பைரப்பாவின் “ஆவரணா” – படிக்க விரும்பும் புத்தகம்

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பா. அவரது எழுத்துகள் இன்னும் முழுமையாக ஆங்கிலம்/தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. அதுவும் ஆவரணாவைப் பற்றி ஒரு நண்பன் அடிக்கடி பேசுவான், மொழிபெயர்ப்பு இல்லையே என்று வயிறு எரியும்.

நண்பர் உப்பிலி ஸ்ரீனிவாஸ் மூலமாக இந்தப் புத்தகம் தமிழில் வந்திருப்பது தெரிய வந்தது. அவர் எழுதிய அல்லது கட்-பேஸ்ட் செய்த சிறு கீழே உள்ள அறிமுகம் கல்கியில் வந்தது என்று ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். அவருக்கும் கல்கிக்கும் நன்றி! நூலைப் பதித்திருப்பது விஜயபாரதம் (இது பா.ஜ.க.வின் அமைப்பா?), மதிப்புரையை எழுதியவர் “திராவிட மாயை” சுப்பு என்று ரமணன் தகவல் தந்திருக்கிறார்.

ஜெயமோகன் இது வெறும் பிரச்சார நாவல், பைரப்பாவுக்கு இழுக்கு என்று மதிப்பிடுகிறார். அது ஒரு பெரிய ஏமாற்றம்!

எஸ்.எல்.பைரப்பா – கன்னட இலக்கியத்தின் இன்றைய சூப்பர் ஸ்டார். ‘ஆவரணா’ என்ற பெயரில் 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நாவல், முதல் பத்து மாதங்களில் பதினான்கு பதிப்புகளைக் கண்டது. இப்போது முப்பது பதிப்புகளைக் கடந்து அசுர சாதனை செய்துள்ளது.

இவர் எழுதியுள்ள 24 நாவல்களில், சில திரைப்படங்களாகவும் வந்துள்ளன; ‘பர்வா’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கெனவே தமிழர்களுக்கு அறிமுகமான பைரப்பா இப்போது மீண்டும் தமிழ்ப் புத்தகமாக வந்திருக்கிறார். இவரது ‘ஆவரணாவை’ ஜெயா வெங்கட்ராமன் தமிழாக்கி ‘திரை’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்.

திரையின் கதாநாயகி லக்ஷ்மி, காந்தியவாதி நரசிம்ம கௌடா மகள். பெங்களூருவில் மேல்தட்டு முற்போக்குவாதியான லக்ஷ்மி, காதல் வயப்பட்டு சகமுற்போக்குவாதி அமீரைத் திருமணம் செய்து கொண்டு ரஸியா-வாகிறாள். இடதுசாரிகளின் கவனிப்போடும் அரசாங்கத்தின் கருணையோடும் ஆவணப் படங்களையும் எடுக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு அமீர் இஸ்லாமியச் சட்டத்துக்குள் ரஸியாவை அடைக்க முயற்சி செய்கிறான். ரஸியாவுக்கு அதிர்ச்சி. கணவன்-மனைவி மோதல் என்பதைக் களமாக வைத்துக் கொண்டு பைரப்பா வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே போகிறார்.

நரசிம்ம கௌடா மறைவுக்குப் பிறகு அஸ்தியை எடுத்துக்கொண்டு ரஸியா, காசிக்குப் போகிறாள். அந்த இடத்தில் காசியை ‘நகரங்களின் வளாகம்’ என்று பெருமைப்படுத்துகிறார் பைரப்பா. அவருடைய இந்தப் படைப்பை, கதைகளின் வளாகம் என்று சொல்லலாம்.

எத்தனை கதைகள்? அமீர், ரஸியாவின் காதலில் உள்ள இனிப்பு; கடுப்பு கதைகள். பேராசிரியர் சாஸ்திரியின் சபலக் கதைகள்; எலிசபெத்தின் கத்தோலிக்கக்கதை; அருணா என்பவள் சல்மாவாகி சவூதிக்குப் போன கதை; நரசபுரத்தின் வீட்டு நூலகத்தில் மறைந்திருக்கும் கதைகள் என்று கலைடாஸ்கோபிக் கதைகள்.

தந்தையின் குறிப்புகளைப் படிக்கும்போது ரஸியாவின் கண்முன்னே விரிகிறது ஒரு சரித்திரக் கதை. அது மொகலாயர் காலத்தை முன்னுக்கு வந்து நடப்புலகைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. பைரப்பாவின் எழுத்தில் வெளிப்படும் சம்பவங்கள் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“நம்முடைய பாடத் திட்டம் முற்போக்கு வாதிகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது” என்று வாதம் செய்தார் ஒரு நண்பர்.

மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியில், 1989-ல் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, “இஸ்லாமிய அரசர்கள் கோயில்களை இடித்தது பற்றிய செய்திகள் பாடப் புத்தகங்களில் இடம் பெறக்கூடாது” என்று சொன்னதை நினைவுபடுத்தினார் அந்த நண்பர் சொன்னதற்கு வலு கூட்டுகிறது நாவல்.

திரை – கன்னட மூலம் எஸ். எல். பைரப்பா, தமிழில்: ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை.

விலை ரூ. 250.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்
தொடர்புடைய சுட்டி: எஸ்.எல். பைரப்பாவின் க்ருஹபங்கா