Skip to content

பைரப்பாவின் “ஆவரணா” – படிக்க விரும்பும் புத்தகம்

by மேல் ஓகஸ்ட் 13, 2012

நான் மிகவும் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் எஸ்.எல். பைரப்பா. அவரது எழுத்துகள் இன்னும் முழுமையாக ஆங்கிலம்/தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. அதுவும் ஆவரணாவைப் பற்றி ஒரு நண்பன் அடிக்கடி பேசுவான், மொழிபெயர்ப்பு இல்லையே என்று வயிறு எரியும்.

நண்பர் உப்பிலி ஸ்ரீனிவாஸ் மூலமாக இந்தப் புத்தகம் தமிழில் வந்திருப்பது தெரிய வந்தது. அவர் எழுதிய அல்லது கட்-பேஸ்ட் செய்த சிறு கீழே உள்ள அறிமுகம் கல்கியில் வந்தது என்று ஸ்ரீனிவாஸ் தகவல் தருகிறார். அவருக்கும் கல்கிக்கும் நன்றி! நூலைப் பதித்திருப்பது விஜயபாரதம் (இது பா.ஜ.க.வின் அமைப்பா?), மதிப்புரையை எழுதியவர் “திராவிட மாயை” சுப்பு என்று ரமணன் தகவல் தந்திருக்கிறார்.

ஜெயமோகன் இது வெறும் பிரச்சார நாவல், பைரப்பாவுக்கு இழுக்கு என்று மதிப்பிடுகிறார். அது ஒரு பெரிய ஏமாற்றம்!

எஸ்.எல்.பைரப்பா – கன்னட இலக்கியத்தின் இன்றைய சூப்பர் ஸ்டார். ‘ஆவரணா’ என்ற பெயரில் 2007-ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த நாவல், முதல் பத்து மாதங்களில் பதினான்கு பதிப்புகளைக் கண்டது. இப்போது முப்பது பதிப்புகளைக் கடந்து அசுர சாதனை செய்துள்ளது.

இவர் எழுதியுள்ள 24 நாவல்களில், சில திரைப்படங்களாகவும் வந்துள்ளன; ‘பர்வா’ என்ற நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. ஏற்கெனவே தமிழர்களுக்கு அறிமுகமான பைரப்பா இப்போது மீண்டும் தமிழ்ப் புத்தகமாக வந்திருக்கிறார். இவரது ‘ஆவரணாவை’ ஜெயா வெங்கட்ராமன் தமிழாக்கி ‘திரை’ என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்.

திரையின் கதாநாயகி லக்ஷ்மி, காந்தியவாதி நரசிம்ம கௌடா மகள். பெங்களூருவில் மேல்தட்டு முற்போக்குவாதியான லக்ஷ்மி, காதல் வயப்பட்டு சகமுற்போக்குவாதி அமீரைத் திருமணம் செய்து கொண்டு ரஸியா-வாகிறாள். இடதுசாரிகளின் கவனிப்போடும் அரசாங்கத்தின் கருணையோடும் ஆவணப் படங்களையும் எடுக்கிறார்கள்.

திருமணத்துக்குப் பிறகு அமீர் இஸ்லாமியச் சட்டத்துக்குள் ரஸியாவை அடைக்க முயற்சி செய்கிறான். ரஸியாவுக்கு அதிர்ச்சி. கணவன்-மனைவி மோதல் என்பதைக் களமாக வைத்துக் கொண்டு பைரப்பா வரலாற்றின் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே போகிறார்.

நரசிம்ம கௌடா மறைவுக்குப் பிறகு அஸ்தியை எடுத்துக்கொண்டு ரஸியா, காசிக்குப் போகிறாள். அந்த இடத்தில் காசியை ‘நகரங்களின் வளாகம்’ என்று பெருமைப்படுத்துகிறார் பைரப்பா. அவருடைய இந்தப் படைப்பை, கதைகளின் வளாகம் என்று சொல்லலாம்.

