கணேஷ்-வசந்த் நாவல் – ஆயிரத்தில் இருவர்

sujathaசில சமயம் சுஜாதா ஒரு கதையை சுவாரசியமாக ஆரம்பித்துவிட்டு எப்படியோ முடித்தால் போதும் என்று முடித்துவிடுவார். இந்தக் கதையும் அப்படித்தான்.

ganesh-vasanthகதையின் காலம் எழுபதுகளின் இறுதி. ஓயே ஓயே என்று ஒசிபிசா குழுவின் பாட்டு ஒன்று சென்னையில் படு பிரபலமாக இருந்த காலம். பேப்பரைத் திறந்தால் தினமும் காஸ் வெடித்து மனைவி சாவு, கணவன்/மாமியார் கைது என்று செய்தி வந்து கொண்டிருந்த காலம். என் மகள் நாராயணியை அவள் கணவன் – ஐ ஏ எஸ் அதிகாரி – கொன்றுவிட்டு காஸ் வெடித்து சாவு என்று சமாளித்துவிட்டான் என்று ஒரு குருட்டு அப்பாவும் வசந்த் சைட் அடிக்க வசதியாக அவரது இளைய மகள் பிரதிமாவும் கணேஷ்/வசந்தை அணுகுகிறார்கள். கணவனுக்கு இரண்டாவது கல்யாணம் நடக்கப் போகிறது. கணேஷ்-வசந்த் துப்பறிந்து கேஸ் போடலாம் என்று சொல்ல வரும்போது எல்லாரும் சமாதானம் ஆகிவிடுகிறார்கள். குருட்டு அப்பா ஏதோ தப்பாக சொல்லிவிட்டேன், கேஸ் எல்லாம் போடப்போவதில்லை என்கிறார். அதிகாரி மணம் செய்து கொள்ளப் போகும் பெண் தாக்கப்படுகிறாள். என்ன மர்மம் என்று வழக்கம் போலத் துப்பறிகிறார்கள்.

அப்பா குருடு இல்லை, மகளிடமே நடிக்கிறார். எதற்கு? Sympathy உருவாக்கவாம். உருவாக்கி என்ன செய்ய? கடைசியில் மர்மம் எல்லாம் ஜூஜூபியாக அவிழ்கிறது. யாரோ எடிட்டர் அவ்வளவுதான் பக்கம் என்று சொல்லிவிட்டாரோ என்னவோ, நேராக ஒரு confession!

கணேஷ்-வசந்த் கதைகளின் மீது எனக்கு இருக்கும் ஆர்வம் மர்மங்களாலோ அல்லது துப்பறிவதிலோ இல்லை. கதாபாத்திரங்கள் – குறிப்பாக வசந்த் என் பதின்ம வயதுகளின் ஹீரோவாக இருந்ததுதான் முக்கிய காரணம். இன்றைய இளைஞர்களை கணேஷ்-வசந்த் நாவல்கள் கவருமா என்பது சந்தேகம்தான். இந்த குறுநாவல் அந்த சந்தேகத்தை இன்னும் வலுவாக்குகிறது. எனக்கு நாஸ்டால்ஜியா, என் blog, அதனால் கணேஷ்-வசந்த் கதை படித்தால் நாலு வரி எழுதிவிடுகிறேன்.

கணேஷ்-வசந்த் ரசிகர்களுக்கு மட்டும்தான்.


தொகுக்கப்பட்ட பக்கம்: கணேஷ்-வசந்த் பக்கம்

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 10 – இறுதி கடிதம்

rainer_maria_rilkeபாரீஸ்,
கிருஸ்துமஸிற்கு அடுத்த நாள், 1908

உங்களுடைய அன்பு மிகுந்த கடிதத்தை அடையப் பெற்று மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், கப்பஸ். நீங்கள் சொல்லியிருந்த செய்திகள் யாவும் நற்செய்திகளே. அவற்றை மறுபடியும் மனதில் அசைப் போட்டு பார்க்கையில், அதிலிருந்த உள்ளார்ந்த வெளிப்பாடுகளும், உண்மையும் அதை மறுபடியும் ஒரு நற்செய்தியாகவே மனதில் எழச் செய்கிறது. இதைத் தான் கிறுஸ்துமஸ் அன்று உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன். ஆனால் என் படைப்புகளில் இந்த குளிர்காலம் முழுவதும் செலவிட்டுக் கொண்டிருந்தமையால், பழம் பெரும் பண்டிகை தினம் வந்ததையே நான் உணரவில்லை. அதனால் இறுதி நேரங்களில் சில்லறை வேலைகள் செய்வதற்கே நேரம் போதவில்லை, எழுதுவதும் சேர்த்து.

