தமிழில் பயண இலக்கியம் என்ற வகை எழுத்து அவ்வளவு சுகப்படவில்லை. தி.ஜா. மற்றும் சிட்டி எழுதிய “நடந்தாய் வாழி காவேரி” மற்றும் ஜெயமோகன் தான் ஊர் ஊராக சுற்றுவதைப் பற்றி எழுதுவது இரண்டுதான் எனக்குத் தெரிந்து குறிப்பிட வேண்டியவை.
மணியன் டைப் நான் அமெரிக்காவில் வத்தக்குழம்பு சாப்பிட்டேன், ஆஃப்பிரிக்காவில் ரசம் குடித்தேன் எழுத்து, இல்லாவிட்டால் கோவில் கோவிலாகப் போய் அந்தக் கோவிலின் தலபுராணம், ஊருக்கு எப்படி போவது என்ற வழி குறிப்புகள், ஊரில் அவருக்கு உதவிய மணியக்காரர், குருக்கள் பற்றி நாலு பாரா என்றுதான் இருக்கிறது. பரணீதரனின் எழுத்துக்கள் இப்படிப்பட்டவையே.
கொஞ்சம் நிதானமாகப் படித்தால் பாஸ்கரத் தொண்டைமான், ஏ.கே. செட்டியார் இருவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. தொண்டைமான் ரசிகர். உண்மையிலேயே சிற்பங்களை அனுபவித்திருக்கிறார். படிப்பவர்களுக்கும் அவற்றைக் கண்டு அவர் மகிழ்ந்தது தெரிகிறது.
வேங்கடம் முதல் குமரி வரை classic. வேங்கடத்துக்கு அப்பாலும் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. என்ன, அவரது கடவுள் நம்பிக்கை வெளிப்பட்டது – உதாரணமாக ஆறுமுகமான பொருள், பிள்ளையார்பட்டி பிள்ளையார் போன்ற நூல்களில் – முதலில் இவற்றை skim செய்ய வைத்தது. நிதானமாகப் படித்தால்தான் இவற்றின் அருமை தெரிகிறது.
ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும் அவர் பல சமயங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. மனிதருக்கு எத்தனை தேடல் என்று வியக்க வைத்தது.
கம்பன் சுயசரிதம் போன்ற புத்தகங்கள் கம்பனிடம் இத்தனை ஈடுபாடு கொண்ட ஒரு தலைமுறை இருந்ததா என்று வியக்க வைத்தது. பாலகாண்டத்தில் இருந்து 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவர் வெளியிட்டிருக்கும் சீதா கல்யாணம் என்ற புத்தகமும் கம்பனை எல்லாரிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற அவர் ஆவலைத் தெளிவாகக் காட்டுகிறது. அவரது பட்டிமண்டபம் என்ற புத்தகமும் – அவர் வழங்கிய பட்டிமண்டபத் தீர்ப்புகளின் தொகுப்பு – புத்தகமும் இதே வியப்பை ஏற்படுத்தியது. கம்பனைப் பற்றித்தான் அனேக பட்டிமண்டபங்கள் இருந்திருக்கின்றன. உடன்பிறவா தம்பியரின் சிறந்தவன் குகனா, சுக்ரீவனா, விபீஷணனா? சேவையில் சிறந்தவன் லக்ஷ்மணனா, ஹனுமனா, விபீஷணனா? இந்த மாதிரி நிறைய பேசி இருக்கிறார்கள். கம்பன் கவிதையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று முனைந்திருக்கிறார்கள். தொலைக்காட்சி இல்லாத அந்த நாளில் இந்த மாதிரி பட்டிமண்டபத்துக்கு நூறு பேர் வந்திருப்பார்களா? பணம் எதுவும் கிடைத்திருக்காது. அந்த முனைப்பு எல்லாம் எங்கே போயிற்று?
கலைக் களஞ்சியம் என்ற புத்தகத்தில் அவர் பால் நாடார், டிகேசி, தேசிக விநாயகம் பிள்ளை போன்ற பலரைப் பற்றி எழுதி இருந்தவை நன்றாக இருந்தது.
சில புத்தகங்கள் அவர் பேசிய உரைகளின் தொகுப்பு. உதாரணமாக இந்திய கலைச்செல்வம். ஒரு காலத்தில் உபயோகமுள்ள அறிமுகமாகவும் இருந்திருக்கலாம். ஆனால் இன்று கொஞ்சம் போரடிக்கிறது.
