நண்பர் விசு ஃப்ரீமான்ட் நிகழ்ச்சியில் பேசியது
நண்பர்களுக்கு வணக்கம். திரு. பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய கலங்கிய நதி நாவலைப் பற்றி பேச வந்திருக்கிறேன். பி.ஏ. கிருஷ்ணன், அரசு அதிகாரியாக அஸ்ஸாமில் பணியாற்றியபோது நடந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட புனைவு கலங்கிய நதி. இதன் ஆங்கில வடிவமான ‘Muddy River‘ படித்திருக்கிறேன். கிருஷ்ணனின் முதல் நாவலான ‘புலிநகக் கொன்றை‘யை ஒப்பிடும்போது, ‘கலங்கிய நதி’ ஒரு அமர்வில் வாசித்துவிடக்கூடிய எளிய நாவல். கதை நடக்கும் காலம் அதிகபட்சம் சில வருடங்கள், கதையின் களம் பெரும்பகுதி அஸ்ஸாம்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு அரசு அதிகாரி, ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். குணமடைந்து கொண்டிருக்கும் ஓய்வு நேரத்தில், தன் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் ‘This street has no other side’ என்ற நாவலை எழுதுகிறார். ‘This street has no other side’ நாவல், அந்த நாவலில் சொல்லப்படாத நிகழ்வுகள் மற்றும் நாவலின் விமர்சனத்தை உள்ளடக்கியதே ‘கலங்கிய நதி’. இந்த நாவலுக்குள் நாவல் வடிவத்தில், எது புனைவு, எது நிஜம் என்று வாசகர்களை சிந்திக்க வைக்கிறார். நாவலில் மூன்று சரடுகள் உள்ளன. (அவை)
- அஸ்ஸாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பொறியாளரை மீட்கப் போராடும் அரசு அதிகாரி ரமேஷ் சந்திரன்
- Transmission tower கட்டுமானத்தில் நடைபெறும் நுண்மையான ஊழலை கண்டுபிடித்து ஆராயும் ரமேஷ் சந்திரன்
- ரமேஷ் சந்திரனுக்கும் அவர் மனைவி சுகன்யா, செக்ரட்டரி அனுபமா, திருமதி. கோஷ் உள்ளிட்ட மற்ற பெண் கதாபாத்திரங்களுக்குமான உறவு
அரசு அதிகார வரைமுறைகளில் உள்ள அபத்தத்தை, தமிழ் நாவல்களிலேயே, இந்நாவல் அளவிற்கு சிறப்பாக சித்தரிக்கும் வேறோரு நாவல் இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். அரசு அதிகாரிகளின் தோரனை, ஜூனியர் அதிகாரிகளை ஏவலர்களாக நடத்தும் மனப்பாங்கு போன்றவற்றை சித்தரிக்கும் பகுதிகள் சிறந்த நகைச்சுவை கதைகள் போல உள்ளன. இதில் உள்ள அங்கத அம்சத்திற்கு ஒரு உதாரணம்: உயர் அதிகாரியின் தேநீர் ஆறிப்போவதை அவருக்கு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை நினைவுபடுத்த அலாரம் நிறுவ பரிந்துரைக்கும் பகுதி. அதே சமயம், இந்தக் கூட்டம்தான் இந்தியாவை ஆள்கிறது என நினைக்கும்போது, comedy, dark comedyயாக மாறுகிறது.
நாவலின் ஒரு சரடான ஊழல் பற்றி பார்ப்போம். விஞ்ஞான ரீதியான ஊழல் என்ற சொல்லாட்சியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட ஒரு ஊழலை இந்நாவலில் கிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். ஒரு முறைக்கு இரு முறை படித்தால்தான், Transmission tower கட்டுமான ஊழல் எவ்வாறு நடைபெற்றிருக்கிறது என்றே புரிகிறது. அஸ்ஸாமிய மின்பகிர்மான கம்பெனிக்காக, Transmission towerகள் கட்டுவதை குத்தகைக்கெடுத்த நிறுவனம், அதற்காக இறக்குமதி செய்யப்பட்ட எஃகிற்கு வரிவிலக்கு பெறுகிறது. ஆனால், வரிவிலக்கு பெற்ற தொகையை வரி கட்டியதாக கணக்குகாட்டி ஊழல் செய்கிறார்கள். ஊழலின் அளவு முப்பது கோடிதான். 2ஜி காலத்தில் இந்த ஊழல் ஒரு பெரிய தொகை இல்லையென்றாலும், மிக நுட்பமான முறையில், சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும், அந்த சிறிய தொகையை வசூலிப்பதில் உள்ள சிக்கலையும் நம்பகத்தன்மையோடு சித்தரித்திருக்கிறார். (இதுவும் ஒரு உண்மையில் நடைபெற்ற ஊழலின் புனைவு வடிவமே).