ஆனால் கிறுஸ்துமஸ் அன்று உங்களைக் குறித்து பல முறை எண்ணிக் கொண்டிருந்தேன். என் மனதில், வெளியே கோட்டைச் சுவர்களை கிழித்து எறிந்து விடப்போவது போல தென்காற்று வீசிக் கொண்டிருக்கையில், யாருமற்ற மலைகளின் மத்தியில் கோட்டைக்குள்ளே தனிமையில் நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருப்பதை கற்பனை செய்து பார்த்தேன்.

ஒலிகளுக்கும், அசைவுகளுக்கும் தனி அறைகளை உண்டாகும் அந்த அமைதி மிகவும் தீவிரமானதாக இருந்திருக்க கூடும். அதோடு சேர்த்து ஆதி காலம் முதல் தொடர்ந்து வரும் ஒருங்கிசைவின் உள்ளார்ந்த ஸ்வரம் போல ஒலிக்கும் தூரத்து கடலின் ஒலியையும் சேர்த்துக் கொண்டால், உங்களிடமிருந்து இனி எப்போதும் துடைத்தழித்து விட முடியாத அந்த தனிமையை மிகுந்த நம்பிக்கையுடன் உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற வேண்டுதலை மட்டுமே என்னால் செய்ய இயலும். மூதாதையரின் உதிரம் எப்படி நம்முடைய ரத்தத்துடன் கலந்து இன்னொரு முறை பிரதியெடுக்க முடியாத, தனித்துவமான மனிதர்களாக இந்த வாழ்க்கையில் மாற்றியதோ அதைப் போல அந்த தனிமையும் உங்களுக்குள்ளே பெயரிட முடியாத தாக்கத்தையும், மென்மையான, தீர்க்கமான ஒன்றாக செயல்படும்.

ஆமாம்: உங்களுக்கு கிடைத்துள்ள நிலையான, சொல்லிக் கொள்ளக் கூடிய வாழ்க்கையைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு. சுற்றி நிறைய மனிதர்கள் இல்லாத தனிமையான இடத்தில் கிடைத்திருக்கும் – சீருடைகளும், பதவியும், வேலையும்- கூடுதல் தீவிரத்தையும், அவசிய தேவையையும் உருவாக்கி உங்களை விழிப்புடன் வைத்திருக்கும். அது தற்சார்பு கொண்ட எச்சரிக்கையுணர்வை அனுமதிப்பதோடு சேர்த்து அதை மேலும் வளர்க்கவும் செய்யும். நம் மீது தாக்கம் செலுத்தும் சூழ்நிலைகளில் எப்போதும் இருப்போமேயானால் அது மகத்தான விஷயங்களின் முன் நம்மை கொண்டு போய் நிறுத்தும் – அது மட்டுமே நமக்கு போதுமானது.

கலையும் வாழ்வதற்கான ஒரு வழிதான். ஒருவர் வெளியே எப்படி வாழ்ந்தாலும் தம்மை அறியாமலேயே கலைக்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளலாம். உண்மைக்கு அருகாமையில் இருக்கும் தோறும் ஒருவர் கலையின் அருகில் இருக்கிறார். தன்னளவில் கலையுணர்வு குறைந்த செயல்கள் தம்மை எவ்வளவு தான் கலையின் அருகிலிருப்பதாக காட்டிக் கொண்டாலும் அவை யதார்த்தத்தில் கலையின் இருப்பை மறுதலித்து, அழிக்கின்றன – உதாரணமாக, மொத்தமாக பத்திரிக்கையியல், பெரும்பான்மையான விமர்சனங்கள், முக்கால்வாசி தங்களை இலக்கியம் என பறைசாற்றிக் கொள்பவை போன்றவைகளைச் சொல்லலாம். நீங்கள் அந்த தொழில்கள் எதிலும் போய் மாட்டிக் கொள்ளாமல் – சிறிது மென்மையற்ற யதார்த்தத்தில் – தனிமையுடனும், மனதைரியத்துடனும் இருப்பதைக் குறித்து எனக்கு மகிழ்ச்சி உண்டு.

