ஜெயமோகன் பாராட்டிய விமர்சனம் – “லங்காதகனம்”

(மீள்பதிவு)

இது நண்பர் முத்துகிருஷ்ணன் எழுதி இருக்கும் விமர்சனம். முத்துகிருஷ்ணன் இளைஞர், சிலிகான் ஷெல்ஃப் குழும உறுப்பினர். காலவெளி என்ற தளத்தில் எழுதுகிறார்.

ஜெயமோகனே சிலாகித்த விமர்சனம் இது. அவரது வார்த்தைகளில்:

அந்தக் கதை எழுதி கிட்டத்தட்ட இருபதாண்டுகள் ஆகின்றது. இத்தனை வருடங்களுக்கு பின் வந்துள்ள இந்த விமர்சனம் முழுமையாக அதை உள்வாங்கியிருப்பதைக் காண அலாதியான ஒரு நிறைவு. கலைக்கும் கலைஞனுக்குமான உறவைப் பற்றி, கலைஞன் கலையாக ஆகும் மர்மக்கணம் பற்றி, எல்லா எழுத்தாளர்களும் ஒரு கதை எழுதியிருப்பார்கள். அது கிட்டத்தட்ட ஒரு சுயப்பிரகடனம் போல.

எந்த செயலும் பல மனநிலைகளில் செய்ய சாத்தியப்படும். வாழ்கையில் நாம் செயல்படும் வேலைகள் பெரும்பாலும் பலமுறை தொடர்ந்து செய்யப்படுவதால் பழக்கமாகிவிடுகின்றன. பழக்கப்பட்ட விஷயங்களில் புதுமையை கண்டடைய நாம் விழைவதில்லை. அலுவலக வேலை தொடங்கி தினசரி வாழ்கையை நடத்த செய்யும் அலுவல்கள் அனைத்தும் சில நாட்களில் ஆர்வமில்லாமல் வெறும் “கடமைக்காக” நிகழ்த்தப்படுவது இதனால்தான். இது எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கும் பொதுப் போக்கு. கலை இலக்கியங்களில் செயல்படுபவர்களும் சில காலங்களில் நீர்த்துப் போவதற்கு இம்மனநிலையும் ஒரு காரணம். எந்த ஒரு துறையிலும் மறுக்கமுடியாத ஆளுமையை அடைந்தவர் – பரவலாக அறியப்பட்டவர் என்றிருக்க வேண்டியதில்லை – எல்லோரும் தான் செய்யும் செயலில் ஒவ்வொரு முறையும் தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள முனைபவர்களாக இருப்பதை காணலாம். திரும்பத் திரும்ப செய்ய வேண்டிவரும் செயலாக இருப்பினும் அதில் மேற்கொண்டு மேன்மையை அடைய முயற்ச்சிதுக் கொண்டே இருப்பதையும், அதன் வழியே தன்னையே சுயபரிசோதனைக்குள்ளாக்கிக் கொள்வதையும் சிறிது நேரம் நாம் அவதானித்தாலேயே உணரமுடியும்.

நாம் ஒவ்வொருவரும் அப்படி ஒரு நிலையை ஒரு சில கணங்களாவது அனுபவித்திருப்போம். ஏதோ ஒரு காரியத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி புத்தி, மனம் எல்லாவற்றையும் கொண்டு செய்து கொண்டு நிமிர்ந்து உணரும் பொழுது மிகுந்த நேரம் கடந்துவிட்டதைப் போலவோ அல்லது நேரம் ஸ்தம்பித்து நின்றதைப் போலவோ உணர்ந்திருப்போம். அத்தருணத்தில் மனம் சதா அதன் முன் விழுந்து கிடக்கும் ‘காலம்’ என்ற திரையை விலக்கி பார்த்துவிட்டு மறுபடியும் அதன் பின்னால் வந்து அடங்கிய பின் மிச்சமிருக்கும் அக்கண நேர விடுதலையின் ஞாபகமே அது. காலத்தை உதறி சஞ்சரிக்கும் அத்தருணங்களில் மனதின் எல்லைகளை அப்பாற்பட்ட சில விஷயங்கள் மனதால் அறியப்படுவதுண்டு. இக்கூற்று வெறும் தத்துவ தளத்தில் சொல்லப்படுபவை என்றில்லாமல் நடைமுறையிலும் சாத்தியப்படுகிறது.

