கால இடைவெளி அதிகரிக்கும் தோறும், கடந்த காலங்களை நினைத்துப் பார்க்கையில் சிறு சம்பவங்கள் நினைவிலிருந்து உதிர்ந்து விடுகின்றன. தீவிரமான அனுபவங்கள் சுருங்கி அவற்றின் சாரம் மட்டுமே மனதில் எஞ்சுகிறது. அவைகளை மீட்டெடுக்கையில் சரி, தப்பு, வீண், வேடிக்கை என ஒரு மன உணர்வாகவே வெளி வருகிறது. முன்பொரு காலத்தில் நாம் சந்தித்த, பழகிய, பயணித்த மனிதர்களும் அப்படிப்பட்ட அசையா பிம்பங்களாகவே மனதில் தங்கி விடுகின்றனர். குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும், வேலையிடத்திலும் என் மனதில் தங்கி விட்ட ஆளுமைகளின் பிம்பங்கள் குறிப்பிட்ட சில சம்பவங்களோடு தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விட்டன. இப்படித்தான் எல்லோரும் ஞாபக சேமிப்புகளை மனதிற்குள் அடுக்கி வைத்திருப்பார்களாக இருக்கலாம்.
அதைப் போல பவா செல்லதுரை தான் அறிந்த மனிதர்களின் ஆளுமையை சிறு சம்பவங்கள் மூலம் மீட்டெடுத்து படைத்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு வம்சி வெளியீடாகிய ‘எல்லா நாளும் கார்த்திகை’ என்ற புத்தகம். பவாவின் இரு வாசகர்கள் இந்நூலுக்கு சிறந்த முன்னுரை எழுதியுள்ளார்கள். சுவாரசியம் கலந்து எழுதப்பட்டுள்ள இந்த தொகுப்பில் மொத்தம் 22 மனிதர்களைப் பற்றிய ஆசிரியரின் அனுபவங்களும், அதனால் அவதானிக்கப்பட்ட குணாதசியங்களும் நேரடியாகவும், சில நேரம் கவித்துவத்தோடும் விவரிக்கப்பட்டுள்ளன. இலக்கியப் பரப்பிலும், திரைப்படத் துறையிலும் எல்லோராலும் அறியப்பட்டுள்ள ஆளுமைகளுக்கு இடையில் ஆசிரியரின் சில நெருங்கிய நண்பர்களைப் பற்றிய உருக்கமான கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
பவா செல்லதுரை தான் பழகிய மனிதர்களிடன் அவதானித்த சிறந்த குணங்களின் வழியாகவே அவர்களை உருவகிக்கிறார். சில நேரங்களில் அவர்களுடைய படைப்புகளைக் குறித்து பெரிய அபிப்ராயம் இல்லை என்று வெளிப்படையாக கூறினாலும், அவர்களுடைய எதிர்மறை குணங்களைப் பற்றிய புறவயமான அவதானிப்பை பதிவு செய்வதைக் கூட தவிர்த்து விடுகிறார்.
பல துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருப்பதாலோ அல்லது அவருடைய தனிப்பட்ட குணத்தினாலோ பவாவிடம் எல்லோரும் மிக சீக்கிரம் உரிமையுடன் பழக ஆரம்பித்து விடுகிறார்கள் என்பது போல தோன்றுகிறது. மம்மூட்டியைக் குறித்த கட்டுரை பொதுவெளியில் காணக்கிடைக்கும் நட்சத்திரத்திற்கு வெகுவாக மாறுபட்ட மனிதரை காட்டியது. லெனின் என்ற திரைப்படக் கலைஞனின் முழு ஆளுமையை மிகவும் அழகாக ஒரு கட்டுரையில் உருவாக்கியுள்ளார்.
“பொங்கல் பண்டிகைக்கு நான் ஏன் விவசாயிக்கு வாழ்த்து சொல்லணும்னு வந்து நிக்குறீங்க?” என்று சில வருடங்களுக்கு முன் தொலைக்காட்சி குழுவை நாசர் கேட்டதை பார்த்துள்ளேன். அந்த கேள்விக்கு பின்னால் உள்ள ஆளுமையை “ஒப்பனையற்ற முகம்” என்ற கட்டுரை வெளிச்சமிடுகிறது. ஒரு சிறுகதையைப் போல எதிர்பாராத முடிச்சுடன் நிறைவடைகிறது பி.சி.ஸ்ரீராம் குறித்த நினைவலை.
பவாவின் வெளியில் அறியப்படாத மனிதர்களில் திருவண்ணாமலையிலேயே வாழ்ந்து வரும் புகைப்பட கலைஞராகிய கிரீஷ் ஃபேலன் என்ற வெளிநாட்டுகாரர், கைலாஷ் சிவன் என்ற கவிஞர், புற்று நோயால் இளமையிலேயே மரித்த ராஜவேல் குறித்த நெருக்கமான மனப்பதிவுகளை அளிக்கிறார். ஜெயகாந்தன் குறித்த தனிக் கட்டுரை இருந்தாலும் வேறு சில கட்டுரைகளிலும் அவர் வந்து போகிறார் சில சமயம் சம்பவங்களில் ஜெகேவாக, சில சமயம் அவரைக் குறித்த ஞாபக மீட்டலாக.
மற்றவைகளிலிருந்து கோணங்கி மற்றும் சுந்தர ராமசாமியைக் குறித்த கட்டுரைகள் வித்தியாசமாக எனக்குத் தோன்றியது. கோணங்கியை குறித்த ‘கல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல்குதிரை’ என்ற கட்டுரை ஒப்பு நோக்கையில் மற்ற கட்டுரைகளைப் போல நேரடியாக எழுதப் படவில்லை. இலக்கிய உலகில் என்ன நடந்தது எனத் தெரிந்திருந்தால் அக்கட்டுரையின் உவமைகளை இன்னும் ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ‘மொழியின் பலிபீடம்’ என்ற சுராவைக் குறித்த கட்டுரையில் பவா அவருடன் ஒரு முறை கூட நேரில் பழகிய அனுபவம் இருந்ததாகக் காட்டவில்லை. சில செவிவழிச் செய்திகள் மூலமாகவும், சுராவின் கதை ஒன்றின் சுருக்கமாகவும் அவரைப் பற்றிய பிம்பத்தை முன்வைக்கிறார். இதுவே தொகுப்பின் பலவீனமான கட்டுரை என்பது என் எண்ணம்.
இந்த கட்டுரை வழியாக ஆசிரியர் அறியாமலேயே அவரைக் குறித்தும், அவருடைய குடும்பத்தைக் குறித்தும் பல அறிந்து கொள்ள முடிகிறது. அது பேசப்பட்ட மனிதர்கள் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகுவதால் தான் என்று யூகித்துக் கொள்கிறேன்.
இதைப் போன்று நான் வாசித்த பிற அனுபவக் கட்டுரைகளுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இந்த ஆளுமைகள் எல்லோரும் (பெரும்பாலும்) பவாவைத் தேடி வருகிறார்கள். அதனால் பெரும்பான்மையான சம்பவங்கள் திருவண்ணாமலையில் நடைபெறுகின்றன. ஆசிரியர் தான் விரும்பிய ஆளுமைகளை காண வெவ்வேறு இடங்களுக்கு சென்றதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்படவேயில்லை. அவ்வகையில் மறைமுகமாக திருவண்ணமலையும் ‘எல்லா நாளும் கார்த்திகை’யின் பகுதியாக வாசிப்பு முடிகையில் எஞ்சுகிறது.
எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பலவிதமான புத்தகங்களை தேடிப் படிக்கின்றனர். ஒரு புத்தகம் வாசகர்களிடம் அறிமுகமாகும் சூழல் பெரும்பாலும் சிறு வேற்றுமைகளை கடந்து அடிப்படையில் பத்திரிகை விமர்சனங்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்த எழுத்தாளர்களின் சிபாரிசு, புத்தகக் கண்காட்சி, இலக்கிய கூட்டம், இணையதளம் போன்ற காரணிகளாலேயே ஏற்படுகின்றது. எந்த ஒரு நல்ல படைப்பும் பொதுவாகவே இவ்வெளிச்சங்களால் அடையாளம் காணப்படுகிறது.
