சுஜாதாவின் “ஆ!”

இன்னொரு கணேஷ்-வசந்த் கதை.

விகடனில் தொடர்கதையாக 1992-இல் வந்தது. ஒவ்வொரு இதழிலும் வலிந்து “ஆ” என்ற வார்த்தையோடு முடிக்கிறார். தொடர்கதையாகப் படிக்கும்போது இது சுவாரசியமான உத்தியாக இருந்திருக்கலாம். மொத்தமாகப் படிக்கும்போது அலுப்பு தட்டுகிறது.

தினேஷ்குமாருக்கு மண்டையில் குரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றன. மாடியிலிருந்து கீழே குதி, பால்கனியிலிருந்து குதி, பஸ்சுக்கு முன் காரைத் திருப்பு என்றெல்லாம். தற்கொலை நடக்காமல் தப்பிப்பது அதிர்ஷ்டம்தான். CAT scan, மருந்து மாத்திரை, மனநிலை மருத்துவம், சாமியார், கோவில்-குளம் என்று எல்லா விதமான ட்ரீட்மெண்ட்டும் எடுத்துப் பார்க்கிறான். கடைசியில் ஏதோ முன் ஜென்ம நினைவு என்று அவனுக்குத் தெளிவாகிறது. அவன் உடலில் ஜெயலட்சுமி டீச்சரின் கணவன் சர்மாவின் ஆவி புகுந்து கொள்கிறது. தன்னைக் கொன்ற ஜெயலட்சுமியின் மறுபிறவியும், தினேஷின் மனைவியுமான தேவகியைக் கொன்றுவிட்டு வெளியேறிவிடுகிறது. தினேஷ் நார்மல்! கணேஷ்-வசந்த் கொலையின் போது சுயநினைவில் இல்லை என்று வாதிட்டு விடுதலை வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்புறம் எதிர்பார்க்கக் கூடிய முடிவு.

லாஜிக் நிறைய உதைக்கிறது. சர்மாதான் அந்தக் குரல். சர்மாவுக்கு தேவகியைக் கொலை செய்வதுதான் குறி. அப்புறம் தினேஷைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவானேன்? தினேஷ் போய்விட்டால் தேவகியை ஆவியால் கொல்ல முடியாதே!

தினேஷின் மன உளைச்சல்கள் நன்றாக வந்திருக்கும்.

சுமாரான கதைதான். நல்ல தொடர்கதை என்று சொல்லலாம். கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.

நூல் உலகம் தளத்தில் கிடைக்கிறது, கிழக்கு வெளியீடு. விலை 120 ரூபாய். 1992ல் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: சுஜாதா பக்கம், கணேஷ்-வசந்த் பக்கம்