நாஞ்சில்நாடனுக்குப் பிடித்த அவரது படைப்புகள்

நாஞ்சில்நாடனிடம் அவருக்குப் பிடித்த அவருடைய நாவல் எது, சிறுகதை எது என்று கேட்டேன். எழுத்தாளனுக்கு தன் எந்தப் படைப்பு மிகப் பிடித்தது என்று கேட்பதில் பொருளில்லை என்று வெகு மென்மையாக இடித்துரைத்தார். நமக்கு இந்த இங்கிதம், நாகரீகம் எல்லாம் கொஞ்சம் மட்டுதான் – ஒரு வாசகனாக உங்களுக்கு எது பிடிக்கும் என்று விடாக்கண்டனாகக் கேட்டேன். ஏறக்குறைய அவர் சொன்ன விதத்திலேயே கீழே கொடுத்திருக்கிறேன்.

நான் ஆறு நாவல்கள் எழுதி இருக்கிறேன் – தலைகீழ் விகிதங்கள், என்பிலதனை வெயில் போலக் காயுமே, மாமிசப் படைப்பு, மிதவை, சதுரங்கக் குதிரைகள், எட்டுத் திக்கும் மதயானை.

எனக்கு மிகவும் பிடித்த மூன்று நாவல்கள்: மிதவை, சதுரங்கக் குதிரைகள், எட்டுத் திக்கும் மதயானை

மிகவும் பிடித்த இரண்டு: சதுரங்கக் குதிரைகள், எட்டுத் திக்கும் மதயானை

மிகவும் பிடித்தது: எட்டுத் திக்கும் மதயானை

அவருக்குப் பிடித்த சிறுகதைகள் என்பதற்கு அவர் அவ்வளவு திட்டவட்டமாகப் பேசவில்லை. ஆனால் தன்ராம்சிங் சிறுகதைக்கு அவர் மனதில் ஒரு ஸ்பெஷல் இடம் உண்டு என்பதை உணர முடிந்தது. பாம்பு இன்னொன்று. எனக்குப் பிடித்தது வனம் என்று சொன்னேன். அவரிடமிருந்து எந்தக் கமெண்டும் இல்லை. 🙂 வனத்தில் அவர் ஒரு வரியில் கதையின் போக்கையே மாற்றுவார் – ஒரு மாஸ்டரால்தான் அது முடியும். இயக்குனர் பாலா “இடாலாக்குடி ராசா” தன் வாழ்க்கையை மாற்றிய கதை என்று சொல்லி இருக்கிறார். அதைப் பற்றியோ, புகழ் பெற்ற “மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்” பற்றி எல்லாம் அவர் (என்னிடம்) எதுவும் கண்டுகொள்ளவே இல்லை. பொதுவாக அவரது படைப்புகளைப் பற்றி நாங்கள் பேசும்போது ஒரு புன்சிரிப்போடு கேட்டுக் கொள்வாரே தவிர அவராக எதுவும் சொல்லமாட்டார். தன்னடக்கம் அதிகம், அவரது வாயிலிருந்து வார்த்தைகளைப் பிடுங்க வேண்டும்.

நாஞ்சில்நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை என்ற அபுனைவை தன்னுடைய குறிப்பிடப்பட வேண்டிய சாதனையாகக் கருதுகிறார்.

சீக்கிரம் எல்லா புத்தகங்களையும் (இரவலாவது) வாங்க வேண்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்: இடலாக்குடி ராசா சிறுகதையும் இயக்குனர் பாலாவும்

சிறுகதைகள்:
தன்ராம்சிங்
பாம்பு
வனம்
இடாலாக்குடி ராசா
மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறு வீடும் வெஜிடபிள் பிரியாணியும்