ஈ.வெ.ரா முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது

நான் பெரிதும் மதிக்கும் ஆளுமைகளில் ஜெயகாந்தனும் ஒருவர். அவருடைய கருத்து நேர்மை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அண்ணாதுரைக்கு இரங்கல் கூட்டத்தில் அவர் பேச்சு ஒரு உன்னதம். வாழ்நாள் முழுதும் எவருடைய கருத்துகளை எதிர்த்து வந்தேனோ அவற்றை இது இரங்கல் கூட்டம் என்பதற்காக ஆதரிக்கிறேன் என்று பேச முடியாது என்று உண்மையையும் பேசி அதை நாகரீகமாகவும் பேசியது அற்புதம். வேறு ஒரு விவாதத்தில் ஜெயமோகன் சொன்னது போல கருத்து வேற்றுமையை கறாராக, ஆனால் கடுமை இல்லமால் முன் வைத்திருந்தார். இங்கே இன்னொன்று. ஈ.வெ. ராமசாமியும் இவரும் ஒரு மாநாட்டில் பேசுகிறார்கள். ஈ.வெ.ரா.வை எதிர்த்து தன் கருத்துகளை மிகவும் கச்சிதமாக, ஆனால் நாகரீகம், சபை மரியாதை தவறாமல் எடுத்து வைத்திருக்கிறார்.

ஆரம்பப் பகுதியை மட்டும் கீழே தந்திருக்கிறேன்.

இது தமிழ் எழுத்தாளர் மகாநாடு. நான் எழுதுகிறவன். எனவே, எனக்குச் சில பொறுப்புகள் இந்த மாநாட்டில் பேசுகிறவன் என்ற முறையில் மட்டுமல்லாமல் மற்ற இருவரையும் விட அதிகமாக இருப்பதாக நம்புகிறேன். எனக்கு முன்னால் பேசிய பெரியார் ஈ.வே.ரா. அவர்கள் தெரிவித்த கருத்துக்களை யெல்லாம் உங்களைப் போல் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதனால் அவரது பேச்சுக்கள் எனக்கும் உடன்பாடானது என்று நினைத்து விட வேண்டாம். அவருக்குப் பிறகு நான் பேச ஆரம்பித்து, அவரது கருத்துக்களால் எனக்கு ஏற்பட்ட சலனங்களை வெளியிடாமல் என்ன காரணம் கொண்டும் மறைத்துக் கொள்வேனேயானால் அதற்கு நான் உடன்பட்டு விட்டேன் என்றே அர்த்தமாகும். பெரியார் வயதிலும் அனுபவத்திலும் என்னைவிட மிகமிக மூத்தவர். இந்தக் காரணத்துக்காக, மரியாதை கருதி, அவர் கருத்துக்களை இங்கே நான் மறுக்காமல் இருக்க வேண்டுமென்று உங்களில் சிலர் நினைக்கலாம். நான் கூட நினைத்தேன். ஆனால், பெரியார் அவர்கள் அப்படி விரும்புகிறவர் அல்ல என்று நான் அறிவேன். பெரியாரிடம் எனக்கு ஒரு விஷயத்தில் முழுதும் உடன்பாடு உண்டு. அது, மனிதனின் சுயமரியாதைகளைச் சிதைக்கிற சகல மரியாதைகளையும் உடைப்பது; அதுவே அவரது தலையாயக் கொள்கை. அப்படிப்பட்ட மரியாதைகளை நீங்கள் எத்தனை நூற்றாண்டுகளாகப் பாதுகாத்து வந்தபோதிலும் ‘அதனை இடித்துத் தள்ளுங்கள்’ என்று அவர் சொல்கிறார். வேதத்தில் இப்படி எழுதியிருக்கிறதே என்று சொன்னால் கூட, ‘அந்த வேதத்தையே கொளுத்து’ என்கிறார். அதே போல் என் தகப்பனும், பாட்டனும், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலே வாழ்ந்த ரிஷிகளூம் சொல்லியிருக்கிறார்களே என்று சொன்னால் கூட, ‘அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று நம்பாதே! உன் அறிவைக் கொண்டு எதையும் எடை போடு’ என்று யாருக்கும் தராத மரியாதையை எனது பகுத்தறிவுக்கு அவர் தருகிறார். இதற்காக இவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனவே, எனது கேள்விகளை, எனது மறுப்புக்களை, எனது நிர்த்தாரணங்களைப் பெரியார் அவர்களிடமிருந்தே நான் தொடங்கலாம் என்று கருதுகிறேன்.

ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் புத்தகத்தில் இந்த நிகழ்ச்சியைப் பற்றி எழுதி இருக்கிறாராம். நான் excerpt-ஐ தொகுப்புகள் தளத்தில் படித்தேன். நீங்களும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஜெயகாந்தன் பக்கம்

தொடர்புடைய சுட்டி: முழு பேச்சு

10 thoughts on “ஈ.வெ.ரா முன்னிலையில் ஜெயகாந்தன் பேசியது

  1. // அந்நியர் மாதிரி ஆடையணிந்து கொண்டு இந்த உஷ்ணப் பிரதேசத்தில் திரிவதற்கு வெட்கப்படாத தமிழர்கள், நமது கலாசாரப் பண்புகளில் ஒன்றாகிய திருநீறு அணிதல், திருமண் இட்டுக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கு வெட்கப் பட்டதுமல்லாமல் அவற்றைப் பரிகசித்து ஏளனமும் செய்தார்கள். இந்தச் செய்கை பகுத்தறிவின்பாற்பட்டது என்று அவர்கள் நம்பினார்கள். இது சமூக வாழ்க்கையில் இன்னொருவரின் தனிப்பட்ட உரிமையில் தலையிடுகிற அநாகரிகம் என்று கூட அவர்களுக்குப் புரியவில்லை.//

    நன்றி ஆர்.வி.
    அற்புதமான கட்டுரை. இருபத்திநான்கு வயதில் பெரியார் முன் இவ்வளவு தெளிவுடன் ஜெயகாந்தன் பேசியிருக்கிறார்.
    இவ்வளவையும் அந்த வயதில் தெரிந்து கொள்ள எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    முத்துகிருஷ்ணன்

    Like

  2. அன்றைய ஜெயகாந்தனின் துணிச்சல் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஈ.வே.ரா முன்பு அவரை எதிர்த்து பேசியதில் ஆச்சரியமல்ல. அவரும் தன்னை எதிர்த்து பேசுவதை தவறாக நினைக்கும் தலைவருமல்ல. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மரியாதையுடன் அழைப்பவர் என்றுதான் அனைவரும் கூறுகின்றனர். ஜெயகாந்தன் முதலில் இவ்வாறு ஈ.வே.ராவின் தவறான கருத்துக்களைப் பற்றி பேசி, அதற்கு பின் அவர் பேசியிருந்தால் எப்படி இருந்திருக்கும்

    Like

  3. கொள்கைகளும் நம்பிக்கைகளும் வேறு வேறாக இருந்தாலும் நற்பண்பு என்பதும் நயத்தகு நாகரிகம் என்பதும் இரு பக்கங்களிலும் மிளிர்ந்தது. தீர்க்கமான சிந்தனை உள்ளவர்களின் பேச்சு என்பது இதுதான். இதிகாசம் என்பது நம்பமுடியாத பழமையாக இப்போது தெரிவது போல் – இந்த பண்பாலர்களின் இருப்பு பிற்காலத்தில் (அதாவது விளையாட்டில் ஜெயித்தால் சட்டையை கழற்றி சுற்றுவதும் – நடுவிரலை உயர்த்துவதும் – சட்டமன்றங்களில் ரகளை செய்வதும் – நகரப் பஞ்சாயத்து கூட்டங்களில் உறுப்பினர்கள் ஆடைகள் அகற்றி மறுப்பு தெரிவிக்கும் – புதிய பாணி மறுப்புகளுக்கு பழக்கப்பட்டுப் போகும் காலத்தில் ) ஆச்சரியமாக நோக்கப்பட வாய்ப்புண்டு.

    Like

  4. முத்துகிருஷ்ணன், தேவிகா, சித்திரவீதிக்காரன், ரெங்கசுப்பிரமணி, ரமேஷ் கல்யாண், ஜெயகாந்தனின் பேச்சை என்னைப் போலவே நீங்களும் ரசிப்பது சந்தோஷம்!

    Like

    1. வாசன், எத்தனை காலம் இப்படி ஒரு தார்மீக கோபத்தோடு இருந்தார் என்பதை நினைத்து திருப்தி அடைய வேண்டியதுதான். வாழ்க்கையின் இறுதியில் இளமையில் இருந்த ஊக்கம் குறைந்துவிடுவது சகஜம்தானே!

      Like

  5. அரசியலை வைத்து
    பிழைப்பு நடத்துவோருக்கும்
    எளிய மக்களின் அறியாமையை வைத்து அரசியல் செய்வோருக்கும்
    J K சிம்ம சொப்பனம்

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.