நல்லதொரு முதற்படைப்பு உருவாகி, அதற்கு மிக சாதகமான விமர்சனமும் ஒரு பிரபல பத்திரிக்கையால் கொடுக்கப்பட்டு, ஆனால் எவராலும் படிக்கப்படாமல், காலத்தின் சுழற்சியில் முப்பது வருடங்களுக்கும் மேலாக தொலைக்கப்பட்டு, பிறகு அதை ஒரு வாசகன் கண்டெடுத்து, அதன் எழுத்தாளனை தேடிச் செல்கின்ற பயணத்தின் பதிவே ‘தி ஸ்டோன் ரீடர் (The Stone Reader)’ என்கின்ற ஆவணப் படம்.
எழுபதுகளின் தொடக்கத்தில் ‘தி ஸ்டோன்ஸ் ஆப்ஃ ஸம்மர் (The Stones of Summer)’ என்ற நாவல் ‘டாவ் மோஸ்மென் (Dow Mossman)’ என்பவரால் எழுதப்பட்டு அமெரிக்காவில் வெளியானது. அக்காலத்தின் பிரபல நாளேடான ‘தி நியூயார்க் டைம்ஸ்‘ அந்நாவலுக்கு மிக சாதகமான விமர்சனம் கொடுத்து, பரிந்துரை செய்து செய்தி வெளியிட்டது.
அதைக் கண்டு இந்த ஆவண படத்தின் இயக்குனரான ‘மார்க் மொஸ்கொவிஸ் (Mark Moskowitz)’ என்ற இளம் வாசகன் அதை வாங்கி படிக்க முயன்றான். ஆனால் அவ்வெழுத்தின் ஆழத்தை தொடமுடியாததால் கைவிட்டு விட்டான். முப்பது வருடங்களில் வாசகனின் தரம் வெகுவாக உயர்ந்தது. இடையில் அந்நாவலை வாசிக்க தொடங்கி நேரமின்மை அல்லது வேறு அலுவல்கள் காரணமாக தொடர முடியாமல் கைவிட்டு விட்டான்.
இறுதியில் அதை படித்து முடித்த பின்பு, தான் படித்த புத்தகங்களின் தரப் பட்டியலின் முதல் அடுக்கில் வைக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் அவை என உணர்ந்து, அந்த எழுத்தாளனின் பிற படைப்புகளை தேடுகின்றார். அப்பொழுதுதான் எழுத்துலகில் அந்த மனிதனை எங்கேயும் காணக்கிடைக்கவில்லை என்பது தெரிய வருகிறது. இணையதளம், பதிப்பாளர்கள், விமர்சகர்கள் என எவரிடமும் மாஸ்மெனை பற்றிய தகவல் என்றில்லாது அடிப்படை பரிச்சயம் கூட கிடைக்கவில்லை. மேலும், அப்படி ஒரு நாவல் வெளிவந்ததாக கேள்விப்பட்டோர் கூட யாரும் இல்லை. இங்கிருந்து தொடங்குகிறது படத்தின் பயணம்.
பூமிப் பரப்பிலிருந்து காணாமல் போன ஒருவரை தேடுவது போல உள்ளது. இயக்குனர் சந்திக்கும் ஒவ்வொரு பதிப்பாளரும், விமர்சகரும் அந்நாவலை படித்து விட்டு, “எப்படி இது வெளியே தெரியாமலேயே போனது? இந்த மனிதனால் இப்படி எழுதிவிட்டு எங்ஙனம் அடுத்து எதுவுமே எழுதாமல் இருக்க முடிந்தது?”, என்று வியக்கிறனர். மிக முக்கியமான, தரம் மிக்க எழுத்துக்களை படித்து விட்டோம் அல்லது குறைந்தபட்சம் அவற்றை பற்றிய அறிமுகமாவது வைத்திருக்கிறோம் என்ற எண்ணத்தை உடைத்து தனக்கு தெரியாமலேயே இப்படி ஒரு நாவல் இருந்திருக்கிறது என்ற யதார்த்தத்தை நேரிடும் போது அவர்களின் வியப்பு நன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் மாஸ்மென் இறந்திருப்பார் என்ற எண்ணம் இயக்குனருக்கும், நமக்கும் மனதில் வருகிறது. மேலும், எந்த எழுத்தாளனும் ஒரு நாவலை எழுதி முடித்தவுடன் அதிலிருந்து முழுவதுமாக வெளியே வர வேண்டும், ஆனால் இந்த மனிதனுக்கு அது சாத்தியப்படாமலேயே போயிருக்கலாம் என சில எழுத்தாளர்களும், விமர்சகர்களும் அபிப்ராயப்படுகிறார்கள்.
பின்னணி இசை வெகு குறைவாக இருந்தாலும், இப்படம் நம்மிடையே கொஞ்சம் கொஞ்சமாக படபடப்பையும், எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. இந்த தேடலில் மிக பிரபலமான நாவலான ‘காட்ச்-22 (Catch-22)’ என்ற நாவலின் பதிப்பாளருடன் ஒரு உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளளது. இதுவும் முதலில் கவனிக்கப்படாமலேயெ இருந்து பிறகு அப்பதிப்பாளரின் முயற்சியால் வெளிக் கொணரப்பட்டு மிகவும் பிரபலமானது. அந்த உரையாடலில் ஒரு படைப்பு வெளிவருவதற்கு ஒரு பதிப்பாளரின் பங்கு மறைமுகமாக சொல்லப்படுகிறது.
ஒரு நிலையில், இனி மாஸ்மெனை கண்டுபிடிக்கவே முடியாது என்று முடிவெடுத்து இயக்குனர் கைவிட்டு விடுகிறார். பல நாட்கள் கழித்து அதிர்ஷ்டவசமாக ஐயோவா மாகாணத்தில் நடைபெற்ற எழுத்தாளர் பயிற்சி பட்டறையில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை புகைப்படத்தின் மூலம் ‘துப்பு’ கிடைத்து மறுபடியும் தேடல் தொடர்கிறது. இறுதியில் அதே மாகாணத்தில் ஒரு புறநகர் பகுதியில், கீழ் நடுத்தரவர்க்க சூழலில் மாஸ்மெனை கண்டடைகிறார்.
அது ஒருவிதமான சோகத்துடன் கூடிய அழகான தருணம்.
பிறகு சுமார் பத்து நிமிடங்கள் மாஸ்மெனுடன் இயக்குனரின் உரையாடல் மற்றும் அவருடைய வீட்டின் அறைகளும், மற்றும் அடித்தளத்தில் இருக்கும் அறையில் இருக்கும் தாள்களும், திருத்தி அமைக்கப்பட்ட படைப்புகளின் நகல்களும் இடம் பெறுகின்றன. அவை வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி சிதைந்து காணாமல் போன எல்லா கலைஞர்களின் பொது உதாரணங்களாகவே தோன்றுகிறது. அவர்களுடைய வீடுகளும் இப்படித் தான் இருந்திருக்குமா? எவ்வளவு தாள்களை எழுதி வைத்திருந்திருப்பார்கள்? எவ்வளவு பக்கங்களை விரக்தியில் வீசி எறிந்திருப்பார்கள்? தனக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவர்கள் தாங்கிக் கொண்ட வேதனைகளும், ஏமாற்றங்களும் எப்படி இருந்திருக்கும்? குடும்பம், பொருளாதார நிலை, கட்டுப்பாடுகள் என வேறொருவருக்காக கனவுகளை தொடராமல் வாழும் பொழுது, மற்றொருவர் மூலமாக தன் மனதில் தோன்றிய கருக்களின் சாயலில் படைப்புகளை பார்க்க நேரிடும்போது என்ன தோன்றியிருக்கும்? என்று பல கேள்விகளை அது கேட்கத் தோன்றுகிறது.
