முதலியாரைப் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது மனோகரா திரைப்படத்தின் மூலமாகத்தான். கருணாநிதி ஒரு வசனகர்த்தாவாக அந்தப் படத்தில்தான் தன் உச்சத்தை அடைந்தார். சிவாஜி அனல் பறக்க வசனம் பேசுவதைக் கேட்டு சின்ன வயதில் ஆ என்று வாயைப் பிளந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறேன். இன்றும் எனக்குப் பிடித்த படம்தான்.
முதலியார் எக்கச்சக்க நாடகங்களை எழுதித் தள்ளி இருக்கிறார். பற்றாக்குறைக்கு வி.வி. ஸ்ரீனிவாச ஐயங்கார் எழுதிய சில ஆங்கில நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து நடித்திருக்கிறார். ஐயங்காரின் Domestication of Dhamu மனை ஆட்சி ஆகி இருக்கிறது. ஐயங்கார் எழுதிய என்ன நேர்ந்திடினும், மனைவியால் மீண்டவன் என்ற சிறு நாடகங்களை மொழிபெயர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரையும் மொலியரையும் கூட விட்டுவைக்கவில்லை. Merchant of Venice வாணிபுர வணிகன் ஆகி இருக்கிறது. காளப்பன் கள்ளத்தனம் (1931) (மொலியரின் Les Fourberies de Scapin) போன்ற மொழிபெயர்ப்புகள் ரசிக்கப்பட்டிருக்கும். ஆபெராவான La Sonnambulaவைக் கூடத் தழுவி எழுதி இருக்கிறார். (பேயல்ல பெண்மணியே). Topical ஆக எழுதுவார். (இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த 1942-இல் அவர் எழுதிய நாடகம் – இந்தியனும் ஹிட்லரும்!) அந்த நாடகங்கள் எல்லாம் அவர் காலத்தில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்தான். ஆனால் அவை எதுவும் – மனோகரா உட்பட – காலத்தைத் தாண்டி நிற்கக் கூடியவை அல்ல. மனோகராவும் நாடக வடிவத்தில் சுமார்தான். 1895-இல் எழுதப்பட்டதால் முன்னோடி நாடகம் என்று சொல்லலாம்.
அவருடைய சிறந்த நாடகமாக நான் கருதுவது சபாபதியைத்தான். இன்றும் கொஞ்சம் சிரிக்க முடிகிறது. திரைப்படமும் எனக்குப் பிடித்த ஒன்று. ஆனால் அவரது பிற ஹாஸ்ய நாடகங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. ஹரிச்சந்திரனை உல்டா செய்து பொய்யே பேசும் சந்திரஹரி (1923), சபாபதியை வைத்து அவர் எழுதிய இன்னொரு நாடகமான ஒரு விருந்து, வைகுண்ட வைத்தியர் (1943), சதி சக்தி (1947) எல்லாம் சுகப்படவில்லை. சபாபதி பாத்திரத்தை வைத்து ஹாஸ்யக் கதைகள் என்றும் ஒரு புத்தகம் இருக்கிறது. அந்தக் காலத்து எஸ்.வி. சேகர் நாடகம் போல இருக்கிறது.
அவருடைய பல நாடகங்கள் தொன்மக் கதைகளின் retelling-தான். சஹதேவன் சூழ்ச்சி (1928), சதி சுலோச்சனா (1935), நல்லதங்காள் (1936), ஹரிச்சந்திரா, கொடையாளி கர்ணன், வள்ளித் திருமணம், யயாதி, சாரங்கதரன், சிறுத்தொண்டர், புத்த அவதாரம், புத்த சரித்திரம் போன்றவை இப்படித்தான். சில ஒரிஜினல் நாடகங்களையும் எழுதி இருக்கிறார்.