அடுத்ததாக தீவிரவாதப் பிரச்சனை. உல்ஃபா தீவிரவாதிகள், அஸ்ஸாமிய மின் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பொறியாளரை கடத்தி பணயக் கைதியாக வைத்திருக்கிறார்கள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்த ரமேஷ் நியமிக்கப்படுகிறார். பிரச்சனை சூடாக இருக்கும் வரை ஊடங்களும், அரசும் மீட்பில் முனைப்பாக இருக்கின்றனர். பின்பு, ரமேஷைத் தவிர யாரும் வேறு யாரும் கண்டுகொள்விதில்லை. கடைசியில், யாரும் கண்டு கொள்ளாமல் போவதாலேயே, தீவிரவாதிகள் முதலில் கேட்ட பணயத் தொகையில் இருபது மடங்கு குறைவான தொகைக்கு விடுவிக்கின்றனர். இந்நாவலில், பகதத்தனின் கதை, ஜதிங்காவில் பறக்க மறந்து கூட்டமாக கொல்லப்படும் பறவைகள், அழித்தொழிக்கப்படும் மூங்கில் காட்டு எலிகள், சிம்மாச்சல கோவிலுக்கு நேர்ந்துவிடப்படும் கன்றுகள் என பல்வேறு விதமாக தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டு மடியும் அஸ்ஸாமிய இளைஞர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். என்னைப் போன்ற இளைய தலைமுறை, லட்சியவாதம், சித்தாந்தம் என்றால் பூச்சிக்கொல்லிகளில் வீரியமான ரகங்கள் என்றே நினைக்கிறோம். சித்தாந்தத்தினாலோ, லட்சியத்தாலோ ஈர்க்கப்படுதல் என்றால் என்னவென்றே புரியவில்லை. சென்ற ஆண்டு கம்போடியா சென்று வந்தேன். மார்க்சிய சித்தாந்தம் நடைமுறை படுத்தப்பட்டபோது ஏற்பட்ட பிழையின் வடுவாக, கம்போடியத் தலைநகர் ப்னோம்பென்னில் ஐந்து மாடி கட்டிட உயரத்திற்கு, மண்டையோடுகளால் ஆன ஒரு நினைவுச் சின்னம் உள்ளது. அதைப்பார்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கம்போடிய கொலைக்களங்கள், நாஜிக்களின் ஆஸ்விட்ச் கொலைமுகாம், இலங்கையில் நடைபெறும் அழிவுகள் போன்றவற்றை பார்க்கும்போது, எந்த காரணத்திற்காக தொடங்கப்பட்டாலும், நாளடைவில் அழிவிற்கு இட்டுச்செல்லாத சித்தாந்தங்களே இல்லையோ என்று தோன்றுகிறது. விதிவிலக்காக காந்தி இருக்கிறார். காந்தியால் ஈர்க்கப்பட்டு மக்கள் சேவைக்காக வந்த அஸ்ஸாமின் முன்னாள் முதலமைச்சர் சரத் சந்திர சின்ஹா சாயலில் அமைக்கப்பட்ட ராஜவன்ஷி, இந்நாவலில் உள்ள ஒளிமிக்க பாத்திரம். சரத் சந்திர சின்ஹா பற்றி, ‘கிழவருடன் இரண்டு நாட்கள்‘ என்று காலச்சுவடில் கட்டுரை எழுதியிருக்கிறார் கிருஷ்ணன். சின்ஹாவை பற்றி படிக்கும்போது, இப்படி ஒருவர் இருந்தாரா என்று மனம் நம்ப மறுக்கிறது; அவ்வையின் ‘நல்லார் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ தான் நினைவிற்கு வருகிறது.
நாவலில் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வை அடையும் வழியாக காந்தியம் குறிப்பிடப்படுகிறது. இந்திய மதப் பிரிவினையின் கோர தாண்டவத்தின் நடுவிலும், தான் சுடப்படுவதற்கு முந்தைய நாள் கூட காந்தி நம்பிக்கையோடு சொல்கிறார், “வெள்ளம் வரும்போது, நதி மிகக் கலங்கலாக இருக்கும், வெள்ளம் வடிந்த பின் நதி தெளிவாகிவிடும், முன்பை விட மிகத் தெளிவாக” என்று. கலங்கிய நதி தெளிவடையும் என்ற நம்பிக்கையோடு, திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி. வணக்கம்.
[தமிழிங்கிலீஷில் ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்]
தொகுக்கப்பட்ட பக்கம்: பி.ஏ. கிருஷ்ணன் பக்கம், விசு பதிவுகள்
தொடர்புடைய சுட்டிகள்:
கலங்கிய நதி பற்றி பாலாஜி
புலிநகக் கொன்றை, திரும்பிச் சென்ற தருணம்
சரத் சந்திர சின்ஹா பற்றி பி.ஏ. கிருஷ்ணன் – ‘கிழவருடன் இரண்டு நாட்கள்‘