புது வருடம் உங்களுக்கு இன்னும் அதில் உறுதுணையும், ஆற்றலையும் அளிக்கட்டும்.

என்றும் உங்களுடைய,
ஆர்.எம். ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8, 9

டீனேஜ் ஜேம்ஸ் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் பள்ளி மாணவனாக இருந்தபோது என்னவெல்லாம் நடந்திருக்கும்? இதை வைத்து இப்போது ஒரு சீரிஸ் வருகிறது. சார்லி ஹிக்சன் என்பவர் எழுதுகிறார். பாண்டுக்கு 13 வயது இருக்கும்போது சீரிஸ் ஆரம்பிக்கிறது. இது வரை ஐந்து கதைகள் வந்திருக்கின்றன. பாண்டின் “இன்றைய” திறமைகள், பிரச்சினைகளுக்கு சில கதைகளில் ஒரு மூல காரணம் சொல்லப்படுகிறது. உதாரணமாக ஏதோ ஒரு ஜேம்ஸ் பாண்ட் கதையில் பாண்ட் ஈடன் (Eton) பள்ளியிலிருந்து ஒரு வேலைக்காரியுடன் ஓடிவிட்டதாக ஒரு குறிப்பு வரும். அதுதான் By Royal Command கதை. பாண்ட் ஜூடோ மாதிரி ஏதோ ஒரு கலையில் நிபுணர். அதை அவருக்கு ஒரு ஜப்பானியர் Hurricane Gold கதையில் கற்றுத் தருகிறார். ஒரு பதினைந்து பதினாறு வயதில் படிக்க ஏற்றவை. எனக்கும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

Silverfin, 2005: பாண்ட் ஈடன் பள்ளியில் 13 வயதில் சேருகிறான். அங்கே ஹெல்லபோர் என்ற மாணவனுடன் போட்டி ஏற்படுகிறது. ஹெல்லபோர் ஒரு விளையாட்டுப் போட்டியில் ஏமாற்றி வெல்ல முயற்சிப்பதை பாண்ட் தடுக்கிறான். பிறகு ஸ்காட்லாந்துக்கு விடுமுறைக்கு போகிறான். பக்கத்தில் ஹெல்லபோரின் கோட்டை இருக்கிறது. அங்கே உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கிறான். ஹெல்லபோர்-பாண்ட் விளையாட்டுப் போட்டி சுவாரசியமாக இருக்கும். சில பாண்ட் கதைகளில் – கோல்ட்ஃபிங்கர், மூன்ரேகர் நினைவு வருகிறது – மெயின் கதையை விட அதில் நடக்கும் விளையாட்டுப் போட்டி சுவாரசியமாக இருக்கும். கோல்ட்ஃபிங்கரில் கோல்ஃப், மூன்ரேகரில் பிரிட்ஜ். அந்த மாதிரி இருந்தது.

Blood Fever, 2006: பாண்ட் விடுமுறைக்கு சக மாணவர்கள், ஆசிரியர்களுடன் இத்தாலியை சேர்ந்த சார்டினியா என்ற தீவுக்கு செல்கிறான். அங்கே ஒரு ரகசிய திருட்டு கும்பல்.

Double or Die, 2007: முப்பதுகளில் ஒரு கம்ப்யூட்டரை உருவாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். அதை திருட கம்யூனிஸ்ட் ரஷியா முயற்சி செய்கிறது. பாண்ட் தடுக்கிறான். பாண்டுக்கு சீட்டு விளையாடுவதில் அனுபவம் ஏற்படுகிறது.

Hurricane Gold, 2007: மெக்சிகோவுக்கு செல்லும் பாண்ட். அங்கே திருடர்கள், புயல், கடைசியாக ஒரு வில்லனின் தீவு. அங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பல அபாயங்கள் நிறைந்த ஒரு பாதையில் செல்ல வேண்டும் என்று வில்லன் நிபந்தனை விதிக்கிறான். முதலை, பிரான்ஹா, சூடான தகடு மேல் நடக்க வேண்டியது, தேள் என்று பல அபாயம் இருக்கிறது. டாக்டர் நோ கதையை நினைவுபடுத்துகிறது.

By Royal Command, 2008: ஈடனுக்கு வரும் இங்கிலாந்து அரசனை கொல்ல கம்யூனிஸ்ட் சதி. உண்மையிலேயே கம்யூனிஸ்ட் சதிதானா? பாண்ட் காதலிலும் முதல் தடவையாக விழுகிறான்.

