பி.ஏ. கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை”

பாலாஜி ஸ்ரீனிவாசன் ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் பேசியதை இங்கே பதித்திருக்கிறேன்.

புலிநகக் கொன்றை திரு. பி.ஏ. கிருஷ்ணன் அவர்களின் முதல் நாவல். இதன் மூல வடிவம் ஆங்கிலத்தில் “The Tiger Claw Tree” என்ற பெயரில் 1998இல் வெளிவந்தது. 2002ஆம் ஆண்டில் அவரே இதை “புலிநகக் கொன்றை” என்று தமிழில் எழுதியிருக்கிறார்.

எங்கள் சிலிகான் ஷெல்ஃப் வாசகர் வட்டத்தில் இந்தப் புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் அலசி விவாதித்தோம். எல்லோருக்கும் பிடித்த நாவலாக இது அமைந்தது.

தலைப்பிலேயே நம்மை உள்ளிழுக்கிறார் பிஏகே. Tiger Claw Tree என்ற டைட்டிலை ஏ.கே. ராமானுஜத்தின் ஐங்குறுநூறு பாடல் ஒன்றின் மொழிபெயர்ப்பில் இருந்து எடுக்கிறார். (எழுத்தாளர் விக்ரம் சந்திராவின் நாவல் Red Earth and Pouring Rain டைட்டிலும் இதில் இருந்து தான் எடுக்கப்பட்டது).

புலிநகக் கொன்றை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த தென்கலை ஐயங்கார் குடும்பத்தின் வரலாற்றைக் கூறுகிறது. 1870-இல் இருந்து கிட்டத்தட்ட 1970 வரையிலான நான்கு தலைமுறைகளின் வாழ்க்கையை விவரிக்கிறது. ஆனால் அதற்கும் முன்பாக முதல் தலைமுறையின் மூதாதையர்களைப் பற்றியும் தொட்டுச் செல்கிறது. ஆக, கட்டபொம்மன் காலத்திலிருந்து ஆரம்பித்து விரிவடைகிறது.

குடும்பத்தின் வயதான பாட்டி சாகக் கிடக்கிறாள் என்ற எளிய ஆரம்பமாக இருந்தாலும் இது சாதாரண குடும்ப வரலாற்றை சொல்லும் நாவல் இல்லை. மாறாக, இது ஒரு out and out பொலிட்டிகல் நாவல். கதாபாத்திரங்கள் அவர்கள் காலகட்டத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டு அதை ஆழமாக விவாதிக்கிறார்கள். ஒரு நூறு பக்கங்களுக்கு குடும்பக் கதையாக செல்லும் நாவல், நீண்ட பாய்ச்சலில் அரசியல் சூழலுக்குள்ளே செல்கிறது. நம்மாழ்வார் என்னும் கேரக்டர், தீவிரவாத காங்கிரஸ் பின்னால் செல்கிறார். திலகரின் எழுத்துக்களால் கவரப்பட்டு, ஆயுதப் புரட்சியால் விடுதலை வரும் என்று உழைக்கிறார். வாஞ்சிநாதன் ஆஷ் துரையை சுட்டுக் கொல்லும் சம்பவம் அவர் வாழ்க்கையில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

அவர் மகன் மதுரகவி, காங்கிரஸ்காரராக ஆரம்பித்து கம்யூனிஸத்தால் உந்தப்பட்டு தீவிர கம்யூனிஸவாதி ஆகிறார்.

அவருடைய பையன் நம்பி, கம்யூனிஸ்டாகி அதனால் அவன் வாழ்க்கையே சூறையாடப்படுகிறது.

இந்தக் குடும்பத்தில் இழையோடும் சரடு இளவயதில் நிகழும் துர்மரணங்கள். விதியின் வலிய விளையாட்டு ஒவ்வொரு முறையும் எதிர்பாராத விதமாக அடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணமாக ஊமைத்துரை காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் பிஏகே விவரிக்கிறார். இந்த கனெக்ஷன் வலிந்து நுழைக்கப்பட்டது போல எனக்கு தோன்றியது.

பொன்னா பாட்டி பல இடங்களில் காப்ரியல் கார்ஸியா மார்குவெஸின் 100 years of solitudeஇல் வரும் உர்சுலா பாட்டியை ஞாபகப்படுத்துகிறாள்.

