இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – ரெய்னர் மரியா ரில்கே

ரெய்னர் மரியா ரில்கே 1875 முதல் 1926 வாழ்ந்த ஜெர்மன் கவிஞர். அவருடைய பல நூறு படைப்புகளாகிய கவிதைகளை போல அவர் பிறருக்கு எழுதிய கடிதங்களும் சிறப்புப் பெற்றவை. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 1902 முதன் 1908 வரை ஃப்ரான்ஸ் கப்பஸ் என்ற 19 வயது நிரம்பிய ‘வியன்னா இராணுவ கல்லூரியின்’ மாணவருக்கும் அக்கல்லூரியின் முன்னாள் மாணவரான ரில்கே எழுதிய கடிதங்களாகும். இக்கடிதங்கள் பதட்டத்துடன் வாழ்க்கையை எதிர்நோக்கும் ஒரு மாணவனுக்கு ஒரு ஆசிரியருமாகிய நண்பர் கூறும் அறிவுரையை போல அமைந்துள்ளன.

1929இல், ரில்கேயின் மரணத்திற்கு பின் மூன்று வருடங்கள் கழித்து கப்பஸால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

முதல் கடிதம்

பாரீஸ்,
பிப்ரவரி 17, 1903

அன்புள்ள ஐயா,
உங்கள் கடிதம் சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. நீங்கள் என் மேல் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவ்வளவே என்னால் செய்ய இயலும். உங்களுடைய கவிதை வரிகளை விவாதிக்க எடுக்கப்படும் எவ்வித எத்தனிப்பும் எனக்கு அன்னியமானது. விமர்சனங்களை போல் ஒரு கலைப்படைப்பை மிக குறைவாகதொட்டுச் செல்வது வேறொன்றுமில்லை [அவை எப்பொழுதும் இறுதியில் புரிதல்களில் போய் முடிந்து விடுகின்றன]. விஷயங்கள் எளிதில் உணரக்கூடியதாகவோ அல்லது விளக்கக் கூடியதாகவோ இருக்கும் என நாம் நம்ப வேண்டும் என்ற மற்றவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவை அப்படி இருப்பதில்லை. பெரும்பான்மையான அனுபவங்கள் விளக்க முடியாதவை, அவை எந்த சொல்லும் நுழைந்திராத வெளியில் ஏற்படுபவை. மற்றும் மற்ற எல்லாவற்றையும் விட விளக்க முடியாதென்பது, துரிதமாக கடந்து போகும் நமது சிறுவாழ்கையை காட்டிலும் பெரிய வாழ்வை தாங்கிக் கொண்டிருக்கும், புதிர் மிகுந்த இருப்புகளாகிய, கலைப் படைப்புகளேயாகும்.

மேலே குறிப்பிட்டவற்றை முன்னுரையாக வைத்து, நான் உங்களிடம் சொல்வது: அமைதியான ரகசிய அந்தரங்கத்தின் ஊற்றுகளை கொண்டிருந்தாலும், உங்களுடைய கவிதைகள் அவைகளுக்கென்று ஒரு நடையை கொண்டனவை அல்ல. அதை, உங்களுடைய இறுதி கவிதையான, “என் ஆத்மா”வில் மிகவும் உணர்கிறேன். அங்கே, உங்களுக்கென்று சொந்தமான ஏதோ ஒன்று வார்த்தையாகவும், இன்னிசையாகவும் மாற முயற்சிக்கிறது. “லீயோபார்டிக்கு” என்ற அற்புதமான கவிதையில் அந்த மகத்தான, தனித்த ஆளுமையின் மேல் ஒரு விதமான சகோதரத்துவ உணர்வு ஏற்படுவது போலுள்ளது. அப்படி இருந்தும், அக்கவிதைகள் தம்முள் ஒன்றாக சேர்ந்து வேறெதுவும் ஆக மாறவில்லை, தனித்து நின்றும் எதுவுமாகவில்லை, இறுதி கவிதை மற்றும் லீயோபர்டிக்கு என்ற கவிதையும் கூட. அவைகளுடன் சேர்த்து நீங்கள் அனுப்பியிருந்த கடிதம், உங்கள் கவிதைகளை படிக்கும் போது நான் உணர்ந்த பல பிழைகளை கண்டு கொள்ள உதவியது, என்றாலும், என்னால் அவற்றை திட்டவட்டமாக குறிப்பிட்டு சொல்ல இயலாது.

உங்களுடைய கவிதைகள் நன்றாக இருக்கின்றனவா என கேட்டிருந்தீர்கள். நீங்கள் என்னிடம் கேட்கிறீர்கள். இதற்கு முன் மற்றவர்களிடம் கேட்டிருப்பீர்கள். பத்திரிக்கைகளுக்கு அனுப்பியிருப்பீர்கள். உங்கள் படைப்புகளை பதிப்பாளர்கள் நிராகரிக்கும் போது, மற்றவர்களின் கவிதைகளுடன் ஒப்பிட்டு பார்த்து வருந்தியிருப்பீர்கள். நீங்கள், ( என் அறிவுரை உங்களுக்கு வேண்டும் என நீங்கள் கேட்டதால்), இப்படிப்பட்ட செயல்களை செய்யாதீர்கள் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வெளியில் தேடுகிறீர்கள், அதைத் தான் தற்பொழுது அநேகமாக தவிர்க்க வேண்டும். உங்களுக்கு அறிவுரையோ, உதவியோ வழங்குபவர்கள் யாருமில்லை – யாருமேயில்லை. நீங்கள் ஒன்று மட்டுமே செய்ய வேண்டும். உங்களுக்குள் பயணம் செல்லுங்கள். உங்களை எழுத ஆணையிடும் காரணியை கண்டுபிடியுங்கள். அது தன் வேர்களை உங்கள் இதயத்தின் அடி ஆழங்களுக்குள் பரப்பியிருக்கிறதா என பாருங்கள். நீங்கள் எழுதுவதை தடை செய்தால், உயிரை விட்டு விடுவீர்களா என்ற கேள்விக்கான பதிலை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இவையெல்லாவற்றையும் விட, இரவின் அமைதிப் பொழுதில் இந்த கேள்வியை உங்களிடமே கேளுங்கள்: நான் அவசியம் எழுத வேண்டுமா? ஒரு ஆழ்ந்த பதிலுக்காக உங்களுக்குள் துருவிச் சென்று கேளுங்கள். அந்த பதில் ஒப்புதலோடு ரீங்கரித்தால், மிக முக்கியமான அக்கேள்வியை நீங்கள், “ஆமாம், கட்டாயமாக” என்ற எளிய பதிலுடன் எதிர் கொண்டால், உங்கள் வாழ்கையை இந்த நிர்பந்தத்திற்கு ஏற்ப உருவாக்குங்கள். உங்கள் வாழ்கை, அதன் மிகவும் அடங்கிய, அலட்சியமான பொழுதுகளில் கூட, இந்த உந்துதலின் அடையாளமாகவும், சாட்சியாகவும் இருக்க வேண்டும். அடுத்து, இயற்கையின் அருகாமையில் வாருங்கள். இதுவரை எவரும் முயற்சித்ததே இல்லை என்பதைப் போல, நீங்கள் பார்த்ததையும், உணர்ந்ததையும், நேசித்ததையும், இழந்ததையும் சொல்ல முயலுங்கள். காதல் கவிதைகளை எழுதாதீர்கள்; மிகவும் எளிமையானதும், சாதாரணமானதுமான அத்தகைய வடிவங்களை தவிர்த்து விடுங்கள். அதில் செயல்படுவது மிகவும் கடினம். மேலான சிறந்த பாரம்பரியங்கள் பல இருக்கும் அவ்வடிவங்களில், தனித்துவம் மிக்க படைப்பை உருவாக்க அபாரமான, முதிர்ந்த திறன் வேண்டும்.

ஆதலால், இப்படிப்பட்ட பொதுவான தளங்களில் இருந்து உங்களை விடுவித்து, தினசரி வாழ்கை என்ன தருகிறதோ அதை எழுதுங்கள். உங்கள் ஆசைகளையும், சோகங்களையும் விவரியுங்கள். மனதில் கடந்து செல்லும் எண்ணங்கள் மற்றும் அழகு எது என நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை, இவை எல்லாவற்றையும் இதயமுணர்ந்த, அமைதியான, நேர்மை கொண்ட, அடக்கத்துடன் விவரியுங்கள். உங்களை வெளிப்படுத்தும் போது சுற்றியுள்ள பொருட்கள், உங்களின் கனவு காட்சிகள் மற்றும் ஞாபகத்தில் உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் தினசரி வாழ்கை வறுமையோடு இருக்கிறதென்றால், அதைக் குற்றம் சொல்லாதீர்கள், உங்களையே குற்றப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் அவ்வாழ்கையின் செல்வங்களை வெளிக் கொண்டுவர முடிந்த ஒரு கவிஞன் இல்லை என ஒப்புக் கொள்ளுங்கள். ஏனென்றால் இறைவனுக்கு ஏழ்மையென்றும், துச்சமான ஏழையென்றும் எதுவும் இல்லை. நீங்கள் ஒரு சிறையில் இருந்தாலும் கூட, அதன் சுவர்கள் உலகின் ஓசைகள் எதையும் அனுமதிக்காதென்றாலும் கூட – விலை உயர்ந்த ஆபரணம் போன்ற மதிப்பும் , ஞாபகங்களின் புதையல் கிடங்காகவும் உள்ள உங்கள் பால்யகால பொழுதுகள் உண்டல்லவா? அதில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். விசாலமான கடந்த காலங்களில் மூழ்கிக் கிடக்கும் உணர்ச்சிகளை மேலே எழுப்புங்கள்; உங்கள் ஆளுமை இன்னும் வலிமையோடு வளரும்; உங்கள் தனிமை விரிந்து, கடந்து போய்க்கொண்டிருக்கும் மற்ற மனிதர்களின் தூரத்து பேச்சிரைச்சல், வந்தடைய முடியாத அந்தி வெளிச்சம் நீங்கள் வாழும் இடமென்றாகும். அங்ஙனம் இந்த உள்-திரும்புதலாலும், உங்கள் உலகினுள்ளில் மூழ்குவதாலும் கவிதைகள் வெளிவந்தால், மற்றவர்களிடம் அவை நன்றாக உள்ளனவா என கேட்க எண்ண மாட்டீர்கள். பத்திரிக்கைகளுக்கு அப்படைப்புகளின் மேல் ஆர்வமேற்படுத்த மாட்டீர்கள். ஏனென்றால் அவை உங்கள் அன்பிற்குரிய இயற்கை உடமைகளாக, உங்கள் வாழ்வின் ஒரு பகுதியாக, அதன் ஓர் ஓசையாக காண்பீர்கள். ஓர் கலைப் படைப்பு இன்றியமையாமையால் எழுந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும். அந்த ஒரு வழி கொண்டே ஒருவர் அதை மதிப்பிட முடியும்.

