Skip to content

ஒரு சிறுகதை

by மேல் செப்ரெம்பர் 7, 2012

கௌரி கிருபானந்தன் அனுப்பிய சிறுகதை. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்ததாம். வட்டார மொழியை கௌரி ரசித்திருக்கிறார். என் கண்ணில் சுமார்தான், ஆனால் கோர்வையாக செல்கிறது.

அம்மா என்று ஒரு புருசன்

பிரசன்னா

செல்வராசு சரஸ்வதியின் வீட்டு வாசலில் வந்து நின்றான். ஒரு நிமிஷம் தயங்கிவிட்டு, கதவைத் தட்டினான்.
“யாரது?” கேட்டபடி வந்து கதவைத் திறந்த சரஸ்வதி ஒரு வினாடி திகைத்துப் போனாள்.
“நீங்களா?”
“எங்கப்பனைக் கூப்பிடு.”
“அவரு… வந்து…”
“உங்கிட்ட நான் கதை கேக்க வரலை. உள்ள போய் அனுப்பு.”
அவள் உள்ளே போன கொஞ்ச நேரத்தில் காத்தமுத்து மருண்டபடி கூசிப்போய் வந்து நின்றார்.
அவன் கேட்டான். “சௌக்கியமா இருக்கியாப்பா?”
“ஏன்டா அப்படி கேக்கறே?” என்றார் மெதுவாக.
செல்வராசு அவரைப் பிடித்து இழுத்துக்கொண்டு தோப்புப் பக்கம் நடந்தான்.
“வா, சொல்றேன். நீ வீட்டு பக்கம் வந்து ஒரு வாரமாவுது, அதான் சௌக்கியமான்னுக் கேட்டேன். மோதலெல்லாம் பொஞ்சாதி புள்ளைக் குட்டிங்க நெனைப்பிருந்து ராத்திரியாவது ஆத்துப் பக்கம் வந்துடுவே. இப்ப, புது தினுசா அதுகூட வர்றதில்லை. நீ செய்யறது உனக்கே நல்லாருக்கா?”
காத்தமுத்து தலை குனிந்தபடி இருந்தார்.
“ஊர் முழுக்க ரொம்ப அசிங்கமா பேசிக்கிறாங்க, உன்னைப் பத்தியும், நீ வச்கிக்கிட்டிறிக்கியே சரஸ்வதி, அவளைப் பத்தியும்தான். அவனவன் குரல்வளையைப் புடிச்சு கடிச்சு துப்பலாம்னு தோணுது. ஆனா அவனுங்க சொல்றதெல்லாம் உண்மையா இருக்கே?”
“வந்து.. அப்படியெல்லாம் எதுவுமில்லை செல்வராசு.”
“என்ன இல்லை. நான் என்ன காதுல பூ வெச்சவனா? கல்யாணமாகி தாலியறுத்த ஒரு பொண்ணுகூட, ராத்திரியும், பகலுமா ஒரு வாரமா வீட்டுப் பக்கம் கூட வராம தங்கினா என்ன அர்த்தம்? எனக்கு வயசு இருபத்தஞ்சு. உனக்கு நாப்பதைஞ்சுக்கு மேல். இந்த வயசுல நா தப்பு பண்ணி, குடிச்சு கலாட்டா பண்ணி, கண்டவளோட சுத்தி… நீ… நீ என்னைக் கண்டிக்கணும். இங்க என்னடான்னா, நான் உன்னை கண்டிக்க வேண்டியாயிருக்கு. எல்லாம் என் தலைவிதி.”
“எல்லாம் என் தலைவிதியும்தான். இல்லாட்டி போனா, இப்படிக் குத்துயிரும் குலையுயிருமா வார்த்தையால அடிச்சு துவைச்சுப் போடற ஒரு பொஞ்சாதி எனக்கு கிடைப்பாளா?”
“வாய்ச்சுப் போச்சு. வாழ்ந்துதான் ஆகணும். நான் உனக்கு வக்காலத்து வாங்கி அங்க அம்மா கிட்ட பேசிட்டு வாரேன். என்ன இருந்தாலும் பெண்டாட்டின்னு எங்கம்மா இருக்கிற வரை, நீ இப்படியெல்லாம் தறிகெட்டு நடக்கிறது நல்லால்லை. ஆமா, சொல்லிட்டேன்.”
“செல்வராசு, என்னோட வேதனை உனக்குப் புரியலை. வீட்டுக்கு வந்தா எனக்கு நிம்மதி இல்ல. நான் போற வழி தப்புதான். ஆனாலும், அதுல கொஞ்சம் நிம்மதியும், சந்தோஷமும் இருக்கறதால், மனசு துணிஞ்சுட்டது. இதுவரைக்கும் உங்கம்மா எனக்கு பெண்டாட்டியா இருந்ததில்லை. இந்த முப்பது வருஷமா எனக்கு அவ புருஷனாத்தான் இருந்திருக்கிறா. அதெல்லாம் உனக்குத் தெரியல.” காத்தமுத்து பெருமூச்சு விட்டார்.
“அதெல்லாம் நீ என்னதான் சொன்னாலும், இப்ப நீ நடந்துக்கற வழிமுறை சரியில்லை. இதெயெல்லாம் விட்டுடு. ராத்திரி மரியாதையா, ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேரு. ராத்திரி நீ வரலை, அறுவாளோட நான் சரஸ்வதி வீட்டுக்கு வர வேண்டியிருக்கும். என்னை வீணா ஒரு கொலையை செய்ய வைக்காதே. ஆமா, சொல்லிட்டேன்.”
காத்த முத்து விக்கித்துப் போய் நிற்க செல்வராசு விடுவிடுவென்று வெளியேறி நடந்தான்.
செல்வராசுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவனுடைய அம்மா தாயம்மா மென்மையாகப் பேசியோ, கணவருடன் சந்தோஷமாகச் சிரித்தோ யாரும் பார்த்ததேயில்லை. வீட்டில் எப்போதும் காத்தமுத்துவுடன் சண்டைதான். சாட்டையடி வார்த்தைகள்தான்.
அப்பாவை விட அம்மா வசதி படைத்தவள், ஆனாலும் தூரத்து சொந்தம் விட்டுப் போகக் கூடாதென்று தாத்தா… அம்மாவின் அப்பா வரதட்சணை என்ற பெயரில் பணத்தாசை காட்டி அப்பாவுக்கு கட்டி வைத்தார். அவளுடைய விருப்பமில்லாமலேயே நடந்து விட்ட இந்த கல்யாணத்தில் அம்மாவுக்கு ஏகப்பட்ட வெறுப்பு.
பணப்பிரச்சனை என்று வரும்போது, அம்மாவின் கையை எதிர்பார்க்க வேண்டிய நிர்பந்தம் அப்பாவுக்கு ஏற்பட்டது. அம்மாவுக்கு மகா ஆனந்தத்தையும், அப்பாவுக்குத் தீராத வேதனையையும் ஏற்படுத்திய நாட்கள் அவை. பணம் தரும் முன், இருபத்து நாலு மணிநேரமாவது வசதியில்லாத இடத்தில் வாழ்க்கைப்பட்டு சீரழிந்து போனதைப்பற்றி ஒப்பாரி வைப்பாள். அதே நினைப்பாய், அப்பாவைச் சிந்திக்க விடாமல் சுழற்றி சுழற்றி அடித்தாள். அடிபட்டு, ரணம் பட்டு, ஊமையாய் குடும்பம் என்கிற பந்தத்துக்குள் அப்பா தவித்துத் தவித்து முப்பது வருஷம் ஓட்டினார்.
