நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோசியம்”

நார்லா சாஹித்ய அகாடமி விருது பெற்ற தெலுகு எழுத்தாளர். இதிகாசங்கள், தொன்மங்களை மறுவாசிப்பு செய்திருக்கிறார் என்று தெரிகிறது.

சீதா ஜோசியம் சிம்பிளான நாடகம். ராட்சதர்கள் காடுகளில் வேட்டையாடி வாழ்பவர்கள், ரிஷிகள் காட்டை எரித்து விவசாய பூமி ஆக்குபவர்கள், ராமன் தன் வம்ச பெருமை, புகழுக்காக ரிஷிகள் சொன்னபடி ராட்சதர்களை அழிக்கிறான், சீதை மட்டுமே இதை உணர்கிறாள் என்பதுதான் கரு. ஆரண்ய காண்டத்தில், ஜனஸ்தானத்தில் சீதை ராமனை இதற்காகக் கண்டிபதாக நாடகம் அமைந்திருக்கிறது. நாடகத்தில் இறுதியில் சீதை உன் வம்ச பெருமைக்காக, வறட்டு கவுரவத்துக்காக, என்னைக் கூட ஒரு நாள் கைவிட்டுவிடுவாய் என்று “ஜோசியம்” சொல்கிறாள்.

சீதை வெளுத்து வாங்குகிறாள். அங்கே ராமனை அழைக்க வரும் ரிஷிகளை சரமாரியாகத் தாக்குகிறாள். ஒரு விதத்தில் திராவிடக் கழகப் பிரசுரம் மாதிரி இருக்கிறது – அலங்காரப் பேச்சு ஒன்றுதான் இல்லை.

எனக்கு இந்த மாதிரி மறுவாசிப்புகள் எப்போதுமே பிடிக்கும். இதுவும் பிடித்திருக்கிறது. ஆனால் இதுதான் நார்லாவின் சிறந்த படைப்பு, அதுவும் இந்தப் புத்தகத்துக்காகத்தான் விருது என்றால் சாஹித்ய அகாடமி எல்லாம் கொஞ்சம் அதிகப்படி. ஆனால் இந்த விருது விஷயம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நார்லாவுக்கு விருது கொடுக்கப்பட்ட சமயத்தில் இந்த நாடகத்தை விமர்சித்து அகாடமியில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவர் சாஹித்ய அகாடமி பிரசுரம் ஒன்றில் ஒரு கட்டுரை வெளியிட்டாராம். அதனால் நார்லா பரிசை ஏற்பதற்கில்லை என்று சொல்லிவிட்டாராம்.

தமிழ் மொழிபெயர்ப்பை (மொழிபெயர்த்தவர் பேர் மானுவேல்) சாகித்ய அகாடமி வெளியிட்டிருக்கிறது. நான் பார்த்த பட்டியலில் விலை முப்பது ரூபாய்.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: இந்திய புனைவுகள், தொன்மங்கள்