எத்தனை கதைகள்? அமீர், ரஸியாவின் காதலில் உள்ள இனிப்பு; கடுப்பு கதைகள். பேராசிரியர் சாஸ்திரியின் சபலக் கதைகள்; எலிசபெத்தின் கத்தோலிக்கக்கதை; அருணா என்பவள் சல்மாவாகி சவூதிக்குப் போன கதை; நரசபுரத்தின் வீட்டு நூலகத்தில் மறைந்திருக்கும் கதைகள் என்று கலைடாஸ்கோபிக் கதைகள்.

தந்தையின் குறிப்புகளைப் படிக்கும்போது ரஸியாவின் கண்முன்னே விரிகிறது ஒரு சரித்திரக் கதை. அது மொகலாயர் காலத்தை முன்னுக்கு வந்து நடப்புலகைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. பைரப்பாவின் எழுத்தில் வெளிப்படும் சம்பவங்கள் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

“நம்முடைய பாடத் திட்டம் முற்போக்கு வாதிகளால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது” என்று வாதம் செய்தார் ஒரு நண்பர்.

மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு ஆட்சியில், 1989-ல் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கை, “இஸ்லாமிய அரசர்கள் கோயில்களை இடித்தது பற்றிய செய்திகள் பாடப் புத்தகங்களில் இடம் பெறக்கூடாது” என்று சொன்னதை நினைவுபடுத்தினார் அந்த நண்பர் சொன்னதற்கு வலு கூட்டுகிறது நாவல்.

திரை – கன்னட மூலம் எஸ். எல். பைரப்பா, தமிழில்: ஜெயா வெங்கட்ராமன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை.

விலை ரூ. 250.

தொகுக்கப்பட்ட பக்கம்: இந்தியப் புனைவுகள்
தொடர்புடைய சுட்டி: எஸ்.எல். பைரப்பாவின் க்ருஹபங்கா

From → Bhyrappa

10 பின்னூட்டங்கள்
 1. ஆர்.வி.சார்,பதிவு மிகவும் சுருக்கமாக உள்ளதே?ஏதேனும் விரிவான பதிவு கிடைக்காதா என்று எதிர்பார்த்திருந்தேன் பல நாட்களாக.ஜெயமோகன்கூட இன்னும்
  இதைப்பற்றி எழுதவில்லையே?நாவலின் கருத்து சோ கால்டு முற்போக்கு மற்றும்
  செக்யூலர் வாதிகளுக்கு உகப்பாக இருக்காது.ஜோதிபாஸுவே இப்படியென்றால்
  என்ன சொல்வது?நானும் இனிதான் வாங்கிப் படிக்க வேண்டும்.பதிவுக்கு நன்றி

  Like

 2. அன்புள்ள ஆர்.வி,

  இந்த வார கல்கியில் வெளி வந்த நூல் விமர்சனம் இது. படித்தவுடன் என்னவோ முதலில் உங்களுடன் தான் பகிரத் தோன்றியது…

  Like

 3. ராதாகிருஷ்ணன் துரைசாமி, நான் இன்னும் “ஆவரணாவை” படிக்கவில்லையே!
  ஸ்ரீனிவாஸ், தகவலுக்கு, பகிர்ந்ததுக்கு நன்றி!

  Like

 4. பகிர்வுக்கு நன்றி ஐயா…

  Like

 5. ஆர்வி

  ஒரு தெளிவான பிரிவினையை நாம் மனதில் உருவாக்கியாகவேண்டும். மகத்தான எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் மகத்தானவை அல்ல

  இந்திய இலக்கியத்தின் சாதனையாளர்களில் ஒருவர் எஸ்.எல்.பைரப்பா. .வம்சவிருட்சா [வம்ச விருட்சம்] கிருஹபங்கா [ஒரு குடும்பம் சிதைகிறது] பர்வா [பருவம்] ஆகிய அற்புதமான நாவல்களை எழுதியவர் பைரப்பா. அவர் கன்னட அரசியல் காரணமாகவே ஞானபீட விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டார். அவர் வாழ்ந்திருக்கும்போதே காங்கிரஸின் எடுபிடிகளாக அரசு அமைபுகளை நத்தி வாழும் சந்திரசேகர கம்பார் போன்றவர்கள் ஞானபீடம் அளிக்கப்பட்டு பைரப்பா அவமதிக்கப்பட்டார்.

