முருகுசுந்தரம் – பாரதிதாசனின் பாஸ்வெல்

bharathidasanமுருகுசுந்தரத்தின் பேரை நான் முதன்முதலாகக் கேள்விப்பட்டது 2009இல். அவரது எழுத்துக்களை அன்றைய தி.மு.க. அரசு நாட்டுடமை ஆக்கியது. யார் இந்த முருகுசுந்தரம் என்ற கேள்விக்கு மறைந்த நண்பர் சேதுராமன் மூலம் ஓரளவு பதில் கிடைத்தது. பாரதிதாசனின் பரம பக்தர் என்றும் தெரிய வந்தது. பாரதிதாசனைப் பற்றியே எனக்கு பெரிய அபிப்ராயம் கிடையாது. அதனால் நான் கண்டுகொள்ளவில்லை. மேலும் கவிஞர் என்பதால் நான் புத்தகங்களை பெரிதாகத் தேடவில்லை.

murugusundaramதற்செயலாக பாரதிதாசனோடு அவர் பழகிய காலத்தைப் பற்றி அவர் எழுதி இருந்த புத்தகம் ஒன்றை புரட்டினேன். (இணையத்தில்) ஏறக்குறைய நாட்குறிப்பு போன்ற format-இல் பாரதிதாசனின் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிக் கொண்டுவந்திருந்தார். பாரதிதாசனை ஒரு ஆறேழு மாதம் வாரம் இரண்டு மூன்று முறை போய் சந்தித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையைப் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்பி அவரிடமே கேட்டு அதை குறிப்புகளாக எழுதிக் கொண்டிருக்கிறார். பின்னாளில் பாரதிதாசனோடு பழகிய பலரோடும் பேசி அவரது நினைவுகளைப் பதிவு செய்திருக்கிறார்.

முதல் சந்திப்பில் பாரதிதாசன் மீசையைப் பற்றி பெரிதாகக் கவிதை எழுதிக் கொண்டு போயிருக்கிறார். அப்படிப்பட்டவர் பாரதிதாசனைப் பற்றி குறையாக எல்லாம் எதுவும் சொல்லிவிட வாய்ப்பு இல்லை. அவரது கவிதைகளை சீர்தூக்கிப் பார்த்து விமர்சிக்கவும் சாத்தியக்கூறு இல்லை. ஆனால் முழுதும் புகழ் மாலையும் இல்லை. மிகவும் உண்மையான பதிவுகள். பாரதிதாசனின் கம்பீரம், உலகம் புரியாத naivete, தன்னம்பிக்கை, அவரது திறமை மேல் அவருக்கு இருந்த பெருமிதம், வந்த சண்டையை விடமாட்டேன் என்று எந்த லெவலுக்கும் போய் அடித்துக் கொள்ளும் குணம், பாரதி மேல் அவருக்கிருந்த பக்தி எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

தலை வாரி பூச்சூடி உன்னை” பாட்டு அவரது கடைசி மகள் ரமணி பள்ளிக்கு மட்டம் போடுவது தெரிய வந்ததும் எழுதிய பாட்டு போன்ற விஷயங்கள் இந்தப் புத்தகத்துக்கு ஒரு special charm-ஐத் தருகின்றன. அந்தப் பாட்டு யூட்யூபில் கிடைக்கவில்லை, எனக்குப் பிடித்த இன்னொரு பாரதிதாசன் பாட்டின் – “துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” வீடியோ கீழே.