அம்மாவிடம் பணம் கேட்கக் கூடாது என்ற தீர்மானத்தில் நாலு கல் தொலைவிலிருந்த பஞ்சு ஆலைக்கு வேலைக்குப் போனார். ஆறு மாதங்களுக்கு முன், பஞ்சாலையில் போனஸ் பிரச்சனை வந்து தகராறு ஏற்பட்டது. கத்திக்குத்து விழுந்து இரண்டு பேர் இறந்தார்கள். பஞ்சாலையை இழுத்து மூடி விட்டார்கள்.
குடும்பம் வறுமையில் விழுந்தது. அம்மாவின் குரல் மட்டும் விழவேயில்லை. அது என்னவோ, ‘வாழ்க்கையில், இனி எனக்கு என் குரல் மட்டும்தான் துணை’ என்பது போல் அம்மா [பேசினாள். பேசினாள், பெசிக்கொண்டேயிருந்தாள்.
இடையே அப்பா தடம் மாறினார். பஞ்சாலையில் கத்திக்குத்து விழுந்து இறந்த ஆறுமுகத்தின் வீட்டுக்கு ஆறுதல் சொல்வதற்காக போன இடத்தில்தான் அப்பா சரஸ்வதியைப் பார்த்தார். செல்வராசும் அப்போது உடன் சென்றிருந்தான்.
சரஸ்வதி, ஆறுமுகத்தின் மனைவி. கல்யாணமாகி ஆறுமாதம் கூட ஆகியிருக்காது. இப்போது வேள்ளைப்புடவையைக் கட்டிக்கொண்டு விதவையாய் அவள் நின்றதை பார்க்க செல்வராசுக்கே கஷ்டமாய் இருந்தது.
அப்பாவுக்கு அதைவிட கஷ்டமாய் இருந்தது என்பது போகப் போக தெரிந்தது. அடிக்கடி ஆறுமுகத்தின் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தார்.
ஊரார் வாய்க்குப் பூட்டா போடா முடியும்? நாலுபேர் சந்தித்தால் பிரதானமாய் இந்த பேச்சு வந்தது. செல்வராசு ஊரில் நடக்க கூசினான், ஊரார் பேசியது மனதை புண்ணாக்கியது. மத்தியானச் சாப்பாட்டுக்குப் போனபோது, தாயம்மா அந்த புண்ணைக் கிளறி, விசிறி விட்டாள்.
“ஆடி மாசத்துல விதைச்ச விதையும், அய்யாஞ்சுல பொறந்த புள்ளையும் ஆபத்துக்கு உதவும்பாங்க. நீயும் இருக்கியே, அப்பனை போல் புள்ளையும் தறுதலை.” தாயம்மா மெதுவாக ஆரம்பித்தாள்.
“கொஞ்சம் நிம்மதியா சோறு தின்ன விடும்மா.” செல்வராசு அலுத்துக்கொண்டான்.
மீன் கழுவிய தண்ணீரைத் தோட்டத்துக்குள் வீசிவிட்டு, புகையிலை சாறைத் துப்பிவிட்டு வந்தாள் தாயம்மா.
“வீட்டுல ஒரு வயசுப் பெண்ணை வச்சுகிட்டு, நான் அல்லாடறேன். இந்த மனுஷன் நடந்துக்கற நடையை தட்டிக்கேக்க ஊர்ல நாதியில்ல. கோடை மழை பெய்யாதா, குறும்பு ஆடு சாகாதா, துட்டுக்கு எட்டாடு தூக்கிக் கொடுக்க மாட்டானாங்கற மாதிரி அவளவள் அடுத்த வீட்டு ஆம்படயானுங்களுக்குக் காத்துக் கிடக்காளுக. ஒரு வாரமா அந்தாளு வூட்டுப் பக்கம் வரலை. இதையெல்லாம் பார்த்துக்கிட்டு நான் ஏன் உசுரோட இருக்கணும்?”
“முப்பது வருஷமா பேசிப் பேசி எங்கப்பனை நீ நிம்மதி இல்லாம பண்ணிட்டே. உன்னைக் கண்டா பின்னே ஏன் ஒடமாட்டாரு? உங்ககிட்டதான் சந்தோஷமாயில்லை. வேற யார்கிட்டயாவது இருந்துட்டுப் போகட்டுமே?”
