பிடித்த சிறுகதை – நதிக்கரையில்

நதிக்கரையில் சிறுகதை எனக்குப் பிடித்தமான ஒன்று. பீமன், யுதிஷ்டிரன் ஆகியோரின் சித்திரங்களும், உள்ளே ஆறாத காயமாக இருக்கும் சோகமும் என்ன அற்புதமாக வந்திருக்கின்றன! கடோத்கஜனைத் தழுவ பீமன் ஏங்குவது எந்த அப்பனாலும் உணரக் கூடியது. அந்த சோக நேரத்தில் என் மனதில் ஓடிக் கொண்டிருந்த வரிகள் – “உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி!”

எனக்கு மகாபாரதப் பித்து அதிகம் என்று ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது சொல்லிக் கொள்வேன். 🙂 மீண்டும் அப்படி பீற்றிக் கொள்ள வாய்ப்பளித்த ஜெயமோகனுக்கு நன்றி!

6 thoughts on “பிடித்த சிறுகதை – நதிக்கரையில்

  1. அற்புதமான சிறுகதை. ஆங்காங்கே வரும் சில வரிகள் வாழ்க்கை தத்துவத்தை சொல்கிறது. கங்கையில் அனைவரும் மீண்டும் கானல்நீர் போல தோன்றி மறைவது இக்கதையில்தான் வாசித்தேன். மகாபாரதக்கதைகள் மீது எனக்கும் பித்து கொஞ்சம் அதிகம். பகிர்விற்கு நன்றி. இக்கதையை எழுதிய ஜெயமோகனுக்கு நன்றிகள் பல.

    Like

  2. மகாபாரத பித்தர்கள் ஏராளம் போல. மீண்டும் எனக்கு பாரதம் பிடிக்கும் என்று டவண்டை அடிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி. பாரதம் எப்போது படித்தாலும் சாந்தி பர்வம் வரும் போது கொஞ்சம் தயக்கம் வரும், அதை மீண்டும் படிக்க. அதன் சோகம், அழிவு அத்தகையது. மிகப்பெரிய அழிவிற்கு மிஞ்சியவர்கள், வாழ்க்கை தத்துவத்தை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். இக்கதை அவ்வழிவையும் தத்துவத்தையும் அழகாக கூறுகின்றது. கடோத்கஜனைப் பற்றியும் அதிகம் ஒன்றும் பாரதத்தில் காணப்படவில்லை. பாண்டவர்களின் புத்திர சோகம் முழுவது பாரதத்தில் காட்ட படவில்லையோ என்ற நினைப்பு எப்போதும் வரும். யார் கண்டது நமது உரையாசிரியர்கள் வெட்டி விட்டார்களோ என்னவோ. முழுமையான் மொழி பெயர்ப்பு வாங்கித்தான் பார்க்க வேண்டும்.

    Like

  3. எனக்கும் மகாபாரதம் ராமாயணம் மீது காதல் உண்டு. அது சம்பந்தமான சிறுகதைகளைத் தொகுத்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது. எனக்குத்தெரிந்து ஜெயமோகனின் பாடலிபுத்திரம், பத்ம வியூகம் சிறுகதையும், வடக்குமுகம், பதுமை நாடகமும் உள்ளன.

    Like

  4. சித்திரவீதிக்காரன் மற்றும் ரெங்கசுப்ரமணி, நிறைய மகாபாரதப் பித்தர்கள் இருக்கிறோம் என்று தெரிகிறது! அது என்ன டவண்டை, புது வார்த்தையாக இருக்கிறதே! கேசவமணி, இந்தப் பதிவைப் பாருங்கள். https://siliconshelf.wordpress.com/2010/11/06/மகாபாரதம்-சார்ந்த-படைப்ப/

    Like

  5. டவண்டை என்பது ஒரு வாத்தியம். பெரிய சைஸ் உடுக்கை போல இருக்கும். ஒரு புறம் மட்டும் குச்சியால் அடிப்பது. சத்தம் பலமாக இருக்கும். வீட்டில் அடிக்கடி சொல்லி அது பழக்கமாகிவிட்டது.

    எங்கள் கோவில் திருவிழாவில், சுவாமி புறப்பாட்டிற்கு முன்பு பலி போடுவதுண்டு. அதற்கு நித்திய உற்சவர் என்னும் விக்கிரகத்தை பல்லக்கில் கட்டி எடுத்துச் செல்வோம். அந்த பல்லக்கிற்கு மட்டும் அடிப்பது அது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் உண்டா என்று தெரியாது.

    Like

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.