எனக்கும் கவிதைக்கும் கொஞ்ச தூரம் என்பது தெரிந்ததே. பாரதிதாசனின் கவிதைகளின் தரம் என்னை பெரிதாகக் கவர்ந்ததில்லை. ஆனால் அவரது சந்தங்கள் மிகப் பிரமாதமானவை. “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு” என்பதைப் படிக்க முடியாது, பாடத்தான் முடியும். விருத்தங்களை சந்தத்துக்காக பிரமாதமாகக் கையாண்டிருக்கிறார். சின்ன வயதில் “இருண்ட வீடு” என்ற சிறு புத்தகத்தைப் படித்து நிறைய சிரித்திருக்கிறேன். வீட்டுக்குள் நுழைந்த திருடனை விளையாட்டுத் துப்பாக்கியால் அப்பா மிரட்டுகிறார். அப்போது பையன் சொல்கிறான் – “அப்பா அப்பா அது பொய்த் துப்பாக்கி தக்கை வெடிப்பது தானே“. 🙂 குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு இரண்டையும் எப்போதாவது படித்துப் பார்க்க வேண்டும். அவருடைய பிசிராந்தையார் நாடகத்துக்கு சாஹித்ய அகாடமி பரிசு கிடைத்தது. தகுதி இல்லாத புத்தகத்துக்குக் கிடைத்த பரிசு. வெங்கட் சாமிநாதன் எங்கோ தகுதியுள்ள மனிதருக்கு, ஆனால் தகுதி இல்லாத புத்தகத்துக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்று இதைக் குறிப்பிடுகிறார்

பாரதிதாசனின் தாக்கம் ஒரு தலைமுறையாவது இருந்தது. நிறைய பேர் நானும் கவிதை எழுதுகிறேன் என்று வந்தார்கள். கம்பதாசன், வாணிதாசன், சுரதா என்று பலர். யாரும் பெரிய அளவில் சாதித்ததாகத் தெரியவில்லை. பாரதிதாசனின் தாக்கம் இன்று தமிழ்நாட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவரது தாக்கம் இருந்த காலம் ஒரு முக்கியமான கால கட்டம். ஆனால் பாரதிதாசனை பற்றி இவர் எழுதி இருப்பவை சிறந்த ஆவணங்கள். அதற்காகவேனும் இவரது புத்தகங்களை நாட்டுடமை ஆக்கியது சரி என்றுதான் தோன்றுகிறது.

முருகுசுந்தரத்தின் இரு புத்தகங்களை படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். ஒன்று “பாவேந்தர்: ஒரு பல்கலைக்கழகம்“; இன்னொன்று இந்திய இலக்கிய சிற்பிகள்: பாரதிதாசன். இரண்டும் இணையத்தில் கிடைக்கின்றன.

அன்று சேதுராமன் எழுதிய அறிமுகத்தை மீண்டும் படித்துப் பார்த்தேன். அதில் பெருமாள் முருகன் எழுதிய ஒரு கட்டுரை சுட்டிக்கு தாவினேன். என்ன ஆச்சரியம், பெருமாள் முருகனும் அவரது பாரதிதாசன் நினைவுகளை முக்கியமான புத்தகம் என்று பரிந்துரைத்திருக்கிறார்!

சேதுராமன் எழுதிய அறிமுகம் கீழே:
இற்றைக் கவியுலகில், ஏற்றமும் தோற்றமும், சிறப்பும், செல்வாக்கும் மிக்கவர். பீடும் பெருமிதமும் கொண்டவர். தொடக்கத்தில் பாவேந்தர் பாணி, பின் சுரதா பாங்கு, வளர்ச்சிக் காலத்தில். இப்போது தனக்கென ஒரு தனிப் பாணி உருவாக்கிக் கொண்டுள்ளார். மரபு – புதுக் கவிதைகள் இரண்டுமே இவருக்குப் பிடிக்கும், இவர் பிடியுள் அகப்படும். (தமிழ் இலக்கிய வரலாறு, விமலானந்தம் – 1987)

கவிஞர் முருகுசுந்தரம், திருச்செங்கோடு என்ற ஊரில், ஒரு நெசவாளர் குடும்பத்தில், 1929ம் வருடம், டிசம்பர் மாதம் 26ம் தேதி, திரு முருகேசன், பாவாயி அம்மாள் தம்பதிகளுக்குத் தலை மகனாகப் பிறந்தார். இவரது இளவல்கள் – முனைவர் முருகுரத்தினம் (ஓய்வு பெற்ற முதுநிலைப் பேராசிரியர் -மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்) — டாக்டர் மு. இளங்கோவன் (ஓய்வு பெற்ற சென்னை அரசினர் மருத்துவக் கல்லூரி E.N.T. பேராசிரியர்)