கொஞ்சம் அவதானித்தால் இது கலைஞன் என்ற வட்டத்திலிருந்து விரிந்து நாமும் நம்மை சுற்றியிருக்கும் பெரும்பான்மையானவர்களின் வாழ்கையை காட்டுவது போல உள்ளது. எந்த ஒரு மனதின் உள்ளே பார்த்தாலும் அந்த வீட்டில் கிடந்த தாள்களை போல திருத்தியமைக்கப்பட்ட கனவுகளும், நிறைவேறாத ஆசைகளும், நிராகரிக்கப்பட்ட சிறு சந்தோஷங்களும், சமரசம் செய்யப்பட்ட சுதந்திரங்களும் கிடந்து புழுங்கிக் கொண்டிருப்பதை காணலாம். அதனால் தான் என்னவோ, இப்படம் ஒரு தேர்ந்த எழுத்தாளனை ஒரு முதிர்ந்த வாசகன் கண்டெடுக்கும் பயணம் என்பதையும் தாண்டி, சக மனிதர்களின் மனதை தேடி அவர்களின் கனவுகளை கண்டெடுக்க வேண்டியதின் அவசியத்தை மறைமுகமாக உணர்த்துவது போல் தோன்றுகிறது.
இப்படம் வெளியான பிறகு ‘பார்ன்ஸ் அண்ட் நோபிள்ஸ்’ என்ற புத்தக நிறுவனம் ஸ்டோன்ஸ் ஆஃப் ஸ்ம்மரை மறுபதிப்பு செய்து வெளியிட்டது. மாஸ்மெனுக்காக மகிழ்ச்சி அடைந்தாலும் அதை அடுத்து இன்னும் அறியப்படாமல் கிடக்கும் படைப்புகளும், அதன் படைப்பாளிகளும், கனவுகளை தொலைத்த மனிதர்களும் ஒரு புகை படிந்த கண்ணாடியின் பின் தனக்கான வெளிச்சத்தை எதிர்பார்த்து நிற்பதை போன்ற காட்சியை நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தமிழில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இளைய தலைமுறை எழுத்தாளர்களுள் ஒருவர் கீரனூர் ஜாகிர்ராஜா. சமீபத்தில் அவர் எழுதி, ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ள நாவல் ‘கருத்த லெப்பை’. எழுபது பக்கங்களுக்கும் குறைவான இந்த நாவல் கருத்த லெப்பை என்கிற ஜபருல்லாஹ் என்ற இளைஞனின் கதையை சொல்வதாகும்.
லெப்பை என்பவர்கள் வசதியில் ராவுத்தர்களை விட குறைந்தவர்கள், அதனால் அதிகாரம் என்று எதுவுமில்லாதவர்கள். முன்பு குதிரை வியாபாரம் செய்து, பிறகு கயிறு வியாபாரம் செய்து வரும் ராவுத்தர்களுக்கு ஓதிக் கொடுத்தும், அவர்களுடைய கடை நிலை அலுவல்கள் செய்தும் லெப்பைகள் வாழ்கிறார்கள். ராவுத்தர்கள் வீட்டிற்கு முறுக்கு சுட்டுக் கொடுக்கும் பாத்துமாவின் இளைய மகன் கருத்த லெப்பை. அவனுடைய அக்கா ருக்கையா. அவர்களுடைய அப்பா ராவுத்தர் குடும்பங்களில் ஓதிக் கொடுத்தும், எடுபிடி வேலையும் செய்கிறார் என்றாலும் கூட வீட்டின் வருமானம் பாத்துமாவை நம்பித்தான் உள்ளது.
லெப்பைகளுக்கு மத்தியில் சகஜமாக பழகும் ஒரே ராவுத்தர் மிட்டாய் அமீது. குழந்தைகளுக்கு பல வடிவங்களில் மிட்டாயை செய்து விற்று பிழைப்பு நடத்துகிறார். ஊரிலிருந்து விலகி இருக்கும் சாம்பன் மடத்தில் எங்கிருந்தோ வந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாவாதான் கருத்த லெப்பையின் மானசீக குரு.
பித்து லெப்பை வம்சாவளியில் வந்த ஈசாகின் வயது முதிர்ந்த, புத்தி சுவாதீனமற்ற தம்பி பதுருதீனுக்கு ருக்கையாவை பாத்துமா திருமணம் செய்து கொடுத்து விடுகிறாள். வவ்வா கொட்டகை என்ற பித்து கொட்டகையில் விலங்கிடப்பட்ட பதுருதீனுடன் ஈசாக்கின் கட்டுப்பாடில் ருக்கையா வாழ்ந்து வருகிறாள்.
பள்ளிவாசல் மகாசபை நிர்வாகத்திற்கு முதன்முறையாக இந்த முறை லெப்பைகள் சார்பாக நூர் முகமது போட்டியிட்டு தோற்கிறார். லெப்பை ஒருவன் போட்டியிட்டு ஒன்பது ஓட்டு வாங்கிவிட்டான் என்பதை காரியதரிசி அஹமது கனி ராவுத்தரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இதைத் தொடர அனுமதிக்க கூடாது என்பதாலும், நூர் லெப்பைக்கு ஒன்பது பேர் ஓட்டு போட்டுவிட்டார்கள் என்பதற்கு தண்டனையாகவும் ராவுத்தர் கம்பெனியிலிருந்து லெப்பைகளை வேலையை விட்டு நீக்குகிறார்கள். அதில் வேலையிழந்து கருத்த லெப்பையின் அப்பாவும் வீட்டிற்கு வந்துவிடுகிறார். ஒருநாள் தெருவில் அலங்கோலமாக பத்ருதீனையும், அழுது கொண்டிருக்கும் ருக்கையாவையும் காண சகிக்காமல் அவளை தன் வீட்டிற்கு கொண்டு வந்து விடுகிறான்.
ருக்கையாவையும், கருத்த லெப்பையையும் சிறு வயது முதலே செல்லம் கொடுத்து வளர்த்தவர் கொடிகால் மாமு என்கிற நூர் முகமது லெப்பை. நூர் லெப்பைக்கு மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு போக தன்னுடைய வண்டியை அனுப்ப மறுத்து விடுகிறார் கனி ராவுத்தர். நூர் முகமது இறந்து விடுகிறார். ஈசாக் மறுபடியும் வந்து ருக்கையாவை தன்னுடைய பித்து கொட்டகைக்கு கூட்டிக் கொண்டு போய் விடுகிறான்.
கருத்த லெப்பை தன்னுடைய அப்பாவின் தாயான ராதியம்மாவிடம் அவர்களுடைய கனவில் வரும் நாயகம் ரசூலுல்லாவின் உருவத்தை விவரிக்க சொல்லி கேட்கிறான். இறைவனுக்கு உருவம் வைக்கக் கூடாது என்பது தெரிந்தும் ராதியம்மா சொன்னதை காகிதத்தில் பதிந்து மிட்டாய் அமீதிடம் கொடுத்து சின்னா பிள்ளையின் வீட்டில் ரகசியமாக அதை சிலையாக வடிக்கச் சொல்கிறான்.
பத்ருதீன் உடல்நிலை மோசமாகி சாவிற்கு அருகிலிருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஈசாக்கை அடித்து போட்டுவிட்டு அவனைக் கூட்டிக் கொண்டு பாலசமுத்திரம் கன்னி பீவி தர்க்காவிற்கு ருக்கையா கிளம்பி போகிறாள்.
அம்மாவின் முறுக்கு விற்ற காசை சின்னா பிள்ளை வீட்டிற்கு வாடகையாக கொடுத்து விட்டு அமீது உருவாக்கிய களிமண் உருவத்தை வெளியில் கொண்டு வைக்கிறான் கருத்த லெப்பை. அவன் மீது எல்லா திசைகளிலிருந்தும் கல்லடி விழுகிறது. உதிரத்துடன் தரையில் விழுகையில் மழை வலுப்பதுடன் நாவல் முடிகிறது.
சமூகத்தில் தங்களுடைய இடம் இதுதான் என்று ஒத்துக் கொண்டும் வாழும் லெப்பைகளுக்கு மத்தியில் கருத்த லெப்பை மட்டும் விதிவிலக்காக உள்ளான். அக்கா ருக்கையா, கொடிக்கால் மாமு, சின்ன பேச்சி தவிர மற்ற எவர் மீதும் லெப்பை என்பதற்காக அவன் நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. லெப்பை என்ற காரணத்தினால் புத்தி சுவாதீனமற்றவனுக்கு தெரிந்தே ருக்கையாவை திருமணம் செய்து கொடுத்தார்கள் என்பது அவனை லெப்பைகளின் மேல் குரோதத்தை ஏற்படுத்துகிறது. அவன் வாசிக்கும் புத்தகங்களும், ராவுத்தர்கள் தம்மை சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் மிதித்து கேவலப்படுத்துவதும் இயல்பாகவே அவர்கள் மேலும் தீராக் கோபத்தை உருவாக்குகிறது.
ஆனால் மற்ற எவரையும் விட அவன் கோபம் கொள்வது தன்னுடைய இயலாமையைக் குறித்து மட்டுமே. தன் அக்காவின் நிலையைக் குறித்து அங்கலாய்க்கும் பொழுதும், அவன் மயக்கத்தில் கிடக்கையில் உடல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளும் போர்டர் குத்புதீனை காணும் பொழுதும் அவனுள் அது புகைந்து அடங்குவதை உணர முடிகிறது. அதற்கு காரணம் அவனால் துறக்க முடியாத அடையாளங்கள் மற்றும் அவற்றின் வழியாக வரும் கட்டுப்பாடுகள்தான்.
சிறு வயதில் மற்ற பிள்ளைகள் மிட்டாய் அமீதிடம் தேளும், பாம்பும் செய்து தரச் சொல்லி கேட்கையில் கருத்த லெப்பை மட்டும் சைத்தானை செய்து தரச் சொல்கிறான். அந்த உருவம் வெறும் கறுப்பு வெள்ளை நிறங்களால் உருவாக்கி கொடுக்கிறார் அமீது. அது கருத்த லெப்பையின் சைத்தான். அவன் எதிர்படுவது எல்லாம் வெறும் துருவங்கள் மட்டுமே. அவன் பாட்டி நாணியம்மா, ரதியம்மா இருவரும் நேரெதிர் துருவங்கள். ராவுத்தர்களூம், லெப்பைகளும் இரு துருவங்கள். அவனுடைய கனவுகளும், யதார்த்தங்களும் இரு வேறு மூலைகளில் உள்ளன.
மதம், இனம் என எல்லா அடையாளங்களையும் துறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் சாம்பன் மடத்தின் பாவாவை சந்திக்கும் பொழுது பெய்யும் மழை அவன் கல்லடிபடும் பொழுதும் பெய்கிறது. இறுதியில் இறைவனின் உருவத்தை அதே அமீதிடம் செய்ய வைத்து அதோடு தன்னை அழித்து கொள்ளும் பொழுது, கருத்த லெப்பை என்ற அடையாளங்கள் முழுவதுமாக மறைந்து வெறும் ஜபருல்லாவாக எழுகிறான் என்றே நான் புரிந்து கொண்டேன்.
இந்த நாவலில் வேறு சில இழைகளும் உள்ளன. குறிப்பாக ருக்கையாவின் கனவுகளும், எதார்த்தமும், இறுதியில் அதை உடைத்து அவள் வெளியேறுவதையும் சொல்லலாம். கருத்த லெப்பை விடுதலை அடையும் அதே நேரத்தில் அவளும் பித்து கொட்டகையை விட்டும், ஈசாக்கை விட்டும் விலகுவது குறிப்படத்தக்கது. அதைப் போலவே பூக்களையும், இலைகளையும் உதிர்க்கும் முக்கு முருங்கை மரம், கருத்த லெப்பையின் பூனை ‘ஹிட்லர்’ என சில படிமங்களும் உள்ளன. ஆனால் அவை பெரிய அளவில் விரிக்கப்படவில்லை
நாவலில் நடக்கும் சம்பவங்களின் கால அளவை கணிக்க முடியவில்லை. ஒரு மாதமா அல்லது ஒரு வருடமா என குறிப்பிட்டு சொல்ல முடியாது. இன்னும் விரிவாக எழுதியிருந்தால் மேலும் சிறப்பாக வந்திருக்கக் கூடும். இவை விமர்சனங்கள் என்பதை விட எதிர்பார்ப்புகள் மட்டுமே.
கருத்த லெப்பை எளிதில் வாசித்து விடக் கூடிய சிறப்பான குறுநாவல்.
ரொம்ப நாளாக முன்னால் எப்போதோ எழுதி வைத்திருந்ததை அப்டேட் செய்து செய்து பதிவு போட்டுக் கொண்டிருந்தேன். இனி மேல் புதிதாக எழுதினால்தான் உண்டு. 🙂 முத்துகிருஷ்ணன், பக்ஸ், ராஜன், அருணா, பாலாஜி, விசு, சுந்தரேஷ் யாராவது வாங்கப்பா!
ஃபேஸ்புக்கில் பார்த்தது. ஃபேஸ்புக்கில் இதைப் படித்தேன் அதைப் படிக்கிறேன் என்று அவ்வப்போது வரும் கமெண்டுகளை வைத்து இதைத் தொகுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இதில் போன வருஷம் நானும் 4 புத்தகம் படித்தேன். ஃபேஸ்புக்கில் போடவில்லை. 🙂 வசதிக்காக லிஸ்ட் கீழே.
The Hunger Games (The Hunger Games, #1) – Suzanne Collins
Catching Fire (The Hunger Games, #2) – Suzanne Collins
Mockingjay (The Hunger Games, #3) – Suzanne Collins
Wages of Fear எனக்குப் பிடித்த திரைப்படங்களில் ஒன்று. கதை கிதை எதுவும் கிடையாது. மிக நீளமான பில்டப். கொஞ்சம் செயற்கையான முடிவு. இப்படி பல குறைகள் இருந்தாலும் நல்ல திரைப்படம். லாரி நிறைய வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு கரடுமுரடான பாதையில் வெகு தூரம் போக வேண்டும். லாரி நிறைய ஆடினால் வெடித்துவிடும். ரோடில் இருக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன பள்ளமும் அபாயமானது. அந்த அபாயங்கள்தான் திரைப்படம். சிறப்பான நடிப்பு. Yves Montand, Charles Vanel மற்றும் Peter van Eyck கலக்கி இருப்பார்கள். பயம் என்னவெல்லாம் செய்யும் என்பதையும் உறுதி என்னவெல்லாம் செய்யும் என்பதையும் பிரமாதமாக சித்தரித்திருப்பார்கள்.
சமீபத்தில் தோழி அருணாவுடன் மீண்டும் ஒரு முறை பார்த்தேன். அப்போதுதான் இது ஒரு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது என்று தெரிய வந்தது. என்ன அதிசயமோ, அடுத்த முறை நூலகம் போனபோது புத்தகம் நான் போய் உட்கார்ந்த மேஜையில் கிடந்தது. தூக்கிக் கொண்டு வந்துவிட்டேன்.
புத்தகத்தைப் பற்றித்தான் எழுத நினைத்து இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஆனால் புத்தகமா திரைப்படமா என்று கேட்டால் புத்தகத்தை மறந்துவிட்டு திரைப்படத்தைத்தான் நேராகப் பாருங்கள் என்றுதான் பரிந்துரைப்பேன். திரைப்படம் புத்தகத்துக்கு உண்மையாக இருக்கிறது.
திரைப்படத்தின் காட்சி சாத்தியங்கள் புத்தகத்தில் இல்லை. எடுத்துக்காட்டுக்கு ஒன்று – வெடிமருந்து லாரி, குண்டும் குழியுமான சாலை. ஒரு pothole-ஐ தவிர்க்க முடியவில்லை. எத்தனை மெதுவாக இறக்க முடியுமோ அத்தனை மெதுவாக அந்தக் குழியில் இறக்குகிறார்கள். இருந்தாலும் டொக் என்றுதான் இறங்குகிறது. வண்டி ஓட்டுபவர்களின் டென்ஷன் நிறைந்த முகங்கள், நொடிகள். நல்ல வேளையாக ஒன்றும் நடக்கவில்லை. இன்னும் கொஞ்ச தூரத்தில் இதை விட பெரிய pothole. மீண்டும் டென்ஷன் நிறைந்த முகங்கள், நொடிகள், மெதுவாகச் செலுத்தப்படும் லாரி. இப்போது லாரியின் டயர் அந்த pothole-இன் விளிம்புக்கு சில மில்லிமீட்டர் தூரத்தில் செல்கிறது. இந்தக் காட்சியை என்னதான் எழுதினாலும் சினிமாவில் பார்ப்பது போல வராது!
இந்தப் புத்தகத்தின் சினிமா சாத்தியங்களைக் கண்ட இயக்குனர் Henri-Georges Clouzot-வைப் பாராட்ட வேண்டும்.
எனக்கு மிகவும் பிடித்த காட்சிகள் இரண்டு. ஒன்று நீளமான லாரியை ஒரு தற்காலிக மர அமைப்பு மீது செலுத்தி ஒரு three point turn எடுக்க வேண்டும். இன்னொன்றில் பெட்ரோல் நிரம்பிய ஒரு பள்ளத்தில் லாரியை இறக்கி ஏற்ற வேண்டும். யோசித்துப் பார்த்தால் லாரிகள் கிளம்புவது முதல் பிரமாதமான காட்சிகள்தான்.
புத்தகம் 1950-இல் எழுதப்பட்டது. திரைப்படம் 53-இல் வெளிவந்தது. பல விருதுகள் பெற்றது.
இன்றைக்கு ரோபோ என்ற வார்த்தை பிரபலமாக இருக்கிறது. ஷங்கர்-சுஜாதா உபயத்தில் எல்லாருக்கும் தெரிந்த வார்த்தை. அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு இன்னும் நூறு வருஷம் கூட ஆகவில்லை. செக்கோஸ்லொவாகிய எழுத்தாளரான கரெல் கபெக்தான் முதல் முறையாக அதை அவரது “ஆர்.யூ.ஆர்.” என்ற நாடகத்தில் உருவாக்கிப் பயன்படுத்தினார். R.U.R. என்பது Rossum’s Universal Robots என்பதின் சுருக்கம்.
இன்றைக்கு நாடகம் கொஞ்சம் cliched ஆக இருக்கிறது. ஆனால் வந்தபோது புதுமையாக இருந்திருக்கும். அதே எந்திரங்கள் உயிர் பெற்று உலகைக் கைப்பற்றும் கதைதான். அனேகமாக இதுதான் முதல் முறை அந்த தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கும் என்று நினைக்கிறேன். கடைசியில் இரு எந்திரன்கள் புதிய ஆதாம்-ஏவாளாக உருவெடுப்பதாக முடித்திருப்பது இன்றும் கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கிறது.
நாடகத்தை இணையத்தில் படிக்கலாம். உங்களுக்கு போரடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மலர்மன்னன் எழுதிய நாயகன் பாரதி என்ற புத்தகத்தைப் பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டேன். பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்களை சிறுகதைகளாக எழுதி இருக்கிறாராம். ஒரு சிறுகதை திண்ணை தளத்தில் படித்தேன், பிடித்தும் இருந்தது. படிக்க விரும்பும் புத்தகம் என்று அதைப் பற்றி எழுத எண்ணி இருந்தேன்.
மலர்மன்னன் போன்றவர்களின் முக்கியத்துவம் அவர்கள் சென்ற பல தசாப்தங்களின் பெரும் அரசியல் ஆளுமைகளை அருகில் இருந்து பார்த்ததிலும் அவற்றை ஆவணப்படுத்தியதிலும்தான் இருக்கிறது. மலர்மன்னன் எல்லா நிகழ்ச்சிகளையும் ஹிந்துத்துவ ஆதரவு, திராவிட இயக்க எதிர்ப்பு (ஆனால் அண்ணா மீது அவருக்கு பெரிய soft corner உண்டு) என்ற filters மூலம்தான் பார்த்தார். ஆனாலும் அந்த ஆவணக் கட்டுரைகள் முக்கியமானவையே.
அதிதீவிர ஹிந்துத்துவவாதியான மலர்மன்னனுக்கும் அஹிந்துத்துவவாதியான எனக்கும் எக்கச்சக்க கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனாலும் அவர் தமிழ் ஹிந்து தளத்திலோ திண்ணையிலோ எழுதுவதை நான் தவறாமல் படித்தேன். அதுவே அவரது வெற்றி.
மூன்று தலைவர்கள் – ஜான் எஃப். கென்னடி, லிண்டன் ஜான்சன், ராபர்ட் கென்னடி (தம்பி). அண்ணன் கென்னடியும் ஜான்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே கனவு காண்பவர்கள், திட்டம் போட்டுக் கொண்டிருப்பவர்கள். தம்பி கென்னடி அண்ணனின் கனவில் தன்னைக் கரைத்துக் கொண்டவர், அண்ணனுக்காக முழு மூச்சாக உழைப்பவர். இந்தப் புத்தகம் இந்த மூவருக்கும் நடுவில் நடந்த அரசியல் போராட்டம்தான்.
ஜான்சன் மூவரில் மூத்தவர். அப்பா டெக்சஸில் காங்கிரஸ்மானாக இருந்தவர். ஆனால் அப்புறம் பெரிய சரிவு. ஜான்சன் வளர்ந்த காலத்தில் அவர் குடும்பம்தான் ஊரில் ஏழைக் குடும்பம். பல அவமானங்கள். என்ன ஆனாலும் அப்பா மாதிரி ஆகிவிடக் கூடாது என்ற உறுதி (இல்லை பயம்) மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஜான்சனின் மிகச் சிறந்த குணம் ஒன்றும் இல்லாத பதவிகளிலும் எதையாவது சாதிப்பது, அதன் மூலம் தன் அதிகாரத்தை, பலத்தை பெருக்கிக் கொள்வது. எப்படியோ தகிடுதத்தம் (கள்ள ஓட்டு) செய்து செனட்டர் ஆகிறார். அமெரிக்க செனட் அப்போது உருப்படாமல் போய்க்கொண்டிருந்த ஒரு அமைப்பு. கொஞ்சம் கொஞ்சமாக அப்போது பயனற்றவை என கருதப்பட்ட பதவிகளில் அமர்கிறார். அப்புறம் ஒரே அடிதான் – செனட் பல முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுகிறது. 1952-60 காலகட்டத்தில் ஜான்சன் செனட் மெஜாரிட்டி லீடர் ஆகிறார். ஜனாதிபதிக்கு அடுத்தபடி வாஷிங்டன் வட்டத்தில் அதையே முக்கியமான பதவியாக மாற்றுகிறார். முக்கியமாக கறுப்பர்களுக்கான (ஓட்டுரிமை பற்றிய) சட்டம் ஒன்றை பல எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றுகிறார்.
கென்னடி ராஜா வீட்டுப் பையன். அப்பா பெரிய பணக்காரர். சிறு வயதிலிருந்தே அரசியல் அதிகாரத்துக்காக திட்டமிட்டவர். Heroic பண்புகள் வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர். அப்பாவின் பணம், முழுமூச்சாக உழைக்கும் தம்பி, என்று பல பலங்கள். கடுமையான முதுகு வலியையும் மீறி விடாமல் உழைத்தவர். இரண்டாம் உலகப் போரில் கூட பணியாற்றியவர்களைக் காப்பாற்றியது அவருக்கு புகழைத் தேடித் தந்தது. சிறு வயதிலேயே செனட்டர் ஆனவர். ஆனால் செனட்டில் பெரிதாக பங்காற்றவில்லை. இளைஞர், அழகர். தொலைக்காட்சியின் சாத்தியங்களை சீக்கிரமே கண்டுகொண்டவர்.
ராபர்ட் கென்னடிக்கும் ஜான்சனுக்கும் இடையில் பல வருஷங்களாகக் கொஞ்சம் புகைச்சல். ஜான்சன் அதிகாரத்தில் இருப்பவர், ரா. கென்னடி அதிகாரத்தின் முதல் படியில். ஜான்சன் அவ்வப்போது ரா. கென்னடியை சீண்டுகிறார். ரா. கென்னடி அண்ணனின் மானேஜர். அண்ணன் தம்பிக்கு இடையில் ஒரு பெரிய புரிதல் இருந்தது.
1957-58 காலகட்டத்தில் ஜான்சனுக்குத்தான் அடுத்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் ஆளுமையில் இரண்டு குறைகள் – கென்னடிகளைப் போல தாம் பணக்கார, ஹார்வர்டில் படித்த பின்புலம் இல்லாதவர் என்று ஒரு complex; தோற்றுவிடுவோமோ என்ற பெரிய பயம். நண்பர்கள் எல்லாரும் வற்புறுத்தியும் தான் வேட்பாளர் என்று அறிவிக்க மறுக்கிறார். ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் convention-இல் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, பெரிய தலைவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு smoke filled backroom-இல் compromise வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பார்கள், அதில் தனக்குத்தான் வாய்ப்பு, தான் வேட்பாளர் என்று கடைசியில் சொன்னால் போதும் என்று கணக்கு போடுகிறார். கென்னடிகள் முழுமூச்சாக, வருஷக் கணக்காக தங்களுக்கு ஆதரவு தேடுகிறார்கள். Convention-இல் கென்னடி வேட்பாளர் ஆகிறார்.
கென்னடியின் பெரிய பலவீனம் அவருக்கு தெற்கு மாநிலங்களில் ஆதரவு இல்லை என்பது. ஜான்சனுக்குப் பெரிய பலவீனம் அவர் ஒரு தெற்கு மாநிலக்காரர் என்பது. (தெற்கு மாநிலக்காரர்கள் கறுப்பர்களை ஒடுக்குபவர்கள் என்பதுதான் அன்றைய நிலை. அதை பல liberals வெறுத்தனர்) கென்னடி ஜான்சனை தன் துணை ஜனாதிபதியாகப் போட்டியிடும்படி கேட்டுக் கொள்கிறார். (ரா. கென்னடி இதை கடுமையாக எதிர்க்கிறார்.) அன்று துணை ஜனாதிபதி என்பது (இன்றும்) அதிகாரமில்லாத ஒரு அலங்காரப் பதவி. ஆனால் ஜான்சன் அப்படிப்பட்ட அலங்காரப் பதவிகளில் உட்கார்ந்து அவற்றை அதிகாரம் மிக்க பதவிகளாக மீண்டும் மீண்டும் மாற்றியவர். ஜான்சன் சம்மதிக்கிறார். எட்டு வருஷம் கழித்தாவது ஜனாதிபதி வேட்பாளர் ஆகலாம் என்றூ நினைக்கிறார்.ஜான்சனும் (அவரது கள்ள ஓட்டுகளும்) இல்லாவிட்டால் கென்னடி வென்றிருக்க முடியாது. கென்னடிக்காக சிகாகோவில் போடப்பட்ட கள்ள ஓட்டுகளைப் பற்றி அமெரிக்க அரசியலில் ஓரளவு பிரக்ஞை உண்டு, ஆனால் டெக்சஸ் கள்ள ஓட்டுகள் மறக்கப்பட்டுவிட்டன என்கிறார் காரோ.
கென்னடியைச் சுற்றி பல intellectuals. ஜான்சனுக்கு உள்வட்டத்தில் இடமில்லை. ஒதுக்கப்படும் ஜான்சன் முறிந்தே போகிறார். ராபர்ட் கென்னடி அட்டர்னி ஜெனரல் ஆகிறார். ஜனாதிபதிக்கு அடுத்தபடி அவரே அதிகாரம் உள்ளவராகப் பரிணமிக்கிறார். ஜான்சனுக்கு சொந்த மாநிலத்திலேயே செல்வாக்கு குறைந்து கொண்டே போகிறது. ஜான்சன் பல சமயம் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது ஊழல்கள் வெளியே வர ஆரம்பிக்கின்றன. ஜான்சன் முழுகப் போகிறார், கென்னடி அடுத்த தேர்தலில் வேறு துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று பல பேச்சுகள் அடிபடுகின்றன. பேப்பர்கள் ஜான்சனின் பணத்தைப் பற்றிய கவர் ஸ்டோரியோடு ரெடியாக இருக்கின்றன. கென்னடி சுடப்படுகிறார். திரைப்படங்களில் கடைசி காட்சியில் ஹீரோ பிழைப்பதைப் போல ஜான்சனுக்கும் அரசியல் மறுவாழ்வு கிடைக்கிறது. ஜனாதிபதி ஆகிறார்.
வாய்ப்பு கிடைத்ததும் ஜான்சன் மீண்டும் தன் தலைமைப் பண்புகளை காட்டுகிறார். முதலில் கென்னடி நியமித்த அத்தனை பேரையும் இவரிடமும் தொடர வேண்டும் என்று சம்மதிக்க வைக்கிறார். கென்னடியின் தொடர்ச்சி நான் என்று அறிவிக்கிறார். கென்னடி பல மாதங்களாக செனட்டில் நிறைவேற்ற முடியாத சட்டங்களை நிறைவேற்றுகிறார். இத்தனை நாள் ஒரு தெற்கு மாநிலக்காரராக கறுப்பர்களை ஒடுக்கும் பல practices-இல் அடக்கி வாசித்தவர், இன்று தான் விரும்பிய பதவி கிடைத்ததும், தன் “சுயரூபத்தைக்” காட்டுகிறார். அவரது பின்புலம் அவரை ஒடுக்கப்பட்டவர்களை – குறிப்பாக கறுப்பர்கள், மெக்சிகர்கள், ஏழை வெள்ளையர்கள் – ஆகியோரை பரிவோடு பார்க்கச் செய்கிறது. அதை டெக்சசில் வெளிப்படையாகச் சொன்னால் செனட்டர் ஆக முடியாது என்பதால் கம்மென்று இருந்திருக்கிறார். (கறுப்பர்களுக்கான ஓட்டுரிமை சட்டத்தைப் போராடி நிறைவேற்றியவர் என்றாலும் அவரை எல்லோரும் சந்தேகத்தோடுதான் பார்த்தார்கள்.)
முதல் சில வாரங்களில் ஜான்சன் கறுப்பர்களுக்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றபோது அவரது ஆலோசகர்கள் இப்போது ரிஸ்க் வேண்டாம் என்று சொன்னார்களாம். “Well, what the hell is the presidency for?” என்று ஜான்சன் பதில் சொல்லி இருக்கிறார். அவரது ஆளுமையை எனக்கு இந்த இடம் சிறப்பாக வெளிப்படுத்தியது.
அதே நேரத்தில் வியட்நாம் போரில் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறார். தான் ஒரு நிலை எடுப்பது அடுத்த தேர்தலில் தன் வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று நினைக்கிறார். ராபர்ட் கென்னடியோடு பல கசப்புகள் இருந்தாலும் அடக்கி வாசிக்கிறார்.
மூன்று பேருமே தலைமைப் பண்பு உடையவர்கள். சிறந்த தலைவர்களாக இருக்கக் கூடியவர்கள். ஜான்சனுக்கு அடக்கப்பட்டவர்களிடம் இருந்த பரிவு, ஜான் கென்னடியின் charisma, ராபர்ட் கென்னடியின் விசுவாசம், மூவருக்கும் இருந்த முடிவெடுக்கும் திறன், ஜான்சனுக்குத் தெரிந்திருந்த சட்டசபை நுணுக்கங்கள் எல்லாமே நமக்கு புரிகிறது. ஆனால் ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது – அதனால் கென்னடி ஜான்சனை அமுக்கினார். ஜான்சனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, தோல்வியை வெற்றியாக்க முடியவில்லை. கென்னடி இறந்திராவிட்டால் ஜான்சனின் அரசியல் வாழ்வு முடிந்துதான் போயிருக்கும். ரா. கென்னடி எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பவர். கம்யூனிஸ்டுகளின் எதிரி. ஆனால் பதவி, பொறுப்புகள் அவரை பதப்படுத்தியது. அவரும் ஜனாதிபதியாக வந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். (நிக்சனுக்கு நல்ல போட்டியாகவாவது இருந்திருப்பார்.)
ஒரு அரசியல் மாற்றத்தை இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியும் என்று நான் நினைத்ததில்லை. Unputdownable. காரோ ஜான்சன்/கென்னடிகளின் calculation, அவர்களது ஆளுமைகள், ஆளுமைகளின் குறைநிறைகள் ஆகியவற்றை மிகச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். யாருடைய தவறுகளையும் பூசி மறைக்கவில்லை. ஜான்சனின் ஊழல்கள், கள்ள ஓட்டு ஆகியவற்றையும் எழுதுகிறார். இந்த மாதிரி இந்தியத் தலைவர்களைப் பற்றி ஒரு புத்தகம் வராதா என்று ஏங்க வைத்துவிட்டார். கோகலே-திலக், காமராஜ்-ராஜாஜி, நேரு-சுபாஷ் என்று எத்தனையோ போட்டிகள் இந்தியாவிலும்தான். ஆனால் காந்தியைப் பற்றி மட்டும்தான் இங்கே என்ன வேண்டுமானாலும் எழுத முடியும் என்பதுதான் சோகம். ஒரு வேளை சர்வபள்ளி கோபால், ராஜ்மோகன் காந்தி மாதிரி யாராவது எழுதி இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.
ஜான்சனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை காரோ உண்டாக்கி இருக்கிறார். அவர் ஜான்சனின் வாழ்வைப் பற்றி எழுதிய புத்தகங்களில் இது நான்காவது பகுதி. எல்லாம் தலையணை சைசுக்கு இருக்கின்றன. இருந்தாலும் படித்துப் பார்க்க வேண்டும். காரோ எழுதிய இந்தப் புத்தகம் 2012-இல் வெளிவந்திருக்கிறது.
முருகுசுந்தரத்தின் பேரை நான் முதன்முதலாகக் கேள்விப்பட்டது 2009இல். அவரது எழுத்துக்களை அன்றைய தி.மு.க. அரசு நாட்டுடமை ஆக்கியது. யார் இந்த முருகுசுந்தரம் என்ற கேள்விக்கு மறைந்த நண்பர் சேதுராமன் மூலம் ஓரளவு பதில் கிடைத்தது. பாரதிதாசனின் பரம பக்தர் என்றும் தெரிய வந்தது. பாரதிதாசனைப் பற்றியே எனக்கு பெரிய அபிப்ராயம் கிடையாது. அதனால் நான் கண்டுகொள்ளவில்லை. மேலும் கவிஞர் என்பதால் நான் புத்தகங்களை பெரிதாகத் தேடவில்லை.
தற்செயலாக பாரதிதாசனோடு அவர் பழகிய காலத்தைப் பற்றி அவர் எழுதி இருந்த புத்தகம் ஒன்றை புரட்டினேன். (இணையத்தில்) ஏறக்குறைய நாட்குறிப்பு போன்ற format-இல் பாரதிதாசனின் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்திருந்தார். பாரதிதாசனை ஒரு ஆறேழு மாதம் வாரம் இரண்டு மூன்று முறை போய் சந்தித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பி அவரிடமே கேட்டு அதை குறிப்புகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். பின்னாளில் பாரதிதாசனோடு பழகிய பலரோடும் பேசி அவரது நினைவுகளைப் பதிவு செய்திருக்கிறார்.
முதல் சந்திப்பில் பாரதிதாசன் மீசையைப் பற்றி பெரிதாகக் கவிதை எழுதிக் கொண்டு போயிருக்கிறார். அப்படிப்பட்டவர் பாரதிதாசனைப் பற்றி குறையாக எல்லாம் எதுவும் சொல்லிவிட வாய்ப்பு இல்லை. அவரது கவிதைகளை சீர்தூக்கிப் பார்த்து விமர்சிக்கவும் சாத்தியக்கூறு இல்லை. ஆனால் முழுதும் புகழ் மாலையும் இல்லை. மிகவும் உண்மையான பதிவுகள். பாரதிதாசனின் கம்பீரம், உலகம் புரியாத naivete, தன்னம்பிக்கை, அவரது திறமை மேல் அவருக்கு இருந்த பெருமிதம், வந்த சண்டையை விடமாட்டேன் என்று எந்த லெவலுக்கும் போய் அடித்துக் கொள்ளும் குணம், பாரதி மேல் அவருக்கிருந்த பக்தி எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.
“தலை வாரி பூச்சூடி உன்னை” பாட்டு அவரது கடைசி மகள் ரமணி பள்ளிக்கு மட்டம் போடுவது தெரிய வந்ததும் எழுதிய பாட்டு போன்ற விஷயங்கள் இந்தப் புத்தகத்துக்கு ஒரு special charm-ஐத் தருகின்றன. அந்தப் பாட்டு யூட்யூபில் கிடைக்கவில்லை, எனக்குப் பிடித்த இன்னொரு பாரதிதாசன் பாட்டின் – “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” வீடியோ கீழே.
எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம் என்பது தெரிந்ததே. பாரதிதாசனின் கவிதைகளின் தரம் என்னை பெரிதாகக் கவர்ந்ததில்லை. ஆனால் அவரது சந்தங்கள் மிகப் பிரமாதமானவை. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்பதைப் படிக்க முடியாது, பாடத்தான் முடியும். விருத்தங்களை சந்தத்துக்காக பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார். சின்ன வயதில் “இருண்ட வீடு” என்ற சிறு புத்தகத்தைப் படித்து நிறைய சிரித்திருக்கிறேன். வீட்டுக்குள் நுழைந்த திருடனை விளையாட்டுத் துப்பாக்கியால் அப்பா மிரட்டுகிறார். அப்போது பையன் சொல்கிறான் – “அப்பா அப்பா அது பொய்த் துப்பாக்கி தக்கை வெடிப்பது தானே“. 🙂 குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு இரண்டையும் எப்போதாவது படித்துப் பார்க்க வேண்டும். அவருடைய பிசிராந்தையார் நாடகத்துக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்தது. தகுதி இல்லாத புத்தகத்துக்குக் கிடைத்த பரிசு. வெங்கட் சாமிநாதன் எங்கோ தகுதியுள்ள மனிதருக்கு, ஆனால் தகுதி இல்லாத புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்று இதைக் குறிப்பிடுகிறார்
பாரதிதாசனின் தாக்கம் ஒரு தலைமுறையாவது இருந்தது. நிறைய பேர் நானும் கவிதை எழுதுகிறேன் என்று வந்தார்கள். கம்பதாசன், வாணிதாசன், சுரதா என்று பலர். யாரும் பெரிய அளவில் சாதித்ததாகத் தெரியவில்லை. பாரதிதாசனின் தாக்கம் இன்று தமிழ்நாட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது தாக்கம் இருந்த காலம் ஒரு முக்கியமான கால கட்டம். ஆனால் பாரதிதாசனை பற்றி இவர் எழுதி இருப்பவை சிறந்த ஆவணங்கள். அதற்காகவேனும் இவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது சரி என்றுதான் தோன்றுகிறது.
அன்று சேதுராமன் எழுதிய அறிமுகத்தை மீண்டும் படித்துப் பார்த்தேன். அதில் பெருமாள் முருகன் எழுதிய ஒரு கட்டுரை சுட்டிக்கு தாவினேன். என்ன ஆச்சரியம், பெருமாள் முருகனும் அவரது பாரதிதாசன் நினைவுகளை முக்கியமான புத்தகம் என்று பரிந்துரைத்திருக்கிறார்!
சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே:
இற்றைக் கவியுலகில், ஏற்றமும் தோற்றமும், சிறப்பும், செல்வாக்கும் மிக்கவர். பீடும் பெருமிதமும் கொண்டவர். தொடக்கத்தில் பாவேந்தர் பாணி, பின் சுரதா பாங்கு, வளர்ச்சிக் காலத்தில். இப்போது தனக்கென ஒரு தனிப் பாணி உருவாக்கிக் கொண்டுள்ளார். மரபு – புதுக் கவிதைகள் இரண்டுமே இவருக்குப் பிடிக்கும், இவர் பிடியுள் அகப்படும். (தமிழ் இலக்கிய வரலாறு, விமலானந்தம் – 1987)
கவிஞர் முருகுசுந்தரம், திருச்செங்கோடு என்ற ஊரில், ஒரு நெசவாளர் குடும்பத்தில், 1929ம் வருடம், டிசம்பர் மாதம் 26ம் தேதி, திரு முருகேசன், பாவாயி அம்மாள் தம்பதிகளுக்குத் தலை மகனாகப் பிறந்தார். இவரது இளவல்கள் – முனைவர் முருகுரத்தினம் (ஓய்வு பெற்ற முதுநிலைப் பேராசிரியர் -மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்) — டாக்டர் மு. இளங்கோவன் (ஓய்வு பெற்ற சென்னை அரசினர் மருத்துவக் கல்லூரி E.N.T. பேராசிரியர்)
ஒரு திண்ணைப் பள்ளியில் சுப்பராயப் பிள்ளையிடம் தொடக்கக் கல்வி – தந்தை முருகேசன் வருவாய்த் துறையிற் பணியாற்றியவராதலால், பணி நிமித்தம் திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், இடைப்பாடி ஆகிய ஊர்களில் கல்வி பயின்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்காக, மேட்டுர் அணைக்கும் சென்றார். கவிஞரின் தந்தை சுயமரியாதைக்காரர் – இதன் தாக்கம் இளமையிலேயே குடியரசு, திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கியதுடனல்லாமல், அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் பெரிதும் கவரப்பட்டு, தீவிர திராவிடக் கழகப் பற்றாளராகவும் மாறினார். மேட்டூர் அணையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முடிந்ததும், சேலம் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக் கழக வித்துவான், எம்.ஏ (தமிழ் இலக்கியம்) ஆகிய பட்டங்களைத் தனித் தேர்வராகப் படித்து வெற்றி பெற்றார். பின்னர் சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1949ம் ஆண்டு சிவகாமி அம்மையாரை மணமுடித்தார். இவரது மகள் வனிதா அம்பலவாணன், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் (நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருப்பது அவர் எழுதியளித்த வாழ்க்கைக் குறிப்புகளே!!) — மகன் பாவேந்தன் சேலத்தில் மருத்துவராகப் பணி புரிகிறார்.
தனது முப்பத்தியொன்றாவது வயதில் கவிஞ்ர் இலக்கியப் பணிகளில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது, பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளாகும். இதை நினைவு கூறும் கவிஞர், ”சைதையில் நான் படிக்கும்போது பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன், இப்பழக்கம் இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. சென்னையில் பழகிய காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப்பாவேந்தர் நினைவுகள் என்ற தலைப்பில் நாட்குறிப்பாக எழுதினேன். தமிழகம் முழுதும் சென்று அவரோடு பழகிய நண்பர்களைப் பேட்டி கண்டு அவரைப் பற்றி நான்கு நூல் தொகுப்புகள் வெளியிட்டேன். இதுவே அவரது நூற்றாண்டு விழாவின் போது பாவேந்தர்: ஒரு பல்கலைக் கழகம் என்ற பெயரில் பெரு நூலாக வெளி வந்தது” என்கிறார்.
கவிஞர் முருகு பேச்சாற்றல் மிக்க நல்லாசிரியர். 1962ம் ஆண்டு மு.க.வின் தலைமையில் திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் பங்கேற்றவர், தொடர்ந்து நூற்றுக் கணக்கான கவியரங்கங்களில் பங்கேற்றுக் கவி பாடியுள்ளார். இவரது சமகாலக் கவிஞர்கள் – அப்துல் ரகுமான், சுரதா, வாணிதாசன், முடியரசன், தமிழன்பன், சிற்பி, புவியரசு, சேலம் தமிழ்நாடன் ஆகியோர்.
இருபது உரை நடை நூல்களையும், ஒன்பது மிகச் சிறந்த கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறுகதைகள் எழுதுவதில் நாட்டமில்லாதவர், சில நாடகங்களையும், புதினங்களையும் படைத்துள்ளார்.
கவிஞரின் படைப்புகள் வருமாறு:
கவிதை நூல்கள்: கடை திறப்பு (1969 – உலகின் தலை சிறந்த பேச்சு – கடிதங்களின் கவிதை வடிவம்) – பனித்துளிகள் (1974) – 1982ல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது) – சந்தனப் பேழை (1975 – கழக இதழ்களில் அணி செய்த மணிகளின் தொகுப்பு) – தீர்த்தக் கரையினிலே (1983) – எரி நட்சத்திரம் (1993) – வெள்ளையானை (1998)
இளைஞர் இலக்கியம் – பாட்டும் கதையும் (1965) – அண்ணல் இயேசு (1985) – பாரதி பிறந்தார் (1993)
உரைநடை நூல்கள் – மறத்தகை மகளிர் (1956) – பாரும் போரும் (1958) – வள்ளுவர் வழியில் காந்தியம் (1960) – மானமாட்சி (1962) – காந்தியின் வாழ்க்கையிலே (1963) – கென்னடி வீர வரலாறு (1965) – தமிழகத்தில் குறிஞ்சி வளம் (1964) – நாட்டுக்கொரு நல்லவர் (1966) – பாவேந்தர் நினைவுகள் (1979) – அரும்புகள், மொட்டுகள், மலர்கள் (1981) – குயில் கூவிக் கொண்டிருக்கும் ( (1985) – புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் (1985) – மலரும் மஞ்சமும் (1985) – பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம் (1990) – புகழ் பெற்ற புதுக் கவிஞர்கள் (1993) – சுரதா ஒரு ஒப்பாய்வு (1999) – பாவேந்தர் படைப்பில் அங்கதம் (2001) – முருகுசுந்தரம் கவிதைகள் (2003) – பாவேந்தர் (2007 – monographs)
பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் – முக்கியமாக 1976ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது. 1994 – ஈரோடு ஜேசிஸ் மன்றத்தால் OUTSTANDING CITIZEN விருது. 1990ல் தமிழக அரசின் பாரதிதாசன் விருது.
ஓய்வுக்குப் பின்னர் சேலம் தமிழ்ச் சங்கப் பொறுப்பில் இருந்தார். சொற்பொழிவு,கவியரங்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றதுடன்,கவிதை கட்டுரை, மானிடவியல் பற்றிய ஆய்வுகள் செய்து வந்தார். 2007ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, தம் பூத உடல் நீக்கிப் புகழுடம்பெய்தினார்.
தகவல் ஆதாரம்:
முனைவர் வனிதா அம்பலவாணன் எழுதியுள்ள ‘கவிஞர் முருகு சுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு’
புகைப்படம் நன்றி – முனைவர் வனிதா அம்பலவாணன்
மது ச.விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ 1987 பதிப்பு