சுப்ரபாரதிமணியனின் கடிதம்

பழைய காகிதங்களைக் கிளறிக் கொண்டிருந்தபோது கிடைத்த கடிதம். அவர் வருஷாவருஷம் கஷ்டப்பட்டு செகந்தராபாதில் ஒரு தமிழ் புத்தகக் கண்காட்சி நடத்துவார். முதல் முறை நான் போய் சாயாவனம் வாங்கியபோது அவரது கண்ணில் ஆயிரம் வாட் பல்ப் எரிந்தது. சுஜாதாவும் கல்கியும் மட்டுமே விற்றுக் கொண்டிருந்த காலம் அது. அவர் என் லெவலும் அதுதான் என்று தெரியாமல் எனக்கு நல்ல நல்ல புத்தகங்களை எல்லாம் சிபாரிசு செய்தார். நானும் அவரால் கொஞ்சம் நல்ல புத்தகங்கள் படித்தேன்.

1990-ஆம் வருஷம் வாக்கில் எனக்கு பம்பாய்க்கு மாற்றல் ஆனது. அப்போது அவரிடம் ஏன் எழுதுகிறீர்கள் என்று கடிதம் எழுதிக் கேட்டிருக்கிறேன். அதற்கு அவர் எழுதிய பதிலில் அவருடைய creative தவிப்பும் தெரிகிறது, தான் காலம் கடந்து நிற்கும் எழுத்தாளன் என்ற பெருமிதமும் தெரிகிறது.

திரு RVS,

வணக்கம், நலம் குறித்த விருப்பம். தங்களை நன்கறிவேன். நல்ல புத்தகங்களை புத்தகக் கண்காட்சியின் வாங்கிய தரத்தில் உங்கள் அன்பும் ஆதரவும் உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கச் செய்கிறது. பம்பாய் வாழ்க்கை எப்படி உள்ளது?

ஏன் எழுதுகிறேன் என்ற தங்கள் கேள்வி நியாயமானது.

வாழ்க்கை எனக்கு பலவிதக் கோணங்களைத் தருகிறது. என் சொந்த அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள் (இதர நண்பர்களின் அனுபவங்கள், பத்திரிகை செய்திகள் etc.) என்னை வாழ்க்கை பற்றி பல மதிப்பீடுகளைத் தருகிறது. இதனால் காட்சி ரூபமாகவும், படிமமாகவும் பல விஷயங்கள் என் மனதுள் உள்ளன. இந்த காட்சி ரூபங்களை, நினைவுகளை, குறிப்புகளை நான் சும்மா வைத்திருக்க முடிவதில்லை. எழுத்தாளன் என்ற ரீதியில் இவற்றை இலக்கிய ரீதியாக பதிவு செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். பதிவை எழுத்தாக்குகிறேன். இந்தப் பதிவு கலை, இலக்கியம், கலாச்சார ரீதியில் பாதிப்புகளைக் கொண்டிருக்கலாம்.

என் சமகால வாழ்க்கையின் அனுபவங்களை எழுத்தில் படிக்கும் ஒருவன் என் வாழ்க்கையினூடே இந்தியனின் வாழ்க்கை அனுபவங்களை, கலாச்சார விஷயங்களை, காலத்தின் நிகழ்வுகளை அறிந்து கொள்வான். 20 or 30 or 50 வருஷம் கழித்துப் படிக்கும் ஒரு இலக்கிய ஆசிரியன்/சரித்திர ஆசிரியன் என் இலக்கிய பதிவிலிருந்து பல விஷயங்களைக் காணுவான்.

“நான் எழுதத் தொடங்குவதற்கு முதல் காரணம் என்னை அழுத்திக் கொல்கிற சாரமற்ற வாழ்க்கை என்னை நிர்ப்பந்திப்பது. இரண்டாவது காரணம் என்னுள் காட்சிக் கருத்து வடிவங்கள் நிறைந்திருப்பதால் என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை” என்ற கார்க்கியின் வார்த்தைகள் என்னுடையதாகவும்.

6 மாத இடைவெளிக்குப் பின் சந்திப்போம். நலம் குறித்த விருப்பம்.

மணி மணியான கையெழுத்து. ஆனால் நுணுக்கி நுணுக்கி எழுதி இருக்கிறார், 20 வருஷம் கழித்து கண்ணை சுருக்கி சுருக்கி படிக்க வேண்டி இருக்கிறது. 🙂 என் கடிதத்தில் போதுமான அளவு தபால் தலை இல்லாததால் ஒரு ரூபாய் அபராதம் கட்டி வாங்கிக் கொண்டேன் என்று எழுதி இருந்தார். 🙂

பம்பாயிலிருந்து நான் மீண்டும் செகந்தராபாத் திரும்பவே இல்லை. சுப்ரபாரதிமணியனையும் அதற்குப் பிறகு சந்திக்கவே இல்லை. அருமையான மனிதர். என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து அவரோடு ஒரு காப்பியாவது சாப்பிட வேண்டும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: சுப்ரபாரதிமணியன் பக்கம்

தொடர்புடைய சுட்டிகள்:
சுப்ரபாரதிமணியனும் புத்தகக் கண்காட்சியும்
சுப்ரபாரதிமணியனின் சிறுகதைத் தொகுப்பு – அப்பா