ஒரு திண்ணைப் பள்ளியில் சுப்பராயப் பிள்ளையிடம் தொடக்கக் கல்வி – தந்தை முருகேசன் வருவாய்த் துறையிற் பணியாற்றியவராதலால், பணி நிமித்தம் திருச்செங்கோடு, மல்ல சமுத்திரம், இடைப்பாடி ஆகிய ஊர்களில் கல்வி பயின்றார். பின்னர் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்காக, மேட்டுர் அணைக்கும் சென்றார். கவிஞரின் தந்தை சுயமரியாதைக்காரர் – இதன் தாக்கம் இளமையிலேயே குடியரசு, திராவிட நாடு ஆகிய பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கியதுடனல்லாமல், அன்பழகன், நெடுஞ்செழியன் போன்றோருடைய மேடைப் பேச்சுக்களால் பெரிதும் கவரப்பட்டு, தீவிர திராவிடக் கழகப் பற்றாளராகவும் மாறினார். மேட்டூர் அணையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முடிந்ததும், சேலம் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராக நியமனம் பெற்றார். தொடர்ந்து சென்னைப் பல்கலைக் கழக வித்துவான், எம்.ஏ (தமிழ் இலக்கியம்) ஆகிய பட்டங்களைத் தனித் தேர்வராகப் படித்து வெற்றி பெற்றார். பின்னர் சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். 1949ம் ஆண்டு சிவகாமி அம்மையாரை மணமுடித்தார். இவரது மகள் வனிதா அம்பலவாணன், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் (நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருப்பது அவர் எழுதியளித்த வாழ்க்கைக் குறிப்புகளே!!) — மகன் பாவேந்தன் சேலத்தில் மருத்துவராகப் பணி புரிகிறார்.

தனது முப்பத்தியொன்றாவது வயதில் கவிஞ்ர் இலக்கியப் பணிகளில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்தது, பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புகளாகும். இதை நினைவு கூறும் கவிஞர், ”சைதையில் நான் படிக்கும்போது பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றேன், இப்பழக்கம் இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. சென்னையில் பழகிய காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப்பாவேந்தர் நினைவுகள் என்ற தலைப்பில் நாட்குறிப்பாக எழுதினேன். தமிழகம் முழுதும் சென்று அவரோடு பழகிய நண்பர்களைப் பேட்டி கண்டு அவரைப் பற்றி நான்கு நூல் தொகுப்புகள் வெளியிட்டேன். இதுவே அவரது நூற்றாண்டு விழாவின் போது பாவேந்தர்: ஒரு பல்கலைக் கழகம் என்ற பெயரில் பெரு நூலாக வெளி வந்தது” என்கிறார்.

கவிஞர் முருகு பேச்சாற்றல் மிக்க நல்லாசிரியர். 1962ம் ஆண்டு மு.க.வின் தலைமையில் திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்ற கவியரங்கில் பங்கேற்றவர், தொடர்ந்து நூற்றுக் கணக்கான கவியரங்கங்களில் பங்கேற்றுக் கவி பாடியுள்ளார். இவரது சமகாலக் கவிஞர்கள் – அப்துல் ரகுமான், சுரதா, வாணிதாசன், முடியரசன், தமிழன்பன், சிற்பி, புவியரசு, சேலம் தமிழ்நாடன் ஆகியோர்.

இருபது உரை நடை நூல்களையும், ஒன்பது மிகச் சிறந்த கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ளார். சிறுகதைகள் எழுதுவதில் நாட்டமில்லாதவர், சில நாடகங்களையும், புதினங்களையும் படைத்துள்ளார்.