பாஸ்கரத் தொண்டைமானைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது எழுத்துக்கள் 2009-இல் நாட்டுடமை ஆக்கப்பட்டன. அவரது வேங்கடம் முதல் குமரி வரை என்ற புத்தகம் மின்நூலாகக் கிடைத்தது. (பகுதி 1, பகுதி 2, பகுதி 3, பகுதி 4) இதுவும் வழக்கமான ஊர், கோவில், தல புராணம், கோவில் கட்டப்பட்ட வரலாறு, அனுபவம் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனால் நல்ல ஆவணம், என்றைக்காவது நானும் கோவில் குளம் என்று சுற்றும்போது பயன்படும். மதுரை மீனாட்சி புத்தகமும் இதைப் போன்றதுதான்.
ஆனால் தொண்டைமானைப் போன்றவர்களின் தாக்கம் அசாதாரணமானது. அது அவர்கள் எழுதிய புத்தகங்களை விட பெரியது. ஜெயமோகன் எங்கேயோ இவர் பரணீதரனின் கோவில் உலா கட்டுரைகளுக்கு இவரே முன்னோடி என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தொண்டைமான் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் பற்றி ஒரு அருமையான நூலை எழுதி இருக்கிறார். முதலியாரின் பங்களிப்பு என்ன என்று புரிந்து கொள்ள முடிந்தது.
தொண்டைமானின் எழுத்துக்கள் நாட்டுடமை ஆனபோது மறைந்த சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே:
நாற்பத்தைந்து ரூபாய் எழுத்தராக வருவாய்த் துறையில் நுழைந்து, மாவட்ட ஆட்சியராக உயர்ந்தவர் திரு. பாஸ்கரத் தொண்டைமான். தான் பணியாற்றிய பகுதிகளில் கலை ஆய்வு மேற்கொண்டவர். கோயிற்கலையில் இவருக்கு இருந்த ஈடுபாடும், இவரது பெருமுயற்சியும் தான் தஞ்சைக் கலைக்கூடத்தை உருவாக்கியது. ஆட்சித் துறையினைக் கலை அழகும் இலக்கிய மணமும் கொள்ளச் செய்தவர். நல்ல எழுத்தாளர், வல்ல பேச்சாளர், சிறந்த ரசிகர் (மது.ச.விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு)
அண்மையில் 2005ல் நடைபெற்ற அவரது நூற்றாண்டு விழாவின் போது தொகுத்து வெளியடப்பட்ட கலைமணி பாஸ்கரத் தொண்டைமான் – கலைக் களஞ்சியம் என்ற புத்தகத்தில் அவரது மகள் ராஜேஸ்வரி நடராஜன் எழுதுவதைப் படிக்கலாமா?
** திரு. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள், ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ என்று ஞானசம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற நெல்லை மாநகரில் 1904ம் வருடம் ஜூலை மாதம் 22ம் தேதி, திரு தொண்டைமான் முத்தையா அவர்களுக்கும், திருமதி முத்தம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவருடன் பிறந்தவர் ஐவர். நல்ல தமிழ்ப் புலமையும், கலைஞானமும் செறிந்த குடும்பம்.. தந்தையார் முத்தையா தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்.. ( தந்தை வழி பாட்டனார் திரு சிதம்பரத் தொண்டைமானும் நல்ல தமிழ்ப் புலவர் – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளிடத்தில் முறையாகத் தமிழ் பயின்றவர்)
பாஸ்கரத் தொண்டைமானுடைய மாணவப் பருவம், திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் கழிந்தது. அவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் மேலகரம் சுப்பிரமணியக் கவிராயர்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே, அவரது திருமணமும் நடந்தேறியது. முறைப்பெண்ணான பாலம்மாள் என்பவரே அவருக்குத் துணைவியாக வாய்த்தார். இனிய இல்வாழ்க்கையின் பயனாக நான்கு மக்கள் பிறந்தனர். இளையவர் இருவரும் இளமையில் மறைந்து போக, மூத்த இருவரும் உள்ளனர்.
கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றதுமே, வேலையும் தேடி வந்தது. இப்போது வனவளத்துறை என்றழைக்கப்படும் காட்டிலாகாவில் முதலில் சேர்ந்து பின்னர் வருவாய்த்துறை ஆய்வாளரானார். அங்கிருந்து படிப்படியாக முன்னேறி தாசில்தார், முதல் வகுப்பு நடுவர், உதவி மாவட்ட ஆட்சியாளர் என்று பல்வேறு பதவிகளை வகித்து, ஐ.ஏ.எஸ்.ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவராக ஓராண்டுக்கும் மேலாக பதவி வகித்த பின்னர், 1959ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற பின் மீண்டும் திருநெல்வேலிக்கே வந்து பரம்பரை வீட்டில் தங்கி தனது இலக்கியப் பணியை மேற்கொண்டார்.
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப் பிள்ளையவர்கள் தூண்டுதல் பேரில், கல்லூரி நாட்களிலேயே ஆனந்தபோதினி பத்திரிகையில், கம்ப ராமாயணக் கட்டுரைகள் எழுதியவர். பின்னர் ரசிகமணி திரு டி.கே.சிதம்பரநாத முதலியாரவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு, முழுக்க முழுக்க ரசிகமணியின் பிரதம சீடராகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்.
தஞ்சையில் பணி புரிந்த போது அங்கு கலைச் செல்வங்கள், சிற்ப வடிவங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதைக் கண்டு, அவற்றைச் சேகரித்து, தஞ்சையில் அற்புதமான ஒரு கலைக்கூடமே அமைத்து விட்டார். ஓய்வு பெற்ற பின், தமிழகமெங்கும் சுற்றி அங்குள்ள கோயில்களைக் கண்டு, அவற்றின் வரலாற்றுச் சிறப்பு, கலை நயம் ஆகியவற்றை நுணுகி ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினார். இந்தக் கட்டுரைகளை, வேங்கடம் முதல் குமரி வரை என்ற தலைப்பில் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கல்கி பத்திரிகை பெருமை அடைந்தது.
திருநெல்வேலியின் ஒரு பகுதியான வண்ணாரப் பேட்டையில் ரசிகமணி டி.கே.சி.யின் வீட்டில் நடு முற்றமாக இருந்த, வட்டவடிவமான ஒரு தொட்டிக்கட்டு அமைப்பில் தான் அன்பர்கள் மாலை வேளையிலும், ஞாயிற்றுக் கிழமைகளிலும் கூடுவார்கள். இந்தக் கூட்டத்திற்குத் தான் வட்டத்தொட்டி என்ற பெயர் ஏற்பட்டது. மேலை நாட்டில் டாக்டர் ஜான்சனின் Literary Club க்கு எவ்வளவு பெருமையும் முக்கியத்துவமும் உண்டோ, அந்த அளவுக்கு இந்த திருநெல்வேலி வட்டத்தொட்டிக்கும் உண்டு. வட்டத்தொட்டியின் தலைவரும், ஸ்தாபகரும் ரசிகமணி என்றால், அதைத் தாங்கி நின்ற கற்றூண் செயலாளர் தொ.மு. பாஸ்கரத்தொண்டைமான் தான். பாஸ்கரத் தொண்டைமான் ரசிகமணியுடன் தனக்குள்ள தொடர்பின் அடிப்படையில் ரசிகமணி டி.கே.சி என்றோர் அருமையான புத்தகம் எழுதியுள்ளார். இன்னூல் மட்டுமன்று, ரசிகமணி தம் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் திரட்டி, ரசிகமணியின் கடிதங்கள் என்ற தலைப்பில் ஒரு தொகுப்பு நூலும் வெளியிட்டுள்ளார். மூதறிஞர் ராஜாஜியிலிருந்து, கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை, திருப்புகழ் மணி, டாக்டர் திருமூர்த்தி, கல்கி, ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு போன்ற பல நண்பர்களுக்கும், குழந்தைகளுக்கும் ரசிகமணி எழுதிய கடிதங்கள் இதில் உள்ளன. (தொண்டைமானின் மகள் ராஜேஸ்வரி நடராஜன் அவர்கள் ரசிகமணியின் கடிதங்கள் – நண்பர் பாஸ்கரத் தொண்டைமானுக்கு — பேசும் கடிதங்கள் (இரு பகுதிகள்) என்று தொகுத்து வெளியிட்டுள்ளார்)
பாஸ்கரத் தொண்டைமானின் உற்ற நண்பர்கள் கம்பர் அடிப்பொடி சா.கணேசன், மு. கு. அருணாசலக் கௌண்டர் (திருத்திய நா. கணேசனுக்கு நன்றி!), ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு, ஏ.சி. பால் நாடார் ஆகியோர். இலக்கிய உலகில் வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் அவர்களும், ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் அவர்களும் முக்கிய நண்பர்கள். முற்போக்கு எழுத்தாளர் தொ.மு.சிதம்பர ரகுநாதன், தொண்டைமானுடைய இளைய சகோதரர். ‘எதைச் செய்வது என்பது முக்கியமல்ல, எப்படிச் செய்வது என்பதே முக்கியம்’ என்ற கோட்பாட்டுடன் தன் வாழ்க்கையைத் திறம்பட அமைத்துக் கொண்டவர், பாஸ்கரத் தொண்டைமான்.
பாஸ்கரத் தொண்டைமான் 1965 ம் வருடம், மார்ச்சு மாதம் 31ம் தேதியன்று இறைவனடி சேர்ந்தார்.
இவர் எழுதிய பல நூல்களுள் குறிப்பிடத்தக்கவை கீழே:

- வேங்கடம் முதல் குமரி வரை (இது வரை நான்கு பதிப்புகள் வெளி வந்துள்ளன. பகுதி 1, பகுதி 2, பகுதி 3,
Like this:
Like ஏற்றப்படுகின்றது...