“டேய் … டேய் .. சர்தான் போடா. குடப்பால் கறந்தாலும் அது கூரையைப் பிடுங்கிற மாடாகாதுடா. ஆயிரம் பேசினாலும் நான் வாக்கப்பட்டவ. முப்பது வருஷமா குப்பை கொட்டியிருக்கேன், இருக்கிறவகிட்ட சந்தோஷமா இல்லாத மனுஷன் இன்னொருத்திகிட்ட இருந்திட முடியுமா? வீடு, வாசல், குடும்பம் குட்டின்னு, எல்லாம் அமைஞ்ச பிறகும், ஒரு பொம்பளையை ஆண்டு அனுபவிச்ச பிறகும், இன்னொருத்தியைத் தேட ஒரு மனுஷனுக்கு எவ்வளவு ஈனத்தனம் வேண்டும்? இருக்கிற குடும்பத்துக்கு சம்பாதிச்சுப் போட்டு பிள்ளை குட்டியை கரையேத்தி நிலையா வேச்சுக்கத் தெரியலை. நான் கேக்கறேன், அறுக்கத் தெரியாதவனுக்கு எதுக்குடா இடுப்புல ஆயிரம் அருவாள்?”
“புருஷன்னு பார்க்காதம்மா நீ. தாலி கட்டியவனாச்சே, இத்தனை வருஷம் சேர்ந்திருந்து குடும்பம் நடத்தியவனாச்சேன்னு நெனைக்காதே. வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாப் பேசிடு. வார்த்தையாலேயே மனசை நார் நாராக் கிழிச்சுப் போட்டுடு. அப்பத்தான் உனக்கு சந்தோஷம். யாரும் உன்கூடப் பேசி ஜெயிக்கக் கூடாதுங்கறது உன் கட்சி. சவுக்கால அடிக்கற மாதிரி வார்த்தையால விளாசறே. பணிஞ்சு போறதும், விட்டுக் கொடுத்து குடும்பம் நடத்தறதும் உனக்கு மறந்தே போச்சா? இப்பக்கூட ஒன்னும் கெட்டு போவலை. சண்டை போட மாட்டேன். அந்தாளை அனாவசியத்துக்கு திட்ட மாட்டேன்னு நீ சொல்லு. நான் நேரா போய் அந்தாளை இழுத்துக்கிட்டு வரேன். உன்னால் அது முடியுமா? எங்கப்பனை நச்சரிக்காம நிம்மதியா இருக்க விட முடியுமா?”
“என்னால் ஆகறதும், ஆகாததும் இருக்கட்டும். நீ கூப்பிட்டா அந்த மனுஷன் வந்துருவாருன்னு நினைக்கிறயே, அது உன்னால முடியுதா பாரு. என்னவோ எங்கிட்ட கோவமா எகிர்றியே? ஈர வெங்காயத்துக்கு இருபத்தெட்டு புரைங்கறது சரியாகத்தானிருக்கும் போலிருக்கு.”
*******
தெருமுனையிலேயே தங்கச்சியை பார்த்துவிட்டான் செல்வராசு.
“ஏ செவ்வந்தி, எங்க புள்ள போற?”
“அண்னோவ் , அப்பா வந்திருக்கு. அதான் கொழம்பு வைக்க காய்கறி வாங்க போறேன்.”
“ராத்திரி ஊர்ல அலையாத. சுருக்க வந்துடு.” வீட்டுக்கு நடந்த போது செல்வராசுக்குச் சந்தோஷமாய் இருந்தது. அவனுடைய பேச்சுக்கு மதிப்பு வைத்துத்தான் அப்பா வந்திருக்கிறார்.
வாசல் படியில் செருப்பைக் கழற்றும் போது டமாலென்று மண்சட்டி உடையும் சத்தம் கேட்டது. கூடவே தாயம்மாவின் குரல்.