நிறைய யோசித்தால் எந்த வித சித்தாந்தத்தையும் முழுவதுமாக நம்பமுடியாது என்ற அடிச்சரடு இந்த நாவலில் மறுபடியும் மறுபடியும் வருகிறது. நம்மாழ்வாரும் சரி, நம்பியும் சரி, அவர்கள் நம்பிய கொள்கைகளை திரும்பத் திரும்ப மறுபரிசீலனை செய்கிறார்கள். இதற்கு அச்சாரமாக வரும் கண்ணன் என்ற காரெக்டர். அவனால் தான் எதை நம்புகிறோம், எதை நம்ப வேண்டும் என்று நிலையாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை. ஆனால், அவனைச் சுற்றி இருக்கும் பெண்கள் (அவன் தங்கை, காதலி, அண்ணி) அவனை விடத் தெளிவாக இருக்கிறார்கள்.

இது மேல்தட்டு குடும்பத்தின் கதை. அதனால் நாவல் முழுவதும் இவர்களின் வருமானம் பற்றிய கவலையோ பசி, வறுமை போன்றவைகள் இடம்பெறவில்லை. நிலம் நீச்சு எக்கச்சக்கம். உண்டியல் கடை குடும்பம் என்று அழைக்கப்படும் குடும்பம்.

பிஏகேயின் முதல் டச், பொன்னாவின் மகள், இளம் விதவை ஆண்டாள் மறுமணம். நம்மாழ்வார் சுதேசமித்திரன் ஆசிரியர் பொண்ணுக்கு மறுமணம் செய்தது போல ஆண்டாளுக்கும் செய்யவேண்டும் என்று கூறுகிறான். இது ஜீயரால் தடுத்து நிறுத்தப்படுகிறது. சம்பிரதாயமான குடும்பத்தில் புதுவித கருத்துக்கள் வருவதற்கு ஒரு முன்னோடி. அடுத்த தலைமுறையில் நம்மாழ்வார், கல்யாணம் ஆன பிறகும் மனைவியை விட்டுவிட்டு செல்கிறார். உச்சக்கட்டமாக நம்மாழ்வாரின் மகன் மதுரகவி, தான் நம்பிய கொள்கைக்காக உயிர் துறக்கிறான். அடுத்ததாக வரும் தலைமுறையில் கண்ணன் அரசியலில் கால் நனைத்தாலும் கடைசியில் அதிலிருந்து விலகி, தன் வாழ்க்கையை கவனிக்க ஆரம்பிக்கிறான். ஒரு வகையில் பார்த்தால், இந்தியாவின் psyche இதில் தெரியும். 1970 வரை இளைஞ்ர்கள் அரசியலில் ஆர்வமாக பங்கெடுத்து, அதன் பின் அந்த ஆர்வம் குறைய ஆரம்பித்திருப்பதை கோடிட்டு காட்டியிருக்கிறார். நம் காலகட்டத்தில் எல்லா போராட்டங்களும் “யாரோ” செய்கிறார்கள் என்று டிவியில் பார்த்துவிட்டு போய்விடுகிறோம். இப்படியும் மனிதர்கள் இருந்தார்களா, அரசியல் இப்படியெல்லாம் அவர்கள் வாழ்க்கையில் விளையாடியிருக்கிறதா என்று எண்ணிப்பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.

நாவலின் ஸ்கோப் பெரிதாக இருப்பதால் அதில் பிஏகே அத்தனை விதமான தகவல்களையும் உள்ளே இழுத்து சுவையாக எடுத்துச் செல்ல முடிகிறது. வ.உ.சி, சிவா, பாரதி, வ.வே.சு ஐயர், பெரியார், ராஜாஜி எல்லாரும் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள். அறியாத தகவல்கள் பக்கத்துக்கு பக்கம் அள்ளித் தெறிக்கிறார் பிஏகே (எம்.ஆர். ராதா எம்ஜியாரை சுட்ட தினம் சோபர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணி சேப்பாக்கத்தில் விளையாட ஆரம்பிக்கும் நாள்) என்று. பிஏகேயின் ஜெனரல் நாலெட்ஜ் நன்கு வெளிப்படுகிறது. இது எல்லாம் நேம் ட்ராப்பிங்காக இல்லாமல் ஆழமாக அன்றைய சூழலை நம் மனதில் கொண்டு வருகிறது. நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பல. ஆழமாக மனதில் நிற்கின்றன. நம்மாழ்வார், நம்பி, கண்ணன் போன்ற ஆண் பாத்திரங்களுக்கு மத்தியில் ஆண்டாள், ரோஸா, பொன்னா பாட்டி போன்ற மிகவும் பவர்ஃபுலான பெண் பாத்திரங்கள். குறிப்பாக, ஆண்டாள் பாத்திரத்தை வைத்து ஒரு தனி நாவலே எழுதலாம். உபரி பாத்திரங்கள் கூட மனதில் நிற்கின்றன (ஜெர்மன் ஐயங்கார், கோபால பிள்ளை, நரசிம்மன் போன்றோர்).

எனக்குப் பிடித்த இன்னொன்று, இதில் வரும் literary references. ஷேக்ஸ்பியர், கம்பனில் இருந்து ஜி.கே. செஸ்டர்டன், மார்க்சிய சிந்தனையாளர்கள் வரை நிறைய ரெஃபெரன்ஸஸ். பல எழுத்தாளர்களை கூகிள் செய்து பார்க்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் கதை மாந்தர்கள் படிக்கும் புத்தகங்கள். ரெம்ப்ராண்டின் The anatomy Lesson of Dr.Tulp போன்ற ஓவியங்கள் பற்றிய குறிப்பும் படிக்க சுவையாக இருக்கிறது. என்னைப் போன்ற ட்ரிவியா, க்விஸ்ஸிங் buffகளுக்கு மறுபடியும் மறுபடியும் படிக்கக்கூடிய நாவலாக அமைந்திருக்கிறது.

பிஏகேயின் சென்ஸ் ஆஃப் ஹியூமர் பற்றி குறிப்பிடவேண்டும். கதை நெடுக பல நகைச்சுவை சம்பவங்கள். உதாரணத்துக்கு, கல்லூரி பேராசிரியர்கள் கோட், டை அணியவேண்டும் என்பதை எதிர்த்து போராடுகிறார்கள். கல்லூரி முதல்வர் கண்டிப்பானவர். அவருக்கு எதிராக சுவரொட்டி போராட்டம். ஒரு சுவரொட்டி அவரை “ஜின்னா மைனர்” என்றது. ஜின்னா நல்ல உடை அணிவதில் பிரியம் உள்ளவர் என்பது நெல்லையில் பலருக்குத் தெரியாது. “காந்தி பிறந்த மண்ணில் கால் சாராய் அணியச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் ஜின்னா மைனரே! டை கட்டச் சொல்வது எதற்காக? உம் பின்னால் கை கட்டிச் செல்வதற்கா? கோட்டு போடச் சொல்வது எதற்காக? உமக்குப் பின் பாட்டுப் பாடுவதற்கா?” மற்றொரு சுவரொட்டி அவரை இட்லரின் மறுபிறப்பு என்றது. “இட்லரின் மறுபிறப்பே! ஆசிரியரை மூச்சடைக்க வைக்காதே! அன்று ஆஸ்விட்ஸ்! இன்று இறுக்கமான வகுப்பறைகள்!”

இதற்கு கல்லூரி முதல்வரின் கமெண்ட் “காலேஜுப் பசங்க ஜின்னாவைக் கண்டானா ஹிட்லரைக் கண்டானா? ஆஸ்விட்ஸாம்ல ஆஸ்விட்ஸு. நாளைக்கு முப்பது தோசை திங்கிறவங்க ஒரு நாளு உள்ளாலுமே அங்க போனாத் தெரியும்”.

நாவலின் மையக் கருத்து வரலாறு நமக்காக காத்திருப்பதில்லை. சில சமயம் நம்மை மீறி போய்விடுகிறது, சில சமயம் நம்மை உள்ளே இழுத்து மாற்றிவிடுகிறது, சில சமயம் நம்மை விளிம்பில் நிற்கவைத்து உள்ளே இழுக்காமல் சென்றுவிடுகிறது. இந்த கதையில் இது எல்லாம் நடக்கிறது. இது அப்படி வரலாற்றால் சுழட்டி அடிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை.

எழுத்தாளர் ஒரு சமூகத்தின் மனசாட்சி என்று சொல்வார்கள். இந்த நாவல் ஒரு நூறாண்டு கால தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றின் மனசாட்சி.

A well-written novel that we can’t put down. கண்டிப்பாக படியுங்கள்.

தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், பாலாஜி பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
பி.ஏ. கிருஷ்ணனின் “கலங்கிய நதி“, “திரும்பிச் சென்ற தருணம்

9 thoughts on “பி.ஏ. கிருஷ்ணனின் “புலிநகக் கொன்றை”

 1. பாலாஜி – எல்லாருமே நல்ல விமரிசனம் எழுதி இருக்கிறீர்கள். நாவல் நெடுகிலும் மரணம். ஆனால் நரசிம்மனின் மரணம் எல்லாவற்றையும் விட நிறைய பாதித்தது. நம்மாழ்வார் திரும்பி வரும், நம்பி போலீஸால் கொண்டு செல்லப்படும் இடம் வரை ஏனோ ஒரு emotional stake இல்லாதது போல் இருந்தது. ஆனால் அதற்கு அப்புறம் சில பகுதிகளிலேயே emotional height கொண்டு வருகிறார். நீங்கள் சொல்வது போல் எல்லா கதாபாத்திரங்களும் தான் வாழும் காலத்து சித்தாந்தங்களை பற்றி தீவிரமாக யோசிக்கிறார்கள், கண்ணன் வேலைக்காக தில்லி செல்வது 70 களில் என்று நினைக்கிறேன். அதன் பின் வந்த தலைமுறை அதையெல்லாம் பற்றி ரொம்ப யோசித்ததாக தெரியவில்லை. கண்ணன் தன் வேலையை பார்த்துக் கொண்டு போவதே அதற்கான ஆரம்பம் என நினைகிறேன்.

  மிக நம்பகமான நிஜமான பெண்கள். ஆண்டாளிற்கு பொன்னாவுடன் உள்ள தீராத ஆவேசம் ஒரு மிக நல்ல psychological profile. கலங்கிய நதியிலும் நிறைய literary reference வரும். பலவற்றை கூகிள் செய்து பார்த்தால் நாவலை புரிந்து கொள்ள இன்னும் உதவுகிறது.

  நான் – லீனியர் பார்ம் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால் கலங்கிய நதி போல் அல்லாமல் இதனால் பெரிய பயன் இருக்கிறதா என தெரியவில்லை.

  இன்னும் ஒரு முறை ஆழ்ந்த மறுவாசிப்பு செய்ய வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கிறேன். பி.ஏ.கே யை சந்தித்து உரையாடியது நல்ல அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

  Like

 2. கதையை பிரித்து மேய்ந்துவிட்டீர்கள், நான் புதிதாக சொல்வதிற்கு ஒன்றும் இல்லை.

  சம்பவங்கள்/மனிதர்களை சித்தரிப்பதில், உதாரணங்களில் திஜாவை நினைவுபடுத்துகிறார். என்ன, படு சுருக்கம்…நாலு தலைமுறைக் கதைகள், கிளைக் கதைகளைச் சொல்ல வேண்டிய அவசரமா அல்லது நடையே இப்படித்தானா என்று தெரியவில்லை…

  சில சமயங்களில் அடுப்பில் ஏதோ வைத்துவிட்டு எழுத வந்தமாதிரி ஒரே ஓட்டம் – வறட்சியைச் சொல்ல ‘ ஊர் குளத்தில் காக்கையின் கால் விரல்கள்`
  சில சமயத்தில் கொஞ்சம் நிதானமான கோட்டோவியக் காட்சிகள் (அடுப்பிலிருந்து இறக்கிவைத்திருப்பார் போல!)- கண்ணன் அறிமுக காட்சியில் அவன் ஊருக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருக்கும் போது முன்னால் சில இருக்கைகள் தாண்டி உட்கார்ந்திருக்கும் தம்பதி – அந்தப் பெண்ணைப் பற்றிய வர்ணனைகள், கொஞ்ச நேரம் கழித்து அந்த பூச்சரம் காய்ந்து…கொஞ்சம் வண்ணதாசன் சாயல் இருந்தது

  வாக்கியத்திற்கு வாக்கியம் – மெல்லிய கிண்டல்/பகடி, சுஜாதாவை நினைவுபடுத்துகிறது என்று சொல்லலாமா? (சந்தேகத்திற்கு காரணம் இது இலக்கிய நூலாயிற்றே என்பதால்…!)

  நம்பியோ, மதுவோ 90களுக்கு அப்பால் இருந்திருந்தால் (திரை விழுந்த/கிழிந்தபின்) அவர்களது ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

  கதையில் பெரும்பாலும் அல்லது மிகப் பெரும்பாலும் பிராமண கதாபாத்திரங்களே என்பதால் பிரமாணச் சம்பாஷணைகள் இயல்பாய் இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் மற்ற கதாபாத்திரங்களின் பேச்சுகளும் மிக இயல்பாக இருக்கின்றன (ஸ்டேஷனில் வடை விற்பவர், ‘அவுட்டரில நிக்கான்’

  பொதுவாய் தமிழ் நாவலில் தென்பட தயங்கும் விஷயங்கள் – (பதின்ம வயது ‘உரசல்’, ‘மாவு பிசையறிங்களே’), எம்ஜியார், சிவாஜி பற்றிய கிண்டல்கள்…

  மொத்தத்தில் அருமை!

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.