ராபர்ட் ஸ்பென்சரின் இஸ்லாமிய எதிர்ப்பு புத்தகங்கள்

ஸ்பென்சரின் புத்தகங்களில் ஒன்று தெளிவு. அவர் சில முடிவுகளை எடுத்துவிட்டு அதற்கு ஆதாரங்களைத் தேடுகிறார். இருந்தாலும் நன்றாகத் தேடி இருக்கிறார் என்பதுதான் இந்தப் புத்தகங்களின் ப்ளஸ் பாயின்ட்.

ஸ்பென்சர் என்னதான் சப்பைக்கட்டு கட்டினாலும் அவர் ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளர் என்பது தெளிவாகத் தெரிகிறது. 9/11 சம்பவத்துக்குப் பிறகுதான் அவர் தன் எண்ணங்களை எழுத ஆரம்பித்திருக்கிறார். முன் முடிவுகளை எடுத்துவிட்டு பிறகு அதற்கான தரவுகளை தேடி இருக்கிறார் என்று சொல்லலாம். அதற்காக அவரது தரவுகளை நிராகரிப்பதற்கில்லை. அவரது வரிகளுக்கு ஊடாகப் படிக்கும்போது முகம்மது நபி, குரான், அன்றைய அரேபிய சமூகம், இன்றைய இஸ்லாம் பற்றி ஒரு சித்திரம் கிடைக்கிறது. அந்த சித்திரம் உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஸ்பென்சரைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது “Did Muhammad Exist?: An Inquiry Into Islam’s Obscure Origins” (2012) என்ற புத்தகத்தைப் பற்றி படித்தபோதுதான். முகம்மது நபி உண்மை மனிதர் இல்லை என்று வாதிடுகிறாராம். முகம்மது நபியைப் பற்றி அன்றைய non-இஸ்லாமியத் தரவுகள் (யூத, Byzantine பேரரசு, பாரசீகப் பேரரசு இத்யாதி) என்ன சொல்கின்றன என்று தேடினாராம், அதிலிருந்து இந்த முடிவுக்கு வந்தாராம். ஆய்வு முறை முக்கியமானது, ஆய்வின் தரம் எப்படியோ யானறியேன்.

Islam Unveiled (2002), Onward Muslim Soldiers (2003), Truth about Mohammad (2006), Stealth Jihad (2008), Complete Infidel’s Guide to Quran (2009) ஆகிய புத்தகங்களைப் படித்தேன். மொத்தமாக எனக்குத் தோன்றுவது:

முகம்மது நபி பெரும் ஆளுமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏறக்குறைய பழங்குடி மனப்பான்மையினரோடு இருந்த அரேபியரை ஒன்றிணைத்தது அபார சாதனை. அப்படி ஒன்றிணைத்து ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்தது சாதாரண மனிதர்களால் ஆவதில்லை. அவர் அந்தக் காலத்துக்கு புரட்சியாளராக இருந்திருக்க வேண்டும். குரானில் சமத்துவம், நீதி, ஏழைகளுக்கு (முஸ்லிம்களுக்கு மட்டும்தான்) உதவ வேண்டும் என்ற கருத்துகள் சொல்லப்பட்டிருப்பது அன்றைய (அரேபிய) சமூகத்தில் ஒரு மாபெரும் மாற்று சிந்தனை.

அவர் பெண்கள், அடிமைகளை நடத்திய விதம் இன்றைய value system படி தவறாக இருக்கலாம். ஆனால் அன்று அவை எல்லாம் ஓரளவு புரட்சிகரமானவையே. அவர் செய்கைகளை விமர்சிக்கும்போது அன்றைய காலகட்டத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். “All Men are Created Equal” என்று எழுதிய ஜெஃபர்சன் அடிமைகளை வைத்துதானே விவசாயம் பார்த்தார்?

குரான் ஒரு விசித்திரமான புத்தகம். முகம்மது என்ன செய்தாலும் அதை சரி என்று ஸ்தாபிக்க அல்லா ஒரு சூத்திரத்தை சொல்லிவிடுகிறார். உதாரணமாக முகம்மது தன் வளர்ப்பு மகனின் மனைவியை அரை நிர்வாணக் கோலத்தில் தற்செயலாகப் பார்த்துவிட்டு அவளை விரும்பினாராம், ஆனால் அன்றைய சமூகக் கட்டுப்பாடுகளின்படி தன் ஆசையை அடக்கிக் கொண்டாராம். அல்லா உடனே உனக்கு வேண்டியதை ஏன் மறுக்கிறாய் என்று ஒரு சூத்திரத்தை வசதியாக சொன்னாராம், வளர்ப்பு மகன் தலாக் செய்துவிட, முகம்மது அவளை மணந்தாராம். சுந்தரமூர்த்தி நாயனாருக்காக சிவன் தூது போனது நினைவு வந்தது. என்ன, நாயனாருக்கு சிவன் முதலில் தோழன், இரண்டாவதாகக் கடவுள். அல்லா அப்படி இல்லை, எல்லாருக்கும் எப்போதும் முழுமுதற்கடவுள். அவர் இவ்வளவு தூரம் இறங்கி வருவானேன் என்று தோன்றுகிறது. இது உண்மையிலேயே அல்லா சொன்ன சூத்திரமா இல்லை நடந்ததை சமாளிக்க யாராவது சேர்த்துவிட்டதா என்று சந்தேகம் வருகிறது.

புனிதமான வெள்ளி அன்று போர் புரியக்கூடாது என்று குரானில் சொல்லப்பட்டிருப்பதை மீறி போர் நடந்திருக்கிறது, உடனே பரவாயில்லை, ஃப்ரீயா விடு என்று ஒரு சூத்திரம். இப்படி சில பல இடங்களில் முன்னால் சொல்லப்படும் சூத்திரத்துக்கு எதிராக நடப்பது இன்னொரு சூத்திரத்தால் சரிக்கட்டப்படுகிறதாம்.

ஓரளவு சாந்தமான, சமாதானமாகப் போகும்படி சொல்லும் சூத்திரங்கள் அனேகமாக மெக்காவில், முகம்மதும் முஸ்லிம்களும் ஓரளவு அபாயமான நிலையில் இருந்தபோது இயற்றப்பட்டிருக்கின்றன. அவைதான் கவித்துவும் மிகுந்தவை என்றும் சொல்கிறார், எனக்கு கவித்துவத்தைப் பற்றி எல்லாம் தெரியாது. மெதினாவுக்குப் போனதும், பலம் அதிகரிக்க அதிகரிக்க சூத்திரங்கள் இன்னும் கடுமையாகின்றன, எதிரிகளை ஒழித்துவிடு என்று சொல்கின்றன. இது சாத்தியமே என்று தோன்றுகிறது. சாம்ராஜ்யக் கவலைகள், போர்கள் எல்லாம் மெதினாவில்தான் ஆரம்பிக்கிறன. மெக்காவில் இருந்த வரை எப்படி தப்பிப்பது என்பதுதான் முஸ்லிம்களின், முகம்மதின் சிந்தனையாக இருந்திருக்கிறது.

ஸ்பென்சர் முஸ்லிம்களின் பெருவாரியானவர்கள் சமாதான விரும்பிகள் என்பதை ஏற்றுக் கொள்கிறார். குரானில் சாந்தமாக போ, பிற மதத்தினரை தொந்தரவு செய்யாதே என்று நிறைய இருப்பதை மேற்கோள் காட்டுகிறார். ஆனால் அதற்கு முரணாக போட்டுத் தாக்கு என்றும் நிறைய இருக்கின்றன, அது இன்றைய ஜிஹாதிகளுக்கு பலம் சேர்க்கிறது என்ற யோசிக்க வேண்டிய விஷயத்தை முன் வைக்கிறார். குரானில் இப்படி காஃபிர்களை ஒழி, அடக்கு, இரண்டாம் நிலை குடிமகன்களாக (திம்மிகள்) நடத்து என்றிருப்பதை எடுத்துக் கொண்டு வெறுப்பு மனநிலையை வளர்க்க நிறைய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டுகிறார். எதுக்கு ரிஸ்கு, அதனால் எல்லா முஸ்லிம்களையும் கண்காணிப்போம் என்று அவர் முன் வைக்கும் தீர்வுகள் நாஜிகளை நினைவுபடுத்துகிறது.

முஸ்லிம்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி என்பது குரானில் வலியுறுத்தப்படுகிறது. அன்று முஸ்லிம்களை ஒருங்கிணைக்க, ஒரு பலமான சக்தியாக உருவாக்க, அப்படிப்பட்ட us vs them நிலைப்பாடு தேவைப்பட்டிருக்கும் என்பதை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்பென்சர் வசதியாக கிருஸ்துவ மதத்தின் அதிகார ரீதியான கொடுமைகளை – inquisition, யூதத் துவேஷம் இத்யாதி – ஆகியவற்றை “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு” என்ற வசனத்தை வைத்து மறைக்கிறார். ஏசுவும் யூதர்கள் vs மற்றவர்கள் என்றுதான் பார்த்தார் என்பது புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்களில் தெளிவாகத் தெரியும். ஒரு விதத்தில் பார்த்தால் பதினைந்து பதினாறாம் நூற்றாண்டுகளுக்கு முன் இருந்த போப், பிஷப்களின் அதிகாரத்துக்கும் இன்றைய முல்லாக்களின் தாக்கத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. வஹாபியிசம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டில்தான் உருவானது என்று இவரே சொல்கிறார். இன்றைக்கு இஸ்லாமில் குரானை வார்த்தைக்கு வார்த்தைக்கு அப்படியே literal ஆக பொருள் கொள்ள வேண்டும் என்ற கருத்து வலிமையாக இருக்கிறது, ஆனால் அது எப்போதும் அப்படி இருந்ததில்லையாம். ஒரு காலத்தில், குறிப்பாக பாக்தாத் காலிஃப்கள் காலத்தில், குரானை மறுவாசிப்பு செய்யும் ஒரு இயக்கம் மிகுந்த தாக்கத்துடன் இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். அந்த இயக்கம் வலுவிழந்தது துரதிருஷ்டமே. ஆனால் கலீலியோவை அடக்கிய இயக்கம் மிகுந்த வலு பெற்றிருந்தால் இன்றைக்கு ஐரோப்பா என்ன ஆகி இருக்கும்?