கவிஞரின் படைப்புகள் வருமாறு:
கவிதை நூல்கள்: கடை திறப்பு (1969 – உலகின் தலை சிறந்த பேச்சு – கடிதங்களின் கவிதை வடிவம்) – பனித்துளிகள் (1974) – 1982ல் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது) – சந்தனப் பேழை (1975 – கழக இதழ்களில் அணி செய்த மணிகளின் தொகுப்பு) – தீர்த்தக் கரையினிலே (1983) – எரி நட்சத்திரம் (1993) – வெள்ளையானை (1998)

இளைஞர் இலக்கியம் – பாட்டும் கதையும் (1965) – அண்ணல் இயேசு (1985) – பாரதி பிறந்தார் (1993)

உரைநடை நூல்கள் – மறத்தகை மகளிர் (1956) – பாரும் போரும் (1958) – வள்ளுவர் வழியில் காந்தியம் (1960) – மானமாட்சி (1962) – காந்தியின் வாழ்க்கையிலே (1963) – கென்னடி வீர வரலாறு (1965) – தமிழகத்தில் குறிஞ்சி வளம் (1964) – நாட்டுக்கொரு நல்லவர் (1966) – பாவேந்தர் நினைவுகள் (1979) – அரும்புகள், மொட்டுகள், மலர்கள் (1981) – குயில் கூவிக் கொண்டிருக்கும் ( (1985) – புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் (1985) – மலரும் மஞ்சமும் (1985) – பாவேந்தர் ஒரு பல்கலைக் கழகம் (1990) – புகழ் பெற்ற புதுக் கவிஞர்கள் (1993) – சுரதா ஒரு ஒப்பாய்வு (1999) – பாவேந்தர் படைப்பில் அங்கதம் (2001) – முருகுசுந்தரம் கவிதைகள் (2003) – பாவேந்தர் (2007 – monographs)

பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் – முக்கியமாக 1976ல் தமிழக அரசின் நல்லாசிரியர் விருது. 1994 – ஈரோடு ஜேசிஸ் மன்றத்தால் OUTSTANDING CITIZEN விருது. 1990ல் தமிழக அரசின் பாரதிதாசன் விருது.

ஓய்வுக்குப் பின்னர் சேலம் தமிழ்ச் சங்கப் பொறுப்பில் இருந்தார். சொற்பொழிவு,கவியரங்கம் ஆகியவற்றில் பங்கு பெற்றதுடன்,கவிதை கட்டுரை, மானிடவியல் பற்றிய ஆய்வுகள் செய்து வந்தார். 2007ம் வருடம் ஜனவரி 12ம் தேதி, தம் பூத உடல் நீக்கிப் புகழுடம்பெய்தினார்.

தகவல் ஆதாரம்:

 • முனைவர் வனிதா அம்பலவாணன் எழுதியுள்ள ‘கவிஞர் முருகு சுந்தரம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு’
 • புகைப்படம் நன்றி – முனைவர் வனிதா அம்பலவாணன்
 • மது ச.விமலானந்தம் எழுதிய ‘தமிழ் இலக்கிய வரலாறு’ 1987 பதிப்பு
 • காலச்சுவடு வலைத்தளக் கட்டுரை

 • தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அறிஞர்கள்

  தொடர்புடைய சுட்டிகள்:

 • பாவேந்தர்: ஒரு பல்கலைக்கழகம்
 • இந்திய இலக்கிய சிற்பிகள்: பாரதிதாசன்
 • முருகுசுந்தரம் பற்றி பெருமாள் முருகனின் காலச்சுவடு கட்டுரை
 • 2009இல் நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்துக்கள் – இன்னும் இரு பாரதிதாசன் பரம்பரைக்காரர்கள் பாவலர் நா.ரா. நாச்சியப்பன், புலவர் கோவேந்தன்
 • பாரதிதாசன் பரம்பரை பற்றி முனைவர் மு. இளங்கோவன்
 • புலவர் கோவேந்தன் நடத்திய வானம்பாடி பத்திரிகை பற்றி மு. இளங்கோவன்
 • மறுமொழியொன்றை இடுங்கள்

  Fill in your details below or click an icon to log in:

  WordPress.com Logo

  You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

  Google photo

  You are commenting using your Google account. Log Out /  மாற்று )

  Twitter picture

  You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

  Facebook photo

  You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

  Connecting to %s

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.