பம்மல் சம்பந்த முதலியாரின் “நாடகத்தமிழ்”

நாடகத்தமிழ் (1933) சிறந்த ஆவணம். தமிழ் நாடக வரலாறு என்றே சொல்லலாம். தொல்காப்பியத்தில் ஆரம்பித்து நாடகம் பற்றி தமிழ் இலக்கியங்களில் உள்ள எல்லா குறிப்புகளையும் ஏறக்குறைய எழுதி இருக்கிறார். தமிழ் நாடகத்தில் ஆர்வம் உள்ளவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும். மின்னூலை இணைத்திருக்கிறேன்.

முதலியார் நல்ல நாடகம் என்று நினைத்து எழுதியதெல்லாம் இன்று காலாவதி ஆகிவிட்டனதான். இருந்தாலும் அவர் காலத்துக்கு அவர் ஒரு முன்னோடி என்பதை மறுப்பதற்கில்லை.

அவர் குறிப்பிடும் பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் வெளியான நாடகங்கள் பலவற்றின் பேரைக் கூட நான் கேட்டதில்லை. அன்றைய நாடக ஆசிரியர்கள் என்று எனக்குத் தெரிந்ததே சங்கரதாஸ் சுவாமிகள், முதலியார், மற்றும் சதாவதானம் கிருஷ்ணசாமிப் பாவலர் மூவர்தான். முதலியார் குறிப்பிடும் பழைய நாடகங்களின் பட்டியலைக் கீழே கொடுத்திருக்கிறேன்.

  1. காசி விஸ்வநாத முதலியார் எழுதிய டம்பாச்சாரி விலாசம் (இதுதான் ரத்தக் கண்ணீர் நாடகம்/சினிமாவின் மூலம்), பிரம்ம சமாஜ நாடகம், தாசில்தார் நாடகம்
  2. ராமஸ்வாமி ராஜு எழுதிய பிரதாபசந்திர விலாசம் (1877)
  3. அப்பாவு பிள்ளை எழுதிய சத்தியபாஷா ஹரிச்சந்திர விலாசம், சோழவிலாசம் (1886), இந்திரசபா (1889), பத்மினி விலாசம் (1894)
  4. ஆதிலட்சுமி அம்மாள் எழுதிய ரத்னாவளி நாடக அலங்காரம் (1892) – இதுதான் ஒரு பெண் எழுதிய முதல் நாடகமாம்.
  5. T.T. ரங்கசார்யார் எழுதிய நந்திதுர்கம் (1892)
  6. பரிதிமால் கலைஞர் எழுதிய ரூபாவதி (1896), கலாவதி (1898), மானவிஜயம்

இணையத்திலோ, இல்லை காகிதத்திலோ புத்தகங்களைப் பார்த்தால் சொல்லுங்கள்!


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாடகங்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
பம்மல் சம்பந்த முதலியார்
நாடகத்தமிழ் – மின்னூல்