அசோகமித்ரனுக்குப் பிடித்த அவருடைய படைப்புகள்

அசோகமித்திரன் தென்றல் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் தான் எழுதியவற்றில் தனக்குப் பிடித்தவற்றைப் பற்றி சொல்கிறார்.

நானும் ஜே. ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம்” என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்தது. “அப்பாவின் சிநேகிதர்” என் மனம் கவர்ந்த ஒன்று. “உத்தர ராமாயணம்” என்ற சிறுகதை, “பதினெட்டாவது அட்சக்கோடு” போன்றவையும் என் மனம் கவர்ந்தவைதான். “ராஜாவுக்கு ஆபத்து” என்ற சிறுகதையை பலர் படித்திருக்கக் கூட மாட்டார்கள். ஆனால் அதை ஒரு முக்கியமான சிறுகதையாக நான் கருதுகிறேன். எனக்குப் பிடிக்காதது என்றால் “தண்ணீர்“, “கரைந்த நிழல்கள்” ஆகியவற்றைச் சொல்லலாம். என்னவோ அவற்றை எழுதிவிட்டேன்.

நானும் ஜே. ராமகிருஷ்ண ராஜுவும் சேர்ந்து எடுத்த படம் ஒரு கிளாசிக். படிக்கும்போது புன்னகைத்துக் கொண்டே இருந்தேன். அசோகமித்ரனின் நகைச்சுவை ஃபார்முலா நகைச்சுவை இல்லை. வாழ்க்கையை நுட்பமாக கவனித்து அதில் உள்ள அபத்தங்களை எடுத்துக் காட்டி நம்மை நகைக்க வைப்பவர். இந்த சிறுகதை அதற்கு ஒரு கச்சிதமான எடுத்துக்காட்டு.

அப்பாவின் சிநேகிதர் ஒரு விதத்தில் ஐநூறு கோப்பை தட்டுகள் என்ற சிறுகதையின் தொடர்ச்சி. இதிலும் நல்ல ட்விஸ்ட், ஆனால் என்னால் யூகிக்க முடிந்த அபூர்வமான அசோகமித்திரன் சிறுகதைகளில் ஒன்று. இதை நான் அவரது உயர்ந்த சிறுகதைகள் லிஸ்டில் வைக்கமாட்டேன்.

உத்தர ராமாயணம் இன்னொரு சிறப்பான சிறுகதை. மனிதர் கதையின் கோணத்தை மாற்றும் விதம் அபாரம்!

ராஜாவுக்கு ஆபத்து எனக்கு இன்னும் புரியவில்லை. மனித வாழ்க்கை அபத்தம் என்கிறாரா, என்னதான் சொல்ல வருகிறார்? அவர் செஸ் பற்றி எழுதி இருப்பதெல்லாம் நிஜம்.

எனக்கு கரைந்த நிழல்கள், தண்ணீர் போன்றவை அற்புதமான படைப்புகள். பதினெட்டாம் அட்சக்கோட்டை அவற்றுக்கு அடுத்த படியில்தான் வைப்பேன்.

முழுப் பேட்டியையும் இங்கே படிக்கலாம். (Registration Required)


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்திரன் பக்கம்

தொடர்புள்ள சுட்டிகள்:
பதினெட்டாம் அட்சக்கோடு பற்றி ஆர்வி, பக்ஸ்
தென்றல் பேட்டி (Registration Required)