“ஒரு பார்வையில் சென்னை நகரம்” – அசோகமித்திரன்

தோழி அருணாவின் மதிப்புரை. இந்த நொடி அவருடைய சடசடவென்ற பேச்சை மிஸ் செய்கிறேன். புத்தகம் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது, விலை அறுபது ரூபாய்.

அசோகமித்ரன் 1998-ஆம் ஆண்டு ஆறாம் திணை என்ற இணைய தளத்திற்காக சென்னையை பற்றிய கட்டுரைகள் எழுதும் பொழுது அவர் சென்னையில் ஏற்கனவே 50 வருடங்கள் வசித்திருக்கிறார். பின்னர் இக்கட்டுரைகள் ஒரு பார்வையில் சென்னை நகரம் என்று தொகுக்கப்பட்டு மனோகர் தேவதாஸின் கோட்டோவியங்களுடன் 2002-இல் புத்தகமாகவெளிவந்திருக்கிறது.

சென்னையின் பெரும்பாலான பகுதிகள், பூங்காக்கள், உணவகங்களைப் பற்றிய சுவையான பல தகவல்களை அவருக்கே உரிய தனி பாணி மற்றும் அங்கதத்துடன் சொல்கிறார். ஒரு தகவல் சார்ந்த கட்டுரையை கூட படு சுவாரசியமாக எழுதுவது எப்படி என்று நாமெல்லாம் கற்று கொள்ள முயற்சி செய்யலாம். ஒரு 100 வருட பயிற்சிக்கு பிறகு கொஞ்சம் பக்கத்தில் வரலாம்.

குரோம்பேட்டையில் ஷூக்களின் அடிப்பாகத்திற்கு உபயோகப்படுத்தப்படும் ஸோல்களுக்கான குரோம் தோல்கள் தயாரிக்கப்பட்டதால் இப்பெயர் வந்தது; பார்க் டவுன் மெமோரியல் ஹால் இந்தியாவின் முதல் சுதந்திர போர் நடந்த 1857-ஆம் ஆண்டு கட்டப்பட்டது போன்ற அறிய தகவல்கள்; சைதாப்பேட்டையில் நிலவிய யானைக்கால் நோய், சென்னையில் அன்றைய பஸ்/ரயில் வசதி இல்லாமை ஆகியவற்றை தன் சுய குடும்ப சங்கடங்களுக்கு நடுவே வவரிக்கிறார்.

”தேனாம்பேட்டை நடனப் பெண்கள் சாத்தனூரிலும் மாமல்லபுரத்திலும் ஆடாத நாட்களில் ஸ்டூடியோக்களில் நடனம் ஆடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுடைய சிரிப்புக்கும் உற்சாகத்திற்கும் வாழ்க்கையின் யதார்த்தத்திற்கும் சம்பந்தமே இருக்காது. ஒவ்வொருவருக்கும் கலைமாமணி பரிசு கொடுத்தால் தகும்” போன்ற அன்றாட வாழ்க்கையின் அபத்தங்கள்; குரோம்பேட்டையில் என் நெருங்கிய உறவினர்கள் வீடு கட்டிக்கொண்டு போனபோது நான் மிகவும் அச்சப்பட்டேன். காரணம் அவர்கள் வீட்டில் எல்லோருக்குமே நீரிழிவு வியாதி. இவர்கள் எப்படி வைத்தியரிடம் போவார்கள்? உடல் நிலை நெருக்கடிகள் அவசியம் நேர்ந்திருக்கும். ஆனால் வெளியுலகத்தோடு இருந்த ஒரே தொடர்பான இரயில் நிலையத்துக்குத் தினம் நான்குமுறை நான்கு மைல் ஒற்றையடி பாதையில் நடந்து அல்லது சைக்கிளில் சென்று அவர்களுடைய உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விட்டது. கவலைப்பட்ட நான் மாதத்தில் பாதி நாட்கள் படுக்கையில் கிடக்கிறேன் போன்ற அங்கதங்கள் விரவிக்கிடக்கும் கட்டுரைகள்.

அம்பத்தூர் ஞானமூர்த்தி நகரில் வசித்த லா.ச.ரா.வைப் பற்றி தேவி, அம்பாள், பாம்பு, புலி என இவர் எழுத்து பயமுறுத்தினாலும் அதே நேரத்தில் மனதைக் கிறங்க வைப்பவை. ஒரு பாராட்டு கூட்டத்தில் ஒரு வீட்டில் அவர் ருசியறிந்து காய்ந்த நார்த்தாங்காய் படைத்ததைக் கூறி அவர் கண் கலங்கினார். கூட்டத்தில் இருந்தவர்களுக்கும் கண் கலங்கியது. ஆழ்வார்பேட்டையில் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி இருவரும் எதிரும் புதிருமான வீடுகளில் வசிப்பவர்கள். இருவர் மகன்களும் அமெரிக்காவில் குடியேறிவிட்டார்கள். இரு தந்தையரும் வீட்டில் இல்லை என்றால் அமெரிக்காதான் போயிருப்பார்கள் போன்ற சக எழுத்தாளர்கள் பற்றிய மெலிதான கிண்டல்கள்.

நான் சென்னையில் 15 வருடங்கள் வசித்திருக்கிறேன், அந்நகரின் சுவாரசிய சரித்திரத்தின் சில பகுதிகளை கூட அறியாமல். இக்கட்டுரைகள் எழுதிய கடந்த 14 ஆண்டுகளில், அதன் முந்தைய 50 ஆண்டுகளையும் விட நகரம் அசுர வேகத்தில் மாறி இருக்கிறது. அசோகமித்திரன் இப்போது அம்மாற்றத்தை பற்றி எழுதினால் எப்படி இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. மிக சுவாரசியமான புத்தகம். படியுங்கள். சென்னையின் வெயிலும், தற்போதைய குப்பையும், போக்குவரத்து நெரிசலும் எரிச்சல் படுத்தும் போது, அதன் கடந்த கால வரலாறு அந்த எரிச்சலை சமன் செய்யக்கூடும்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: அருணா பதிவுகள், அசோகமித்திரன் பக்கம், தமிழ் அபுனைவுகள்

10 thoughts on ““ஒரு பார்வையில் சென்னை நகரம்” – அசோகமித்திரன்

  1. அப்பா! யாரோ ஒருத்தராவது மிஸ் பண்ணராங்களே. இனிமே கொஞ்சம் தைரியமா அக்டோபர்ல அந்த பக்கம் வரலாம்.:)

    Like

  2. கரைந்த நிழல்கள் நாவலை நேற்றிரவுதான் முடித்தேன்;அந்த நினைவுகளோடு உங்கள் தளத்திற்கு வந்தால் இந்தப் பதிவு!!இனியஆச்சர்யம்!!!

    கரைந்த நிழல்கள் நாவலைத்தவிர அ.மித்திரன்னின் எந்த ஒரு நாவலையோ சிறுகதையோ நான் படித்ததில்லை. கட்டுரைகளின் வழியே மட்டும் அவரை அறிந்திருக்கிறேன்;வியந்திருக்கிறேன்.இரண்டு வருடங்களுக்குமுன் மெட்ராஸ்
    ஹிகின்பாத்தம்ஸில் அ.மித்திரனின் முழு கட்டுரை தொகுதிகளாக இரு வால்யும்களை பார்க்க நேர்ந்தது.உடனே வாங்க ஒரு மனம் விரும்பினாலும் 350 குடுக்க இன்னொரு மனம் மறுத்துவிட்டது.பின் புத்தக கண்காட்சியில் தேடியும் அது கிடைக்கவில்லை.ஆறுதலுக்கு இரண்டு சிறு கட்டுரைத் தொகுதிகள் மட்டும் வாங்கி வந்தேன்.( நினைவோடை & எவை இழப்புகள்) சுஜாதா கட்டுரைகளை மட்டுமே வாசித்து வளர்ந்தவனுக்கு அசோகமித்திரன் கட்டுரைகள் ஒரு மாறுபட்ட (கலாச்சார?)அதிர்ச்சி – அசோகமித்திரன் கட்டுரை உலகிற்குள் நுழைய,கிரகிக்க சிறிது காலம் பிடித்தது.காரணம் அசோகமித்திரனின் மெதுவான‌ எழுத்து நடை.சுஜாதாவைப் போல எழுத்தின் முதல் வரியிலேயே விஷயத்தை போட்டு உடைக்க மாட்டார்;சுஜாதாவைப் போல மின்னல் வேகம்,சரளம்,மேலோட்டமான கருத்துக்கள் இவரிடம் கிடையாது.

    ஒவ்வொரு விஷயத்தையும் மெதுவாய்த் தொடங்கி,விரிவாய் பரிமாறும் அவரின் அழகு மிகவும் பிடித்துப் போனது.அவரின் கட்டுரைகளின் மிக முக்கிய அம்சம் என நான் நினைப்பது அவருக்கே உரிய நளினமான மெல்லிய‌ நகைச்சுவைத்தன்மை(ஒரு பெண்ணின் காதருகில் போய் சொல்லும் ரகசியம் போல் சொல்வது 🙂 உதாரணமாக அவர் சிறு வயதில் செக்கன்தராபாத்திலிருந்து (சொந்த ஊர்?) போலகத்திற்கு ரயிலில் சென்றதைப் பற்றி மிக அழகான கட்டுரை ஒன்றை எழுதியிருப்பார்; நீங்கள் படித்திருக்ககூடம் என நினைக்கிறேன்;

    Blog/கட்டுரை/பத்திஎழுத விரும்புவோர்(இல்லை எழுதிக்கொண்டிருப்பவர்) யாரேனும் அசோகமித்திரன் கட்டுரைகளை கட்டாயம் படிக்கவேண்டும் எழுத்தின் நளினத்தை இவரிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியுமென நினைக்கிறேன்.

    ஒரு கேள்வி : கிழக்கு பதிப்பகம் இரு முழு வால்யும்களாக அசோகமித்திரன் கட்டுரைத் தொகுதிகளை வெளியிட்டுளளது அதில் “ஒரு பார்வையில் சென்னை நகரம்” உள்ளதா இல்லையேல் தனியாக வாங்க வேண்டுமா ?

    Note: பெரிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்;வெகு நாள் மனதில் தேக்கி வைத்தது கொட்டிவிட்டது.

    Like

  3. மகேஷ் – இவ்விரு தொகுப்பில் என் பார்வையில் சென்னை நகரம் இல்லை. அவர் தனியாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்புக்கள் அதில் உள்ளன.

    Like

  4. மிக அருமையான எழுத்து அசோகமித்திரனுடையது. ஒரு கண்ணியமான அப்பா தன் மகனுக்கு மெதுவாக, அன்பாக, நட்போடு, பொறுமையாக ஒன்றை விளக்கிக் கூறுவது போல் அமைந்திருக்கும் நடை அவருடையது. அவருடைய சினிமா பற்றிய கட்டுரைத் தொகுப்பான “இருட்டிலிருந்து வெளிச்சம்” ஒரு கிளாஸிக். வரும் செப்டம்பர் மாதம் அவரது 82வது பிறந்த நாள் சென்னையில் நடக்க இருக்கிறது. ”எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று தாராளமாக அசோகமித்திரனைச் சொல்லலாம்.

    விரும்பினால் இக்கட்டுரையை வாசியுங்கள்..

    http://ramanans.wordpress.com/2012/04/30/2249/

    Like

  5. இந்த வார விகடனில் அசோகமித்திரனின் பேட்டி. கேள்விக்கு பதிலளிக்கும் போதுகூட வார்த்தைகளை வீணாக்க மாட்டார் போல. சரியாக 2 வரி 3 வரி. காப்பி பேஸ்ட் பண்ணலாமா என்று தெரியவில்லை.

    Like

  6. அசோகமித்ரனின் பார்வையில் சென்னை நகரம் குறித்த வாசிக்க வேண்டும் போல் உள்ளது. அதுவும் மனோகர் தேவதாஸ் கோட்டோவியங்களுடன் எனும்போது ஆர்வம் இன்னும் அதிகமாகிறது. பகிர்விற்கு நன்றி.

    Like

  7. ரெங்கசுப்பிரமணி, ஸ்ரீனிவாஸ், அசோகமித்ரனின் பேட்டி பற்றிய தகவலுக்கு நன்றி! அவர் எப்போதுமே ரத்தினச் சுருக்கம்தான்!

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.