காதரின் ஸ்டாக்கெட் எழுதிய “ஹெல்ப்”

The_Help_movieஹெல்ப் போன வருஷம் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது. ஆக்டேவியா ஸ்பென்சருக்கு சிறந்த குணசித்திர நடிகைக்கான ஆஸ்கார் கிடைத்தது. வயோலா டேவிசுக்கும் விருது கிடைத்திருக்க வேண்டும். இவர்கள் இருவரைத் தவிர ஹில்லியாக நடித்த ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்டும் கலக்கி இருந்தார். சிறந்த நடிப்பு, சுவாரசியமான கதை இரண்டும் திரைப்படத்தை உயர்த்தின. ஆனால் படம் உலக மகா சிறந்தது இல்லை, அதற்கு அடுத்த படியில்தான் இருந்தது.

kathryn_stockettபடத்தைப் பார்த்ததிலிருந்து நாவலையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். சமீபத்தில் ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கினேன். புத்தகமும் அப்படித்தான். சுவாரசியமானது, ஒரு காலகட்டத்தை/சூழலை நமக்கு காட்டுகிறது, ஆனால் உலக மகா புத்தகம் இல்லை.

ஐம்பதுகள். அமெரிக்காவில் மிஸ்சிசிபி மாநிலம் கறுப்பர்களுக்கு எதிரான இன வெறியில் முன்னணியில் இருந்தது. ஒரு டிபிகல் சிறு நகரம். வெள்ளையர்கள் நகரத்துக்கு கறுப்பர்கள் “சேரி”யிலிருந்து தலைமுறைகளாக சென்று வீட்டு வேலை செய்கிறார்கள். ஹில்லி என்ற குடும்பத் தலைவி ஒரு டிபிகல் bully. அவளைப் பின்பற்றும் ஒரு கூட்டம். பல விதங்களில் அவமானப்படுத்தப்படும், ஒடுக்கப்படும் கறுப்பு வேலைக்காரிகள். தற்செயலாக ஸ்கீட்டர் என்ற பெண் கறுப்பு வேலைக்காரிகளின் கண்ணோட்டத்தை புத்தகமாக எழுத முனைகிறாள். அவளுக்கு தகவல் தருவதாகத் தெரிந்தால் இவர்கள் ஒழிந்தார்கள். ஆனாலும் ஒருவர் இருவர் என்று ஆரம்பித்து பலரும் அவளுக்கு “பேட்டி” கொடுக்கிறார்கள். புத்தகம் தங்களைச் சித்தரிக்கிறது என்று உணரும் வெள்ளை எஜமானிகள் தவிக்கிறார்கள்.

கதையின் உச்சக்கட்டம் என்று ஆசிரியர் நினைத்திருப்பது மின்னி என்ற வேலைக்காரி ஹில்லிக்கு கேக் செய்து கொடுக்கும் நிகழ்ச்சிதான். ஆனால் எனக்கு உச்சக்கட்டமாகத் தெரிவது பலரும் ஸ்கீடடரிடம் பேச வரும் இடம்தான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்