முழு கட்டுரை “அங்கே இப்போ என்ன நேரம்” தொகுப்பில் இருக்கிறது. முக்கால்வாசி கட்டுரை கீழே.
… எனக்கு இலக்கியம் பற்றி ஓர் உண்மை புலப்பட்டது. எவ்வளவுக்கு ஒரு படைப்பு வாசகனுடைய பங்கீட்டைக் கேட்கிறதோ அவ்வளவுக்கு அந்தப் படைப்பு உயர்ந்து நிற்கிறது. ஓர் உன்னதமான இலக்கியம் உண்மையில் வாசகனாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.
பென் ஒக்கிரி (Ben Okri) என்பவர் புகழ் பெற்ற ஆப்பிரிக்க எழுத்தாளர். இவருடைய The Famished Road என்ற நாவல் 1991-இல் புக்கர் பரிசு பெற்றது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். இவரைப் பற்றி லிண்டா கிரான்ட் எழுதுகிறார். “ஒக்கிரி அலுப்பூட்டும் வசனம் ஒன்று கூட எழுத முடியாதவர்… (அவருடைய) இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். அந்தக் கணம் தெற்கு லண்டன் தெருக்களில் உள்ள மரங்களெல்லாம் தேவதைகளினால் நிரப்பப்பட்டு காட்சியளித்தன.”
தமிழ் நாட்டிலும் இப்படிப்பட்ட ஒரு இலக்கியக்காரர் இருக்கிறார். எவ்வளவு முயன்றாலும் அவரால் ஒரு அலுப்பூட்டும் வசனம் எழுத முடியாது. கண்ணாடித்தன்மையான வார்த்தைகள் கவிதையின் உள்ளே இருப்பதை சுலபத்தில் காட்டிவிடுவதைப்போல இவருடைய வார்த்தைகளும் கண்ணாடித்தன்மை கொண்டவை. அவற்றைக் கொண்டு தொடுக்கப்படும் வசனங்கள் அவர் சொல்ல வரும் கருத்தை துலாம்பரமாகக் காட்டிவிடுகின்றன.
இப்படி ரத்தினக் கற்களை நெருக்கி இழைத்தது போல வசனங்களை அடுக்கிச் செய்த இவருடைய சிறுகதை ஒன்றை சமீபத்தில் படித்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் வெளிவந்த மிகச் சிறந்த தமிழ் சிறுகதைகளில் இதுவும் ஒன்று என்றே நான் கருதுகிறேன்.
இதன் தலைப்பு “வலை“. ஏழு பக்கத்தில் எழுதப்பட்ட கதை. கதாசிரியர் எழுதியது ஆறு பக்கமே. கடைசி ஏழாவது பக்கத்தை வாசகர்தான் பூர்த்தி செய்ய வேண்டும். கதை இதுதான்.
பெரிதாக், ஓயாமல் இருபத்து நாலு மணி நேரமும் சத்தம் எழுப்பும் பெயின்ட் தொழிற்சாலை ஒன்றில் கதைசொல்லி வேலை பார்க்கிறார். இவர் நிர்வகிக்கும் ‘எண்ணிக்கை’ பகுதியில் இன்னும் நாலு பேர் பணி செய்கிறார்கள். இந்தப் பகுதியை எலெக்ட்ரானிக்ஸ் முறைக்கு மாறுவதற்கு அதிகாரம் முயற்சி செய்கிறது. ‘முப்பத்தியெட்டு வருடங்கள் உழைத்தும் பிழை போகாத உபகரணங்கள்; மகத்துவமான தடையில்லாத செயல்பாடு. இன்னும் இருபத்தைந்து வருடங்கள் தாக்குப் பிடிக்கும். ஆனபடியால் அரிதான மூலதனத்தை இதில் செலவு செய்வது வியர்த்தமாகும்.’ இப்படியெல்லாம் சொல்லி காரணம் காட்டி, எண்ணிக்கைப் பகுதியை மூடும் ஆலோசனையைத் தகர்த்தாகிவிட்டது; கதைசொல்லியின் வேலையும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இது வரை நாலு கண்டம் தாண்டிவிட்டது. இனி மேல் ஒரு கண்டமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேலை சுலபமானது. மனக்கோட்டை கட்டலாம். கவிதை எழுதலாம். புத்தகம் படிக்கலாம். ஈ, எறும்பை அவதானிக்கலாம்.
உண்மையில் அதுதான் நடந்தது.
செத்த புழு ஒன்று ஒரு கம்பித்துண்டில் ஒட்டியபடி கிடந்தது. ஓர் எறும்பு இழுத்துப் போகிறது. இன்னொரு எறும்பு சேர்க்கிறது. பார்த்தால் அது எதிர்த்திசையில் இழுக்கிறது. ஒரு சிறு போர். கதைசொல்லி இந்த விவகாரத்தில் கவரப்பட்டு இதையே பார்த்துக் கொண்டு அந்த எறும்பின் பின்னால் போகிறார்.
சிறிது நேரத்தில் அலுப்பு வந்துவிடுகிறது. ஏதாவது செய்து சமனைக் குலைத்து சுவாரஸ்யம் ஏற்படுத்த நினைக்கிறார். ஓர் எறும்பைக் கொன்று என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அல்லது இரண்டையும் நசுக்கி அந்தத் தருணத்தை தீர்மானிக்கலாம். அல்லது நசுக்காமல் உயிர் கொடுத்து புதுத் தருணத்தையும் சிருஷ்டிக்கலாம். இந்த மூளைப் போராட்டம் அடுத்த கனத்தை நோக்கி நகர்கிறது. ஒரு வினாடி அவருடைய சிருஷ்டிப் பிரம்மாண்டத்தில் மயங்கி பார்வை தடைப்படுகிறது.
புழுவையும் எறும்புகளையும் காணவில்லை. ஒரு மெல்லிய நீக்கலுக்குள் அவை மறைந்துவிட்டன. எதிர்பாராதது.
அலாரம் வீறிடத் தொடங்கியது. எண்ணிக்கை ரிலேயில் ஃப்யூஸ் போய்விட்டது. சிவப்பு விளக்குகள் மின்னின. ராட்சத மெசின்கள் உராய்ந்து ஓய்வுக்கு வந்தன. பேரிரைச்ச்சல்கள் அடங்கின. கற்பனைக்கும் மீறிய அமைதி உண்டாகியது.
இப்படி கதை முடிகிறது. பேரிரைச்சலில் தொடங்கி பெரும் அமைதியில் முடிகிறது.
வலை என்ற தலைப்பு. ஆண் பெண்ணுக்கு வலை வீசலாம்; பெண் ஆணுக்கும் வலை வீசலாம். மனிதன் விலங்குக்கு வலை வீசலாம்; சில சமயம் விலங்கு மனிதனுக்கு வலை வீசலாம்.
ஒரு நுட்பமான கணத்தில் எறும்பின் உயிர் கதைசொல்லியின் கையில்; ஆனால் மன்னித்து கடவுள் போல சிருஷ்டியின் உன்னதத்தை அனுபவிக்கிறார். அடுத்த கணம் இவருடைய எதிர்காலத்தை செத்துப் போன ஓர் அற்பப் புழு தீர்மானித்துவிடுகிறது.
வெகு விரைவில் எண்ணிக்கை பகுதியின் தகுதியின்மை ஆராயப்படும். எலெக்ட்ரானிசின் ஆக்கிரமிப்பில், கதைசொல்லியையும் சேர்த்து ஐந்து பேர் சீக்கிரத்தில் வேலை இழக்க நேரிடலாம்.
இவை வாசகன் இட்டு நிரப்ப வேண்டிய பகுதிகள். செப்புக்கம்பி ஒட்டியபடி செத்துப்போன ஒரு புழு, மிகவும் சாமர்த்தியமாகப் பேசும், நுட்பமான அறிவு பெற்ற புத்திசாலிக்கு வலை விரித்துவிடுகிறது.
கதைசொல்லி விட்டதை நிரப்பியதும் கதை புரிகிறது. இப்பொழுது அந்தக் கதை எனக்கும் சொந்தமாகிவிடுகிறது. இன்னொரு முறை படித்துப் பார்க்கிறேன்.
அந்த ஆசிரியருடைய பெயர் ஜெயமோகன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: முத்துலிங்கம் பக்கம், ஜெயமோகன் பக்கம்
தமிழ் நாட்டிலும் இப்படிப்பட்ட ஒரு இலக்கியக்காரர் இருக்கிறார். எவ்வளவு முயன்றாலும் அவரால் ஒரு அலுப்பூட்டும் வசனம் எழுத முடியாது. கண்ணாடித்தன்மையான வார்த்தைகள் கவிதையின் உள்ளே இருப்பதை சுலபத்தில் காட்டிவிடுவதைப்போல இவருடைய வார்த்தைகளும் கண்ணாடித்தன்மை கொண்டவை. அவற்றைக் கொண்டு தொடுக்கப்படும் வசனங்கள் அவர் சொல்ல வரும் கருத்தை துலாம்பரமாகக் காட்டிவிடுகின்றன- அ.முத்துலிங்கம்.\\
ஜெயமோகன் குறித்த முத்துலிங்கத்தின் வரிகள் முற்றிலும் உண்மை.
LikeLike
நல்லதோர் அறிமுகம்
நன்றி
http://www.malartharu.org
http://www.tronbrook.org
LikeLike