“உங்காலை முறிச்சு அடுப்புல போட. யாரைக் கேட்டுய்யா நீ வீட்டுகுள்ளாற வந்த? உனக்காக எவளாவது இங்க ஏங்கிக் காத்துக்கிட்டு கெடக்காளான்னு கண்ணோட்டம் போட வந்தியா?”
“உஸ்.. கத்தாதே. ராத்த்ரி நேரத்திலே ஆர்பாட்டம் பண்ணாதே புள்ள. இப்பச் சோத்தைப் போடு. காலைல சண்டையை போடு.” காத்தமுத்துவின் குரல் பயந்து பயந்து ஒலிக்கிறது.
“ஏன்? இங்கென்ன புதுசா சோறு? ஆறுதல் சொல்லப் போறேன்னு ஆறுமுகம் வீட்டுக்குப் போய் அந்தப் பெண்ணோட அடிமடியில் கையை வச்சியே. அங்கெல்லாம் சோறு கிடையாதுன்னு சொல்லிட்டாங்களா?”
செல்வராசு திக்கென்று நிமிர்ந்தான். அவனுக்குக் கோபம் கோபமாய் வந்தது. எப்படியெல்லாம் கெஞ்சி, பயமுறுத்தி அப்பாவைக் கூட்டிக்கொண்டு வந்தால், அம்மா இந்த கலாட்டா செய்கிறாள்?
‘பழையதை எல்லாம் எதுக்கு கிளர்ற புள்ள?”
“உன்னால் நான் என்ன சுகத்தைய்யா அனுபவிச்சேன்? சொந்தம் சொந்தம்னு வசதியில்லாத இடத்தில என்னைக் கட்டிக் கொடுத்த எங்கப்பனைதான் செருப்பால விளாசணும். உன்னால என் வாழ்க்கையே பாழாப் போச்சு. கடனேன்னுதான் ரெண்டு புள்ளங்களையும் பெத்துப் போட்டேன். உனக்கு பதிலா வேறெவனுக்காவது முந்தானை விரித்திருந்தாலாவது நான் வசதியா, சந்தோஷமா, நிம்மதியா இருந்திருப்பேன். இதப் பாருய்யா, இப்ப சொல்றேன். மண்ணு உழுது கேட்டவனும் இல்லை. மணல உழுது வாழ்ந்தவனும் இல்லை. எனக்கு நீ துரோகம் பண்ண நினைச்சா ….”
“அம்மா!” அதற்கு மேல் கேட்கப் பொறுக்காமல், புயலாய் நுழைந்தான் செல்வராசு.
அவன் போட்ட கத்தலில் தாயம்மா வாயடைத்து நின்றாள். காத்தமுத்து விக்கித்துப் போய் நிற்க, எதுவும் பேசாமல் செல்வராசு அவரைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வாசலுக்கு வந்து, திண்ணையில உட்கார வைத்துவிட்டு கதவை இறுக்கித் தாளிட்டான்.
“ச்செ செச்செ! நிம்மதி இல்லாம போச்சு இந்த வீட்டுல. அம்மாவா.. ராட்சசியா.. குரலா அது? முப்பது வருஷமா எப்படிப்பா இத தாங்கின, எப்படி தாக்கு பிடிச்சே?”
காத்தமுத்து மௌனமாய் வீதியைப் பார்த்துக் கொண்டு சுரத்திழந்து போய் உட்கார்ந்திருந்தார்.
திண்ணையில் உட்கார்ந்துகொண்டு அப்பாவைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடுக்கிட்டான். கண்ணீர்க் கோடுகள் சரசரவென்று அவரது கண்களிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன.
சட்டென்று அவரை நெருங்கிப் போய் உலுக்கினான். “என்னப்பா இது குழதையாட்டம்?”
காத்தமுத்து கண்களை துடைத்தபடி வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.
“ஏம்ப்பா, நான் ஒண்ணு கேக்கறேன். அந்த சரஸ்வதி எப்படி?”
காத்தமுத்து திடுக்கிட்டார்.
“அதாவது, அவளாவது உன்னைச் சந்தோஷப்படுத்தராளா? அங்க இருந்தா கொஞ்சமாவது உனக்கு நிம்மதியா இருக்கா?” செல்வராசு ஆர்வமாய்க் கேட்டான்.
காத்தமுத்து எதுவும் பேசாமல் வீதியை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.
“நான் என்ன சொல்றேன்னா, நீ போ. தாராளமாய் போ. உனக்கு விருப்பமா இருந்தா, அந்த சரஸ்வதி உன்னை நிஜமாகவே சந்தோஷபடுத்தினா போ. ஆனா, ஊர் வாய்க்கு ஏன் அவலை போடறேன்னு கேக்கறேன். ஒரு தாலி கட்டிடேன். உன் பையன் நான் நின்னு கல்யாணத்தை நடத்தறேன். நெஜமாகவே உனக்கு அதுதான் சந்தோஷம்னா, இத்தனை வருஷமா எங்கம்மா கிட்ட நீ பட்ட சித்திரவதைக் கெல்லாம் பிராயச்சித்தமா நான் இதை செய்யறேன். ஏன்னா ‘உங்கப்பன் வச்சிக்கிட்டிருக்கவ இவதான்’னு அடுத்தவன் சொல்றதை விட ‘உன்னோட சித்தி போறாடா’ன்னு நாலு பேரு சொன்னா கௌரவமா இருக்கும் பாரு.”
காத்தமுத்து ரொம்ப நேரம் சிலையாய்ச் சமைந்து உட்கார்ந்திருந்தார். அப்புறம் மெல்ல எழுந்து எதுவும் பேசாமல் சரஸ்வதியின் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
கதவு மறைவிலிருந்து தாயம்மா ஓடிவந்தாள். “அடப்பாவி! அந்த மனுஷனைப் போன்னு சொல்லிட்டியே! அய்யோ , அந்தாளு போறாரே. நீ நல்லாருப்பியா? நீ எம்புள்ளை தானா?”
அலற தொடங்கிய தாய்ம்மாவை செல்வராசு வீட்டுக்குள் தள்ளினான்.
“மத்தியானம் நான்தான் எங்கப்பன் கிட்ட போனேன். அவருக்காக நீ ஏங்கறயோன்னு அப்ப தோணிச்சு. இப்பத்தான் தெரிஞ்சுது, அந்த வாயில்லா பூச்சியை நீ அடக்கி உன் கைக்குள்ள வச்சிக்க ஆசைப் படறேங்கிறது. ரெண்டு புள்ளைங்களைப் பெத்து போட்டும், முப்பது வருஷம் ஒருத்தன் கூட வாழ்ந்து அனுபவிச்ச பிறகும், இன்னொருத்தன் கிட்ட முந்தானையை விரிச்சிருந்தா வசதியா வாழ்ந்திருப்பேன்னு சொல்றியே. எனக்கே கூசிப் போச்சு. எங்கப்பனுக்கு எப்படியிருக்கும்? மனசால சோரம் போன உன்னைவிட உடம்பால ஆயிரம் தடவை சோரம் போனாலும் எங்கப்பன் ஒருபடி மேல்தான். தாலி கட்டின பாவத்துக்காக முப்பது வருஷம் எங்கப்பன் உங்கூட இருந்தாரு. பெத்த பாவத்துக்காக உனக்குக் கொள்ளி போடற வரைக்கும் நான் மட்டும்தான் உங்கூட இருப்பேன். பேசாம படுத்துத் தூங்கு.”
செல்வராசு வெளியே வந்து, வாசல் கதவை இறுக்கித் தாளிட்டான்.


தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள், கௌரி பதிவுகள்

Advertisements

From → Gowri posts, Writings

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: