மிட்நைட் இன் பாரிஸ் – திரைப்பட விமர்சனம்

midnight_in_parisரொம்ப நாளாயிற்று இப்படி ஒரு படத்தை என்ஜாய் செய்து. உட்டி ஆலன் திரைக்கதையில் கலக்கிவிட்டார். திரைக்கதைக்காக அவருக்கு கிடைத்த ஆஸ்கார் முற்றிலும் சரியானவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

woody_allenஇன்றைய பாரிசில் ஒரு எழுத்தாளன். திருமணம் ஆகப் போகிறது. ஹாலிவுட்டில் திரைக்கதை ஆசிரியனாக நன்றாக சம்பாதிக்கிறான். ஆனால் அவனுக்கு இலக்கியம் படைக்க ஆசை. மனைவி ஆகப் போகிறவளுக்கு இலக்கியம் கிலக்கியம் எல்லாம் ஒரு விஷயம் இல்லை. 1920களின் பாரிஸ் – ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்ட், ஹெமிங்வே, பிகாசோ, கோல் போர்ட்டர், சால்வடார் டாலி, லூயி புனுவெல், கெர்ட்ரூட் ஸ்டெய்ன், டி.எஸ். எலியட் போன்றவர்களின் பாரிஸ் – அவனைப் பொறுத்த வரை ஒரு லட்சிய உலகம். ஒரு நாள் இரவு பாரிசில் அவனுக்கு வழி தவறிவிடுகிறது. இரவு பனிரண்டு மணிக்கு ஒரு காரில் வரும் ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரல்ட்! பிறகு அவன் தினமும் அந்த இடத்துக்கு வந்து இரவு 12 மணிக்கு 1920களின் பாரிசுக்குப் பயணிக்கிறான். ஹெமிங்க்வேயை சந்திக்கிறான். கெர்ட்ரூட் ஸ்டெய்ன் அவனது நாவலைப் படிக்க வாங்கிக் கொள்கிறாள். பிகாசோவின் காதலிக்கும் அவனுக்கும் பரஸ்பர ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு அவர்கள் இருவரும் 1920களின் பாரிசிலிருந்து அவளது லட்சிய உலகத்துக்கு – La Belle Epoque – 1890களின், பால் காகின், டூலோஸ்-லாட்ரெக் ஆகியோரின் பாரிஸ் – பயணிக்கிறார்கள். பால் காகினுக்கோ மைக்கேலான்ஜெலோவின் உலகம்தான் லட்சிய உலகம்!

ஓவன் வில்சன் இத்தனை சிறப்பாக நடிப்பார் என்று நான் நினைத்ததில்லை. டாலி வரும் காட்சி simply superb! கீழே அந்தக் காட்சியைக் கொடுத்திருக்கிறேன். படத்தின் நடுவில் இந்தக் காட்சி வருவதால் முழுதும் புரியாமல் போகலாம்; இருந்தாலும் பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

2011இல் வந்த திரைப்படம். உட்டி ஆலன் இயக்கம். ஓவன் வில்சன், ரேச்சல் மக்காடம்ஸ், கேத்தி பேட்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன். நான் டிவிடியைப் பார்த்தேன், ஆனால் யூட்யூபிலேயே கிடைக்கிறதாம்.


தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்

தொடர்புடைய சுட்டி: IMDB குறிப்பு