(30 ஜூன் 2012 Fremont எழுத்தாளர் கௌரவிப்பு கூட்டத்தில் எனது உரை)
நண்பர்களே,
விதை ஒன்றை நான் அவதானித்த கொண்டிருந்த பொழுது வாழ்வியல் சார்ந்த ஒரு மேன்மையான உருவகத்தை அதனிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒரு விதை பூமிக்குள் விதைக்கப்படுகிறது. இரண்டு அங்கங்களுடன் அதன் வாழ்க்கை பயணம் துவங்குகிறது. இரண்டு வெவ்வேறு திசைகளில். ஒன்று, கீழ் திசை. தாழ்ந்த திசை. அது ஒரு இருண்ட இடம். புழுக்கமான இடம். இன்னும் சொல்லபோனால் புழுக்கள் நெளியும், ஜந்துக்கள் வசிக்கும் ஒரு இடம். அந்த விதை தனக்காக, தன்னை பூமியில் நிலைநிறுத்திக் கொள்ள, தன் சுயநலனுக்காக சஞ்சரிக்குமிடம். ஆனால் அதற்கு வேறு வழியில்லை. அப்படிதான் அது தன்னை நிலை நாட்டிக்கொண்டாக வேண்டியுள்ளது. பூமிக்குள் நடக்கும் அந்த போராட்டத்தில் மேலும் மேலும் வென்று, தன் இருத்தலை தாங்கி நிற்கும் உறுதியான வேர் பகுதியாக பரிணமிக்கிறது.
இரண்டாவது அங்கம் மேல் திசையில் வளர்கிறது. உயர்ந்த திசை. அது வெளிச்சமான இடம். காற்றோட்டம் நிறைந்தது. மகிழ்ச்சியான இடம். அது தன்னை பிறருக்காக அர்பணிக்குமிடம். அதாவது அது செடியாக வளரும் பொழுதே பிறருக்காக தன்னை அர்பணிக்க தொடங்குகிறது. விலங்குகள் முதல் மனிதர்கள் வரை தன்னை உபயோகப்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. அது தன் இலைகளை தருகிறது. காய் கொடுக்கிறது, கனி கொடுக்கிறது. நிழல் கொடுக்கிறது. இறுதியில் மனிதன் தன்னை அழித்த பிறகும் பல வகையில் உதவிக்கொண்டிருக்கிறது. காகிதமாக, கதவாக, நாற்காலியாக, கட்டிலாக அல்லது எரிபொருளாக.
இது இயற்கை நமக்கு கற்றுக் கொடுக்கும் வாழ்க்கை முறை. சராசரி மனிதர்களின் வாழ்க்கை இரண்டாவது அங்கம் இல்லாத ஒரு ஊணமுற்ற வாழ்க்கை. நல்ல ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கை ஊணமற்றது. அவன் உலக லௌகீகம் என்ற இருண்ட, புழுக்கமான இடத்தில் தன்னை நிலை நாட்டிகொள்ள ஒரு புறம் போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் உலகுக்காக தன்னை அர்பணிக்கவும் தொடங்கிவிடுகிறான். அந்த அர்பணிப்பின் பலனை அவன் மறைந்த பிறகும் உலகம் அனுபவிக்கிறது. அந்த அர்பணிப்பின் சமுதாய அங்கீகரிப்பே அவனுக்கு அது பெற்று தரும் பரிசுகளும், பதக்கங்களும்.
ஆனால் தவறிழைக்க வேண்டாம். நேர்மையான எழுத்தாளர்கள் தமிழை, இலக்கியத்தை எதிர்வரும் காலங்களுக்கு எடுத்து செல்பவர்கள். அது தான் அவர்களின் இலக்கு. அது மட்டுமே அவர்களின் இலக்கு. பரிசுகளையும், பதக்கங்களையும் இலக்காக கொண்டு ஒரு நாஞ்சில் நாடனோ, ஒரு பிஏ கிருஷணனோ தங்கள் இலக்கிய பயணத்தை மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் எழுத்தின் உன்னதத்தையே இலக்காக கொண்டிருக்கிறார்கள். கலங்கிய நதி, தலை கீழ் விகிதம் என்றெல்லாம் இவர்கள் படைத்தது ஏதோ நான்கு பேருக்கு பொழுது போகட்டுமே, நமக்கும் பரிசு கிடைக்கட்டுமே என்பதற்காக அல்ல. அவை, தான் இழந்த அறத்தை நோக்கி சமுதாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள். அவர்களின் படைப்புகளை கூர்ந்து நோக்கும் பொழுது, அவை வாசகர்களின் நுண்ணுணர்வுகளுடன் உறவாடி, கலந்துறையாடி அவர்களின் வாழ்க்கையை அறம் நோக்கி திசை திருப்பும் முயற்சிகள் என்பது புலப்படும். அந்த முயற்சியின் உன்னதத்தையே தங்கள் இலக்காக கொண்டு பயணிக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இதை Excellence என்று கூறுகிறார்கள். தூய இலக்கியவாதிகள் ஒரு பொழுதும் உன்னதத்தை அடைந்து விட்டதாக நினைக்க மாட்டார்கள். அவர்கள் மேலும் மேலும் மேன்மையை மேம்படுத்த போராடுகிறார்கள். அதாவது “Raising the Bar” என்கிறோமே-அதை அவர்களுக்கு அவர்களே செய்து கொள்கிறார்கள். வாசகர்களான நமக்கு இது ஒரு பெரும் கொடை. இது போன்ற படைப்பூக்கமே புதிய கதவுகளை நமக்கு திறக்கிறது. புதிய எல்லைகளை நம் முன் விரிக்கிறது. இதன் நன்மைகளை நாம் ஒரு சமுதாய சாத்தியமாக அமைத்துக் கொள்ள இலக்கிய வாசிப்பை ஒரு சமுதாயமாக வளர்த்துதெடுக்க வேண்டும்.
