பாலா ரிச்மன் தொகுத்த “தென்னிந்தியாவில் இன்றைய ராமாயணக் கதைகள்”

Paula Richman’s “Ramayana Stories in Modern South India”


ரிச்மன் ராமாயண மறு வாசிப்புகளை – நாட்டுப் பாடல்கள், நவீன சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், சினிமா (காஞ்சன சீதா) என்று பலதரப்பட்ட மறு வாசிப்புகளைத் தொகுத்திருக்கிறார். நான் மிகவும் ரசித்துப் படித்த புத்தகங்களில் ஒன்று.

மறுவாசிப்புக்கும் சில தீம்கள் இருக்கின்றன; சீதையின் அக்னிப்ரவேசம், சீதையை ராமன் காட்டுக்கு அனுப்புவது, சூர்ப்பனகை, சம்புகன். கர தூஷணர், சுபாஹு-மாரீசன் மாதிரி பாத்திரங்களை வைத்து நான் எழுதினால்தான் உண்டு போலிருக்கிறது.

தெலுகு இலக்கியம் பற்றி அதிகம் தெரியவில்லை என்று சமீபத்தில் குறைப்பட்டுக் கொண்டிருந்தேன். இந்தப் புத்தகத்தில் சலம் எழுதிய சிறுகதை ஒன்று – அக்னிப்ரவேசம் என்றதும் சீதை உனக்கு ராவணனே மேல் என்று ராவணனின் சடலத்தோடு உடன்கட்டை ஏறிவிடுகிறாள்! வோல்கா லலிதகுமாரியின் சிறுகதையில் வால்மீகி ஆசிரமத்தில் இருக்கும் சீதையும் ஊனப்பட்ட சூர்ப்பனகையும் தோழிகள் ஆகிறார்கள். காவனசர்மா என்பவர் எழுதிய சிறுகதையில் சூர்ப்பனகை சீதையிடம் ஆண்களின் ஆதிக்கத்தைப் பற்றி உணர்த்துகிறாள். தவிர நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள். ஒன்றில் நேரத்துக்கு படுக்கைக்கு வரவில்லை என்று ராமன் குறைப்பட, சீதை மாமனார் மாமியாருக்கு சேவை செய்துகொண்டிருக்கிறாள். தாமதமாக வரும் சீதையை படுக்கை அறைக்கு உள்ளே அனுமதிப்பதில்லை, கௌசல்யா வந்து சமாதானப்படுத்த வேண்டி இருக்கிறது. இன்னொன்றில் பட்டாபிஷேகத்தின்போது 14 வருஷம் தூங்காத லக்ஷ்மணன் தனக்கு தூங்க நேரமாகிவிட்டது என்று நினைவுபடுத்த வரும் நித்ராதேவியைப் பார்த்து சிரிக்கிறான். ராமன் சீதை உட்பட எல்லாருக்கும் லக்ஷ்மணன் தங்களைப் பார்த்து இளக்காரமாக நகைக்கிறான் என்று குத்துகிறது.

மாப்ளா ராமாயணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கேரளத்தின் மாப்ளா முஸ்லிம்களின் நாட்டுப்பாடல்கள் போல பாடப்பட்டதாம். இன்று மறைந்துவிட்டது. பிராந்தன் (ஆம், பிராந்தன்தான்) ஹாசன்குட்டி என்பவர் ஒரு காலத்தில் இதைப் பாடித் திரிந்து கொண்டிருந்தபோது அதைக் கேட்ட டி.ஹெச். குன்ஹிராமன் நம்பியார் (T.H. Kunhiraman Nambiar) என்ற சிறுவன் மிகவும் ஆர்வமாக கிட்டத்தட்ட 700 வரிகளை மனப்பாடம் செய்திருக்கிறார். அறுபதுகளில் எம்.என். கரசேரி (M.N. Karassery) என்பவர் அதை ஆவணப்படுத்தி இருக்கிறார். இது ஹாசன்குட்டி ஆரம்பித்ததா இல்லை அதற்கு முன்பே பல காலமாக இருந்ததா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. ரிச்மன் இங்கே ஒரு நூறு நூற்றைம்பது வரிகளைக் கொடுத்திருக்கிறார். சூர்ப்பனகையை ராமன் ஷரியா விதிப்படி உன்னை ஏற்பதற்கில்லை என்று சொல்லும் இடத்தில் நான் வாய் விட்டுச் சிரித்துவிட்டேன்.

