சுஜாதாவின் “மறுபடியும் கணேஷ்”

இன்னொரு கணேஷ்-வசந்த் கதை.

Inverted detective story என்று ஒரு sub-genre உண்டு. இதில் குற்றவாளி என்று யார் என்று கண்டுபிடிக்கும் வேலை கிடையாது. முதலில் குற்றவாளி எப்படி குற்றம் புரிகிறார் என்று விவரிக்கப்படும். அந்த விவரணையிலேயே குற்றத்தைக் கண்டுபிடிக்கத் தேவையான தடயங்களை விட்டுச் செல்வதும் இருக்கும். எப்படி அந்தத் தடயங்களைக் கண்டுபிடித்து குற்றவாளியைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. மறுபடியும் கணேஷ் அப்படிப்பட்ட ஒரு கதைதான்.

பிரபாகருக்கு மனைவி மேல் சந்தேகம். மனைவியும் பழைய காதலனோடு ஓடிவிடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். பிரபாகருக்கு இது தெரிய வருகிறது, மனைவியைக் கொன்றுவிட்டு சாமர்த்தியமாக alibi உருவாக்குகிறார். கணேஷ்-வசந்த் எப்படி கண்டுபிடிக்கிறார்கள், என்ன denouement என்பதுதான் கதை.

இந்தக் கதை மாலைமதியின் மாதப் பிரசுரமாக வெளிவந்த காலம் நினைவிருக்கிறது. அப்போது நான் பள்ளி மாணவன். நண்பர்களிடையே ஒரு காப்பி சுற்றி சுற்றி வந்தது. எங்களுக்கெல்லாம் சுஜாதா மோகம் பெரிதாக இந்தப் புத்தகமும் ஒரு காரணம். அப்போதெல்லாம் inverted detective story பற்றி தெரியாது. ஆஹா, எப்படி தோசையை திருப்பிப் போட்டு கலக்கி இருக்கிறார், ஒரு சின்ன மாற்றம் மூலம் கோணத்தையே மாற்றிவிட்டாரே, துப்பறியும் கதைகளின் ஸ்கோப் இத்தனை விரிவாகிவிட்டதே என்றெல்லாம் வியந்து கொண்டிருந்தோம்.

இன்று கான்செப்ட் பழையதுதான் என்று தெரிகிறது. இருந்தாலும் நல்ல மர்ம நாவல்தான். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.