இவற்றை ஒரு தேர்ந்த வாசகன் புரிந்துக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு, ஏன் இலக்கியம் பக்கம் கவனம் செலுத்தவேண்டும்? லௌகீகவாதிகளுக்கு இலக்கியம் எம்முறையில் தொடர்புடையது? அப்படியே ஒரு தொடர்பை கண்டுகொண்டாலும், எவ்விதத்தில் தான் அது நடைமுறைக்கு சாத்தியம்? என்ற கேள்விகளே மிஞ்சுகிறது. அதற்கு லௌகீகவாதிகள் தாங்கள் பயணம் செய்யும் வேகத்தடத்திலிருந்து மெதுதடத்திற்கு தடம் மாறி சிந்திக்கவேண்டும். இன்று நாம் இருப்பின் அச்சாக கருதுவது என்ன? அல்லும் பகலும் அனவரதமும் நாம் சிந்திப்பது பொருள்-பணம். அந்த பொருளை ஈட்டித்தரும் தொழிலையோ அல்லது அந்தத் தொழிலால் வரும் பொருளையோதான் நாம் வாழ்க்கையாக உருமாற்றி அறத்தை நம்மிடமிருந்து அறுத்தெறிந்து வாழ்க்கையே நாம் தொலைத்து நிற்கிறோம். அதை நாம் நம் வாழ்க்கையின் பின் பகுதிகளிலேயே உணர்கிறோம். ஏன் இப்படி நடக்கிறது?
பணத்தையே குறியாகக் கொண்டு வாழும் பொழுது அதற்கு இடைஞ்சலாக கருதி நாம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை புறக்கணிக்கிறோம். பண்புகளை புறக்கணிக்கிறோம். பிறர் காட்டும் அன்பை புறக்கணிக்கிறோம். பிறரிடம் காட்ட வேண்டிய அன்பை புறக்கணிக்கிறோம். முன்னேற்றம் என்று சொல்லிக் கொண்டு நமது வாழ்க்கைமுறைகளையும் புறக்கணிக்கிறோம். நம் அடையாளத்தை புறக்கணிக்கிறோம். சொல்லப்போனால் இவற்றையெல்லாம் பிற்போக்கு என்று எள்ளி நகையாடி, இன்னும் மானுட உயர்பண்புகளையும், நம் அடையாளங்களையும் கடைபிடிப்பவர்களை அசௌகரியப் படுத்துகிறோம். அவமானப் படுத்துகிறோம். அந்த அசௌகர்ய, அவமானங்களால் மன வலுவற்ற சமுதாயத்தில் மெல்ல மெல்ல ஒட்டு மொத்த மக்களின் எண்ணங்களும் சீர்குலைந்து மானுட கலாச்சாரம் சிதைக்கப்பட்டு நாளடைவில் எப்படியும் வாழலாம் என்று நியாயப்படுத்தி, கடைபிடித்து, கடைபிடிக்கவைத்து சமுதாய அறத்தை வீழ்ச் செய்கிறோம்.
இப்பொழுது நாம் அப்படிப்பட்ட ஒரு புள்ளியில் தான் நின்று கொண்டிருக்கிறோம். சில தினங்களுக்கு முன்னர் நாஞ்சில் நாடனுடன், பி.ஏ.கேயுடனும் வெவ்வேறு சந்தர்பத்தில் உரையாடி கொண்டிருந்த பொழுது இருவருமே சமுதாய அறச் சரிவை பல வகையில் சிந்தித்து கொண்டிருப்பதாக கூறினார்கள். பல குணாதிசயங்களை பட்டியலிட்டார்கள்.
உதாரணமாக, தமிழர் ஒருவரின் வீட்டின் வழியே செல்லும் அறிமுகமில்லாத ஒருவன் வந்து தண்ணீர் கேட்டால் தண்ணீருக்கு பதில் மோர் கொடுக்கும் காலம் இருந்தது. வழிபோக்கன் ஒருவன் இரவு தங்க இடம் கேட்டால் வீட்டின் வாசல் பக்கம் உள்ள திண்ணையையாவது ஒழித்து கொடுக்கும் வழக்கம் இருந்த காலம் உண்டு. தமிழர்கள் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றிருந்த காலம் உண்டு. வீட்டிற்கு எவரேனும் வந்தால் அவரை உட்கார வைத்து பேசுவது வழக்கமாக இருந்தது.
இப்பொழுதெல்லாம் அறிமுகமில்லாதவன் ஆபத்தானவன் என்ற நொண்டிச்சாக்கை பேசி, நாம் முன் கதவை இரும்புத் தாழ் போடுகிறோம். ஆபத்து அன்றும் இருக்கத்தான் செய்தது. ஆனால் ஆபத்திற்கிடையே தான் அன்பை தக்கவைத்தார்கள். இது போன்ற அடிப்படை பண்பை தக்க வைத்தார்கள். மானுட அறத்தை தக்கவைத்தார்கள்.
இன்று நம் சமுதாய சூழலில் பலர் மாபெரும் சித்தாந்தவாதிகளின் வல்லமைக்கான சங்கற்பம், அப்ஜெக்டிவிஸம் போன்ற கருத்துகளை உள்நோக்கத்துடன் தங்கள் வசதிப்படி அறத்திற்கு எதிர்மறையாக திரித்தும், திரித்ததை வளர்த்தும் எடுத்து பரப்பி வருகிறார்கள். அப்படி பரப்பட்ட கொள்கைகளே மக்களிடம் ஊடுருவி இன்று சராசரி மக்கள் அறத்தை மறந்து சுயநலத்தை நியாயப்படுத்துகிறார்கள்.
இந்தப் போக்கை மறுபரிசீலனை செய்ய நம்மிடம் ஒரு கருவி இருக்கிறது. நாம் நம் தொழிலில் பலகாலங்கள் பணிபுரிந்த பிறகு Refresher course எனப்படும் வலுவூட்டும் ஆதரவு பயிற்சி கொடுக்கப்படும். இங்கு டிரைவிங் லைசென்ஸை புதுபிக்க வேண்டுமானால் கூட சில இடங்களில் இந்த வலுவூட்டுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இன்றைய சமுதாய சூழலில், பள்ளியில் படித்த அறக் கல்வியை கடந்து வயது வந்தபிறகு அறம் பற்றி முறையான கல்வி நமக்கு கிடைப்பதில்லை. அந்த வெற்றிடத்தை அறத்தை பிரச்சாரம் செய்யும் நல்ல இலக்கியங்கள் நிரப்புகிறது. பிஏகே அவர்களின் கலங்கிய நதி ரமேஷ் சந்திரனாகட்டும், நாஞ்சில் நாடனின் தலைகீழ் விகிதங்கள் சிவதானுவாகட்டும் வெறும் கதாபாத்திரங்கள் மட்டும் இல்லை. அவர்கள் அறத்தின் குறியீடு. அந்த இலக்கியங்கள் அறத்தின் சொல் வெளிப்பாடு. சங்க கால இலக்கியமான திருக்குறள், ஆத்திச்சுடி போன்றவற்றின் நவீன விரிவான வடிவம்.
இலக்கியங்கள் நம் வாழ்க்கையை நாம் மறுபரிசீலனை செய்ய உதவுகிறது. இப்படிப்பட்ட இலக்கியங்களை நாம் தேடி அடைந்தால் மிகவும் சிறப்பு. ஏன் தேடி அடைகிறோம் என்றால் அதனை ஏற்றுக் கொள்ளும் மன முதிர்ச்சியையும் பக்குவத்தையும் ஓரளவு அடைந்துவிட்டோம் என்பதாலேயே. இது தவிர, சந்தர்ப்ப வசத்தால் இலக்கியம் நம்மை அடைந்தாலும் தவறொன்றுமில்லை. ஆனால் அதை இறுகப்பற்றிக் கொள்ளவேண்டும். இன்றைய சூழலில், சமகாலத்தில், நாஞ்சில் நாடன், பிஏகே போன்ற எழுத்தாளர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் படைப்புகளை கொண்டாடினால் அது சமூகத்தில் அறத்தை நாம் மீண்டும் சென்றடையும் ஒரு வழியாகும். அதுவே அவர்களின் எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி, பதக்கம், பரிசு.
நன்றி.
அன்புள்ள பக்ஸ்,
நல்ல பகிர்வு. நன்றி. உங்களுக்குள் ஒரு ஜெயமோகனும், நாஞ்சில் நாடனும் ஒளிந்து கொண்டிருப்பது இப்போதுதான் எனக்குப் புரிகிறது. உங்கள் தீவிர வாசிப்பும், பகிர்வும் தொடரட்டும். ‘குருவி மூளை’ போன்ற பல தரமான படைப்புக்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
அறம்தான் ஒருவனுக்குச் சொத்து. அதை மறந்தால் கெடுதல் வரும். (திருக்குறள் புதிய உரை – சுஜாதா)
LikeLike