இந்நிலையை குறிக்கும் மிக பொருத்தமான ஆங்கில சொற்றொடர், “In the Zone” என்பதாகும். விக்கிபீடியாவில் flow (psychology) என்று தேடினால் முழு பொருளும் வாசிக்க கிடைக்கும். பொதுத் தளத்தில் இந்நிலையை பிரபலப்படுத்தியதில் பெரும் பங்கு டென்னிஸ் வீரர்களையே சேரும். இதையே உலகப் பிரசித்திப் பெற்ற இசையமைப்பாளர் யானி பேட்டியொன்றில் புதிய இசையை தேடி மனதின் ஆழங்களில் வேறெந்த சிந்தனையுமின்றி செல்லுகையில் “in the zone” என்ற நிலையில் எண்ணிலடங்கா இசை சாத்தியங்களையும், கருக்களையும் தான் கண்டடைவதாக குறிப்பிடுகிறார்.

இங்ஙனம் செயலாற்றும் விதம் தவத்திற்கு சமமாகும். ஆனாலும் அது முழு தவமாகாது. ஏனென்றால் இச்செயல்கள் முழுமனதுடன் தன்னை இழந்து நிகழ்த்தப்பட்டாலும், எல்லா தருணங்களிலும் – சில கணங்களை தவிர – “நான் செய்யும் செயல்”, இச்செயலின் முடிவு, அதனால் நடக்கவிருக்கும் அடுத்த செயல் என்ற பகுப்பாய்ப்பு மனதில் எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டேயிருக்கும். தானறியாத மனதின் ஏதோ ஒரு சிறு பகுதி அச்செயலின் வெளியே நின்று இதை கவனித்துக் கொண்டேயிருக்கும் காரணத்தால் அச்செயல் மிக நேர்மையாக கூறுகையில் பூரணத்தை (perfection) அடைவதில்லை.

மேலே சொல்லப்பட்டவைகளை விடுத்து செயலாற்றும் விதம் ஒன்றுள்ளது. அது, காலத்தின் பிரக்ஞையை மொத்தமாக இழந்து, தன்னிலிருந்து தன்னை விடுவித்து தானே அச்செயலாக மாறிவிடுவது. அந்நிலையில் செயலாற்றுபவன், செயல் என்ற வேறுபாடு இழந்து, தான் என்ற நிலையை என்றென்றைக்குமாக இழந்து செயலாகவே நிரந்தரமாக மாறிவிடுகிறான். அத்தகைய ஒரு நிகழ்ச்சியை நான் கேள்விப்பட்டதில்லை ஆனால் சாத்தியப்படக்கூடும் என கருத்துரீதியாக சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி ஒருவன் தன் கலையில் தன்னை இழக்கும் தருணத்தை காட்டும் கதையே ஜெயமோகனின் குறுநாவலான ‘லங்காதகனம்’.

அனந்தன் ஆசான் இராமாயணத்தில் அனுமன் தூதில் அனுமனாக வேஷமிட்டு ஆடும் கதகளி ஆட்டக்காரன். அச்சன் மடம் என்ற அரண்மனையின் காரியதரசனாகிய அச்சுவிற்கு பொருளியல் படிக்கும் கல்லூரி மாணவனான ராமன் குட்டி பகுதி நேரமாக எடுபிடி வேலைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறான். ஒருநாள் அரண்மனையின் அருகில் உள்ள, கதகளி கலைஞர்கள் வேஷமிடும் அறையில் தனிமையில் இருக்கும் அனந்தனை ராமன் குட்டி சந்திக்கிறான். தான் யாரென்பதையும் கதகளியின் மேல் உள்ள பக்தியையும், அனுமன் தூது படலத்தின் ஒரு பகுதியான லங்காதகனத்தில் தான் ஆடும் பாத்திரமான உக்கிரரூபியாகிய அனுமனின் மேலுள்ள அன்பையும் ஒரு பித்து நிலைக்கு அருகில் நின்று அனந்தன் விளக்குவதை கேட்டு விட்டு சொல்லயியலா அதிர்ச்சியுடனும், பீதியுடனும் ராமன் திரும்புகிறான். அனந்தனின் அசைவுகளும், நளினமும் ஒரு குரங்கின் நடத்தையை ஒத்திருப்பதை ராமன் கண்டு கொள்கிறான். மற்றவர்கள் அனந்தனை குரங்காக மாறிப் போன கோமாளியாகவே காண்கிறார்கள்.

அரண்மனையின் முதலாளியான ‘தம்புரான்’ ஒரு நாள் தன் நண்பர்களுடன் அங்கிருக்கும் கோவிலுக்கு கும்பிட வருகிறார். அப்பொழுது அனந்தனை கூப்பிட்டு தன் முன்னே நடக்க வைத்து நண்பர்களுக்கு வேடிக்கை காட்டுகிறார். மேலும் அனந்தனை அனுமனின் கோமாளி வேஷமாகிய கரி வேஷமிட்டு மாலை அவரிருப்பிடத்திற்கு வந்து ஆடி காட்டுமாறு சொல்லி விட்டு செல்கிறார். அனந்தன் அதற்கு சம்மதித்துவிட்டு ராமனிடம் மட்டும் தான் அன்று ஆடுவதை ஒளிந்திருந்து கூட பார்க்கக் கூடாது என சத்தியம் வாங்கிச் செல்கிறான். ஒவ்வொரு முறை அனந்தனை பார்த்து துணுக்குற்றாலும் ராமனுக்கு அவன் மேல் இரக்கம் கலந்த பரிவு உண்டாகிறது. ராமனிடம், தன் மேல் அனுமன் முழுவதும் குடி கொள்ளவில்லை என்றும், ஆட்டத்தின் சில கணங்களில் பூரண நிலையை தொட்டுவிட்டு திரும்பி விடுவதாகவும் அதன் பின் மனம் வெறுமையை அடைந்து விடுகிறது என அனந்தன் அரற்றுகிறான். சில தினங்களில் திருவிழா வருகிறது. கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக மேடை அமைக்கப்பட்டு அடுத்த ஊர்களிலிருந்து கதகளி நாட்டிய கோஷ்டிகள் அங்கு வந்து தினமும் ஆடுவது வழக்கம். ஆரம்பத்தில் ராமனிடம் தனக்கு இம்முறை ஆடுவதில் விருப்பமற்று போய்விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கும் அனந்தன், ஒரு நாள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து தான் கடவுளிடம் திருவுளச்சீட்டு போட்டு பார்த்ததாகவும் அதில் திருமூர்த்தி தன்னை ஆடச் சொல்லிவிட்டதாகவும் சொல்கிறான். மேலும் இம்முறை தான் பூரணமாக லங்காதகனத்தை ஆடப் போவதாக சொல்லிச் செல்கிறான். அதைக் கேட்டு ராமன் மனதில் அமைதியழிக்கும் தவிப்பும் பயமும் உருவாகிறது.

மற்ற ஆட்டக்காரர்களுடன் அமர்ந்து ராமன் ஒரு நாள் பேசிக்கொண்டிருக்கையில் பேச்சு அனந்தனின் சமீபத்தில் அதிகரித்த பித்து நிலையை நோக்கி மாறுகிறது. அப்பொழுது ஆட்டக்காரர்களுக்கு வேஷமிடும் பெரியவர் வாழ்கையை முழுவதுமாக கலையில் அர்ப்பணித்துக் கொண்டு மனதில் தான் ஆடப் போகும் பாத்திரத்தை முழுவதுமாக ஆவாகனம் செய்து வேறெந்த சிந்தனையும் இன்றி வாழும் ஆட்டக்காரன் வெகு அபூர்வமாக பூரணத்தை அடைந்து விட சாத்தியமுண்டு என கூறுகிறார். மற்ற ஆட்டக்காரர்கள் அதை கேட்டு கேலி செய்கின்றனர். பெரியவர் தாம் சொன்னது இளைய தலைமுறைக்கு புரியாதென்றும், லட்சத்தில் ஒரு கலைஞனுக்கு அது சாத்தியப்பட்டு விடும் என்றும், அதன் பொருட்டே கதகளி ஆட வரும் ஒரு மாணவனுக்கு கூட வேஷமிடுகையில் சம்பிரதாயத்திற்கு குறையாக ஒரு பொட்டு வைப்பது வழக்கம் என்று சொல்கிறார். அனந்தனின் இந்த நிலைமையால் இம்முறை அவனுக்கு சம்பிரதாயத்தை தாண்டி அவனறியாமல் இரண்டாவதாக ஒரு வேஷக்குறையும் வைக்கப் போவதாக கூறுகிறார்.

