லியான் யூரிஸ் எழுதிய “ஹஜ்”

யூரிசைப் பொறுத்த வரை பாலஸ்தீன பிரச்சினையில் யூதர்கள் குற்றமற்றவர்கள். குற்றம் புரியாதவர்கள் என்பது மட்டுமல்ல, பாலஸ்தீன முஸ்லிம்களை அரவணைத்துச் செல்லவே முயன்றார்கள். பாலஸ்தீன முஸ்லிம்கள் கை ஒரு முறை ஓங்கினாலும் போதும் அவர்கள் யூதர்களை அழித்திருப்பார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பாலஸ்தீனியர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் முயன்றார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்குத் தெரியாது. முழு உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன், ஆனால் இது பொதுவாக மனிதர்கள் இப்படி இருக்க மாட்டார்கள் என்ற impression மட்டுமே. யூரிசின் பிற புத்தகங்களை – Exodus, Mila 18 – வைத்துப் பார்க்கும்போது இந்த எண்ணம் மேலும் வலுவடைகிறது.

கதையைப் பொறுத்த வரை இது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். அந்த “உண்மையின்” context-இல் யூரிஸ் ஒரு சுவாரசியமான கதையை எழுதி இருக்கிறார். ஒரு பாலஸ்தீனிய கிராமம் – அங்கே வழிவழியாக வந்த நம்பிக்கைகளோடு வாழும் கிராமத் தலைவர் ஹஜ் இப்ராகிம். மாறி வரும் உலகம். பக்கத்தில் இருந்த சதுப்பு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் யூதர்கள். “அரேபியர்களுக்குள்ளே” – எகிப்தியர்கள், சவுதி அரேபியர்கள், பாலஸ்தீனிய அதிகார வர்க்கம், யூதர்களுக்கு எதிராக வெறுப்பை வளர்க்கும் கிராண்ட் முஃப்டி, ட்ரான்ஸ்ஜோர்டான் என்ற புதிய நாடு, அதன் மன்னர் அப்துல்லா – அவர்களுக்குள்ளே ஆயிரம் சண்டைகள், அதிகாரப் போட்டிகள். யூதர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் ஒரே நிலத்தைத் தருவதாக வாக்குக் கொடுத்துவிட்டு இரண்டு பேருக்கும் சண்டை வந்ததும் கை கழுவிவிட்டு ஓட நினைக்கும் ஆங்கிலேயர்கள். பாலஸ்தீனத்திலிருந்து முஸ்லிம்களை துரத்த விரும்பும் அதிகார வர்க்கம். அகதிகளை அகதிகளாகவே வைத்திருப்பதில் பல லாபங்கள் உள்ள ட்ரான்ஸ்ஜோர்டான். தமக்கு இருக்கும் ஒரே நிலமான இஸ்ரேலை மூர்க்கமாக பிடிக்கும் யூதர்கள். இந்த பின்புலத்தை பிரமாதமாக எழுதி இருக்கிறார்.

ஹஜ் இப்ராஹிமின் சித்தரிப்பு ஓரளவு ஸ்டீரியோடைப் சித்தரிப்புதான். பொதுவாக முஸ்லிம்களின் சித்தரிப்பே கொஞ்சம் ஸ்டீரியோடைப்தான். இருந்தாலும் நம்பகத்தன்மை அதிகம் உள்ள பாத்திரங்கள். பெண்களின் நிலை, கல்வியைப் பற்றிய எண்ணங்கள், தன் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெட்டி என்று தெரிந்தும் செய்யும் காரியங்கள் எல்லாம் நன்றாக வந்திருக்கின்றன. அகதிகளின் அரசியல் உண்மையாகத் தெரிகிறது.

முஸ்லிம்களுக்கு வெறுப்பு என்பது காலம் காலமாக போதிக்கப்படுகிறது என்று subtle ஆகச் சொல்கிறார். அதுவும் அரேபியர்களுக்கு அப்படித்தான் என்கிறார். யூதரான கிடியனிடம் இருக்கும் நட்பை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கும் வளர்ப்பு இப்ராகிமுக்கு எவ்வளவு பிரச்சினைகளைத் தருகிறது என்று காட்டுகிறார். என்னதான் இஸ்லாமின் “பிறரை” வெறுக்கும் போக்கு, காலம் காலமாக வரும் வெறுப்பு, நம்பிக்கை என்றெல்லாம் எழுதினாலும் பாலஸ்தீனிய முஸ்லிம்கள் யூதர்களோடு பொதுவாக சமாதானமாகப் போவதாக அவரே எழுதுகிறார். அடுத்த தலைமுறைக்காரர்களின் விழுமியங்கள் சுலபமாக மாறுகின்றன. இதை இஸ்லாமின் “பிறரை” வெறுக்கும் போக்கு என்பதை விட மாறி வரும் உலகத்துக்கு முழுமையாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியாத ஒரு பெரியவரின் கதை என்றுதான் சொல்ல வேண்டும்.

1984-இல் வெளியான புத்தகம்.

சுவாரசியம், பின்புலம் ஆகியவற்றுக்காகப் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தொடர்புடைய சுட்டிகள்: யூரிஸ் பற்றிய விக்கி குறிப்பு