இது ஒரு autobiographical நாவல் என்று நினைக்கிறேன். முதல் நாவலான தலைகீழ் விகிதங்களை விட இதில் subtle ஆக சொல்ல முயற்சித்திருக்கிறார், வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு கணித பட்டப் படிப்பு படிக்கும் சுடலையாண்டியின் உணர்வுகள் என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம். சுடலையாண்டியின் உணர்வுகளைப் பற்றி அதிகமாகப் பேசாமல் அவன் கண்களின் மூலம் நம்மை சம்பவங்களைப் பார்க்க வைப்பதில்தான் இந்த நாவலின் வெற்றி இருக்கிறது. பணக்கார வீட்டு ஆவுடையம்மாளுக்கும் அவனுக்கும் நடுவில் இருக்கும் கவர்ச்சி, டென்ஷன், தாத்தா பாட்டியின் ஒரே நம்பிக்கை, அம்மா அப்பா இல்லாத வீடு, தாய் தந்தையரின் கலப்புத் திருமணம் மூலம் ஏற்படும் அவமானங்கள், கூடப் படிக்கும் எவருக்கும் இல்லாத வேலை செய்தாக வேண்டிய நிலை, அதனால் உணரும் அவமானம் என்று பிரமாதமான சித்தரிப்பு.
நாஞ்சில்நாட்டு பேச்சை, பழக்கவழக்கங்களை சித்தரிக்க ஜெயமோகனை நெருங்கக் கூட ஆள் கிடையாது என்று நினைத்திருந்தேன். நாஞ்சில்நாடன் என்று பேர் வைத்துக் கொண்டிருப்பவருக்கு அது கைவராமல் போய்விடுமா என்று யோசித்திருக்க வேண்டாமா?
பிரச்சினை என்னவென்றால் சித்தரித்து அப்புறம் என்ன? சித்தரிப்போடு நின்றுவிடுகிறது. கதை பாதியில் நின்றுவிட்ட மாதிரி இருக்கிறது. ராஜாராவின் காந்தபுராவைப் படிக்கும்போதும் இப்படித்தான் உணர்ந்தேன். எனக்கெல்லாம் சுபம் (அல்லது துக்கமாக ஒரு வணக்கம்) போட்டு படத்தை முடித்தால்தான் திருப்தி போலிருக்கிறது.
ஜெயமோகன் இதை தமிழ் நாவல்களின் இரண்டாம் பட்டியலில் – பல்வேறு வகையில் முக்கியத்துவம் உடைய ஆனால் முழுமையான கலைவெற்றி கைகூடாத படைப்புகள் – சேர்க்கிறார். எஸ்.ரா.வின் லிஸ்டில் இது இடம் பெறவில்லை.
சித்தரிப்பு மட்டுமே இருப்பது எனக்கு குறையாகப் பட்டாலும் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
உடுமலை தளத்தில் கிடைக்கிறது, விலை எழுபது ரூபாய்.
தொகுக்கப்பட்ட பக்கம்: நாஞ்சில்நாடன் பக்கம்
3 thoughts on “நாஞ்சில்நாடனின் “என்பிலதனை வெயில் காயும்””