உங்களுக்கு ஜேம்ஸ் பாண்ட் கதைகள் பிடிக்கும் என்றால் நிச்சயமாக படிக்கலாம். த்ரில்லர், ஆக்ஷன் கதைகள் என்ற வகையில் C+ grade-தான் கொடுப்பேன்.

தொடர்புடைய பக்கம்:
யங் பாண்ட் சீரிஸ் – விக்கி குறிப்பு

தொகுக்கப்பட்ட பக்கம்: த்ரில்லர்கள்

இளம் கவிஞனுக்கான கடிதங்கள் – 9

rainer_maria_rilkeஃபுரோபெர்க், ஸ்வீடன்
நவம்பர் 4, 1904

அன்புள்ள கப்பஸ்,
கடிதம் அனுப்ப இயலாத இடைப்பட்ட காலங்களில் நான் பகுதி பயணத்திலும், பகுதி அதிக வேலைப் பளுவுடன் இருந்தேன். இன்றும் கூட எழுதுவதற்கு சிரமமாக உள்ளது ஏனென்றால் நிறைய கடிதங்களை எழுதி கை வலியெடுக்கிறது. நான் உரைக்க மற்றொருவர் எழுதுவதாக இருந்தால் உங்களிடன் கூடுதலாக பேசியிருப்பேன். ஆனால் இன்றைய நிலையில் உங்களுடைய நீண்ட கடிதத்திற்கு என்னுடைய சில சொற்களை பதிலாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

அன்புடைய கப்பஸ், உங்களைக் குறித்து பல முறை நான் எண்ணிக் கொள்வதுண்டு. என் எண்ணங்களின் உள்ளார்ந்த வாழ்த்துக்கள் எப்போதாவது உங்களுக்கு நன்மையளிக்கும். என் கடிதங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கிறதா என பல தருணங்களில் நான் ஐயம் கொள்வதுண்டு. “ஆமாம் அவை உதவியாக உள்ளன” என சொல்லாதீர்கள். நன்றிகள் எதுவும் சொல்லாமல் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்; அவைகளிலிருந்து என்ன வெளிவருகிறது என நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

உங்களின் கேள்விகளுக்குளே மறுபடியும் பயணிக்க நான் விரும்பவில்லை. உங்களுடைய அவநம்பிக்கை, அக வாழ்க்கைக்கும், புற வாழ்க்கைக்கும் இடையில் உங்களால் ஏற்படுத்திக் கொள்ள முடியாத ஒருங்கிசைவு அல்லது உங்களை ஒடுக்கும் சகலவிதமான சஞ்சலங்களைக் குறித்து நான் சொல்ல வேண்டியவைகளை சொல்லி விட்டேன். இனி நான் வேண்டுவதெல்லாம் உங்களுக்குளே தாங்கிக் கொள்வதற்கான பொறுமை, நம்பிக்கை உருவாவதற்கான எளிமை, மற்றவர்களோடு இருக்கையில் உணரும் தனிமையின் போது வாழ்க்கையின் கடினத்தின் மீது ஏற்படும் கூடுதலான நம்பிக்கை போன்றவைகளே. அதைத் தவிர்த்து, வாழ்க்கையை உங்களைக் கொண்டு நடை பெற விடுங்கள். என் சொற்களை நம்புங்கள்: வாழ்க்கை எப்போதும் சரியாகவே நடை பெறுகிறது.

அடுத்தது உணர்ச்சிகளைக் குறித்து: உங்களை ஒருமுகப்படுத்தி, எழுச்சி செய்யக் கொள்ளும் அத்தனை உணர்ச்சிகளும் தூய்மையானவையே. உங்களை ஒரு பக்கமாக பிடித்து, இழுத்து மனதை உருச்சிதைவு செய்யும் உணர்ச்சியே தூய்மையற்றது. உங்களுடைய குழந்தைப் பருவத்தை எண்ணிப் பார்க்கையில் உருவாகும் எல்லா உணர்ச்சிகளும் சிறப்பானவை. உங்களுடைய சிறந்த வாழ்க்கை கணங்களில் உணர்ந்ததை விட இன்னும் கூடுதலாக உங்களை நிறைவுடன் உணரச் செய்பவை எல்லம் சரியானவை. போதையேற்றாமல், மனக்குழப்பம் இல்லாமல் ஆனால் ஆழத்தில் கண்டு கொள்ள முடிந்த ஆனந்தத்தால் உங்களுடைய ரத்தம் முழுவதிலும் தீவிரமேற்றக் கூடியவை கூட நல்லதே. நான் எதைக் குறித்து பேசுகிறேன் எனப் புரிகிறதா?

உங்களுடைய சந்தேகங்களை முறையாக பழக்கிக் கொண்டால் அவைகளையும் ஒரு நற்குணமாக மாற்றலாம். சந்தேகங்கள் உங்களுடைய அறிதலாக வேண்டும், விமர்சனமாக வேண்டும். உங்களுக்குளே எதையாவது அழிக்க முற்படும் பொழுது அதனிடன் கேள்விகளைக் கேளுங்கள். இது ஏன் உனக்கு அசிங்கமாக தெரிகிறது என வினவுங்கள். அதற்கான ஆதாரங்களை கோரி, அவைகளை சோதனைக்கு உட்படுத்துங்கள். அதன் பிறகு சந்தேகம் உங்கள் முன் அதிர்ச்சியுற்று நிற்பதை காணலாம், சங்கோஜம் கொள்வதை உணரலாம், ஏன் சில சமயம் எதிர்ப்பு தெரிவிப்பதைக் கூட கேட்கலாம். ஆனால் விட்டுக் கொடுத்துவிடாதீர்கள், வாதங்களை முன் வைக்க வற்புறுத்துங்கள். ஒவ்வொரு முறையும் இதைப் போலவே கருத்துடன், பிடிவாதத்துடன் செயல்படுங்கள்: ஒரு நாள் உங்களை அழிப்பதில் இருந்து விலகி அது உங்களுடைய மிகச் சிறந்த சேவகனாக மாறிவிடும் – உங்களுடைய வாழ்க்கையை கட்டியெழுப்பும் கருவிகளுள் மிகவும் சாமர்த்தியமான ஒன்றாக கூட மாறி விடலாம்.

இவ்வளவு மட்டுமே இன்று என்னால் கூற முடியும், கப்பஸ். ஆனால், இந்த கடிதத்துடன் “ ப்ரேக் ஜெர்மன் லேபர்” பத்திரிக்கையில் வெளிவந்த என்னுடைய சிறு கவிதையையும் சேர்த்து அனுப்புகிறேன். அதில், இன்னும் கூடுதலாக உங்களுடன் வாழ்வையும், மரணத்தையும் குறித்து பேசுகிறேன் மற்றும் அவற்றின் சிறப்பையும், மகிமையையும் சொல்கிறேன்.

உங்களுடைய,
ரெய்னர் மரியா ரில்கே.


தொகுக்கப்பட்ட பக்கங்கள்: முத்துகிருஷ்ணன் பதிவுகள், மொழிபெயர்ப்புகள்

தொடர்புடைய சுட்டிகள்: முந்தைய கடிதங்கள் – கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, 7, 8

2012 சாஹித்ய அகாடமி விருது

t_selvaraj_tholt_selvaraj_theneerதோல் என்ற நாவலுக்காக டி. செல்வராஜுக்கு கிடைத்திருக்கிறது. ஜெயமோகனின் இரண்டாம் பட்டியலில் (முக்கியமான, ஆனால் முழு கலை வெற்றி கூடாத படைப்புகள்) அவரது தேநீர் நாவல் இருக்கிறது என்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியவில்லை. மலரும் சருகும், அக்னிகுண்டம், மூலதனம் என்று இன்னும் சில நாவல்களையும் எழுதி இருக்கிறாராம். படித்தவர்கள் யாராவது இருந்தால் எப்படிப்பட்ட புத்தகங்கள் என்று கொஞ்சம் சொல்லுங்கள்.

தமிழுக்கான கமிட்டியில் சா. கந்தசாமி, அப்துல் ரஹ்மான் (கவிஞரோ?), பேராசிரியர் பாலசுப்ரமணியம் இருக்கிறார்கள். சா. கந்தசாமி இருக்கும் கமிட்டி தகுதி உள்ளவரையே தேர்ந்தெடுத்திருக்கும் என்று நம்புவோம். (வேறு வழியில்லை. :-))

அவருடைய ஒரு பேட்டி இங்கே. பேட்டியிலிருந்து இவர் கம்யூனிஸ்ட் சார்புள்ள எழுத்தாளர், வக்கீல் என்று தெரிகிறது.

அவருடைய புகைப்படம் சரியாகக் கிடைக்கவில்லை, யாரிடமாவது இருந்தால் அனுப்புங்கள் புகைப்படத்துக்கு சுட்டி தந்த பாலசுப்ரமணியனுக்கு நன்றி! பிற மொழியில் வெற்றி பெற்றவர்களையும் பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள்.

d_selvaraj


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்
தொடர்புடைய சுட்டி:
சாஹித்ய அகாடமி அறிவிப்பு
நக்கீரன் பேட்டி

நாஞ்சிலுக்கு இயல் விருது

நாஞ்சிலுக்கு இது பரிசு சீசன் போலிருக்கிறது. ஞானபீடமும் விஷ்ணுபுரம் விருதும்தான் பாக்கி.

ஜெயமோகன் தளத்திலிருந்து மீள்பதிப்பு

NN_GC1

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012-ம் ஆண்டுக்கான இயல் விருது, மூத்த தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரும், நாஞ்சில் நாட்டு வட்டார மொழியைத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பிரபலப்படுத்தியவருமான நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ். பொன்னுத்துரை, எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன், பம்பாய் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த ‘ஏடு’ இதழில் தன் இலக்கியப்பணியைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விரதம்’ சிறுகதையில் தொடங்கி, முப்பத்தைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதிவருகிறார். இருபத்தைந்து வயதிலேயே வேலை நிமித்தமாக சொந்த ஊரை விட்டுச் சென்றிருந்தாலும் இவரது படைப்புகளில் நாஞ்சில் நாட்டு மக்களும், மொழியுமே பிரதானமாக வெளிப்படுகின்றன. இவர் சங்க இலக்கியங்களிலும் கம்பராமாயணத்திலும் நல்ல பயிற்சியும் ஈடுபாடும் கொண்டவர். இதுவரை 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுப்புகள் என வெளியிட்டுள்ளார்.

சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற இவர், ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்புக்காக 2010-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். இவரது நாவல்களும், சிறுகதைகளும் தமிழ்நாடு, கேரளா மற்றும் டெல்லியிலுள்ள பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 14 பேர் இவரது படைப்புகளை முன்வைத்து முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இவரது ‘தலைகீழ் விகிதங்கள்’, ‘எட்டுத் திக்கும் மதயானை’ நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. தவிர, இயக்குநர் பாலாவின் ‘பரதேசி’ திரைப்படத்திற்கு வசனமும் எழுதியுள்ளார்.

‘அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே’ என்று சொல்லும் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு, 2012ம் வருடத்து இயல் விருது எதிர்வரும் ஜூன் மாதம் ரொறொன்ரோவில் வழங்கப்படும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், நாஞ்சில் பக்கம்

தொடர்புடைய சுட்டி: நாஞ்சில் நாடன் தளம்

கமலா சடகோபன் RIP

kamala_sadagopanகமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நாவல் எனக்கு நினைவிருக்கிறது. சின்ன வயதில் படித்திருக்கிறேன். கலைமகளில் தொடராக வந்தது. அவர் மறைந்தார் என்று தெரிந்ததும் தேவை இல்லாமல் மீண்டும் ஒரு முறை இணையத்தில் தேடிப் படிக்கவும் செய்தேன். ஒரே ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. எப்படி தி.ஜா.வுக்கும் பாலகுமாரனுக்கும் நடுவில் பெரிய இடைவெளி இருக்கிறதோ அதே போல இவருக்கும் சிவசங்கரி, வாஸந்தி, லக்ஷ்மி, இந்துமதிக்கு நடுவிலும் பெரிய இடைவெளி இருக்கிறது. ஒரு footnote ஆகக் கூட வரமாட்டார். முழுமையாக நிராகரிக்கலாம்.

ஆனால் அவர் எழத்துக்களை விட அவர் சுவாரசியமான மனிதராகத் தெரிகிறார். ஹிந்துவில் வந்திருக்கும் இந்த கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

என்னைப் போல வெட்டியாக எழுதுவேன் எழுதுவேன் என்று கனவு கண்டுகொண்டிருக்காமல் முயன்று எழுதி இருக்கிறார். அதற்காகவே (மட்டும்) அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.

தொடர்புடைய சுட்டி: ஹிந்து ஆபிச்சுவரி

தொகுக்கப்பட்ட பக்கம்: அஞ்சலிகள்