ஸ்பென்சர் மீண்டும் மீண்டும் சுட்டுவது பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட கருத்துகளை கடவுளின் மாறக்கூடாத மொழி என்று கொள்வது ஏற்படுத்தும் சிக்கல்களைத்தான். உண்மையே, கிருஷ்ணன் சொன்ன கீதையை ஏற்றுக் கொண்டாலும் நிராகரித்தாலும் நான் ஹிந்துவே என்பது பரம சவுகரியம்தான்.

ஸ்பென்சர் அதிதீவிர தீர்வுகளை சொல்கிறார். உதாரணமாக அமெரிக்காவில் முஸ்லிம்கள் குடியேறுவது தடுக்கப்பட வேண்டும், எதுக்கு ரிஸ்க்கு என்கிறார்!

ஸ்பென்சரின் அநேக தீர்வுகள் நிராகரிக்கப்பட வேண்டியவையே. ஆனால் அவர் குறிப்பிடும் தரவுகள் முக்கியமானவை, சுவாரசியமானவை. ஒரு விதத்தில் அருண் ஷோரியை நினைவூட்டுகிறார். மிகவும் கவனமாக வாதங்களைத் தொகுத்து தன் bias-ஐ வெளிப்படுத்தி இருக்கிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

5 thoughts on “ராபர்ட் ஸ்பென்சரின் இஸ்லாமிய எதிர்ப்பு புத்தகங்கள்

 1. //// சுந்தரமூர்த்தி நாயனாருக்காக சிவன் தூது போனது நினைவு வந்தது. என்ன, நாயனாருக்கு சிவன் முதலில் தோழன், இரண்டாவதாகக் கடவுள். //

  நீங்கள் சொல்லியிருக்கும் விஷயத்திற்கும் மேற்கண்ட வரிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே. ஒருவேளை “விருப்பத்தை நிறைவேற்றுதல்” என்ற வகையில் செய்த உதவிகளைச் சொல்ல வருகிறீர்களா? அப்படிப் பார்த்தால் சிவன் எடுபிடியாக, வேலைக்காரனாக, இன்னும் பலவுமாக அல்லவா வந்தல்லவா சுந்தரருக்கு உதவியிருக்கிறார்!! 🙂

  Like

 2. ஆர்வி

  http://thamizhthenee.blogspot.in/ – இந்தத் தளத்தில் நிறைய ஈ.புக்குகள் பிடிஎஃப் ஆகப் படிக்கக் கிடைக்கின்றன. கீழ்கண்ட இந்த நூலை உங்களுக்கு ’அன்போடு’ டெடிகெட் செய்கிறேன். (நான் இன்னும் இதைப் படிக்கவில்லை) 😉

  http://thamizhthenee.blogspot.in/2012/09/blog-post_9517.html

  Like

 3. ஆர.வி. சார்,
  என்ன தைரியம் உங்களுக்கு? இஸ்லாமைப்பற்றி விமர்சிப்பவரின் கருத்துகளைப் பற்றி கூறுகிறீர்களா?
  இந்நியாவில் எப்படி இவர்கள் .அம் மத்தஃதைப் பரப்பினார்கள் என்பதை யாரும்
  பேசக்கூட முடியவில்லையே..பைரப்பாவின் ஆவரணா படித்தால் தலைசுற்றுகிறது.
  இந்தியாவின் தலைஎழுத்து இவர்களுக்கெல்லாம் எதற்கெடுத்தாலும் விட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது. எங்கோ நடந்த்தற்கு இங்கு இவர்கள் செய்யும்
  அட்டூழியம் தாங்க முடியவில்லையே. ? ஒன்றும் புரியவில்லை.

  Like

 4. ராதாகிருஷ்ணன் துரைசாமி, இதற்கு என்ன சார் பிரமாத தைரியம் வேண்டும்? 🙂 ஸ்பென்சர் புத்தகமே எழுதுகிறார், நான் புத்தகத்தைப் பற்றி நாலு வார்த்தை சொல்ல முடியாதா?

  Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.