மலையாளத்திலிருந்து தொக்குக்கப்பட்ட பிற மறுவாசிப்புகள்: குமரன் ஆசானின் கவிதை, மற்றும் லலிதா லெனின், கே. சச்சிதானந்தன் ஆகியோரின் கவிதைகள்; கே.பி. ஸ்ரீதேவி (K.B. Sridevi) என்பவர் எழுதிய சிறுகதை புதுமைப்பித்தனின்சாபவிமோசனம்” சிறுகதையை எதிரொலிக்கிறது. (1990-இல் எழுதப்பட்டிருக்கிறது) என்.எஸ். மாதவன் என்பவர் அகல்யை கதையை நவீன காலகட்டத்தில் திருப்பி எழுதி இருக்கிறார்.

கன்னடத்தில் குவெம்புவின் சூத்திர தபஸ்வி நாடகத்திலிருந்து சில பகுதிகள். சம்புகனை ராமன் கொள்வதில்லை, புகார் செய்த பிராமணனுக்குத்தான் ஆபத்து! சித்திர ராமாயணா என்ற நாடகத்திலிருந்து சில பகுதிகள் (தொன்மையான கதையை ஹெச்.எஸ். வெங்கடேச மூர்த்தி நாடகம் ஆக்கி இருக்கிறார். சூர்ப்பனகையின் சூழ்ச்சியால் ராவணனின் படத்தை சீதை வரைகிறாள், படம் உயிர் பெற்றுவிடுகிறது. சீதையைத் தழுவ விரும்பும் ராவணனுக்கு சீதை சொல்லும் யோசனை – என் மகனாகப் பிற! சந்தேகக்கார ராமன் ராவணனோடு போரிடும்போது, நான் வரைந்த படம், என் “மகன்” என்று சீதை ராவணனை காப்பாற்றப் பார்க்கிறாள்.) சில நாட்டுப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள்.

தமிழிலிருந்து குமுதினியின் “அந்தப்புர தபால்“, புதுமைப்பித்தனின்சாப விமோசனம்“, அம்பையின் “அடவி” சிறுகதையிலிருந்து ஒரு பகுதி, பாரதியாரின்குதிரைக்கொம்பு” என்ற ஒரு வேடிக்கைக் கதை, சிவசேகரம் என்ற இலங்கை எழுத்தாளரின் ஒரு கவிதை. அசோகமித்ரனின்உத்தர ராமாயணம்” யார் கண்ணிலும் படுவதே இல்லை என்பது எனக்கு பெரிய குறையாக இருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

பின்குறிப்பு: இந்த புத்தகத்தை படித்துவிட்டு ஆப்ரே மேனன் எழுதிய ராமாயணத்தையும் (1954) படித்தேன். கொடுமை! கிண்டல் செய்கிறோம் என்று நினைத்துக் கொண்டு என்னத்தையோ எழுதி இருக்கிறார். பாலா ரிச்மன் போன்ற முழு வெள்ளைக்காரிக்கு ராமாயணம் பிடிபடும்போது மேனன் போன்ற அரை இந்தியர் அரை வெள்ளைக்காரருக்கு பிடிபடவில்லையே என்று நினைத்துக் கொண்டேன். மேனன் எழுதிய புத்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கிறதாம். இப்படி தடை செய்யப்பட்டிருப்பதால்தான் இதன் பேர் இன்னும் நினைவில் இருக்கிறது என்று தோன்றுகிறது. இதை எல்லாம் ஃப்ரீயாக விட்டுவிடவேண்டும் என்ற புரிதல் என்றுதான் இந்திய அரசுக்கு வருமோ தெரியவில்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: இதிகாசங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
குமுதினியின் “அந்தப்புர தபால்”
ஏ.கே. ராமானுஜனின் “300 Ramayanas
நார்லா வெங்கடேஸ்வர ராவ் எழுதிய “சீதா ஜோசியம்
புதுமைப்பித்தனின் “சாபவிமோசனம்