கவிதை விவாதத்தின் அவசியம்

எனக்கு கவிதை அலர்ஜி என்று நான் அடிக்கடி சொல்வது கொஞ்சம் அலட்டல் போல தோன்றலாம். ஆனாலும் அதுதான் உண்மை. நண்பர் முத்துகிருஷ்ணனின் இந்தக் கட்டுரை எனக்கு கவிதை என்றால் ஏன் அலர்ஜியாக இருக்கிறது என்று சிந்திக்க வைக்கிறது.

நவீனக் கவிதைகள் என்பது நவீன காலத்து ஓவியங்களை பார்ப்பது போன்றதாகும். பழைய ஓவியங்களில் முதலில் நாம் பார்ப்பது ஒரு காட்சியை – நாம் பழக்கப்பட்ட விதத்தில். உதாரணமாக ஒரு நிலவெளிக் காட்சி, ஒரு மனிதர், ஓர் இடம் அல்லது ஒரு புராண சம்பவம். அந்த புராணச் சம்பவத்தை பற்றி நாம் ஒன்றும் அறியாமலிருந்தால் கூட – ஒருவன் நிற்கிறான், ஒரு இறக்கையுள்ள குழந்தை பறக்கிறது, கீழே ஒரு அழகிய பெண் நழுவும் ஆடைகளுடன் படுத்திருக்கிறாள் என தனித்தனியாக புரிந்து கொள்ள முடியும். ஆனால் நவீன ஒவியங்கள் ஒரு நிறங்களின் கலவையாகவே நம்மிடம் காட்டப்படும். தர்க்கப்படுத்தி புரிந்து கொள்ள அவற்றில் சாத்தியங்கள் மிகக் குறைவு. எடுத்த எடுப்பிலேயே அதிலிருந்து நாம் நம்முடைய கற்பனையை வைத்து பொருளை உருவகித்துக் கொள்ள வேண்டும். இது நவீன கவிதைகளுக்கு ஒரு தோராயமான ஒப்பீடு என நினைக்கிறேன்.

நவீன கவிதைகளை வாசிப்பது என்பது சுலபமற்றதாக இருப்பதற்கு முக்கிய காரணம், அவை நேரடியாகவே சொல்லிலிருந்து பொருளையும், ஒரு அடியிலிருந்து தர்க்கத்தையும் பிடுங்கி எறிவதால்தான் என நினைக்கிறேன். முதலில் காலூன்றி நிற்க எதுவுமே இருப்பதில்லை. ஒன்றைச் சொல்லி அதிலிருந்து வேறொன்றிற்கு நாம் பயணிக்காமல், முதலிலேயே நமக்கு பரிச்சயமில்லாததை அவை சொல்லிச் செல்கின்றன.

புத்தகத்தை அட்டையை பார்த்து வாங்குவதை போல எனக்கு இதுவரை முதல் சில வரிகளே ஒரு கவிதையை அணுக என்னை உந்தும் முக்கிய விசையாகும். நமக்கு தெரிந்த மொழிப் பிரயோகங்களை அது மாற்றி காட்டுகையில் அது கவனத்தை ஈர்கின்றது. அது மொழி விளையாட்டல்ல, சற்றே மாறுபட்ட கோணத்தில் ஆழமாக ஏதையோ சொல்லிச் செல்வது, இது கவிதையில் ஆர்வத்தை உண்டு செய்வதற்கு மட்டுமே. ஒரு கவிதை மனம் விரும்புவதற்கு அதை வாசிக்கையிலேயே அதை பின் தொடர இயலவேண்டும். சில கவிதைகள் மிகச் சிறிதாக இருப்பதால், தொடர்வதற்கு இலகுவாக அமைந்து விடும். 

கவிதை வாசித்து பரிச்சயமில்லதவர்களுக்கும், அதில் கற்பனையால் அதிக தூரம் பயணம் செய்ய முடியாதவர்களுக்கும் சலித்து விடும். கவிதை என்பது புனைகதைகளை போலவோ அல்லது கட்டுரைகளை போலவோ நம்மை சில அடிகள் கூட எங்கும் அழைத்துப் போவதில்லை. ஒரு குழப்பமான வழிகாட்டி பலகையை நம் முன் வைத்து அமைதியாகி விடுகிறது. குறிப்பாக நவீன கவிதைகள் அதைத்தான் எப்பொழுதும் செய்கின்றன என தோன்றுவதுண்டு. நாம் திரும்பத் திரும்ப கவிதைகளை வாசித்து அதில் சொல்லப்படாத அர்த்தங்களை கொடுத்து புரிந்து கொண்டேயிருந்தோமென்றால் நமக்கென அவற்றை அணுகும் முறை உருவாகிவிடும். அதைக் கொண்டு சில காலம் வாசிக்கலாம். ஆனால், இங்குதான் தனிமையில் கவிதையை வாசிக்கும் பொழுது எற்படும் தேக்கம் உருவாகிறது. ஏதோ ஒரு புள்ளியில் ஒரு கவிதையில் அதில் சொல்லப்படாத படிமத்தை மனம் கண்டு கொள்வதன் மூலம் நாம் புதிய திறப்புகளை அடைகிறோம். அதையே மற்ற கவிதைகளுக்கும் போட்டுப் பார்த்து வாசிக்க கற்றுக் கொள்கிறோம், ரசிக்கவும் செய்கிறோம். ஆனால் தற்செயலாகவோ இல்லை எல்லைக்குட்பட்ட கற்பனை அல்லது வாழ்கை அனுபவங்களாலோ நம்மால் வெவ்வேறு கவிதைகளுக்கு வேறுபட்ட படிமங்களையும், பார்வைகளையும் செலுத்த முடியாது. இது ஒரு வகை பரிச்சய தோஷம் என்றும் சொல்லலாம். கவிதை என்ற காட்டில் தற்செயலாக நம் மனம் வகுத்த ஒரு சில ஒற்றையடிப் பாதைகளையே பின்பற்றி நாம் நடக்க ஆரம்பிக்கிறோம். நமக்கு பரிச்சயமான முதல் பாதையையே எல்லா காடுகளுக்கும் போட்டு சுற்றி வருகிறோம். சிறிது நேரத்திலேயே ‘எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு’ என மனம் சலிக்க ஆரம்பிக்கிறது. புதிய பாய்ச்சல்களை மனம் ஏற்படுத்திக் கொள்ள முடியாத பொழுது, கவிதை தன்னையே மூடிக் கொள்கிறது.

இங்குதான் ஒரு குழுவாக கவிதை வாசித்தல் தனி மனித மனதை பல வாசல்களுக்கு இட்டுச் செல்கிறது. பல வாசிப்பாளர்கள் ஒரே கவிதையை பற்றி கூடிப் பேசுகையில் முதல் வரியிலிருந்து வேறுபட்ட கோணங்களை நாம் காண நேரிடும். மனம் ஒரு புதிய கோணத்தை கண்டு கொண்டால் இன்னொரு கவிதையை வாசிக்கையில் இயல்பாகவே அதையும் அக்கவிதையில் செலுத்திப் பார்க்கும். அல்லது இரண்டையும் சேர்த்து ஒரு புதிய படிமத்தை உருவகித்துக் கொள்ளும். மிகச் சாதாரணமாக இருந்த ஒரு கவிதை மிக வித்தியாசமானதாக தெரிய வரும் அதிசயம் அங்கு நடைபெறும். இதைத்தான் நாம் கதை விவாதங்களில் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் கதை விவாதம் தொடங்குவதற்கு முன்பே எல்லோரும் கதையில் என்ன நடக்கிறது என்பதில் ஒரு உடன்பாடு கொண்டிருப்போம். ஆனால் கவிதை விவாதத்தில் – முக்கியமாக நவீன கவிதைகளில் – அந்த சொற்களுக்கு கொடுக்கப்படும் எளிமையான பொருள் கூட வாசித்தவரின் மனதிற்கேற்ப மாறியிருக்கும். இப்படி பல பேசுபொருட்களாய் கொண்ட கவிதைகளை வாசித்து விவாதிக்கையில் நமக்கென ஒரு கவிதையை தரம் பிரிப்பதற்கான அந்தரங்கமான கோட்பாடும் அழகியலும் உருவாகிவிடும். எனக்கு நவீன தமிழ் கவிதைகளை வாசிக்கையில் ஏற்பட்ட தடங்கல்களையும், சலிப்பையும் வைத்தே மேலே சொன்ன கருத்துகள் உருவாயின.

ஆனால் கவிதை வாசிப்பின் சாத்தியங்கள் அதன் அழகியலுடன் முடிந்து விடுவன அல்ல. எனக்கு தோன்றுவது, ஒரு கவிதையின் உச்சகட்ட நோக்கம் அது நம் கவிதையாக மாறுகையிலே நடந்தேறுகிறது. ஆயிரம் கவிதைகளை நாம் ரசித்தாலும் வெகு சில கவிதைகளே நம்மை அப்படி வந்தடையும். ஒரு மந்திரச் சொல் போல அக்கவிதை எங்கோ அமிழ்ந்து கிடந்த ஒரு நினைவை தட்டி எழுப்பி புது உருவு கொண்டு நம்முன் நிறுத்தி விடும். அதன் பிறகு அந்த கவிதை கவிஞனுடையது அல்ல. அது நமக்கு, நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கவிதையாக மாறிவிடும்.

தேவதேவனின் கவிதை ஒன்று மட்டுமே இதுவரை எனக்கு அத்தரப்பட்ட ஒரு அனுபவத்தை அளித்துள்ளது,

பனைகள்
பனைகளின் தலைகளெங்கும்
பறவைகளின் சிறகுகள்
பச்சைப்பனைகளின் நடுவே
ஒரு மொட்டைப் பனை
மொட்டைப் பனை உச்சியிலே
ஓர் பச்சைக்கிளி
அடங்கிவிட்டது
‘மரணத்தை வெல்வோம்’ என்ற கூச்சல்
மரணமும் வாழ்வாகவே விரும்புகிறது
இனி இங்கே நான்
செய்யவேண்டியதுதான் என்ன ?
‘நானே தடைகல்’ ஆகும் வழியறிந்து
வழிவிடுவதை தவிர ?
பனைகளின் தலைகளெங்கும்
படபடக்கும் சிறகுகள்
பாவம் அவை பூமியில்
மரணத்தால் நங்கூரமிடப்பட்டுள்ளன.

அவ்வனுபவத்தைக் குறிவைத்து கவிதை விவாதத்தை நடத்த இயலாது. காரணம், அந்த அனுபவம் மனம் திட்டமிட்டு நடத்துவதல்ல. அது தன்னிச்சையாக நிகழும் ஒன்று. விவாதமென்பது கவிதை வாசிக்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்வதற்கே.

தொகுக்கப்பட்ட பக்கங்கள்: கவிதை பக்கம், முத்துகிருஷ்ணன் பதிவுகள்

2 thoughts on “கவிதை விவாதத்தின் அவசியம்

 1. நல்ல கருத்துகள்

  நன்றி,
  ஜோசப்
  http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  Like

 2. எதற்கும் விவாதம் முடிந்த பின் அனைத்து கருத்துக்கள், அனைவரின் கோணங்கள், தெரிந்த படிமங்கள், புதிய படிமங்கள் அனைத்தையும் கவிதை எழுதியவருக்கும் தெரியப்படுத்துதல் நலம். அவரும் அவையனைத்தையும் அறிந்து கொள்வார்.சே நம் கவிதையில் நமக்கே தெரியாமல் இவ்வளவா என சந்தோஷப்படுவார்

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.