ஆதலால், என்னால் உங்களுக்கு இதை தவிர வேறு அறிவுரை கூற இயலாது. அதாவது, உங்களுக்கு உள்ளே பயணித்து செல்லுங்கள்; உங்கள் வாழ்கை எவ்வளவு ஆழத்திலிருந்து பாய்கிறது என பாருங்கள், அதன் ஊற்றில், நீங்கள் படைக்க வேண்டுமா என்ற கேள்விக்கான விடையை கண்டடைவீர்கள். அந்த பதிலின் பொருளை புரிந்து கொள்ள முயற்சிக்காமல், உங்களுக்காகவே கொடுக்கப்பட்டது என எண்ணி ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு வேளை, நீங்கள் ஒரு கவிஞனாக ஆவதற்கு பணிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அறிவீர்கள். அதை உங்கள் விதி என ஏற்று வெளியில் இருந்து என்ன வெகுமதி கிடைக்கும் என ஒரு போதும் கேட்காமல், அதன் பாரத்தையும், மேன்மையையும் தாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு படைப்பாளி தானே தன்னுடைய உலகமாக மாற வேண்டும், அவன் தன் தேவைகளை தன்னிடமும், தன்னை ஒப்புக் கொடுத்த இயற்கையிடமும் கண்டறிய வேண்டும்.

ஆனால், உங்களுக்குள்ளும், அதன் தனிமைக்குள்ளும் இறங்கிய பிறகு நீங்கள் கவிஞனாக ஆவதை கைவிட வேண்டி வரலாம் (நான் சொன்னதைப் போல, ஒருவன் தான் தொடர்ந்து எழுதாமல் வாழ்ந்து விட முடியும் என உணர்ந்தால், அவன் எழுதுவதை விட்டு விட வேண்டும்). அப்படி நேர்ந்தாலும், உங்களுடைய இந்த சுயதேடல் பயனற்றது என்றாகிவிடாது. உங்கள் வாழ்கை அங்கிருந்து அதன் பாதைகளைக் கண்டடையும்; அப்பாதைகள் நன்றாகவும், செழுமையானதாகவும், விசாலமானதாகவும் ஆவதற்கு என் வார்த்தைகளில் கூற முடிந்ததை விட அதிகம் பிரார்த்திக்கிறேன்.

வேறென்ன நான் சொல்ல? எல்லாவற்றையும் தகுந்தபடி வலியுறுத்தியிருக்கிறேன் என்று எனக்குப் படுகிறது. முடிவாக ஒரு சிறு அறிவுரையை சேர்த்துக் கொள்ள விரும்புகிறேன்; அமைதியுடனும், முனைப்புடனும் தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருங்கள். அமைதி கூடிய நேரங்களில், உங்கள் நுண்ணுர்ச்சிகள் பதிலளிக்க முடிந்த கேள்விகளுக்கு, வெளியில் பதில் தேடி காத்திருப்பது போல் உங்கள் வளர்ச்சியை பலவந்தமாக தடங்கல் செய்வது வேறொன்றுமில்லை.

உங்கள் கடிதத்தில் பேராசிரியர் ஹோராஸெக்கின் பெயரைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அன்புமிக்கவரும், கற்றறிந்தவருமாகிய அம்மனிதரின் மேல் எனக்கு ஆண்டுகள் பல கடந்த பின்னும் நன்றியும், மரியாதையும் கொண்டுள்ளேன். என்னைப் இப்பொழுதும் அவர் நினைவு கூறுகிறார் என்பது அவரின் மேன்மையை காட்டுகிறது, நான் அதை வரவேற்கிறேன், என்ற என் உணர்வுகளை தயவு கூர்ந்து அவருக்கு தெரியப்படுத்துவீர்களா?

நீங்கள் என் பொறுப்பிலாக்கிய கவிதைகளை, உங்களுக்கு திருப்பி அனுப்புகிறேன். நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளுக்கும், என் மேல் வைத்த நம்பிக்கைக்கும் மீண்டுமொருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன். என்னால் முடிந்தவரை நேர்மையாக பதிலளித்ததன் மூலம், உங்களுக்கு அந்நியராக இருந்ததைக் காட்டிலும் என் தரத்தை சிறிதேனும் உயர்த்த முயற்சித்திருக்கிறேன்.

என்றும் உண்மையுடன்,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்டம் பக்கம்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்