நித்ய சைதன்ய யதி – In the Stream of Consciousness

In the Stream of Consciousness” என்ற நித்ய சைதன்ய யதி எழுதிய புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் அவரும் நடராஜ குருவும் மேற்கொண்ட பயணங்களில் ஏற்பட்ட சம்பவங்களை பதிவு செய்துள்ளார். எல்லாமே ஒரு வகையில் குரு அவருக்கு கொடுத்த பாடங்கள் என்றும் சொல்லலாம். அரை பக்கத்துக்கு குறைவான கட்டுரைகள். நண்பர் முத்துகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் கீழே.

பகிர்தல்

எங்கள் ரயில் முக்கிய ஸ்டேஷனில் வந்து நின்ற பொழுது உண்ணுவதற்காக இரண்டு உணவு பொட்டலங்களை வாங்கினோம். குரு (நடராஜ குரு) தன் பொட்டலத்தை பிரித்து முதல் கவளத்தை கையில் எடுத்த பொழுது, ஜன்னலின் வெளியே ஏழு அல்லது எட்டு வயது நிரம்பிய சிறுவன் கையை நீட்டி யாசித்தான். குரு அந்த சோற்றுருண்டையை அவனிடம் கொடுத்தார். அவன் அவசரமாக அதை முழுங்கிவிட்டு குரு இரண்டாவது உருண்டையை சாப்பிடுவதற்கு முன்பே மறுபடியும் கையை நீட்டினான்.

எனக்கு அது எரிச்சலூட்டியது. நான் அந்த பிள்ளையை தள்ளி விலக்கி விட நினைத்தேன். அனால் குரு நான் அப்படி செய்வதை தடுத்தார். அவர் இரண்டாவது உருண்டையை தான் சாப்பிட்டு விட்டு மூன்றாவது உருண்டையை அந்த சிறுவனுக்குக் கொடுத்தார்.
அவர் திரும்பி என்னைப் பார்த்து சொன்னார், “மனிதர்கள் பிச்சைக்காரர்களால் எரிச்சலடைவார்கள் என எனக்குத் தெரியும். வறுமை மோசமானது அனால் அது ஒரு குற்றம் அல்ல. ஒவ்வொரு மனிதனும் அவனால் முடிந்த அளவிற்கு வாழ முயற்சிக்கிறான். நீ இந்தியாவில் காண்பது மேலை நாடுகளில் நடக்க சாத்தியமேயில்லை. இந்த சிறுவன் நமக்கு முற்றிலும் அறிமுகமற்றவன், ஆனால் மற்றவர்களின் அன்பின் மீதும், கருணையின் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறான். ஒரு மனிதன் மீது மற்றொரு மனிதன் வைத்திருக்கும் நம்பிக்கையே அவனை நம் முன் கைநீட்ட வைக்கிறது. உனக்கு இந்த காட்சியை கண்டு கண்களில் நீர் வரவேண்டும். இந்த பரஸ்பர பகிர்தலும் அடையாளப்படுத்துதலும் மேலை சமூகங்களில் சிறுமைப்படுத்தப்பட்டுள்ளன.”

“வறுமை ஒழிப்பதையும், உதவி தேடி நிற்கும் மனிதரின் நிலையை புரிந்து கொள்வதையும் குழப்பிக் கொள்ளாதே. முதல் பிரச்சனையை எடுத்துக் கொள்ள விரும்பினால் நீ மொத்தமாக உலக பொருளாதாரத்தை சரிப்படுத்த வேண்டியிருக்கும். உன்னால் முடிந்தால் போய் அதைச் செய். ஆனால் இரண்டாவது பிரச்சனைக்கு உடனடியான தீர்வு தேவை. அதற்காக உன் மகிழ்ச்சியை துறக்க வேண்டாம், உனக்கு இருப்பதை பகிர்ந்தால் மட்டும் போதும். உன்னுடைய மகிழ்ச்சி மற்றவருடைய மகிழ்ச்சியுடன் சேர்ந்தே இருக்க வேண்டும்.”

ஆசாரம் சிறையிடும்; அறிவு விடுவிக்கும்

ஒரு முறை நாரயண குரு உடல் நலமற்று படுக்கையில் கிடந்தார். அவருக்கு அரிசி கஞ்சி கொடுக்கப்பட்டது. அதைக் கொணர்ந்தவனிடம் கஞ்சியில் உப்பு ஏற்கனவே போடப்பட்டுள்ளதா என வினவினார். இந்தியாவில் குருவுக்கு சமைக்கப்படும் உணவை யாரும் ருசி பார்ப்பதில்லை என்ற ஆசாரம் உண்டு ஏனென்றால் அப்படி ருசி பார்க்கப்பட்ட உணவு அவருக்கு விளம்ப தகுதியற்ற எச்சில் உணவாகிவிட்டது என்ற நம்பிக்கையினால். அந்த கஞ்சியை தயாரித்த சமையற்காரன் அங்கே இல்லாததால் அதைக் கொண்டு வந்த மனிதனால் ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்ல முடியவில்லை. அவன் குழப்பத்தைக் கண்டு குரு கூறினார், “அதில் கொஞ்சம் நாய்க்கு கொடு. அவைகளுக்கு இது போன்ற மனசாட்சியின் பொய்யான ஐயங்கள் இல்லை”.

உண்மையின் பிம்பங்கள்

நான் சுவாமி அகாநந்தா உடன் தங்கியிருந்த பொழுது, அங்கிருந்த பிரார்த்தனை கூடத்தில் சலவைக்கல்லால் செய்யப்பட்ட பகவான் கிருஷ்ணரின் சிலை ஒன்று பீடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அந்த கற்சிலைக்கு பக்தர்கள் மலர்களை அர்ப்பணித்த வண்ணம் இருந்தனர்.

ஒரு சமயம் நான் சுவாமியின் அருகில் சென்று கேட்டேன், “உங்களை போன்ற மிக உயர்ந்த நிலையை அடைந்த உயிருள்ள உதாரணம் என் முன் இருக்கையில் எதற்காக நான் மாற்றமற்றதும் கல்லால் செய்யப்பட்டதும் ஆன ஒரு கலைப்பொருளை வழிபட வேண்டும்? நான் அந்த பிம்பத்தின் முன் உட்காருவதைக் காட்டிலும் உங்கள் காலடியில் அமர்ந்திருக்கவே பிரியப்படுவேன்.”

அவர் கூறினார், “ஆமாம், அது சரிதான். ஆனால் ஒரு நாள் என்னை தேடிக் கொண்டு என் அறைக்கு வருவாய், நான் அங்கு இருக்க மாட்டேன். நீ என்னை தேடி கொண்டே வந்து இறுதியில் நான் மலம் கழித்துக் கொண்டிருப்பதை காண்பாய். நான் மலம் கழிக்கும் அந்த பிம்பம் புனிதத்தன்மை, இறைத்தன்மை, அப்பழுக்கற்ற தன்மை என்று நீ என் மீது முன்னர் ஏற்றி வைத்திருந்த பிம்பங்களுடன் முரண்படும். அதற்கு பதிலாக இந்த அழகிய சிலையை வழிபடுவதே மேல் என நினைக்கிறேன். ஏனென்றால் அதுவும் மிக உயர்ந்த ஒன்றையே காட்டுகிறது. எப்பொழுதெல்லாம் அதை அணுகுகிறாயோ அது உன்னை இன்முகத்துடன் வரவேற்கும். அது என்றைக்குமே வயதாகியோ, அசிங்கமாகவோ அல்லது மலம் கழிக்கவோ ஓடிவிடாது.”

நான் நினைத்துக் கொண்டேன், “ஆமாம், அது சரிதான்.”

நீ தவறுகையில்

ஒரு முறை தில்லியில் இருந்து அம்ரித்சருக்கு நடராஜ குருவுடன் பயணித்துக் கொண்டிருந்தேன். எங்களுடன் பயணித்த சகபயணிகளில் இருவர் பஞ்சாப் பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள். நாங்கள் அணிந்திருந்த காவி உடையையும் தாடியையும் பார்த்து நாங்கள் மத நம்பிக்கை கொண்டவர்கள் என நினைத்து எங்களுடன் மனித வாழ்கையை பாதிக்கும் அடிப்படை அம்சங்களை பற்றி விவாதிக்க விரும்பினார்கள்.

அவர்களில் வயது முதிர்ந்தவர் குருவிடம், “ஐயா, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?” என வினவினார்.

நடராஜ குரு சொன்னார்,” நீங்கள் ‘கடவுள்’ என எதைப் புரிந்து வைத்திருக்கிறீர்கள் என சொல்லாத வரை என்னால் அக்கேள்விக்கு பதிலளிக்க இயலாது. கடவுளின் இருப்பும் இல்லாமையும் அதை எப்படி வகுக்கிறோமோ அதை பொறுத்து அமைவது.”

வயது முதிர்ந்தவர் தன் கருத்தை விடாமல்,” அப்படியென்றால் குருஜி கடவுளை எப்படி வகுக்கிறீர்கள்?” என்றார்.

நடராஜ குரு அவரை பார்த்து லேசாக சிரித்து விட்டு கூறினார், “நீ தவறும் பொழுது எது சரியானதோ அதுவே இறைவன்.”

அபத்தத்தின் பெருவெற்றி

வட இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பட்டியாலா என்று ஒரு ஊர் உள்ளது. ஒருமுறை அவ்வூரை நாடோடி பிச்சைக்காரனாய் கடந்து சென்று கொண்டிருந்தேன். எவரோ ஓடி வந்து சாகக் கிடக்கும் மனிதனை காணுமாறு அழைத்தனர். இறக்கும் தறுவாயில் உள்ளவர்களை ஆசீர்வதிக்க ஒரு ‘சாதுவை’ அழைப்பது இந்தியாவில் சாதாரணமாக நடப்பது. என் ஆன்மீக சக்தி மீது நானே உறுதியற்று இருந்த போதிலும், மிகுந்த அவசரத்துடன் மாளிகை போலிருந்த ஒரு கட்டிடத்தின் படிகளை ஏறிக் கடந்தேன். இறுதியில் ராஜ தோரணையும், பகட்டலங்காரமும் கொண்ட பெரும் செல்வந்தருக்கு சொந்தமான அந்த வீட்டின் ஒரு அறைக்குள் நுழைந்தேன்.

வீட்டின் முதலாளி சொகுசான மெத்தையிடப்பட்ட படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தார். அவரைச் சுற்றி உயர் பதவியில் இருப்பவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுள் என்னால் சுலபமாக ஒரு புரோகிதரையும், மருத்துவரையும், தாதியையும் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது. நான் வந்திருப்பது அவருக்கு தெரிவிக்கப்பட்டவுடன் கண்களை திறந்து என்னை உச்சகட்ட கலக்கத்துடன் திரும்பிப் பார்த்தார். ஒரு கொடுங்கனவினுள் அவர் இருப்பது போல பெருங்குரலுடன் ஓலமிட்டார். இரு கைகளையும் கூப்பி அவருடைய பாவங்களை மன்னித்து, அமைதியான மரணத்தை அருளுமாறு என்னிடம் மன்றாடினார்.

அடுத்தவரை மன்னிக்க எனக்குள்ள உரிமையை பற்றி வாதிக்க அது சரியான நேரம் அல்ல என்பதால், கொஞ்சமும் யோசிக்காமல் நான் கூறினேன், “உன்னுடைய எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டு விட்டன. பயப்படாதே. நீ இப்போது இறக்கப் போவதில்லை, என்றுமே நீ இறப்பதும் இல்லை”. என்னுடைய சிற்றுரையை முடித்தவுடன், என் பேச்சின் அபத்தம் மனதில் அறைந்தது. இந்தியாவில் சன்னியாசிகள் மனம் போன போக்கில் நடந்து கொள்ள கிடைக்கும் உரிமையை பயன்படுத்திக் கொண்டு நான் அந்த மாளிகையை விட்டு அவசரமாக வெளியே வந்து முடிந்தவரை வேகமாக நடந்து போய்விட்டேன்.

இரண்டு வருடங்கள் கழித்து புனிதத் தலமான ஹரித்வாரின் கங்கைக் கரையில் நின்று கொண்டிருக்கையில் ஒரு வயதான மனிதன் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். என் காலடியில் சாஷ்டாங்கமாக விழுந்து, வழிபடுவது போல அவர் நெற்றியை கால்களில் பதித்தார். மரியாதைக்குரிய மனிதர் ஒருவர் என் கால்களில் விழுவதைக் கண்டு மிகவும் சங்கடமாய் உணர்ந்தேன். அதனால் அவரை தூக்கி யாரென்று விசாரித்தேன்.

அவர் சொன்னார், “நான் உங்களுடைய சீடன். உங்களின் பாதச் சுவடுகளை பின்பற்றுபவன். நான் முன்பு செல்வத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தேன். அதை மிக அதிகமாக சேர்த்து வைத்தேன். மேலும் பணத்தால் கிடைக்கக் கூடிய அனைத்தையும் வைத்திருந்தேன். மரணம் அருகில் வந்த போது, என் பாவங்களை வெறித்து பார்த்துக் கொண்டு உதவியற்று கிடந்தேன். எங்கிருந்தோ நீங்கள் என் அறையினுள் பிரவேசித்தீர்கள். உலகத்தின் பார்வையில் நீங்கள் பிச்சைக்காரன், தெருவில் அலையும் நாடோடி. என் பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்என அதிகாரத்துடன் கூறினீர்கள். அந்த கணத்தில் என்னை மூடியிருந்த இருண்ட திரை விலகியது. பெரும் நம்பிக்கையுடன் நான் சாக மாட்டேன், என்றுமே சாக மாட்டேன் என கூறினீர்கள்.”

“உங்கள் வாக்கு பலித்தது. நான் இறக்கவில்லை. நான் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் என் செல்வத்தையும், சமூக அந்தஸ்துகளையும் விட்டுவிட்டு உங்கள் காலடிகளை தேடிக் கொண்டிருக்கிறேன். உங்களை போல பலர் உள்ள இந்த புனிதத் தலத்திற்கு வந்தேன். இன்று நானும் ஒரு நாடோடி. இந்த கங்கைக் கரையில் உங்களை போன்ற ஞானிகளின் காலடிகளில் உட்கார்ந்து நீங்கள் அன்று உரைத்ததின் உண்மையை புரிந்து கொண்டேன். எனக்கு நிச்சயமாக தெரியும் நான் என்றைக்குமே இறப்பதில்லை. யாருமே இறப்பதில்லை”

தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள்