பெருமாள் முருகனின் “கங்கணம்”

அருணாவின் இன்னொரு புத்தக அறிமுகம். புத்தகம் உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 235 ரூபாய்.

பெருமாள் முருகனின் ஏறுவெயில் மற்றும் மாதொருபாகன் படித்திருக்கிறேன். இப்போது கங்கணம். அவர் நாவல்கள் வாழ்க்கையைப் பற்றிய மாபெரும் தரிசனம் எல்லாம் அளிக்க முற்படுவதில்லை. சமுதாய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் தனி மனித வாழ்வில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை, அதனால் விளையும் குடும்ப/சமுதாய அமைப்பின் சிதிலங்களை, கொங்கு நாட்டு பின்புலத்தில், நுட்பமான நுண்விவரணைகளோடு சொல்கிறார். மாற்றத்தின் நடுவே இருக்கும் ஒரு சமுதாயத்தின் snapshot என சொல்லலாம்.

என் மாமாவின் பையன் 37 வயதாகியும் கல்யாணமாகாமல் இருக்கிறான். தில்லியில் ஸெயிண்ட் ஸ்டீபன்ஸ் காலேஜில் பி.ஏ ஹானர்ஸ் படித்த, மாடர்னான, விளம்பர நிறுவனம் ஒன்றில் காபிரைட்டராக, குடும்ப சொத்து எதுவும் இல்லாத நல்ல பையன். இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்த போது சொன்னான், கடைசியாக பார்த்த சென்னை பெண் சொந்த வீடு கூட இல்லாமல் கல்யாணம் என்ன தைரியத்தில் பண்ணிக் கொள்ள நினைக்கிறாய் என்று கேட்டதாக. சிறு நகர, கிராமத்து பெண்களுக்கு தனக்கு ஒத்து வராது என சொல்லிக்கொண்டிருந்தவன் இப்போது அதற்கும் தயார். ஆனால் சொந்த வீடில்லாத காபிரைட்டர் என்பதோடு 2 வருடங்களும் அதிகரித்து விட்டது.

கொங்கு நாட்டு கவுண்டர்கள் மத்தியில் சில தலைமுறைகளாக இருக்கும் பெண் சிசுக் கொலை வழக்கம் அச்சமூகத்தில் சம காலத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகளை, 35 வயதாகியும் கல்யாணம் ஆகாமல் தத்தளிக்கும், வசதியான நிலவுடமையாளனான மாரியப்ப கவுண்டரின் பார்வையில் சொல்கிறது கங்கணம். பெண் குழந்தையை கவுத்து போட்டு கொல்லும் வழக்கம் கவுண்டர் குடும்பங்களில் பல தலமுறைகளாக இருந்ததை பற்றி பாட்டி, “பின்ன, இல்லாதயா? நம்ம கவண்டமூட்டு வைராவல பாரு. ரண்டு மூணுக்கு மேல எப்பவும் பிள்ளைங்க இருக்காது. பலவரட்ட சாதிலயெல்லாம் பத்துப் பதினஞ்சுன்னு கூட வெச்சிருப்பாங்க. நாம அப்படி வெச்சிருந்தா ஒவ்வொருத்தனுக்கும் காடு ஒரு வெலாகூட வராது பாத்துக்க” என படு காஷுவலாக அத்தரப்பு நியாயத்தை சொல்கிறாள். இன்று இருபது ஆண்களுக்கு மூன்று பெண்களே இச்சமூகத்தில் உள்ளனர் என பெருமாள் முருகன் பதிவு செய்கிறார்.

மாரியப்பன் என்னேரமும் தான் பார்த்து தனக்கு அமையாத பெண்களைப் பற்றி, தனக்கு காலாகாலத்தில் ஆகியிருக்க வேண்டிய கல்யாணம், குடும்பம் பற்றி யோசித்துக் கொண்டே தனது காடுகளில் சுற்றி வருகிறான். தனக்கு கல்யாணம் ஆனால் நிறைய பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கிறான். தானாவதி தாத்தா, பூடுதி, முன்னாள் வாத்தியார் மற்றும் இன்னாள் modern கல்யாணத்தரகர், பண்ணையாள் ராமன் என யார் கல்யாண யோசனைகள் கொண்டு வந்தாலும் விடாமல் பின் தொடர்ந்து ஒன்றும் நடக்காமல் விரக்தியின் விளிம்பில் நிற்கிறான். ஒரு நேர்ச்சை/பரிகாரம் விடாமல் செய்கிறான். வயலில் படுத்து தூங்கி பொறுப்பில்லாமல் அலையும் குப்பனின் 17 வயது மகனிற்கு ஒரு சிரமமும் இல்லாமல் கல்யாணம் நிச்சயிக்கப்படும்போது அவனுக்குள் வெறி ஏறுகிறது. அம்மாயியை வீட்டை விட்டே வெளியேற வைக்கக் கூடிய வார்த்தைகளை அவ்வன்மம் கூறுகிறது.