பிராமணனும் சூத்திரனும் (1933) போன்ற நாடகங்களில் அவர் கலப்புத் திருமணத்தை வலியுறுத்த இன்றும் கொஞ்சம் சுவாரசியம் இருக்கிற, ஆனால் யூகிக்கக் கூடிய கதைகளை எழுதி இருக்கிறார். கள்வர் தலைவன் நாடகம் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்டது. அந்தக் காலத்தில் வெற்றி பெற்றிருக்கலாம். காதலர் கண்கள் (1902), உத்தம பத்தினி (1934), குறமகள் (1943), தீயின் சிறு திவலை (1947), தீபாவளி வரிசை (1947), இல்லறமும் துறவறமும் (1952), கலையோ காதலோ, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், ரத்னாவளி, விஜயரங்கம், சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்தும் போன்றவை மிகச் சாதாரணமான, ஆனால் கோர்வையான, சரளமாகச் செல்லும் கதைகள். நாடகமாக பார்க்க, அதுவும் அந்தக் காலத்தில் சுவாரசியமாக இருந்திருக்கும்.
நற்குல தெய்வம் என்ற நாடகத்தில் ஒரு சுயம்வரக் காட்சி நன்றாக இருக்கும். வில்லை வளைத்து குறியை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லா மன்னர்களும் சாக்கு சொல்வார்கள். ஒருவர் இது விஷ்ணுவின் வில், நானோ வைஷ்ணவன், அது உடைந்துவிட்டால் அபசாரம் என்பார். அடுத்தவர் நான் சைவன், விஷ்ணுவின் வில்லைத் தொடமாட்டேன் என்பார்!
முதலியாருக்கு ஒரு ட்ரேட்மார்க் உண்டு. நாடகத்தில் அவ்வப்போது “லோ கிளாஸ்” மனிதர்கள் கொச்சையான பாஷை பேசுவார்கள். பெரிய மனிதர்கள் சபையில் அது ரசிக்கப்பட்டிருக்கும். பல நாடகங்களின் இந்த கொச்சை மொழி பேசும் பாமரர்கள் வரும் காட்சிகள் தனி காமெடி ட்ராக்காக வருகின்றன. சில சமயங்களில் அந்த காமெடி ட்ராக்கே தனியாக நடிக்கப்படுமாம். மாண்டவர் மீண்டது, ஆஸ்தானபுர நாடகசபை, சங்கீதப் பைத்தியம் எல்லாம் அப்படி காமெடி ட்ராக்கை நாடகமாக்கியது போலத்தான் இருக்கின்றன. வேதாள உலகம் (பிற்காலத்தில் டி.ஆர். மஹாலிங்கம், சாரங்கபாணி நடித்து திரைப்படமாகவும் வந்தது) போன்றவற்றின் நகைச்சுவை அந்தக் காலத்தில் ரசிக்கப்பட்டிருக்கும். விச்சுவின் மனைவி, தீட்சிதர் கதைகள் (1936) – குசும்புக்கார தீட்சிதர் செய்யும் விஷமங்கள் – போன்ற நகைச்சுவை நாடகங்களும் கதைகளும் ரசிக்கப்பட்டிருக்கும்.
முதலியாரின் நாடகங்கள் எல்லாம் காலாவதி ஆனவையே. ஆனால் அவர் முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை. நாடகம் நடிப்பதற்காக – அவரது மொழியில் சொன்னால் நாடகம் ஆடுவதற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். சுகுண சுந்தரி சபை என்ற அமைப்பை நிறுவி தொழில் முறை நாடகங்களை நடத்தி இருக்கிறார். இவர்தான் அனேகமாக எழுதுவார். இவரது உயிர் நண்பரான ரங்கவடிவேலு முதலியார்தான் ஸ்த்ரீபார்ட்.
சில நவீன நாடக உத்திகளை அன்றே முயன்று பார்த்திருக்கிறார். இடைச்சுவர் இரு புறமும் நாடகத்தில் நாடக மேடையை இரண்டாகப் பிரித்து இரு புறமும் வேறு வேறு காட்சிகள் (பக்கத்து பக்கத்து வீடுகள்).
சில அபுனைவுகளையும் முதலியார் எழுதி இருக்கிறார். நாடகத்தமிழ் (1933) முக்கியமான ஆவணம். பல பழைய நாடகங்களைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இந்த நாடகங்கள் எல்லாம் இன்று கிடைக்கின்றனவா இல்லையா என்று தெரியவில்லை. நாடக மேடை நினைவுகள் புத்தகத்தில் சுகுணவிலாச சபா உருவானவிதம், ஒவ்வொரு நாடகமும் எழுதப்பட்ட பின்புலம், நாடகம் நடிக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று மிக விலாவாரியாக எழுதி இருக்கிறார். அன்றைய நாடக உலகிற்கு முக்கிய ஆவணம். நாடகங்கள் உரைநடைப்படுத்த வேண்டும், நாடகங்கள் நன்றாக நடக்க வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்து உழைத்திருக்கிறார். நான் கண்ட நாடகக் கலைஞர்கள் இன்னொரு முக்கியமான ஆவணம். பல கலைஞர்களைப் பற்றி சிறு குறிப்புகளைத் தருகிறது. யான் கண்ட புலவர்கள் புத்தகமும் அன்றைய தமிழறிஞர்களைப் பற்றி சிறு குறிப்புகளைத் தருகிறது. சில சுவாரசியமான குறிப்புகள் உட்பட – உதாரணமாக சி.வை. தாமோதரம் பிள்ளை நல்ல குண்டாக இருப்பாராம். என் சுயசரிதை கொஞ்சம் dry ஆன அபுனைவு. ஆனால் அந்தக் காலத்து பெரிய மனிதர் ஒருவரின் வாழ்வுக்கு ஒரு ஜன்னல். நடிப்புக் கலையும் பேசும் படக்காட்சியும் அன்றைக்கு பயன்பட்டிருக்கலாம். நாடக நடிகர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும், திரைப்படங்கள் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்று தன் அனுபவத்திலிருந்து எழுதி இருக்கிறார். தமிழன்னை பிறந்து வளர்ந்த கதை, சிவாலய சிற்பங்கள் என்ற புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.
முதலியார் திரைப்படங்களில் நடித்திருக்கிறார், படங்களை இயக்கி இருக்கிறார். அந்த அனுபவங்களை ‘பேசும் பட அனுபவங்கள்‘ என்ற புத்தகமாகவும் எழுதி இருக்கிறார். அவரது மனோகரா நாடகமே நிறைய மாற்றங்களுடன் வெளிவந்து சொதப்பிவிட்டதாம்.
அவரது எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அதுவும் சரியான காரியமே. இன்னும் நல்ல தமிழ் நாடகங்கள் அவர் லெவலில் இருந்து அவ்வளவாக முன்னேறாமல் இருப்பது நம் துரதிருஷ்டமே.
முதலியாருக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது. அவரைப் பற்றி இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் சாஹித்ய அகடமிக்காக அ.நா. பெருமாள் ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
மறைந்த சேதுராமன் அவரைப் பற்றி எழுதிய அறிமுகம் கீழே:
வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார். இவர் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் வைக்கத் தக்கது. நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர்.
பம்மல் சம்பந்த முதலியார் 1873ம் வருடம் ஃபிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலம்மாள் என்பவர்கள். விஜயரங்க முதலியார் முதலில் தமிழ் உபாத்தியாயராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ் என்ற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர். அவர் தானே தமிழ் வாசக புத்தகங்கள் பல வெளியிட்டு வந்தார். இதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இப்புத்தகங்களையெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து வந்தார். அவரது சிறு வயதில் அவரது தாயார் உணவு ஊட்டும்போது, ராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்ற இதிகாச புராணங்களிலிருந்து தினமும் ஒரு புதுக் கதையும் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, இவைகளே காரணம் என்று நினைவு கூறுகிறார் சம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில்.
மாநிலக்கல்லூரியிலும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார்.
உயர்குடியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார். இவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சர். சி.பி.ராமஸ்வாமி அய்யர், எஸ்.சத்தியமூர்த்தி, எம்.கந்தசாமி முதலியார் (எம்.கே.ராதாவின் தந்தை), சர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியார், வி.வி.ஸ்ரீனிவாச அய்யங்கார், வி.சி.கோபாலரத்தினம் ஆகியோர். நாடகம் என்றால் தெருக்கூத்து என்றும், சிற்றூர் மக்கள் மட்டுமே காண்பவர்கள் என்ற நிலையை மாற்றி, நகரங்களிலே நல்ல மேடையமைத்து, பல வகை நாடகங்களை நடத்திக் காட்டினார்.
அக்காலத்தில் நடை பெற்ற நாடகங்கள் இரவு பூராவும் நடக்கும், மங்களமாகவே முடியும் என்ற பழக்கத்தை மாற்றி, இன்பமும் துன்பமும் கொண்ட முடிவுகளுடன் நாடகங்கள் படைத்தார். ஆங்கில நாடகங்கள், வடமொழி நாடகங்கள் முதலியவற்றை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து மேடையேற்றினார். இரவு பூராவும் நடந்த நாடகங்களை மூன்று மணி நேரத்துக்குள் சுருக்கிய பெருமையும் அவரதே.
பெல்லாரி கிருஷ்ணமாச்சார்யலு என்பவரது சரச வினோத சபா நாடகக்குழு சென்னையில் நடத்திய சிரகாரி, மற்ற நாடகங்கள் அவரை வெகுவாகக் கவர்ந்தன. மேலும் இக்குழுவில் வழக்கறிஞர்கள், நல்ல வேலையிலிருந்தவர்கள், படிப்பறிவு மிகுந்தவர்கள் தொழில் முறையிலில்லாமல், பொழுதுபோக்குக்கெனவே நடத்தியது சம்பந்தத்திற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே நண்பர்கள் அறுவருடன் சென்னை ஜார்ஜ்டௌனில், 1891ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி, சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
அதே சமயம் சென்னைக்கு விஜயம் செய்த பார்சி நாடகக் குழு சம்பந்தத்தை ஈர்த்தது. முக்கியமாக அவர்களது மேடை அமைப்புகள், உடை அலங்காரங்கள், பின்னணிப் படுதா, பக்கத் திரைகள், மேலே தொங்கட்டான்கள், ஜாலர்கள் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தன. அவர்களது நேரம் தவறாமையும் ஒரு காட்சிக்கும் மற்றோர் காட்சிக்கும் இடையே இருந்த இடைவெளியும், அவருக்கு மகிழ்ச்சியளித்தன. தன்னுடைய நாடகங்களிலும் இதே போல் அமைப்புகள் இருக்க வேண்டும் என்றெண்ணியவர், பின்னர் இதை நிறைவேற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.
சுகுணவிலாச சபையின் நாடகங்களில் எல்லாம் சம்பந்தமே ஹீரோ – ரங்கவடிவேலு முதலியார் அவர்கள்தான் ஹீரோயின் – இந்த அமைப்பு 1895லிருந்து 1923ம் வருஷம் வரை தொடர்ந்தது. சம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டுள்ளார். அவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68 – அவரது அனுமதியுடன் 1891லிருந்து, 1934ம் வருடம் வரை சுகுண விலாச சபையாராலும், நகரிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும், அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.
அரசு பதவியிலிருந்து 1928ல் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த ஏழு வருஷங்கள் வரை சுகுண விலாச சபையில் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு மனக்கசப்பின் காரணமாக சபையின் நடவடிக்கைகளில் தனது ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார். ஆனால் நாடக மேடையில் தோன்றும் அவர் ஆர்வம் சற்றும் குறையவில்லை என்பது, ஐம்பதுகளின் ஆரம்பத்தில் எங்களுடைய நடராஜா அமெச்சூர் குழு (தோட்டக்கார விசுவனாதன் தலைமையில்) சுகுண விலாச சபையில் ஒரு நாடகம் நடத்திய போது, தானே வலிய வந்து தோட்டக்காரன் அண்டை வீட்டுக்காரனாக இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி வசனம் பேசிய போது எழுந்த கரகோஷம் இன்னமும் எனக்கு நினைவிலுள்ளது.
முதலியார் 1967ம் வருஷம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாரே தவிர அவரது நாடகத் தொண்டு இன்னமும் எல்லாருடைய நினைவிலும் பசுமையாகவே உள்ளது.
முதலியார் 94 நாடகங்கள் எழுதியுள்ளார் – அவற்றுள் முக்கியமானவை கீழே:
- மனோஹரா (1895 – சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப் பட்டது)
- லீலாவதி சுலோசனா – (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)
- புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)]
- சுந்தரி – (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)
- சாரங்கதரன் (198 முறை – மேடையில் முதல் முத்தக் காட்சி!)
- கள்வர் தலைவன்
- காலவ ரிஷி (1899 – 307 முறை மேடையேறியது)
- காதலர் கண்கள் (1902 – 190 முறை மேடையேற்றம்)
- விரும்பிய விதமே ( As You Like It தமிழாக்கம்)
- வாணீபுர வணிகன் (Merchant of Venice தமிழாக்கம்)
- அமலாதித்தன் (Hamlet தமிழாக்கம்)
- மகபதி ( Macbeth தமிழாக்கம்)
- சிம்ஹலநாதன் (Cymbaline தமிழ் வடிவம்)
- பேயல்ல பெண்மணியே (La Somnambula தமிழ் வடிவம்)v
- காளப்பன் கள்ளத்தனம்
- சாகுந்தலம்
- மாளவிகாக்கினிமித்திரம்
- விக்ரமோர்வசீயம்
- ரத்னாவளி
- ம்ருச்சகடிகம்
- யயாதி
- இரு நண்பர்கள்
- சபாபதி
- விஜயரங்கம்
- சர்ஜன் ஜெனரலின் பிரஸ்கிரிப்ஷன்
- சதி சுலோசனா
- சுல்தான்பேட்டை சப் அசிஸ்டண்ட் மாஜிஸ்ட்ரேட்
- நல்லதங்காள்
- ஸ்த்ரீ சாஹசம்
- விருப்பும் வெறுப்பும்
வெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:
- காலவரிஷி (1932)
- ரத்னாவளி (1935)
- மனோஹரா (1936, 1954)
- லீலாவதி சுலோசனா (1936)
- சபாபதி (1941)
- வேதாள உலகம் (1948)
தகவல் ஆதாரம்:
- பம்மல் சம்பந்தம் முதலியாரின் “நாடக மேடை நினைவுகள்” – உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியீடு 1998
- ஹிந்து தினசரியில் எஸ்.முத்தையாஎழுதிய கட்டுரை
சாரங்கதரன் நாடகத்தை சங்கரதாஸ் சுவாமிகளும் எழுதி இருக்கிறார். இது ஒரு கர்ண பரம்பரை கதையாக இருக்கலாம். சேதுராமன் சாரங்கதாரா பற்றி விளக்குகிறார்.
இருவருமே சாரங்கதரா எழுதி இருக்கலாம். பம்மல் எழுதியது நிச்சயம் என்பது கீழ்க்கண்ட குறிப்பிலிருந்து தெரிகிறது – பக்கம் 167 நாடக மேடை நினைவுகள் –
“”இனி மனோஹரனுக்குப் பின் நான் எழுதிய, எனது ஏழாவது நாடகமாகிய ‘சாரங்கதரன்’ பற்றி எழுதுகிறேன் – என் நண்பன் அப்பு என்னிடம் ‘இனிமேல் நீங்கள் என்ன நாடகம் எழுதப் போகிறீர்கள்?’ என்று கேட்டான். — ‘இதை நீ ஏன் கேட்கிறாய் உன் மனதில் உள்ளதைச் சொல்’ என்றேன் — நான் சாரங்கதரா நாடகம் எழுத வேண்டுமென்றும் அதில் அவன் சாரங்கதரனாக நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்தான்…
இந்த நாடகம் எங்கள் சபையால் நடிக்கப் பட்ட போது சசிரேகா என்ற தெலுங்குப் பத்திரிகையின் நிருபர் சேஷாச்சாரியார் என்பவர், சித்ராங்கி சாரங்கதரனை முத்தமிட்டதும் அதற்கு சாரங்கதரன் இணங்கியதும் தவறு என்று தன் பத்திரிகையில் எழுதினார்.— நான் எழுதியிருக்கும் நாடகப் புத்தகத்தைப் படித்துப் பார்த்திருப்பார்களாயின் இதில் அவர் கூறியபடி தவறு ஒன்றுமில்லை என்று நன்கு அறிவார்கள்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
விக்கி குறிப்பு
ஹிந்து தினசரியில் எஸ். முத்தையா எழுதிய கட்டுரை
மனோகரா திரைப்படம்
சபாபதி திரைப்படம்
டோண்டு எழுதிய ஒரு பதிவு
Like this:
Like ஏற்றப்படுகின்றது...