லங்காதனம் அரங்கேறும் நாள் நெருங்குகையில் ராமனுக்கும் தவிப்பு கூடிக் கொண்டே வருகிறது. ஆட்டம் தொடங்குவதற்கு சிறிது நேரம் முன்பு ராமன் வேஷமிடும் அறைக்கு செல்கிறான். பெரியவர் இன்னொருவருக்கு வேஷமிட்டுக் கொண்டிருக்கையில் அனந்தன் முழு வேஷத்துடன் இருட்டில் ஓர் மூலையில் சிலை போல் உட்கார்ந்திருப்பதை காண்கிறான். பெரியவர் மற்றவருடன் கிளம்புகையில் ராமனிடம் தான் கூடுதலாக ஒரு வேஷக்குறை வைத்திருப்பதாகவும், எக்காரணம் கொண்டும் அனந்தனுக்கு கண்ணாடியை கொடுக்கக் கூடாது என்றும் சொல்லிச் செல்கிறார். தனிமையில் அனந்தன் ராமனிடம் கண்ணாடியை கேட்கிறான், ராமன் இல்லையென்றதும், அவன் எதுவும் சொல்வதற்குள் அங்கிருந்த பானையிலிருந்த தண்ணீரை சாயத் தொட்டியில் கொட்டி தன் பிம்பத்தை அனந்தன் காண்கிறான். அதை கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் சத்தம் போட்டுக் கொண்டே ராமன் ஓடி பெரியவரை அரங்கத்தில் கண்டடையும் நேரம், புதர்களை அனாயாசமாக தாண்டி அனந்தன் பூரணமாக கதகளி களத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதை சொல்லி கதை முடிகிறது.

படித்து முடிக்கையில் எழுதப்படாத இன்னொரு கதை அதன் முடிவிலிருந்து உருவாவது போல் தோன்றுகிறது. அனந்தன் அப்படி ஓடி வந்து என்ன செய்தான்? அந்த பெரியவர் சொன்னது போல லட்சாதி லட்சம் மக்களுள் ஒருவனுக்கு கிடைக்கும் உன்னத நிலையில் தான் எதை மனதில் ஆவாகனம் செய்தானோ அதாகவே மாறிவிட்டானா? அப்படி நடந்திருக்காவிட்டால் தன் போதத்தை என்றென்றைக்குமாக இழந்து முழுப் பைத்தியமானானா? அப்படி நிகழ்ந்திருக்க கூடுமென்றால் அதன் விளைவு ராமனிடம் என்ன உருவாக்கியிருக்கும்? அவன் ஒருவன் தானே அனந்தனின் அப்பயணத்தை அருகிலிருந்து உணர்ந்தவன். ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் முடிக்கவியலா ஒரு புதுக் கதை மனதில் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

எப்படி இராமாயணத்தில் பல பகுதிகளில் அனுமன் பக்தனாகவும், அடக்கமானவனாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறானோ அதே போல அனந்தனும் அங்குள்ளவர்களால் கோமாளியாகவும் உதாசீனப்படுத்த வேண்டியவனாகவும் பார்க்கப்படுகிறான். சாப்பாட்டிற்காக வாசலில் தட்டுடன் தவிப்போடு எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் வானர அனந்தனை மட்டுமே எல்லோரும் காண்கின்றனர். தான் ஆடும் கலையை உயிர் மூச்சாக கொண்டு, இலங்கையை எரித்த உக்கிரமான அனுமனை ஒத்த தீவிரத்தை உள்ளடக்கிய அனந்தனை ராமன் குட்டி மட்டுமே கண்டிருக்கிறான். அதற்கான முக்கிய காரணம் ராமன் அனந்தனை அவன் மனதின் யதார்த்த தீவிரத்துடன் இருக்கும் போதே அணியறையில் முதலில் சந்திக்கிறான் என்பதே. அனந்தன் நாட்கணக்கில் வெளியில் வராமல் தங்கியிருக்கும் சிவப்பொளி படர்ந்த அந்த அறை அவன் மனதின் உக்கிரத்தையும் தீவிரத்தையும் காட்டும் ஒரு படிமமாகவே வருகிறது. அதனுள்ளில் அமர்ந்திருக்கும் ராமன் காணும் அனந்தன் வெளியில் தெரியும் வயதான, ஒடுங்கிய, அழுக்கு உடையணிந்த மனிதனல்ல. மாறாக அவ்வறையின் சிவப்பொளியின் இன்னொரு அங்கமாக உள்ள ஒரு இருப்பாக தெரிகிறான். அவ்வறையில் அனந்தன் அனுமன் வாலிலிருந்த சம்கார அக்னியை கையில் முத்திரை வைத்து அசைந்து ராமனிடம் ஆடிக் காட்டும் போது அது அவன் இதயத்தின் உள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் பூரணத்தை அடையும் வேட்கை என்று தோன்றுகிறது. அதற்கு வெளியே உள்ள மற்றவையெல்லாம் வெறுமையானது என்பதை ராமனின் மனவோட்டமாக வரும் “பகல் ஒளியின் அபத்தமான வெறுமையை அப்போதுதான் முதல் முறையாக உணர்ந்தேன். மனமும் கண்களும் கூசின” என்ற வரிகளில் சொல்லப்படுகிறது.

அச்சன் மடமும் அதன் சுற்றமும் கண்முன்னே விரிவதற்கு ஏற்றார் போல் மிக நேர்த்தியாகவும், விடுபடல்கள் இல்லாமலும் அமைந்துள்ளது. மேலும் கதகளி ஆட்டத்தின் வழங்கு சொற்களும் ஆட்டக்காரர்கள் தயாராகும் போதுள்ள விவரணைகளும் அவர்களின் அணிகலங்களை பற்றிய விளக்கங்களும் கதையின் போக்கிலிருந்து வெளியில் தெரியாமல் சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு துணை கதை மாந்தரின் குணாதிசயங்கள் அவர்கள் பேசும் ஒரிரு வசனங்களிலேயே மனதில் உருவாகி விடுகின்றன. குறிப்பாக கோவிலின் பூசாரி வந்தவர்களிடம் பேசும் வசனங்களில் அவரை பற்றிய முழு பிம்பம் மனதில் உருவாகி விடுகிறது. மாறி வரும் சமூக மாற்றங்களிலாலும், மக்கள் ரசனைகளாலும் கதகளி கலையை மட்டுமே நம்பியிருக்கும் கலைஞர்கள் உதாசீனப்படுத்தப்படுவதும் அதனால் அவர்கள் மனதில் உருவாகும் கசப்பும் இயலாமையும் கதையின் மொத்தப் போக்கில் சொல்லப்படுகிறது.

இக்கதையில் ஒரு இடம் அது எழுதப்பட்டதையும் தாண்டி முடிவுறா விளக்கங்களுடன் தனித்து நிற்கிறது. திருவிழா ஆரம்பித்து கதகளி அரங்கு அமைக்கப்பட்டு தூங்காவிளக்கு ஏற்றப்பட்டவுடன் ராமன் அனந்தனை பார்க்கும் தருணம் இப்படி சொல்லப்படுகிறது, “அவர் எவரையும் பார்க்கவில்லை. பார்வை உட்புறமாக திரும்பியிருப்பது போலிருந்தது”. அவ்வரிகளை பல முறை வாசித்துப் பார்த்தேன். ஒவ்வொரு முறையும் அதிலிருந்து வரும் விளக்கம் முடிவற்றதாக பல திசைகளில் விரிந்து செல்வது போலுள்ளது. இதையொத்த தொல் படிமம் சிவனின் நெற்றிக்கண்ணை அது மூடியிருக்கும் நிலையை குறிப்பிடும்பொழுது சொல்லப்படுவதுண்டு.

இக்கதை இதே தொகுப்பிலுள்ள மற்ற கதைகளை விட என்னை கவர்ந்ததற்கான காரணம் வாசிப்பனுபவம் முடியும் போது பதில் கிடைக்காத கேள்வியொன்று எஞ்சி நிற்பது போல் மனதில் ஒரு தோன்றல் ஏற்படுத்துவதால் தான். முளைத்து நிற்கும் கேள்வி என்னவென்று தெளிவுபடுத்தி கூற இயலவில்லை. அந்த புரியாத்தன்மையே அக்கேள்வியை தேடி அக்கதையை நோக்கி என்னை ஈர்க்கின்றது.

தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயமோகன் பக்கம்

தொடர்புடைய பதிவுகள்: லங்காதகனம் பற்றி ஆர்வி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.