  ஆனால் இந்நாவல் பைரப்பாவின் நல்ல ஆக்கம் அல்ல. அது சொல்லும் விஷயங்கள் சரியா தவறா என்பது இலக்கியத்தின் முதல் அக்கறை அல்ல. அவை கலையாகி இருக்கின்றனவா என்பதே கேள்வி. பதில் இல்லை என்பதே. நேரடியான பிரச்சாரம் இந்நாவல். பாரதிய ஜனதாக் கட்சியால் அக்காரணத்தாலேயே தூக்கிச்சுமக்கப்பட்டது. அது விற்பனையில் அடைந்த சாதனை அவ்வாறு பெறப்பட்டதே

  ஃபைரப்பாவுக்கு இந்நாவல் ஓர் இழுக்கே

  ஜெயமோகன்

  Like

  • ஜெயமோகன், உங்களிடமிருந்து ஒரு வார்த்தை வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

   // பைரப்பாவுக்கு இந்நாவல் ஓர் இழுக்கே //
   அடக் கொடுமையே! என் கன்னட நண்பன் ஒருவன் கொடுத்த பில்டப்பால் – குறுகிய காலத்தில் எக்கச்சக்க மறுபதிப்புகள், ஹிந்து-முஸ்லிம் பிரச்சினைகள் பற்றிய புத்தகம் – மிகவும் ஆர்வமாக இருந்தேன். அவர் ஜாதியை மையமாக வைத்து எழுதிய ஒரு நாவல் (டாடு? தந்து?) என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மதத்தை வைத்து எழுதி இருக்கிறார் என்பது என்னை மிகவும் ஈர்த்தது. பைரப்பா போயும் போயும் பிரச்சார நாவல் மாதிரி எழுதி இருக்கிறார் என்பது பெருத்த ஏமாற்றம் ஆக இருக்கிறது.

   Like

 6. ஆர்வி

  மேற்கண்ட நூலை பதிப்பித்திருப்பது விஜயபாரதம்.

  கல்கியில் விமர்சனம் எழுதியவர் ”திராவிட மாயை” எழுதிய திரு. சுப்பு அவர்கள்.

  🙂

  Like

 7. ஆர்.வி. சார்,
  ஜெ.மோ. சொன்னார் என்பதற்காக அலட்சியப் படுத்தாதீர்கள்.நான் கிடைத்த இரண்டே நாட்களில் திரை புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். கீழே வைக்க முடியவில்லை.உண்மையான , யாரும் கூறத் தயங்கும் சரித்திர நிகழ்வுகளை
  ஆதாரத்துடன்கலந்து ஒரு நாவலுக்குள் நாவலாக சமத்காரமாக வழங்கியுள்ளது
  பிரச்சாரத்திற்காகவா?அவரது பயங்கரமான உழைப்பின் மதிப்பு அவ்வளவுதானா?
  நாவலைப் படித்துவிட்டு உங்கள் உண்மையான கருத்தை பதிவிடுங்கள். இதுவே என் வேண்டுகோள்.

  Like

 8. ராதாகிருஷ்ணன் துரைசாமி, நான் சிவசங்கரி இந்துமதியைக் கூடப் படிப்பவன், அதனால் நிச்சயமாக இந்தப் புத்தகம் கிடைத்தால் படிப்பேன். 🙂 ஆனால் ஜெயமோகன் போன்ற ஒரு தேர்ந்த வாசகர் ஏமாற்றம் அடைந்தது என் எதிர்பார்ப்பை மிகவும் குறைத்துவிட்டது.

  Like

Trackbacks & Pingbacks

 1. பைரப்பா நிகழ்ச்சி பற்றி ராஜன் | சிலிகான் ஷெல்ஃப்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: