் படைப்பாகக்கூட பதிவு செய்யவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், இந்தத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? என்னை ஒரு மலையாள எழுத்தாளர் கேட்டார், ‘இவ்வளவு பெரிய இன அழிப்பு நடந்திருக்கிறதே, ஏன், உங்கள் ஊரில் ஒரு முனிசிபல் கவுன்சிலர் கூட ராஜினாமா செய்யவில்லை?’ என்று. மௌனத்தைத் தவிர, வேறு எந்தப் பதிலும் என் வசம் இல்லை. ஈழப் பிரச்னையைப் பொறுத்த வரை அலட்டிக் கொள்கிறோமே தவிர, எல்லாமே பாசாங்கோ என்று தோன்றுகிறது. நிறைய இளைஞர்களுக்குப் பிரச்னையே என்னவென்று புரியவில்லை!”

“இணையத்தில் எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதே?”
“மகிழ்ச்சிதான். ஆனால், இவர்கள் எவ்வளவு ஆழமாகப் படிக்கிறார்கள் என்கிற சந்தேகம் உண்டு. முன்பு எழுத்தாளர்கள், சமகாலம் மற்றும் முற்காலத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களை வாசித்துவிட்டுத்தான் எழுதினார்கள். ஆனால், இணையத்தில் எழுதும் எழுத்தாளர்களிடம், வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைவு. இணையத்தில் வம்பு வழக்குகளும் கிசுகிசுக்களும் அதிகமாகிவிட்டன!”

“மற்றவர்களைக் குற்றம் சாட்டுவது சரி. எழுத்தாளர்கள் என்றாலே குடிகாரர்கள், குழு மோதலில் ஈடுபடுபவர்கள் என்றுதானே மற்றவர்கள் நினைக்கிறார்கள்?”
“குடி என்பதே நண்பர் வட்டம்தானே! யார் இங்கே குடிக்காமல் இருக்கிறார்கள்? எல்.ஐ.சி-யில் வேலை பார்ப்பவர்கள், வங்கியில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஐ.டி. துறை ஊழியர்கள் என நண்பர்கள் சேர்ந்தால் குடிக்கத்தானே செய்கிறார்கள். அதேபோல இலக்கியவாதிகளும் நண்பர்களாகச் சேர்ந்தால் குடிக்கிறார்கள். காசு இருக்கிறவன் அடுத்தவனுக்கு வாங்கித் தருகிறான். இல்லாதவன் அடுத்தவனோடு சேர்ந்து குடிக்கிறான். நாலு லார்ஜுக்கு மேல் போனால் சண்டை வருவது எல்லாப் பக்கமும் இருக்கும் இயல்புதான். எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் குடித்தால் சண்டை வருகிறதா என்ன? எல்லா எழுத்தாளனும் ஏதோ ஒரு வகையில் மொழிக்கும் சமூகத்துக்கும் பங்காற்றவே செய்கிறான். எனவே சச்சரவுகள், சர்ச்சைகளை வைத்து மட்டுமே எழுத்துலகத்தை மதிப்பிட முடியாது, கூடாது!”

“இன்று புத்தக வெளியீட்டு விழாக்களுக்கும் சினிமா பூஜைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டதே, பளபளப்பான ஆளுமைகள்தானே புத்தக விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்?”
“அப்படி பொத்தாம்பொதுவாகச் சொல்லாதீர்கள். நாஞ்சில் நாடன், கண்மணி குணசேகரன், திருச்செந்தாழை இவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு எல்லாம் எந்த சினிமாக்காரர், எந்த வி.ஐ.பி. வருகிறார்?
சென்னையில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு இருக்கிற வசதி அது. புத்தகம் வெளியிடும் பதிப்பகங்களின் வியாபார உத்திகளையும் சார்ந்தது இது. ஆனால், இதில் ஒன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று ஒரு நாளாவது, ஒரு சினிமா பிரபலம் ஓர் எழுத்தாளனைப் பாராட்டி நாலு வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போகட்டுமே!”

கேணி சந்திப்பில் அவர் பேசியதைப் பற்றி இங்கே ஒரு பதிவு, இந்தக் கருத்துகளையும் அவர் இங்கே பல சந்திப்புகளில் வலியுறுத்தினார். பதிவிலிருந்து சில பல பத்திகளை கீழே கட் பேஸ்ட் செய்திருக்கிறேன்.

தேவை கருதியே சொற்கள் உருவாகின்றன. அப்படி உருவாகும் சொற்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய கடமை படைப்பாளிகளுக்கு இருக்கிறது. ஒரு படைப்பில் சமுதாயக் கூறுகள், பண்பாட்டுக் கூறுகளை பதிவு செய்வதைப் போலவே மொழியின் கூறுகளையும் பதிவு செய்வது முக்கியம். 4000 பக்கங்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தலைச் சொற்களும் கொண்டு, இன்றளவும் பயன்படத் தக்கச் சிறந்ததொரு நூலாக விளங்குவது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் (lexicon) அகராதி. இதிலுள்ள வார்த்தைகளைத் தவிர வேறு வார்த்தைகளே தமிழில் இல்லையா? கடந்த ஐம்பது ஆண்டுகளில் புதிதாக சொற்களே தோன்றி இருக்காதா? கணினி, பின்னூட்டம் போன்ற வார்த்தைகள் எப்பொழுது தோன்றியது? இவற்றையெல்லாம் ஆவணப்படுத்த வேண்டாமா?

ஒரு படைப்பாளிக்கு பயணம் என்பது இன்றியமையாத ஒன்று. அது மட்டுமே பல விதமான மனிதர்களை, கலாச்சாரங்களை, வார்த்தைகளை, அனுபவங்களை படைப்பாளிக்கு வழங்கும். நான் விற்பனைப் பிரதிநிதியாக பல மாநிலங்களுக்கும் பயணம் செய்தவன். அந்த வகையில் பல மொழிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறது. இந்த மொழிதான் சிறந்தது, அந்த மொழிதான் சிறந்தது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. எனக்கு காவிரிப் பிரச்சனையில் கன்னடர்களுடன் பிரச்சனை இருக்கலாம், முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாளிகளுடன் பிரச்சனை இருக்கலாம், சிவசேனாவினால் மராட்டியர்களுடன் கருத்து மாறுபாடு இருக்கலாம், ஆனால் அவர்களுடைய மொழியை நேசிக்கிறேன். அவர்களிடமுள்ள சிறந்த படைப்புகளை நேசிக்கிறேன். என்னுடைய மொழி தமிழ்தான் என்றாலும் காளிதாசரையோ, காண்டேகரையோ எப்படி நான் வெறுக்க முடியும்? அவர்களெல்லாம் மொழியின் கொடைகள் இல்லையா!

ஒரு அறையின் மூலையில் சிகப்பு வண்ண பெயிண்ட்டையும், இன்னொரு மூலையில் பச்சை வண்ண பெயிண்ட்டையும் கொட்டிக் கவிழ்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு வண்ணங்களும் பயணம் செய்து ஒன்றோடொன்று கலந்து மையத்தில் துல்லியமான நீல நிறம் கிடைக்கிறது. ஓரங்களில் மெல்லிய நிற மாற்றங்கள் கிடைக்கிறது இல்லையா? அது போலவே ஒரு மொழி இன்னொரு மொழியுடன் சேரும் பொழுது வேறு பல சொற்கள் மொழிக்குக் கிடைக்கிறது. அது மொழியின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். களிறு என்ற சுத்த தமிழ் வார்த்தை நம்மிடம் இன்று புழக்கத்தில் இல்லை. மலையாள மொழியில் இருக்கிறது. இந்த வார்த்தையை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதுபோல நிறைய வார்த்தைகள் இருக்கின்றன.

சமீபத்தில் நான் வாசித்த டாக்டர் கு. சீனிவாசன் எழுதிய தாவரங்களைப் பற்றிய புத்தகம் குறிப்பிடப் படவேண்டிய ஒன்று. அது போலவே அ.கா. பெருமாள், பெருமாள் முருகன், கி.ரா., பா. சுப்பிரமணியம், கண்மணி குணசேகரன் போன்றவர்கள் வேலை மெனக்கெட்டு வார்த்தைகளைத் தொகுக்கிறார்கள். இதை யார் செய்ய வேண்டும்? ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதியில் கல்லூரியில் என்னதான் செய்கிறார்கள்? “மாணவர்களை கிராமங்கள் நோக்கித் துரத்துங்கள். புதுசா வார்த்தைகளையோ, இதிகாச துணைக் கதைகளையோ கண்டுபுடிச்சிட்டு வந்தா, அவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுங்க” என்று கல்லூரியில் நடக்கும் கலந்துரையாடலின்போது துறைத் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறேன். இந்த வேலையை படைப்பாளிகள் உட்கார்ந்து செய்துக்கிட்டு இருக்காங்க.

சென்னையிலிருந்து தமிழ் நாட்டின் கோயம்புத்தூர், நெல்லை, கன்யாகுமரி போன்ற உட்புற கிராமங்களுக்கு செல்லும் பொழுது தமிழுக்கு தமிழே மாறுபடுகிறது. அங்கெல்லாம் எவ்வளவு புதிய சொற்கள் இருக்கிறது, அவற்றையெல்லாம் தொகுக்க வேண்டாமா? ஒரு மண்வெட்டியின் பத்து பாகங்களின் பெயர்களை என்னால் சொல்ல முடியும். அதையெல்லாம் தொகுக்க வேண்டாமா? சந்தியா பதிப்பகத்தின் எதுகை அகராதியை சமீபத்தில் வாசித்தேன். எதுகையில இவ்வளவு விதம் இருக்கானு ஆச்சர்யமா இருந்தது. சினிமாவுக்கு பாட்டெழுதறவன் கையில கிடைக்கணும்னு நெனச்சிக்கினேன்.

இன்றைக்கு இருக்கும் கவிஞர்கள் அதிகமான வார்த்தைகளைத் தெரிந்து கொள்ளுவதில்லை. தமக்குத் தெரிந்த 1000 சொற்களையே மாற்றி மாற்றிப் போட்டு எழுதுகிறார்கள். இரண்டு கவிதைத் தொகுப்புகளின் முன் அட்டையை கிழித்துவிட்டால் யாருடைய கவிதைத் தொகுப்பு என்றே தெரியாது. அந்த அளவிற்கு சலிப்பாக இருக்கிறது.வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள அவர்கள் மெனக்கெட வேண்டும். கட்டுரை, புனைகதை போலவே அகராதி வாசிப்பும் சுவாரஸ்யமான ஒன்று. இளம் படைப்பாளிகள் நேரம் எடுத்து அதை செய்ய வேண்டும்.

டென்னிஸ் விளையாட்டில் ஒரு பெண் பின் பாக்கெட்டில் இரண்டு பந்துகளை வைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு பந்தை எடுத்து மேலே தூக்கிப் போட்டு பார்க்கிறாள். பந்து சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். அடுத்த பந்தை எடுக்கிறாள் அதுவும் சரியில்லை என்று தூக்கிப் போடுகிறாள். வேறு பந்தைக் கொடுக்கிறார்கள், அதை சரி பார்த்து சர்வீஸ் போடுகிறாள். ஒரு சர்வீசுக்கே இப்படி என்றால் 100 வருடம், 1000 வருடம் வாழப் போகிற படைப்பிற்கு சரியான சொல்லைத் தேட வேண்டாமா?

அடிப்படையில் நான் மொழி வல்லுநர் இல்லை. என்னுடைய ஆர்வமெல்லாம் வார்த்தைகளைப் பற்றியது. வார்த்தைகள்தானே மொழியை செம்மையாக்குகின்றன! ஒருமுறை ஆனந்த விகடனுக்கு ‘தெரிவை’ என்ற கதையை எழுதி அனுப்பியிருந்தேன். அவர்கள் ‘நீலவேணி டீச்சர்’ என்று தலைப்பை மாற்றி இருந்தார்கள். ஜனரஞ்சக பத்திரிகையில் இதெல்லாம் சகஜம்தான். நான் சொல்ல வருவது, தெரிவை என்பது பெண்களின் பருவ நிலைகளில் ஒன்று. பெண்களைப் போலவே ஆண்களுக்கும் பருவ நிலைகள் இருக்கிறது என்று பின் குறிப்பில் எழுதியிருந்தேன்.வேடிக்கை என்னவெனில் விகடனுக்கு சந்தேகம் வந்து, செம்மொழி மாநாடு நடத்தும் குழுவிலுள்ள முக்கியமானவருக்கு ஃபோன் செய்து பேசியிருக்கிறார்கள். அவருக்கு தெரிந்து அப்படி எதுவும் இல்லை என்று சொன்னாராம். உடனே அவங்க எனக்கு ஃபோன் செய்தாங்க. அந்த நேரம் பார்த்து நான் ஒரு எழவு வீட்டில் இருந்ததால் சரியான தகவல்களை அவர்களுக்குக் கொடுக்க முடியவில்லை.

தமிழின் சமகால 10 சிறந்த படைப்பாளிகளின் பெயர்களை சொல்கிறேன். அவர்களுக்கு மாநாட்டிற்கான அழைப்பு சென்றிருக்குமா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவருக்கும் சென்றிருக்காது. மொழியை அடுத்த இடத்திற்கு நகர்த்துவது படைப்பாளிகள்தான். அவர்களுக்கான கவனிப்பை சரியாகக் கொடுப்பதில்லை. கேரளாவில் வாசுதேவன் நாயர் ஞானபீட விருது வாங்கினால், மத்திய அமைச்சர் அந்தோணி வாசுதேவனின் வீட்டு வாசலில் காலையில் நின்றுகொண்டிருப்பார். அவரை வாழ்த்திவிட்டு அமைச்சர் சென்றுவிடுவார். வாசுதேவனும் அவருடைய வேலையைப் பார்க்க சென்றுவிடுவார். தமிழ்நாட்டில் அப்படி நடக்குமா? எழுத்தாளனே ஒரு சால்வையை வாங்கிக் கொண்டு, புகைப்படக்காரனையும் அழைத்துக் கொண்டு பீடத்தில் இருப்பவர்களை சென்று பார்க்க வேண்டும். மறுநாள் அவனே அதை பத்திரிகைகளுக்கும் அனுப்ப வேண்டும். இந்த நிலையில்தானே இருக்கிறோம்! மூத்த படைப்பாளிகள் அவர்களால் முடிந்த வரை மொழியைத் தாங்கிப் பிடித்தார்கள். அதை முடிந்த வரை பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம். இனி இளம் படைப்பாளிகள்தான் அதற்கு முன் வர வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்.

எதுகை அகராதியைத் தொகுத்தவர் தர்மபுரியில் ஒரு நெசவாளர் என்று சொன்னார். பகலெல்லாம் நெசவுத் தொழில், இரவில் எதுகை அகராதி என்று இருந்தாராம். பேர் சொன்னார், என் போன்ற சோம்பேறிகளுக்கு பேர் கூட நினைவிருப்பதில்லை. கண்மணி குணசேகரன் தொகுத்திருக்கும் நடுநாட்டு சொல் அகராதியை மிகவும் சிலாகித்தார்.

நண்பர் முத்துகிருஷ்ணன் தரும் தகவல் – எதுகை அகராதியை தொகுத்த நெசவாளர் – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை என்ற ஊரில் பிறந்த பசுபுல இராமசாமி அப்பாய் செட்டியார் – வருடம் 1938. இப்போது சந்தியா பதிப்பகம் மீள்பதிப்பு வெளியிட்டுள்ளது.

அவர் அழுத்திச் சொன்ன இன்னொரு விஷயம் – செல் ஃபோன் பயன்பாடு. இன்றைய இளைஞர்கள்/இளைஞிகள் இதை காமத்துக்கு ஒரு வடிகாலாக (காமெரா, ஆண்-பெண் சதா பேச்சு) என்று வருத்தப்பட்டார். அவரே இன்னொரு இடத்தில் சொன்ன மாதிரி இது அறம் இல்லை, ஒழுக்கம் சம்பந்தப்பட்ட விஷயம். ஒழுக்க மதிப்பீடுகள் காலம், இடத்துக்குத் தகுந்த மாதிரி மாறிக் கொண்டே இருக்கின்றன. நான் இரண்டு பெண்களுக்குத் தகப்பன், அவரை விட ஓரிரு தலைமுறைகளே பிந்தியவன், அதனால் அவரது வருத்தத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நான் காலேஜில் படித்த காலத்தில் செல் ஃபோன் இருந்திருந்தால் நானும் இப்படித்தான் இருந்திருப்பேன். நாஞ்சில்நாடனின் இளமைப் பருவத்தில் செல் ஃபோன் இருந்திருந்தால் அவரும் இப்படித்தான் அதை பயன்படுத்தி இருப்பார் என்றே நினைக்கிறேன். ஆண்-பெண் ஈர்ப்பு எந்த வயதிலும் உள்ளதுதான், ஆனால் இளமைப் பருவத்தில் உள்ளது போல intensity வேறு எப்போதும் இல்லை. அது இப்படி வெளிப்படாவிட்டால்தான் ஆச்சரியம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் – 7

நாள் 12 – ஜூன் 30, 2012

இன்று பெரிய நாள். பிறபகல் 2 மணிக்கு ஃப்ரீமாண்ட் லைப்ரரியில் பி.ஏ.கிருஷ்ணன், நாஞ்சில், இருவருக்கு பாராட்டுப் பொது கூட்டம். மதிய உணவு எங்கள் இல்லத்தில் முடித்துவிட்டு செல்வதாக ஏற்பாடு. பதட்டம் மனதை மெதுவாக ஆக்ரமிக்க தொடங்கியது.

காலையில் எழுந்து மிக சுறு சுறுப்பாக மனைவிக்கு “சொதி” என்ற ஒரு உணவு சமாச்சாரம் செய்ய உதவிகள் செய்யவும், கடைகளுக்கு ஓடும் எர்ரண்ட் பாயாக இருக்கவும், பெண்ணை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லவும் நேரம் சரியாயிற்று. PA கிருஷ்ணன் குடுமபம் (திருமதி ரேவதி கிருஷணன், மகன் சித்தார்த், சித்தார்த்தின் மனைவி வினிதா) காலை 11:30க்கு வந்தார்கள். பிஏகே என் மினி கலெக்‌ஷனைப் பார்வையிட்டார். ’வேற தமிழ் புக்ஸ் வச்சிருக்கீங்களா?” என்றார். மிகக் குறைவு என்று நினைத்தார் போலும். அவருடைய வாசிப்பு வேகத்திற்கு இதெல்லாம் மைக்ரோபியல். “சார் மாடியிலே கொஞ்சம் புக்ஸ் இருக்குது”என்றேன். சரி இந்த முறை இந்திய பயணத்தின் பொழுது அள்ளிக் கொண்டு வரவேண்டியது தான். கோவையில் ஹரன்பிரசன்னா போன்ற நணபர்களை பார்க்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சாப்பிட்ட ஸூப்புடன் என் பதட்டமும் ஆவியாக ஆனது. தற்காலிக ரிலீஃப். புகைப்படங்களுக்கு அனைத்து பெர்ம்யூட்டேஷனையும் உபயோகித்தோம். ஆர்வி & குடுமபம், ராஜன் &  நாஞ்சில் மற்றும் திருமுடி, மணிராம் ஆகிய அனைவரும் சுமார் 12 மணிக்கு ஒரு காலிங் பெல்லில் இணைந்தார்கள். ஒருவித பரபரப்புடன் எல்லோரும் ஸூப்பிலிருந்து சாதம்  சொதி இஞ்சி சட்னி வழியாக பாயாசம் வந்தடைந்தார்கள். ராஜன் பரபரத்து திருமுடியை இழுத்துக் கொண்டு 1 மணிக்கு லைப்ரரியை நோக்கி ஓடினார். நானும் ஆர்வியும் எங்கள் பேச்சுகளை பிரிண்ட் எடுக்க மாடியை நோக்கி ஓடினோம். கிச்சனில் பெண்கள் எதற்கோ ஓடிக் கொண்டிருந்தார்கள். இதற்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போல் அமைதியாக பிஏகேயும் நாஞ்சிலும் இலக்கிய உலகில் சஞ்சரித்தனர். காலச்சுவடு கண்ணன், நீல பத்மநாபன், ஜெயமோகன் என்றெல்லாம் காதில் விழுந்தது. எல்லாம் நல்ல விஷயம் தான்.

1:50க்கு நாஞ்சில், பிஏகே, நான், ஆர்வி நால்வரும் ஆர்வியின் மெர்சேடிஸ் பென்ஸில் கிளம்பினோம். ராஜன் போனில் இன்னும் 15 நிமிடம் தாமதிக்கச் சொன்னார். ”கிளம்பியாச்சே”. ஒரு லெவல் கிராஸிங்கில் டென்ஷனுடன் காத்திருந்த நாங்கள் ரிலாக்ஸ் ஆனோம். ஒரு ஏரியை சுற்றிவிட்டு லைப்ரரி சென்றடைந்தோம். லைப்ரரியில் மைக் செட் அரெஞ்ச்மெண்டெல்லாம் செய்ய வேண்டியதில்லை. ஆங்காங்கே இருக்கும். ஒரு சில வேலைகள் மட்டுமே. வரிசையாக சேர் போடுவது, பேனர் ஒட்டுவது போன்ற சமாச்சாரங்கள். கூட்டம் பரவாயில்லை. பாரதி தமிழ் சங்கத்தின் விழா. இந்த ஆண்டின் தலைவர் இட்ஸ்டிஃப் ஸ்ரீகாந்த். அவர் அறிமுகம் செய்ய அடுத்த இரண்டரை மணி நேரம் நல்ல பொழுதாக அமைந்தது. அதன் வீடியோ வடிவம் இந்த சீரிஸ் முடிந்ததும் வெளியிடுகிறோம். பாலாஜி, விசு, ஆர்வி, சுந்தரேஷ் ஆகியோரின் உரைகளின் எழுத்து வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. காவேரி, என்னுடையது எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. பிஏகே முதலில் பேசினார். பின்னர் நாஞ்சில். வீடியோவில் பார்க்கலாம்- சிறிது நாட்களுக்குப் பிறகு.

கூட்டம் முடிந்த பின்னர் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நாஞ்சில், பிஏகே புத்தகங்கள் காணாமல் போயிருந்தது. டீ விநியோகிக்கப்பட்டது. ஒரு சமோசா, கட்லட் என்று போயிருந்தால் அரங்கு நிறைந்திருக்கும். வெளியில் வந்து எல்லோரும் எழுத்தாளர்களுடன் கூட்டத்திற்கு வந்தவர்கள் உரையாடினர். பிஏகே குடும்பத்தினர் விடை பெற்றனர். ராஜனும் நாஞ்சிலும் ஓய்வெடுக்கச் சென்றனர். விசு, அருண், பாலாஜி, நான், ஆர்வி வீட்டில் குழுமினோம். ராஜன், நாஞ்சில் 7 மணிக்கு வந்தார்கள். நாஞ்சில் என் உரை நன்றாக இருந்ததாகவும் நுணுக்கங்களுடன் இருந்ததாகவும் கூறினார். ஆனால் மெஸேஜ் ஆடியன்ஸை சென்று சேர்ந்திருக்கமா என்பதில் ஐயப்பட்டார். ஒரு மூன்று மணி ”மகிழ்ச்சி” கலந்த அரட்டை நண்பர்களிடையே. எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். சுந்தரேஷ் மிக மகிழ்ச்சியாக இருந்தார். ஹேப்பி ஹவர்ஸ்….!

நாள் 13 – ஜூலை 1, 2012
கிரேட்டர் லேக், மவுண்ட் சாஸ்தா

புதிய மாதம். பிஏகே தம்பதியினர், நாஞ்சில், ராஜன், சுந்தரேஷ் ஆகியோர் கட்டுச்ச்சோற்றுடன் ஹோண்டா வேனில் வடக்கு நோக்கி பயணம் செய்தனர். இரண்டு நாள் டூர். கிரேட்டர் லேக், மவுண்ட் ஷாஸ்தா. ராஜனிடமிருந்து கட்டுரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். (நேற்று ஜூலை 13) ”நீங்களே எழுதிவிடுங்கள், பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் எழுதிகிறீர்கள்” என்று ஐஸ் வைத்ததால் குளிர்ச்சி தாள முடியாமல் சில புகைப்படங்கள் மட்டும் இங்கே. சுந்தரேஷ், இந்த இடங்களெல்லாம் ”அனுபவிக்கணும், எழுதக்கூடாது” என்று ரேஞ்சில் பேசினார். வழியில்லை.

நாள் 14 – ஜூலை 2, 2012

இரவு 12க்கு திரும்பினார்கள். பாவம் நாஞ்சில். தூங்குவதற்கு கூட அவருக்கு அவகாசம் அளிக்கப்படவில்லை. அவருடைய வயதில் அவர் சலிக்காதது ஆச்சரியம்தான். மறுநாள் அதிகாலையில் துயில் எழவேண்டும்.

நாள் 15 – ஜூலை 3, 2012
லாஸ் ஏஞ்சலீஸ் – டிஸ்னிலாண்ட், யுனிவேர்ஸல் ஸ்டுடியோ

காலையில் 4:45க்கு கிளம்பி ராஜன் வீடு சென்றேன். நாஞ்சில் கிளம்பி காஃபி அருந்திக் கொண்டிருந்தார். முடித்ததும் 5:05 கிளம்பி சான் பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட் சென்றோம். “தூங்க முடிந்ததா?” என்று கேட்டதற்கு ”ஒரு மணி நேரம்” என்றார். அசாத்தியம். விர்ஜின் அமெரிக்கவில் செக்கின் செய்து செக்யூரிட்டி செக் கடந்து கையசைத்தபின் ஆறரை மணி பக்கம் வீடு வந்து சேர்ந்தேன். ராஜேஷ் ஏர்போர்டிலிருந்து அப்படியே அவரை டிஸ்னிலாண்டுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே டிஸ்னிலாண்ட் ஒரு ”டிரீம்லேண்ட்”. நாஞ்சில் தூக்கமினமை டிஸ்னிலாண்டை கனவுலகா நினைவுலகா என்று அறிந்துகொள்ளாதபடி செய்ய வாய்ப்பிருக்கிறது.

நாள் 16 – ஜூலை 4, 2012
இண்டிபெண்டன்ஸ் டே. விசுவும், அருணும் காரில் கிளம்பிச் சென்றார்கள். மறுநாள் யுனிவர்ஸல் ஸ்டுடியோஸ். விசு நீண்ட அறிக்கை தயார் செய்கிறேன் என்றார். இல்லை அவரும் இரட்டை கிளவிகளை தேடிக்கொண்டிருக்கிறாரா தெரியவில்லை.

நாள் 17 – ஜூலை 5, 2012

அன்று மாலை பாலாஜி வீட்டில் பிஏகே குடும்பத்தினருக்கும் நாஞ்சிலுக்கும் டின்னர் ஏற்பாடு. அதன் பொருள் கூத்து, கொண்டாட்டம், ”மகிழ்ச்சி”. விசுவும் அருணும் நாஞ்சிலை அழைத்துக் கொண்டு லாஸ் ஏஞ்சலீஸிலிருந்து சான் பிரான்ஸிஸ்கோவை நோக்கி கிளம்பியதுமே கார் டயர் பஞ்சர். பயணத்தில் அவரை மதியம் பட்னி போட்டு மாலையில் பேலோ ஆல்டோ வரை வந்து ஒரு க்ரேப் (crepe) ஜாயிண்டில் சாப்பாடு கொடுத்திருந்தார்கள். ஒரு வழியாக மாலை 5.45 க்கு வந்து என்னை பிக்-அப் செய்து கொண்டு ராஜன் வீட்டிற்கு சென்றோம். அவருக்கு லாஸ் ஏஞ்சலிஸ் பயணம் திருப்திகரமாக இருந்ததாகக் கூறினார். பொதுவாக குழந்தைகளை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதை வைத்து அவர் டிஸ்னிலாண்டை மிகவும் விரும்புவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் யுனிவேர்ஸல் ஸ்டுடியோஸ் அதை காட்டிலும் பிடித்திருந்தது என்றார்.

ஓய்வுக்கு பிறகு பாலாஜி வீட்டிற்கு படையெடுப்பு. பிஏகே குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் மீண்டும் சந்தித்தார்கள். அனேகமாக கடைசி கூட்டம் என்று நினைத்து வந்திருந்தார்கள். பிறகென்ன பாலாஜி வீடு ”மகிழ்ச்சி”புரம் தான். சரி பேசியதில் போனால் போகட்டும் என்று ஒரு விஷயத்தை சொல்கிறேன்.

ராஜீவ் கொலை வழக்கு பற்றி ஒரு விவாதம் வந்தது. முன்னாள் CBI இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் (நெல்லை ஜெபமனியின் மகன்) ரகோத்மன் காசு பண்ணுவதற்க்காக அந்த நூலை எழுதியிருக்கிறார், அவர் அந்த நூலில் இன்னும் சில உண்மைகள் வந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார். ரகோத்மன் கார்த்திகேயன் மேல் இன்னும் கடுமையாகவும், உறுதியாகவும் வந்திருக்கலாம் என்பது அவரது தரப்பு. ரகோத்மன் ஒரு எல்லைக்குள் செயல்பட்டிருந்தாலும் சிறந்த ஆவணம் என்று நான் நினைக்கிறேன். ரகோத்மனின்  தரப்புபடி சிவராசனே இந்த சதியை உருவாக்கி செயல்படுத்தியவர் என்பதும் அனுமதிக்கு மட்டும் தான் பிரபாகரனிடம் சென்றார் என்றும் பிரபாகரன் விரைவிலேயே (தீர்க்கமாக பின்விளைவுகளை சிந்திக்காமல்) சதி திட்டத்திற்குக்கு பச்சைக்கொடி காட்டினார் என்பதும் என் புரிதல். அப்படி தான் தெளிவாக ரகோத்மன் முன் வைப்பதாக என் நினைவு. அதை பேசிக் கொண்டிருந்த பொழுது நாஞ்சில் பிஏகே போன்றவர்களின் விவேகமான பதில்களும், அதன் பின்னர் சில வாக்குவாதங்களும் எழுந்தன. மொத்தத்தில் தரமான நேரம்.

ஃபோட்டோ செஷன்ஸ் முடிந்து விடைப்பெற்ற பொழுது சுமார் 11 மணி.

நாள் 18 – ஜூலை 6, 2012

இன்று நாஞ்சில், ராஜன், நான் மூவரும் ரோகில் 17-மைல் டிரைவ் என்ற மாண்ட்ரே பகுதி கடற்கரைக்குச் சென்றோம். செல்லும் பொழுது பாஸ்டன் பாலாவை ராஜன் தொலைபேசியில் அழைத்து பேசினார். பாலா நாஞ்சிலிடமும் என்னிடமும் பேசினார். இந்த ”கலிஃபோர்னியாவில் நாஞ்சில்” கட்டுரை தொடர் நன்றாக வருகிறது என்றார். ItsDiff ரேடியோ நிகழ்ச்சியும் அருமையாக இருந்தது என்றார்.

வாயிலில் நுழைவுசீட்டு கொடுத்தவன் முறைத்தான். பேச மறுத்தான். பொதுவாக தங்கள் விருந்தினர்களை அன்பு வார்த்தைகளால் வரவேற்கும் இது போன்ற பொது சுற்றுலா ஈர்ப்புகளில் இந்த அனுபவம் புதிதாக இருந்தது. டிக்கட்டை வாங்கிக் கொண்டு நுழைந்தோம்.

”சார், நம் நாட்டில் பகுதியில் இன்முகத்தோடு வரவேற்ப்பார்களா?” என்றேன்.
”ஏண்டா இங்கெல்லாம் வரீங்கன்னுதான் நினைப்பாங்க”

கடற்கரையிலே அமர்ந்து கொண்டு (முன்னர் ராஜன், ஆர்வி, அருணா, ஜெயமோகன் மற்றும் நான் உட்கார்ந்து சாப்பிட்ட அதே இடத்தில்) பழங்கள் மட்டுமே புசித்தோம். டேஜா வூ (Deja vu).

பின்னர் ஒரு ப்யோம் (Marine Biome) பகுதியை பார்வையிட்டோம். பல உயிரினங்கள். அந்த இடத்தில் தான் பல தளங்களில் பலர் இன்று ஜெயமோகனை வசை பொழிய உபயோகப்படுத்தும் அந்த பைனாக்குலர் புகைப்படத்தை நான் மூன்று வருடங்களுக்கு முன் எடுத்திருந்தேன். ராஜன் நினைவு படுத்தினார். அந்த பாக்கியத்தை நாஞ்சில் வசையாளர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற பெருந்தன்மையில் அதே பைனாக்குலர் குளோஸப்.

இரண்டு மணிக்கெல்லாம் அங்கே சுற்றி விட்டு திரும்பினோம்.

”சார் ஒரு பாராட்டுக்கூட்டம் என்று ஒரு இலக்கியவாதியை அழைத்து வந்து அவரை பாராட்டி விட்டு சந்தடி சாக்கில் அவரின் குறைகளை மேடையில் சொல்லலாமா? ஒரு புத்தக மீட்டிங்கில் சொல்லலாம் என்று தெரிகிறது”
”அது மரபல்ல. ஆனால் சிலர் செய்கிறார்கள்.”

3:30க்கு சாண்டா கிளாராவில் காஸ்ட்கோ அருகில் இருக்கும் ”ஸ்வீட் டொமேடோ”வில் லஞ்ச் பஃபே. ராஜன் ஐடியா அது.  நுழையும் பொழுது இரண்டு தட்டில் காய்கறிகள் எடுத்துக் கொண்டு உள்ளே நுழையவேண்டும். சாலட் பாருக்கு திரும்ப முடியாது. உள்ளே இருக்கும் பல வகை ஸூப், ஃபொக்கேஷியா, கார்ன் கேக், பாயில்ட் பொடேடோ, இத்யாதிகள்…ஐஸ்கீரிம், போன்றவைகள் – எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்தோம். பெரிய ட்ரே நிறைய சூடாக குக்கிகளை (பிஸ்கட் போன்றது ஆனால் சிறிது தடித்தது) எடுத்துக் கொண்டு அன்புடன் ஒரு பணிப்பெண் பரிமாறினாள். எங்கள் சோர்வுக்கு அது இதமளித்தது.

நாஞ்சில் “இங்கே சாப்பிடறதையும் பார்க்கிறதையும் வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்” என்றார்.

இது போன்று “ஃப்ரெஷ் சாய்ஸ்” என்று ஒரு உணவு சங்கிலியும் இருக்கிறது. முடித்து விட்டு வெளியே வந்தோம். பக்கத்திலிருந்த காஸ்கோவில் நுழைந்தோம். ஒவ்வொரு பகுதியில் உள்ள பொருட்களையும் அவை அடுக்கப்பட்டிருந்த நேர்த்தியையும் பார்வையிட்டார் நாஞ்சில். மதுபான பிரிவில் அடுக்கபட்டிருந்தவற்றை “ஒரு கலைகூடம் மாதிரியில்ல இருக்கு” என்றார். ஒரு சுற்று சுற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பினோம்.

மாலை 7:30 மணி
ராஜனும், நாஞ்சிலும் வீட்டிற்கு வந்தார்கள். பெரும் டின்னர் ஏற்பாட்டெல்லாம் இல்லை. என் மனைவி குடும்பமாக ஆசி வாங்கவேண்டும் என்ற விருப்பபட்டாள். அப்படியே உணவிற்கு ஏற்பாடும் செய்தாள். நாஞ்சிலுக்கு பிடித்த டோக்ளாவும், பெசரட்டும் (அடை போன்றது). பாலாஜியும் அவர் மனைவி அருணாவுடன் நாஞ்சிலின் ஐடச்சை (iTouch) தயார் செய்து கொண்டு வந்தார். விசுவும், அருணும் புத்தகம் ஒன்றை பரிசளிக்க வந்தார்கள். அனைவரும் உணவு அருந்தினோம். சுக்கு வென்னீர் குடித்த பிறகு விடைப் பெற்றார்கள்.

நாள் 19 – ஜூலை 7, 2012

காலை 3:45க் கண் விழித்து ராஜனின் வீடு நோக்கி சென்றேன். எல்லோரும் கிளம்பியிருந்தார்கள். ஹ்யூஸ்டன் ஃப்ளைட் 6:50க்கு. பாலாஜியின் மினி வேனில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் நோக்கி கிளமிபினோம். முன்னர் சிக்கல் ஒன்றை பற்றி சொல்லியிருந்தார் நாஞ்சில். ஒரு நாள் முழுவதும் மண்டையை குழப்பியபிறகு அதற்கு எனக்கு ஒரு யோசனை தோன்றியிருந்தது. அவர் ஷூ அணிந்துக் கொண்டிருந்த பொழுது அவசரமாக அதை கூறினேன். அதைப் பற்றி சிந்திப்பதாக சொன்னார்.

வீட்டிலிருந்து கிளம்பி ஒரு நூறு மீட்டர் சென்ற பொழுது “ராஜன் கேமிராவை எடுத்து கொண்டீர்களா?” என்றேன்.

“இல்லை எடுத்துட்டு வந்திடவா?”

“அதல்லாம் வேண்டாம், போகலாம்” மெல்லிய படபடப்புடனும் இனம் புரியாத உணர்ச்சிகளுடனும் நாஞ்சில். ஏதோ புரிந்தது. என் மனதில் ஒரு பாரம் ஏறத் தொடங்கியிருந்தது. பொது விஷயங்கள் சிலவற்றை பேசி விமான நிலையத்தை அடைந்து ”யுனைட்டட்” வரிசையில் சென்று நின்றோம். பாலாஜி இருபதைந்து டாலர்கள் கொடுத்து பெட்டியை செக்கின் செய்து விட்டு வெளியே வந்த பொழுது 45 நிமிடங்களே இருந்தன. வேகமாக செக்யூரிட்டி செக்கினுள் சென்று அவர் கணிபொறி, பெல்ட், ஷூ இவற்றை எக்ஸ்ரே மெஷின் பெல்ட்டில் வைத்துவிட்டு ஃப்ரிஸ்க் செய்ய உடன்பட்டார். மீண்டும் அனைத்தையும் மாட்டிகொண்டு எங்களைப் பார்த்து கையை அசைத்தார்.

கண்ணாடியை கழற்றி முகத்தை துடைப்பது போலிருந்தது. இல்லை என் பிரம்மையா?

எங்கள் மனதில் வெறுமையை நிரப்பிவிட்டு விமானத்தின் கேட்டை நோக்கிச் செல்லும் கூட்டத்தில் கரைந்தார் நாஞ்சில் நாடன் என்ற சுப்ரமணியன்.

(முற்றும்)

பின்குறிப்பு – நான் முதலில் சொன்னது போல் என்ன பேசினோம் என்பதை நினைவு வைத்து எழுதுவது ஒரு பக்கம், எல்லாவற்றையும் பிரசுரிக்க முடியுமா என்ற அரசியல் காரணம் இன்னொரு பக்கம் – சரி அப்படியே எழுதினாலும் அது சாத்தியமா? பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் பிரசுரித்தால் இன்னும் 50 அத்தியாயங்கள் ஓடியிருக்கும்.

மேலும் ஒரு முழு நேர எழுத்தாளன் வேண்டுமானால் ஸ்வாரஸ்யம் குறையாமல் இதை செய்யமுடியும்.  நான் எழுத்தாளனும் இல்லை. அதற்கு உண்டான திறமையும், திராணியும் அட்லீஸ்ட் இன்றைய நிலைமையில் இல்லை. ”இதெல்லாம் எவன் கேட்டான், இதை எதற்கு எழுதுகிறீர்கள்” என்பவர்களுக்காக எழுதியதல்ல இது. நுண்ணுணர்வுகள் எஞ்சியிருப்பவர்களுக்காக எழுதப்பட்டது இது.

பின் குறிப்பிற்கு பின் குறிப்பு – என்ன பேசினோம் என்பதை எழுத சொன்ன பலருக்கு – ”சட்டியில் இருந்தால் தானே ஆபிஸில் வரும்” என்று நான் சொன்னால் அது ஜெயமோகனின் ”பேடபாதம்”. ஆம், ஆஃபீஸில் அல்லது ஆஃபிஸ் டைமில் வைத்து அவசரமாக எழுதினால் இப்படி அரைகுறைதான். என்றாலும் முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன். என்னுடைய நோக்கம் என்ன நடந்தது என்பதை ஆவணப்படுத்துவதே தவிர நாஞ்சிலாகட்டும் பிஏகேயாகட்டும் – அவர்கள் பேசியதை ஆவணப்படுத்துவதல்ல.

ஒரு அனுபவத்தை கொடுத்த மனத்திருப்தியுடன் முடித்துக் கொள்கிறேன்.

நாஞ்சில்நாடன் கட்டுரைகள் பற்றி சுந்தரேஷ்

நாஞ்சில்நாடனின் கட்டுரைகள் பற்றி ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் சுந்தரேஷ் ஆற்றிய உரை:

(அமெரிக்காவின்) கிழக்குக் கடற்கரையில் நான் வசித்தபோது இந்தியாவிலிருந்து யார் வந்தாலும் ஒரு நயாகரா பயணம் உறுதி. அது போலத்தான் என் பெற்றோர் வந்திருந்தபோதும் நயாகரா போனோம். அங்கே போயிருப்பவர்களுக்குத் தெரியும். அருவிக்கு மிக அருகில் போகும் ஒரு இடம் உண்டு. அருவியின் மொத்த உக்கிரத்தின் சிறு பகுதியை அருகிலிருந்து பார்க்கும்படி கம்பி கட்டி, படிகளால் ஆன பாதை ஒன்றை அமைத்திருப்பார்கள். பேரிரைச்சலுடன் விழும் அருவி, கண் திறக்க முடியாத அளவுக்கு முகத்தில் வந்து குளிராய்க் குத்தும் ஒரு நூறு நீர்க்குச்சிகள். அந்த இடத்தை பலர் வேகமாய்த் தாண்டி விடுவார்கள். பலருக்கு முகம் வெளிறி விடும். கவனமாகக் கால் எடுத்து நடக்காவிட்டால் வழுக்கி விட்டுவிடும்.

நான் அந்த இடத்தைத் தாண்டி வந்ததும் கவனித்தேன், என் அம்மா மட்டும் எங்களுடன் இல்லை. சட்டென்று வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்த்தால் அங்கே அம்மா, நயாகராவைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு தெறித்து விழும் அந்தத் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு வந்தார்கள். மகன்களுக்கே உரிய தெனாவெட்டுடன் “அம்மா இது என்ன நம்மூர் கோவில் குளமா, நயாகராம்மா” என்றேன். என் அம்மா, அம்மாக்களுக்கே உரிய அன்பான அலட்சியத்துடன் ”எல்லாம் ஒண்ணுதாண்டா பித்துக்குளி” என்றாள். ஒரு கணம் எனக்கு மண்டையில் அடித்தாற்போல இருந்தது. பேச வரவில்லை, சொல்லழிந்து நின்றேன்.

நாஞ்சில்நாடன் மூன்று நாட்கள் இலக்கிய சொற்பொழிவு நிகழ்த்தினார். சொல்லும், சொல்லின் பொருளும் அழிந்து நிற்கும் நிலை பற்றி அதில் ஒருநாள் பேசினார். இலக்கியம் என்பது சொற்களால் நிறைந்தது, என்றாலும் சொல்லழிந்து நிற்கும் ஒரு உன்னத நிலையை நோக்கியே அது எப்போதும் முனைந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் ஒப்பற்ற அனுபவங்களை வார்த்தைகளால் வடித்துக் காட்டுபவன் எழுத்தாளன். உன்னத அனுபவங்களின் எல்லையற்ற தன்மையை சொற்களால் தொட்டுவிட முயன்று கொண்டே இருப்பவன் இலக்கியவாதி.

சொல்லும் பொருளும் அழியும் மனநிலை என்பது எப்போதாவது ஒரு சிறிய கணத்தில் நாம் எல்லோருக்குமே நிகழ்ந்திருக்கும். வேகமாய்ப்போகும் ரயிலின் வெளியே டாட்டா காட்டும் சிறுவனின் சித்திரம் என்ன காரணத்தினாலோ மனதில் நீண்ட நாள் பதிந்துவிடுவது போன்றது அது. பார்த்த காட்சி சட்டென மாறிவிடும், ஆனால் காட்சி அனுபவம் தந்த அதிர்வு மட்டும் மனதை நெடுங்காலம் மீட்டிக்கொண்டிருக்கும். அனுபவம் தரும் அத்தகைய அதிர்வுதான் ஓர் இலக்கியவாதிக்கு, அவனது படைப்பு சூல் கொள்ளும் தருணமாகிறது. நாஞ்சில் நாடனின் அனுபவங்கள் அவரது எழுத்துகளெங்கும் அதிர்ந்து வழிகின்றன. வெம்பி அழுகின்றன. கோபத்தில் கொப்பளிக்கின்றன. எள்ளி நகையாடுகின்றன. அன்பில் நெகிழ்கின்றன.

நவீன படைப்பிலக்கியம் பயிர் செய்ய மரபார்ந்த எழுத்துக்களை உரமாக்கிக் கொண்டவர் நாஞ்சில் நாடன். அவரது கட்டுரைத் தலைப்புகள் மரபின் வாசனையே தெரியாத ஒரு நவீன வாசகனைக் கூட மரபை நோக்கி திருப்பி விட்டுவிடும்.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும்போதும் கட்டிடங்களும் குப்பைகளும் பெருகி வருவது போலவே எனக்குத்தோன்றும். நம் நீர்நிலைகளை, குளங்களை, வாய்க்கால்களை, ஏரிகளை, படுகைகளை பிளாஸ்டிக் குப்பைகளாலும், கருவேலங்கொடிகளாலும், மணற்கொள்ளைகளாலும் ஊர்தோறும் பாழாக்கி வைத்திருக்கிறோம். இது குறித்த நாஞ்சில்நாடனின் கட்டுரை கம்பனின் சொற்களில் ”நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை” என்னும் கட்டுரையாகிறது.

நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’ என்பது குடி பற்றிய கட்டுரையின் தலைப்பு.

நீர்நிலைகள் எல்லாம் தூர்ந்து போகும்படி ஆகிக் கொண்டிருக்கும் கட்டுரைக்கு ஔவையின் ”வரப்புயர நீர் உயரும்” எனும் கவிதையின் முதல் வார்த்தையைக் கையாள்கிறார்.

வரப்புயர நீர் உயரும் என்பது பொதுமக்களுக்கு இருக்க வேண்டிய குடிமை உணர்வைப் பேசுகின்றதென்றால் ”காவலன் காவான் எனின்” என்கிற கட்டுரை ஆள்பவர்களுக்கு இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் பொறுப்புணர்வைப் பற்றிப் பேசுகின்றது.

கிளிண்டன் விவகாரம் உச்சத்திலிருந்தபோது நகைச்சுவையாக அமெரிக்க வாக்காளனுக்கும் இந்திய வாக்காளனுக்கும் உள்ள வேறுபாடு என்று ஒன்றைச் சொல்வார்கள் – ஒரு சராசரி அமெரிக்கன், தான் எப்படியிருந்தாலும் சரி, தன்னை ஆள்பவன் ஒழுக்கசீலனாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பானாம். ஒரு சராசரி இந்தியனோ தான் ஒழுக்கமானவனாக இருந்தாலும் கூட, தலைமை என்று வரும்போது ’மேலிடத்தில் அப்டி இப்டித்தானப்பா இருக்கும்’ என்று அட்ஜஸ்ட் செய்து கொள்வானாம். காவலன் காவான் எனின் கட்டுரையில் ”ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின்” என்னும் திருக்குறளை நினைவுறுத்தி, ஆள்பவன் சரியில்லை என்றால் பசு கூட ஒழுங்காகப் பால் கறக்காது என்பதை நாஞ்சில்நாடன் சொல்லும்போது, பொருளாதார வளர்ச்சியோடு சேர்ந்து அள்ளிச் சுருட்டும் ஊழலிலும் உலகில் முன்னணி இடம் பெற்று விட்ட நம் அரசியல் எங்கே தவறிப் போனது என்பது நமக்குக் கோடி காட்டப்படுகிறது.

இந்தியாவின் ஊழல் கேடுகள் எல்லாமே, நம்மால் மேலே போனவர்கள் மேலிருந்து நம் மேல் ஊற்றிய சாக்கடைகள்தான்.

ஒவ்வொரு வருடமும் விடுமுறை நாளிலும் வேண்டுதல் நிறைவேற்றவும் குடும்பத்தோடு இந்தியாவின் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செல்பவர்கள் உண்டு. நாமும் அவ்வாறு யாத்திரை சென்றிருப்போம்தான், இல்லையா? அப்படி வடநாட்டில் இருந்து தெய்வ யாத்திரைக்கு ராமேஸ்வரத்துக்கு குடும்பத்துடன் வருகிறார் மராட்டியப் பெரியவர் ஒருவர். இந்தியாவின் மற்ற பகுதிகளில் காணாத வரவேற்பு வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் அவருக்குக் கிடைக்கிறது. ரயிலில் ஏறும் தமிழன் குடும்பத்துடன் சட்டமாய் சப்பணமிட்டு அமர்ந்திருக்கும் மாகாதேவ் தெல்கேயைக் கண்டு கடுப்படைகிறான். கெட்ட வார்த்தை சொல்லி வெறுப்பாய்த் திட்டுகிறான். ரத்தம் வர அடித்து அவமதித்து தன் தமிழ்ப் பற்றை நிலைநாட்டுகிறான். மனதிற்குள் வளையம் போட்டு அதற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து, தன் மொழி பேசாத, தன்னைப் போல் இல்லாத எல்லோரையும் வெறுத்து சிறு வாழ்க்கை வாழும் வேடிக்கை மனிதர்களை நாஞ்சில்நாடன் உற்றுக் கவனிக்கிறார். ”வளைகள் எலிகளுக்கானவை” என்று எழுதுகிறார். மனிதனாயிருப்பவன் தனது வளைகளை விட்டு வெளியே வர வேண்டும்.

இன்னொரு கட்டுரை – சூடிய பூ சூடற்க என்பது தலைப்பு. தொழிலாளர்களுக்காகப் போராடி முப்பது வயதில் மரித்த தியாகியின் சிலை முன் ஒவ்வொரு நாளும் ஒரு பெரியவர் நின்று கண் கசியப் பாடுகிறார். அரசு அலுவலகத்தில் கடைநிலைப் பணியில், விரலுக்கேற்ற வீக்கம் என்று அவனுக்கான ஊழலுடன் ஓரளவு காசு பார்த்து வாழ்பவன் பூமிநாதன், அவனுக்கு ஒரு நாள் திடீரென்று ஏதோ தோன்றுகிறது. கையில் ஒரு மாலையை எடுத்துக் கொண்டு சிலையை நோக்கியோ பெரியவரை நோக்கியோ விடுவிடுவென்று நடக்கத் தொடங்குகிறான். எனக்கென்னவோ நாஞ்சில்நாடன் கட்டுரைகள் எல்லாமே அந்த பெரியவரின் பாட்டு போலத்தான் தோன்றுகின்றது. தினமும் கடமையே என்று பாடிக் கொண்டிருந்தால். ஒரு நாள் இல்லை ஒரு நாளாவது சமூகம் பூ மாலையைக் கையில் எடுக்காதா?

நாஞ்சில்நாடன் கட்டுரைகள் வறட்டு தத்துவங்களாலும் புள்ளிவிவரங்களாலும் நிறைந்தவை அல்ல. அவை கதைபோல் நம்மிடம் பேசுபவை. வாழ்க்கை அனுபவங்களை நேரடியாகச் சொல்பவை. கண்டு உரைப்பதையே கட்டுரையாக்கியவர் நாஞ்சில்நாடன். அவர் செய்யும் எள்ளல்கள் கூர்மையானவை. சொல்லும் உண்மைகள் அப்பாவின் அடி போல வலியை ஏற்படுத்துபவை. அந்த வலியை உணர்பவர்களாக நம் சமூகம் இருக்கும் வரை நல்லது, மருந்தால் குணப்படுத்தி விடலாம். வலி மரத்துப் போய்விட்ட சமூகம் அறுவை சிகிச்சைக்கு தயாராகிவிட்ட, நோய் முற்றிய சமூகம். எனவே, அவரது கட்டுரைகள் தரும் வலிகளை வரவேற்போம்.

நாஞ்சில்நாடன் சொற்கள் அவர் வாழும் மண்ணுக்கும் மனதுக்கும் உண்மையான சொற்கள். ஒவ்வொரு மழைத் திவலையாய்த் திரட்டி கீழிருந்து மேல் நோக்கிப் போகும் மழைதான் எல்லோர்க்கும் பெய்யும் மழையாகவும் ஆகிறது. அது மண்ணை மட்டுமல்ல வானத்தையும் கூட வசப்படுத்திவிடுகிறது.

பிரமிள் தன் கவிதையொன்றில் ”சொல் மழைத்துளிகளாய்த் திரண்டது, மேல்நோக்கிப் பொழிந்தது” என்பார். நாஞ்சில்நாடனின் சொல் மண்ணில் உருவாகி மேல் நோக்கிப் பெய்யும் மழை.

அதை வணங்குவோம்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம், சுந்தரேஷ் பதிவுகள்

கலிஃபோர்னியாவில் நாஞ்சில் -6

நாள் 11 – ஜூன் 29, 2012

இன்று தம்பி முத்துகிருஷ்ணன், பிஏகே தம்பதியினர் மற்றும் நாஞ்சிலை சான் பிரான்சிஸ்கோ டியாங்க் மியூசியம் மற்றும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.  குறிப்பு அனுப்பினார்.  ஆனால் இதில் அவர் இந்த நாட்களில் என்ன பேசினார் என்பதும் அடங்கியிருக்கிறது.

முத்துக் கிருஷ்ணன் பதிவு இது
(முத்து கிருஷணன் இணைய தளத்திலும், நாஞ்சில் நாடன் தளத்திலும் முழுமையாகவும், ஜெயமோகன் இணைய தளத்திலும் இதற்கு சுட்டியும் இருக்கிறது). இதோ இங்கும் முழுமையாக. படித்து முடிக்கும் பொழுது முத்துகிருஷணன் கட்டுரையை எல்லோரும் மனப்பாடமே செய்திருப்பார்கள்.

நாஞ்சில் நாடனிடம் கண்டதும் கேட்டதும்

நாஞ்சில் நாடன் என்ற ஆளுமையுடன் பழக பல மணிக்கூறுகள் – மூன்று தினங்கள் அவர் உரையாற்ற கேட்டும், ஒரு நாள் முழுவதும் அவருடன் ஊர் சுற்றிக் கொண்டும் – அமெரிக்கவில் வாய்ப்பு கிடைத்தது.

நாஞ்சில் நாடன் எதை போல் நேர்ப் பழக்கத்தில் தோற்றமளிக்கிறார்? அவருடைய கதைகளை போலவா? கட்டுரைகளைப் போலவா? சராசரி பயணியாகவா? அல்லது இவையெல்லாம்மில்லாத வேறொரு ஆளுமையாகவா?

ஃப்ரீமான்ட் (Fremont) நகரத்தில் முதல் நாள் கம்பராமயணம் கலந்துரையாடலுக்கு அவர் வீட்டினுள் நுழையக் கண்ட பொழுது, மிக தயக்கத்துடன் புதியவர்களை கண்டு வணக்கம் சொல்லும் ஒரு எளிய மனிதராகத் தான் தோன்றினார். தன்னிடம் கேட்கப் படாத கேள்விகளுக்கு வலிய சென்று அவர் பதிலுரைத்து நான் காணவேயில்லை. சின்ன தகவல் முதற்கொண்டு எல்லாவற்றையும் சிறு தயக்கமின்றி அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வெளியிடங்களில் தான் காண்பதை உள்வாங்கிக் கொண்டே, சில நேரங்களில் பாக்கெட்டில் வைத்திருந்த கனக்கச்சிதமான ஒரு நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

இதிலிருந்து வெகுவாக வேறுபடும் முகம் கம்பனை பாடும் பொழுது நாஞ்சிலுக்கு வருவதுண்டு. அவரே சொல்வதை போல கம்பன் அவருடைய ‘Passion’. அதன் பொருட்டே கம்பராமயணத்தை பாடும் பொழுதும் அதைப் பற்றி பேசும் பொழுதும் அவரின் பேச்சிலும், முகத்திலும் பரவசம் தெரிந்தது. கம்பராமயணம் செய்யுளை வாசிக்கும் பொழுது ஒரு பாவம், அதை விவரிக்கும் பொழுது வேறொரு பாவம். முதலாவது பாவம் இரண்டாவதை விட கொஞ்சம் தூக்கல். என் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு எதிலும் இப்படி ஒரு மணி நேரம் ஒரு ஆசிரியரை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு, அவர் சொல்வதை இடைவெளியில்லாமல் மனதில் வாங்கியதில்லை. கும்பகர்ணனுக்கும் இராவணனுக்கும் நடக்கும் உரையாடல் பகுதியில் அதை உணர்ந்து அன்னிச்சையாக அவரின் மேல் வைத்த பார்வையை விலக்கிக் கொண்டேன். அது ஒரு அனுபவம்.

இதை என்னல் நிச்சயமாக சொல்ல முடியும், ஏனென்றால் மூன்றாவது நாள் சங்கக் கவிதைகளை பற்றி அவர் உரையாற்றும் பொழுது ஆசிரியருக்கும் சரி, மாணவனுக்கும் சரி, அவ்வனுபவம் நிகழவில்லை.

நாஞ்சில் நாடனின் கட்டுரைகள் பெரும்பாலும் தான் வாழ்கின்ற சமூகத்தை பற்றியும், அவற்றை நோக்கியும் பேசுபவை. ஒரு தனி மனிதனாக, தன் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவராக அவர், மிகவும் முன்னேறிய நாட்டில் சுற்றி அலையும் பொழுது, தொடர்ந்து அதை தன் நாட்டுடன் ஒப்பிட்டுக் கொண்டே வந்தார். எங்கும் தட்டுப்படில்லாத சில்லரை, கேட்டால் வழி சொல்லும் சக மனிதர், பிரம்மாண்டமான பாலம், தூய்மையான சுற்றுப்புரம் என பல காட்சிகளை (பெரிதோ, சிறிதோ…) ஒப்பிட்டு நோக்கி வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தார். “One who cares the most is the one who suffers the most” என்பது உண்மையானால், அவருடை இந்த பயணத்தில் அடி மனதில் ஒரு வலியை உணர்ந்து கொண்டே இருந்ததாகவே நான் யூகிக்கிறேன். ஹூவர் அணையை பற்றி சிலாகித்து பேசும் பொழுது, “எவ்வளவு பெருசா கட்டிருக்கான்” என்ற ஆரம்ப வரியை தொடர்ந்து, “எவ்வளவு சுத்தமா வச்சிருக்காங்க!!! யாரும் ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில் அங்க தூக்கி போடுறதில்ல…” என்ற இரண்டாவது வரி தொடர்ந்து வந்தது அவரிடமிருந்து. இதே தொனியில் அவர் மிகவும் அனுபவித்த மற்ற இடங்களில் நின்ற பொழுதும் ஒரு வரி, தன் நாட்டை ஒப்பிட்டு வந்து கொண்டேயிருந்தது.

ஆனால் அவ்வுணர்வுகள் எவ்வகையிலும் பயணத்தின் அனுபவத்தை இடை மறிக்காமல் கவனித்துக் கொண்டார் என்றே தோன்றியது. இடைவெளியில்லாமல் அமெரிக்காவில் பயணம் செய்து கொண்டிருந்தாலும், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வெளிக்காட்சிகளை காண்பதற்கு ஆயுத்தமாகவே இருந்தார். இந்நாட்டின் நூலகங்களையும், பிள்ளைகளுக்கு படிக்க கிடைக்கும் புத்தகங்களையும், அதற்கு பெற்றோர்கள் அளிக்கும் ஊக்கத்தையும் தமிழ் நாட்டிற்கு ஒப்பு நோக்கும் பொழுது, நாஞ்சில் அவருடைய காரமான கட்டுரைகளாக மாறினார் என்று சொல்ல வேண்டும் (அங்கதம் தவிர்த்து…). அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களுமே நூலகங்கள் குறித்த தன்னுடைய அங்கலாய்ப்பை சொல்லிக் கொண்டேயிருந்தார். அதே போல் சராசரி தமிழ் மனதின் சமூக அக்கறையின்மை, இயலாமை, சீர்கேடு எல்லவற்றையும் கடுமையாக சாடி, இறுதியில் அவைகளுக்கு புறக்காரணங்களுக்கு சமமாக தனி மனிதனின் ஒரு வகை மனக் கோளாறும் காரணம் என்ற முடிவுக்கு வந்து விட்டார் என்று தெரிந்தது.

இன்று தமிழின் பழம்பெரும் நூல்களின் மறுபதிப்புகளின் நிலையென்ன, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்றுத் தரப்படும்  தமிழின் தரமென்ன, அதை விட முக்கியமாக கற்றுக் கொடுப்பவரின் தரமென்ன, வெளிச்சப்படுத்தப் படாமல் போன தமிழ் ஆர்வலர்களும் அவர்தம் படைப்புகளின் நிலையென்ன என்று கேள்விகளும், பதில்களும், எதிர்வினைகளும் அவர் மனதில் குவிந்து கிடக்கிறது. இவையெல்லாம் நேர் பேச்சில் அவருடைய கட்டுரைகளை போலவே, ஆனால் அங்கதமின்றி ஒரு படி அக்கறை கூடி, ஒலிக்கிறது.

நாஞ்சில் நாடன் தன் கதைகளாக காட்டிக் கொண்ட தருணங்கள் மிக சில. கம்பராமாயணம் உரையின் இரண்டாம் நாள் தொடக்கத்தில், சூடிய பூ சூடற்க தொகுப்பில் உள்ள தன்ராம் சிங் என்ற கதையில் வரும் கூர்க்கா கதாபத்திரங்களை பற்றி பேசுகையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். குறிப்பாக அந்த கூர்க்காக்கள் தம் குடும்பத்தில் ஒருவர் இறந்த சேதியை கொண்டுவரும் கடிதத்தை வாரக்கடைசியில் கடற்கரையில் கூடி உட்கார்ந்து, துக்கம் பகிர்ந்து, இறுதியில் எரிப்பதை சொல்லும்பொழுது அவர் குரல் உடைந்தது. அவர் உருவாக்கிய கதை மாந்தரை, அவர் குரலால், அதே மனவெழுச்சியுடன் உயிர்த்தெழக் கேட்டது மறக்கவியலா தருணம். ஒருவகையில் அன்று மிக எழுச்சியுடன் வெளிப்பட்ட கம்பனின் இராவணன் கதாபாத்திரத்திற்கு மேலே சொல்லப்பட்ட நிகழ்ச்சி ஒரு முகாந்திரமாக அமைந்தது என்று நினைக்கிறேன்.

ஹிந்துஸ்தானி மற்றும் கர்னாடக இசையில் மிகுந்த ஆர்வமுள்ளவர் என்பது அவரிடம் வலிந்து பேச்சுக் கொடுத்தாலன்றி தெரியாது. அவர் காரில் ஸான் ஃரான்ஸிஸ்கோவிற்கு போகும் பொழுது, P.A.கிருஷ்ணனிடம் தற்பொழுது யார் நன்றாக பாடுகிறார்கள், தனக்கு பிடித்தமான பாடகர்கள் யார் என விரிவாக சில நேரம் பேசிக் கொண்டிருந்தார். எவ்வளவு நேரம் பேசினார் என்பதைக் காட்டிலும், மிக அமைதியாகவும் தெளிவாகவும் அவருடைய பார்வைகளை சொன்னது மூலம் இசை மேல் உள்ள ஈடுபாடு விளங்கிற்று. ஆனால் கேட்டாலன்றி, எதிரில் இருப்பவற்கு இசையில் பரிச்சயமானவர் என்றாலன்றி அவராக அதைப் பற்றி பேச மாட்டார் என்றே நான் விளங்கிக் கொண்டேன்.

அடுத்தது சொல்லப்பட வேண்டியது, தவிர்க்கவே இயலாதது நாஞ்சில் நாடனும் உணவும். பொதுவாக பலருக்கு பரிச்சயமானது என்றாலும் கூட அதை தொடாமல் தாண்டிச் செல்ல இயலாது. சமீப காலமாக சைவத்திற்கு மாறி விட்டலும், நாஞ்சில் நாடனுக்கு அமெரிக்காவில் சாகசத்திற்கு பலவித உணவு வகைகள் கிடைத்தன என்று தான் சொல்ல வேண்டும். தனிப் பேச்சில் நான் புரிந்து கொண்டது என்னவென்றால் இன்னும் பல நாட்களுக்கு (சில மாதங்களுக்கு கூட..) கோவையில் அவர் வீட்டில் இரவுணவில் பல சோதனை முயற்சிகள் நடைபெறும் என்பதே. குறைந்த செலவில், துரிதமாக, சத்தான, நிறைந்த உணவு சிலவற்றை செய்வதெப்படி என கற்றுக் கொண்டார் என்பது உறுதி. போனால் போகட்டும் என நினைத்து உருளை கிழங்கை வைத்து பொடிமாஸ் போல ஒன்றை எப்படி சீக்கிரம் செய்வது என்று கோல்டன் கேட் பிரிட்ஜ் அடியில் எனக்கும் போதித்தார். (“ அப்புறம் எப்படி சார் உருளை வேகும்” என நான் கேட்க, அவரும் திருமதி.P.A.கிருஷ்ணனும் ஒன்று சேர்ந்து, “முதல்ல உருளைய வேக வச்சிட்டு தான் இதெல்லாம் செய்யவே ஆரம்ப்பிக்கணும்” என்று தண்ணி தெளித்து விட்டு, போதனையை நிறுத்திக் கொண்டது வேறு கதை…).

இங்குள்ள Starbucks சங்கிலி காபி கடையில் அவர்கள் தரும் லாட்டே (Latte) காப்பியை சில ‘பக்குவங்கள்’ சொல்லி அவர்கள் கையாலேயே தனக்கு பிடித்தமானதாக மாற்றிவிட்டார் என்பதை ஸாவ்ஸலிட்டோ (Sausolito) கடற்கரையில் பார்த்தேன். வடகிழக்கு அமெரிக்காவில் ஆரம்பித்து ஏறத்தாழ ஒரு மாதம் இதை செய்துவருகிறார் என நினைக்கிறேன். ஸான் ஃப்ரான்ஸிஸ்கோவிலிருந்து திரும்பி வரும் பொழுது, மாலை பொழுதின் உச்ச கட்ட நெரிசலில் பின் இருக்கையிலிருந்த P.A.கிருஷ்ணன் மற்றும் துணைவியாருக்கு சரியான முறையில் ரச வடை செய்வதெப்படி என்பதை முந்தின நாள் ஊறப் போடுவதிலிருந்து ஆரம்பித்து இறுதியில் அதை சாப்பிடும் பொழுது நாக்கில் தொடங்கி வயிற்றில் அடங்குவது வரை அதன் சுவை எப்படி இருக்கும் என சொல்லிக்கொண்டு வந்தார். இனி அந்த ரச வடை தவிர்த்து வேறு சாப்பிட்டால் எனக்கு திருப்தி படாது. ஒவ்வொன்றாக சொல்வதைக் காட்டிலும் இப்படிச் சொல்லலாம். டோஃநட்ஸ் (Doughnuts), மெபிள் ஸிரப் ஊற்றிய பான் கேக் (pan cakes), ஸாலட், சான்ட்விச், வீட்டுச் சாப்பாடு, சரவணா பவன் சாப்பாடு என நாஞ்சில் உண்ட உணவின் ருசி அவரை சுற்றி பொங்கி வழிந்து கொண்டேயிருந்தது.

தீர்க்கமான கருத்துக்களும், விமர்சனங்களும், எதிர்வினைகள் இருப்பினும் நாஞ்சில் நாடன் சக எழுத்தாளர்களை பற்றி குறைவாகவே பேசினார், முக்கியமாக விமர்சனங்களை. ஆனால் அதை குறிப்பிட்டு கேட்டால் மிகவும் ஆணித்தரமாக என்ன நினைக்கிறாரோ அதை தயக்கமின்றி சொன்னார். தான் ஒரு எளுத்தாளராக இருப்பதாலோ அல்லது இலக்கிய சூழலில் தனக்கு ஒவ்வாத சூழ்நிலை நிலவுவதாலொ அவர் தேவையற்ற ‘gossip’ஐ தவிர்ப்பதாகவே நான் புரிந்துக் கொண்டேன்.

அவர் பேசக் கேட்ட நான்கு நாட்களில் ஒப்பு நோக்க அவர் தொடாத விஷயம் என்று ஒன்றுண்டென்றால் அது தத்துவம் அல்லது சித்தாந்தம் என்று சொல்வேன். அவருடைய வயதிற்கும், வாசித்த நூல்களுக்கும், மேற்கொண்ட பயணங்களுக்கும், கடந்து சென்ற வாழ்கை அனுபவங்களுக்கும் சாரமாக ஏதோவொரு சித்தாந்ததில்/ தத்துவத்தில் சார்பு ஏற்பட்டு விட வாய்ப்புள்ளது. உரையாடல்களில் அது மறைமுகமாக கூட வெளியில் தெரிந்து விடும், அதுவும் மிக வெளிப்படையான நாஞ்சில் நாடனை போன்றவரிடம் நிச்சயமாக. ஒன்று நான் கண்டு கொள்ளவில்லை அல்லது கண்டதும், கேட்டதும் தாண்டி வேறொன்றுமில்லை என்பது தான் அவரின் கண்டடைதலாக இருக்கக் கூடும்.

இறுதியாக, நாஞ்சில் நாடன் அவருடைய கட்டுரையாகவா, கதைகளாகவா, ஒரு பயணியாகவா அல்லது மற்றொரு ஆளுமையாகவா தெரிகிறார் என்று ஆரம்பித்த கேள்வி. உண்மையில், அதற்கான பதிலை என்னால் கூற இயலாது. எனக்கு கிடைத்த நேரம் போதாமல் இருக்கலாம் என்று எண்ணுகிறேன். ஆனால், நாஞ்சில் நாடன் தன்னை ‘எதுவாகவும்’ காட்டிக் கொள்ள முயற்சிக்காதவர் என்று தீர்க்கமாக சொல்வேன்.

ரெட்வுட் சிட்டியிலிருந்து, ஃப்ரீமான்டிற்கான பயணத்தில், டம்பார்ட்டன் பாலத்தில் (Dumbarton Bridge) காரில் போகும் பொழுது நாஞ்சி நாடன், “இந்த ஊருல புருஷனும் பொண்டாட்டியுமா குடும்பம் நடத்திட்டு, அங்க இந்தியாவுல பெத்தவங்களுக்கு செலவுக்கு பணம் அனுப்பிட்டு நல்ல படியா வாழணும்னா எவ்வளவு சம்பாதிக்கணும்?”

அதுவும் கூட நாஞ்சில் நாடன் தான்.

மாலை 8:15
ஆர்வியும் நானும் சென்று ராஜன், முத்துகிருஷ்ணன், பாலாஜி மற்றும் நாஞ்சிலுடன் ராஜன் வீட்டில் சேர்ந்து கொண்டோம். பெண்கள் அணி முன்னரே ஃபிரீமாண்டில் புதிதாகத் திறந்திருக்கும் சரவணபவன் சென்றிருந்தார்கள். 8:15க்கு வரச்சொல்லியிருந்தார்கள். அதனால் 8:30 சென்றோம். கூட்டம் ஜேஜே. உடனே இடம் கிடைக்காததால் சற்று அருகிலிருக்கும் உழவர் சந்தை ஒன்றினுள் நுழைந்து பொழுது போக்கினோம். மரபணுவுடன் விளையாடி விளைவிக்கப்பட்ட மற்றும் ஆர்கானிக் காய்கரிகள் பளபளத்தது.

பார்வையிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே இடம் கிடைத்துவிட்டதாக தகவல் வந்தது. அமர்ந்தோம். சுந்தரேஷ் சேர்ந்து கொண்டார். நாஞ்சில் ரவா ஆனியன் சாப்பிட்டார். குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோர்களின் ஆர்டட்களிலினால் தாக்கப்ப்ட்டிருந்த சர்வ் செய்தவர் ”டென்ஷன்” என்று முகத்தால் சொன்னார். நாஞ்சில் அவருடைய பதட்டத்தைப் பார்தது ஹோட்டலுக்கு நல்லது அல்ல என்றார். உணவில் தேங்காய் சட்னி எண்ணைத்தேங்காயில் பண்ணியிருக்கிறார்கள். சாப்பாடு குவாலிட்டி சுமார் ரகம் என்றார்.

ராஜன் வீட்டிற்கு போய் ராஜன், அவர் மனைவி, நான், என் மனைவி நாஞ்சிலிடம் பேசிக்கொண்டிருந்தோம். நாஞ்சில் களைப்படைந்தவுடன் வீட்டிற்கு கிளம்பினோம். நேரம் இரவு 11:30.

(தொடரும்)