பாட்டி அச்சமுதாயத்தின் கடந்த தலைமுறையின் பிரதிபலிப்பாக வருகிறாள். எவ்வளவு காசிருந்தாலும் நல்ல புடவைகளையும், காசையும் பொந்தில் ஒளித்து வைத்து விட்டு கந்தல் உடுத்தி காட்டு வேலைக்குப் போகும் கடும் உழைப்பாளி. கடைசி வரை தனியாக குடிசையில் வாழ்ந்து, முதுகொடிய தென்னை ஓலையைக் கூட விடாமல் கீறி வாரியலாக விற்று பணம் சேர்க்கும் உழைப்பும், சிக்கனமும், தைரியமும் உள்ள கிழவி. சின்னத்தாத்தாவின் பேரன் செல்வராசு மாறி வரும் சமூகத்தின் பிரதிநிதி. ரிக்ஷா வண்டி ஓட்டி காட்டில் வேலை பார்க்கும் கடினமில்லாமல் காசு சேர்த்து, அதை நுகர்தலுக்கு செலவழிக்கும் தலைமுறை. கூடவே கீழ் சாதி பெண்ணை தைரியமாக காதலித்து, தன் சமுதாயம் அதை எதிர்க்கும், தன் குடும்பம் தனக்கு சொத்து கொடுக்காமல் நிராகரிப்பார்கள் என்ற நிதர்சனம் உணர்ந்து, தன் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள, இரண்டு தலைமுறை சண்டையை பொருட்படுத்தாமல் மாரியப்பனிடம் நன்றி பாராட்டி தன் காரியத்தை சாதித்துக் கொள்ளும், அவனுக்கு பதிலுக்கு உதவும் சாமர்த்தியசாலி.

சாதி பற்றிய பேச்சுகள் நாவல் நெடுகிலும். கிராம வாழ்வில் இன்றும் சாதி அழிவில்லாமல் இருப்பதை காட்டிக் கொண்டு. பொருளாத ரீதியாக மாறி வரும் உலகில், ரிக்ஷா வண்டி ஓட்டி, மற்ற விதங்களில் சம்பாதிப்பதற்கான சாத்தியங்களால், விவசாயக் கூலி வேலையில் நாட்டமில்லாத சக்கிலியர்கள், இம்மாற்றங்கள் தம் வாழ்க்கையை மிகச் சீக்கிரமே பாதிக்கும் என உணர்ந்த நிலவுடமையாளர்கள் என்ற மற்றொரு சமுதாய மாற்றத்தையும் இன்னொரு இழையில் பதிவு செய்கிறார். ஹாலிவுட் படங்களில் பெரும்பாலும் ஒரு கறுப்பர் கதாபாத்திரம் திரும்பத் திரும்ப வரும். வெள்ளைக் கதாபாத்திரங்களின் வாழ்வியல் சிக்கல்களை அகற்ற, அவர்களுக்கு தகுந்த ஆலோசனயை சமயோசிதமாக வழங்கும், அவர்களை விட சமுதாய பொருளாதார ரீதியில் பின்தங்கி இருக்கும் ஆனால் ஆன்மீகமாக தேறிய பாத்திரங்கள். இக்கதையில் வரும் சக்கிலியர்களான வத்தனும், ராமனும் அப்படித்தான் இருக்கிறார்கள்.

குடும்ப அமைப்பின் வன்முறையை பற்றிய சித்திரங்களை நன்றாக அளிக்கிறார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் உறவும் காரியம், காசு சார்ந்ததாகவே இருக்கிறது. பாசம், பகிர்தல் எல்லாம் ஒன்றும் கிடையாது. சொற்களில், செயல்களில் கொப்பளித்து வரும் வன்மம். தாத்தாவின் தலைமுறையில் சொத்துக்காக உக்கிரமாக போடப்படும் பங்காளி சண்டைகள். தன் கல்யாணம் நடப்பதற்கு இதுவே பெரும்பாலும் கடைசி சந்தர்ப்பம் என மாரியப்பன் உணர்ந்து தன் தாய் தந்தையிடம் அதைப் பற்றி பேசப் போகும் போது கூட உச்சபட்ச வன்முறையை கையாண்டே அச்சம்மதம் வாங்கப்படுகிறது. உரையாடலே சாத்தியமில்லாத, நிதானமாக தம்மிடையே பேசுவதெப்படி என்றே அறியாத ஒரு சமுதாயக் குடும்ப அமைப்பு. காத்திருந்து அமைந்த கல்யாணப் பெண்ணிற்கு நகை வாங்கிப் போட்ட பிறகும், அவள் விலை உயர்ந்த கூறைப்புடவை எடுக்கும் போது, கல்யாணம் ஆகி ஒரு மாதம் அனுபவித்து விட்டு உன்னைக் கந்தலுடன் பனங்காட்டில் நிற்க வைக்கிறேன் பார் என கறுவும் வன்மம். மாரிமுத்துவிற்கும் அவன் தாய்க்குமான உறவு நாம் வழக்கமாக பார்த்துப் படித்துப் பழகிய லட்சிய உறவெல்லாம் கிடையாது. அவன் கல்யாண ஆசையை அவள் எல்லா சந்தர்ப்பங்களிலும் மூர்க்கமாக சீண்டுகிறாள். சமுதாய அமைப்பில் இருந்த, கல்யாணம் என்ற அமைப்பை மீறிய பாலியல் உறவுகளை, பாட்டிக்கு வேலைகாரனுடன் அவள் கணவர் அறிந்தே இருந்திருக்கக் கூடிய உறவை போகிற போக்கில் அரைப் பக்கத்தில் சொல்லிவிட்டு போகிறார்.

மாரியப்பன் தனக்கு கல்யாணம் ஆக வேண்டும் என என்னென்னவோ செய்கிறான். கல்யாணம் நிற்பதற்க்கு காரணமாக இருந்தது என அவன் நினைக்கும் பழைய மாடல் பைக்கை, கள்குடியலை, கோவணம் கட்டி தென்னை ஏறும் வழக்கத்தை அனைத்தையும் விடுகிறான். வீட்டில் டி.வி வாங்கி வைக்கிறான். தன்னை முற்றிலும் ஒவ்வொரு முறையும் மாற்றிக் கொள்கிறான். படித்து முடிக்கையில் திருமணம் என்ற அமைப்பே எவ்வளவு அபத்தம் என தோன்ற வைக்கிறார்.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: பெருமாள் முருகன் பக்கம், அருணா பதிவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: பெருமாள் முருகனின் தளம்