அட்ஜஸ்ட்மெண்ட் பீரோ – திரைப்படம்

adjustment bureauபொதுவாக புத்தகங்கள்+எழுத்தாளர்கள் பற்றி மட்டும்தான் இந்தத் தளத்தில் என்றாலும் இன்றும் ஒரு விதிவிலக்கு. இது ஒரு புத்திசாலித்தனமான திரைப்படம், ஃபிலிப் கே. டிக் எழுதிய ஒரு SF சிறுகதையை மூலமாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை. அதனால் முழுதும் விதிவிலக்கு என்றும் சொல்வதற்கில்லை.

philip_k_dickடிக்கின் சிறுகதையின் premise சிம்பிளானது. உலகத்தை வழி நடத்தும் ஒரு டீம். ஒரு விதத்தில் கடவுளின் டீம் மாதிரி. இந்த டீம் அவ்வப்போது மனிதர்களில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் பெரிய விளைவுகளை உண்டாக்குகிறது. ஒரு முறை ஒரு சின்ன clerical error. மாற்றப்பட வேண்டிய ஒரு மனிதன் மற்றவர்கள் மாற்றப்படுவதை பார்த்துவிடுகிறான். பிறகு என்ன என்பதுதான் கதை. சுவாரசியமான premise. ஆனால் கதை சுமார்தான்.

இதை வைத்து ஜார்ஜ் நோல்ஃபி ஒரு clever திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். டேவிட் நாரிஸ் செனட்டர் தேர்தலில் தோற்கிறான். அன்று இரவு எலீஸ் என்ற ஒரு பெண்ணை சந்திக்கிறான். ஏறக்குறைய “கண்டதும் காதல்”. ஆனால் கடவுள் டீமின் திட்டப்படி அந்த ஒரு முறைதான் அவர்கள் சந்திக்க வேண்டும். ஒரு சின்னத் தவறு மூலம் அவர்கள் இரண்டாம் முறை சந்திக்கிறார்கள். அந்த நினைவுகளை மாற்ற கடவுள் டீம் முனையும்போது நாரிஸ் அதைப் பார்த்துவிடுகிறான். அவனை சமாளிப்பதற்காக அந்த டீம் தங்கள் இருப்பை அவனுக்குச் சொல்கிறது, தங்கள் திட்டப்படி எலீசை அவன் மறந்துவிட வேண்டும் என்றும் கட்டளை இடுகிறது. ஆனால் இருவராலும் மறக்க முடியவில்லை. மூன்று வருஷங்கள் கழித்து அவர்கள் மீண்டும் தற்செயலாகச் சந்திக்கிறார்கள். இந்த முறை நாரிஸ் தடைகளை மீறி அவளோடு இணைகிறான். ஆனால் அவன் எலீசொடு தொடர்ந்தால் எலீசின் வாழ்க்கை பாழாகிவிடும் என்று அவன் மிரட்டப்படுகிறான், பிரிவு. பிறகு என்ன ஆகிறது என்பதுதான் திரைப்படம்.

எல்லாருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மாட் டேமன். படம் visual ஆகச் சிறப்பாக வந்திருக்கிறது. நோல்ஃபியே இயக்கி இருக்கிறார். 2011இல் வந்த திரைப்படம். பாருங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: திரைப்படங்கள்
தொடர்புடைய சுட்டிகள்:
IMDB குறிப்பு
ஃபிலிப் கே. டிக் எழுதிய சிறுகதை – Adjustment Team