ராபர்ட் ஏ. காரோ எழுதிய “பாசேஜ் டு பவர்”

John_F_Kennedyமூன்று தலைவர்கள் – ஜான் எஃப். கென்னடி, லிண்டன் ஜான்சன், ராபர்ட் கென்னடி (தம்பி). அண்ணன் கென்னடியும் ஜான்சனும் அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே கனவு காண்பவர்கள், திட்டம் போட்டுக் கொண்டிருப்பவர்கள். தம்பி கென்னடி அண்ணனின் கனவில் தன்னைக் கரைத்துக் கொண்டவர், அண்ணனுக்காக முழு மூச்சாக உழைப்பவர். இந்தப் புத்தகம் இந்த மூவருக்கும் நடுவில் நடந்த அரசியல் போராட்டம்தான்.

Lyndon_Johnsonஜான்சன் மூவரில் மூத்தவர். அப்பா டெக்சஸில் காங்கிரஸ்மானாக இருந்தவர். ஆனால் அப்புறம் பெரிய சரிவு. ஜான்சன் வளர்ந்த காலத்தில் அவர் குடும்பம்தான் ஊரில் ஏழைக் குடும்பம். பல அவமானங்கள். என்ன ஆனாலும் அப்பா மாதிரி ஆகிவிடக் கூடாது என்ற உறுதி (இல்லை பயம்) மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஜான்சனின் மிகச் சிறந்த குணம் ஒன்றும் இல்லாத பதவிகளிலும் எதையாவது சாதிப்பது, அதன் மூலம் தன் அதிகாரத்தை, பலத்தை பெருக்கிக் கொள்வது.  எப்படியோ தகிடுதத்தம் (கள்ள ஓட்டு) செய்து செனட்டர் ஆகிறார். அமெரிக்க செனட் அப்போது உருப்படாமல் போய்க்கொண்டிருந்த ஒரு அமைப்பு. கொஞ்சம் கொஞ்சமாக அப்போது பயனற்றவை என கருதப்பட்ட பதவிகளில் அமர்கிறார். அப்புறம் ஒரே அடிதான் – செனட் பல முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுகிறது. 1952-60 காலகட்டத்தில் ஜான்சன் செனட் மெஜாரிட்டி லீடர் ஆகிறார். ஜனாதிபதிக்கு அடுத்தபடி வாஷிங்டன் வட்டத்தில் அதையே முக்கியமான பதவியாக மாற்றுகிறார். முக்கியமாக கறுப்பர்களுக்கான (ஓட்டுரிமை பற்றிய) சட்டம் ஒன்றை பல எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றுகிறார்.

கென்னடி ராஜா வீட்டுப் பையன். அப்பா பெரிய பணக்காரர். சிறு வயதிலிருந்தே அரசியல் அதிகாரத்துக்காக திட்டமிட்டவர். Heroic பண்புகள் வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர். அப்பாவின் பணம், முழுமூச்சாக உழைக்கும் தம்பி, என்று பல பலங்கள். கடுமையான முதுகு வலியையும் மீறி விடாமல் உழைத்தவர். இரண்டாம் உலகப் போரில் கூட பணியாற்றியவர்களைக் காப்பாற்றியது அவருக்கு புகழைத் தேடித் தந்தது. சிறு வயதிலேயே செனட்டர் ஆனவர். ஆனால் செனட்டில் பெரிதாக பங்காற்றவில்லை. இளைஞர், அழகர். தொலைக்காட்சியின் சாத்தியங்களை சீக்கிரமே கண்டுகொண்டவர்.

Robert_Kennedyராபர்ட் கென்னடிக்கும் ஜான்சனுக்கும் இடையில் பல வருஷங்களாகக் கொஞ்சம் புகைச்சல். ஜான்சன் அதிகாரத்தில் இருப்பவர், ரா. கென்னடி அதிகாரத்தின் முதல் படியில். ஜான்சன் அவ்வப்போது ரா. கென்னடியை சீண்டுகிறார். ரா. கென்னடி அண்ணனின் மானேஜர். அண்ணன் தம்பிக்கு இடையில் ஒரு பெரிய புரிதல் இருந்தது.

1957-58 காலகட்டத்தில் ஜான்சனுக்குத்தான் அடுத்த ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் அவர் ஆளுமையில் இரண்டு குறைகள் – கென்னடிகளைப் போல தாம் பணக்கார, ஹார்வர்டில் படித்த பின்புலம் இல்லாதவர் என்று ஒரு complex; தோற்றுவிடுவோமோ என்ற பெரிய பயம். நண்பர்கள் எல்லாரும் வற்புறுத்தியும் தான் வேட்பாளர் என்று அறிவிக்க மறுக்கிறார். ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் convention-இல் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது, பெரிய தலைவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு smoke filled backroom-இல் compromise வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பார்கள், அதில் தனக்குத்தான் வாய்ப்பு, தான் வேட்பாளர் என்று கடைசியில் சொன்னால் போதும் என்று கணக்கு போடுகிறார். கென்னடிகள் முழுமூச்சாக, வருஷக் கணக்காக தங்களுக்கு ஆதரவு தேடுகிறார்கள். Convention-இல் கென்னடி வேட்பாளர் ஆகிறார்.

கென்னடியின் பெரிய பலவீனம் அவருக்கு தெற்கு மாநிலங்களில் ஆதரவு இல்லை என்பது. ஜான்சனுக்குப் பெரிய பலவீனம் அவர் ஒரு தெற்கு மாநிலக்காரர் என்பது. (தெற்கு மாநிலக்காரர்கள் கறுப்பர்களை ஒடுக்குபவர்கள் என்பதுதான் அன்றைய நிலை. அதை பல liberals வெறுத்தனர்) கென்னடி ஜான்சனை தன் துணை ஜனாதிபதியாகப் போட்டியிடும்படி கேட்டுக் கொள்கிறார்.  (ரா. கென்னடி இதை கடுமையாக எதிர்க்கிறார்.) அன்று துணை ஜனாதிபதி என்பது (இன்றும்) அதிகாரமில்லாத ஒரு அலங்காரப் பதவி. ஆனால் ஜான்சன் அப்படிப்பட்ட அலங்காரப் பதவிகளில் உட்கார்ந்து அவற்றை அதிகாரம் மிக்க பதவிகளாக மீண்டும் மீண்டும் மாற்றியவர். ஜான்சன் சம்மதிக்கிறார். எட்டு வருஷம் கழித்தாவது ஜனாதிபதி வேட்பாளர் ஆகலாம் என்றூ நினைக்கிறார்.ஜான்சனும் (அவரது கள்ள ஓட்டுகளும்) இல்லாவிட்டால் கென்னடி வென்றிருக்க முடியாது. கென்னடிக்காக சிகாகோவில் போடப்பட்ட கள்ள ஓட்டுகளைப் பற்றி அமெரிக்க அரசியலில் ஓரளவு பிரக்ஞை உண்டு, ஆனால் டெக்சஸ் கள்ள ஓட்டுகள் மறக்கப்பட்டுவிட்டன என்கிறார் காரோ.

கென்னடியைச் சுற்றி பல intellectuals. ஜான்சனுக்கு உள்வட்டத்தில் இடமில்லை. ஒதுக்கப்படும் ஜான்சன் முறிந்தே போகிறார். ராபர்ட் கென்னடி அட்டர்னி ஜெனரல் ஆகிறார். ஜனாதிபதிக்கு அடுத்தபடி அவரே அதிகாரம் உள்ளவராகப் பரிணமிக்கிறார். ஜான்சனுக்கு சொந்த மாநிலத்திலேயே செல்வாக்கு குறைந்து கொண்டே போகிறது. ஜான்சன் பல சமயம் அவமானப்படுத்தப்படுகிறார். அவரது ஊழல்கள் வெளியே வர ஆரம்பிக்கின்றன. ஜான்சன் முழுகப் போகிறார், கென்னடி அடுத்த தேர்தலில் வேறு துணை ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார் என்று பல பேச்சுகள் அடிபடுகின்றன. பேப்பர்கள் ஜான்சனின் பணத்தைப் பற்றிய கவர் ஸ்டோரியோடு ரெடியாக இருக்கின்றன. கென்னடி சுடப்படுகிறார்.  திரைப்படங்களில் கடைசி காட்சியில் ஹீரோ பிழைப்பதைப் போல ஜான்சனுக்கும் அரசியல் மறுவாழ்வு கிடைக்கிறது. ஜனாதிபதி ஆகிறார்.

வாய்ப்பு கிடைத்ததும் ஜான்சன் மீண்டும் தன் தலைமைப் பண்புகளை காட்டுகிறார். முதலில் கென்னடி நியமித்த அத்தனை பேரையும் இவரிடமும் தொடர வேண்டும் என்று சம்மதிக்க வைக்கிறார். கென்னடியின் தொடர்ச்சி நான் என்று அறிவிக்கிறார். கென்னடி பல மாதங்களாக செனட்டில் நிறைவேற்ற முடியாத சட்டங்களை நிறைவேற்றுகிறார். இத்தனை நாள் ஒரு தெற்கு மாநிலக்காரராக கறுப்பர்களை ஒடுக்கும் பல practices-இல் அடக்கி வாசித்தவர், இன்று தான் விரும்பிய பதவி கிடைத்ததும், தன் “சுயரூபத்தைக்” காட்டுகிறார். அவரது பின்புலம் அவரை ஒடுக்கப்பட்டவர்களை – குறிப்பாக கறுப்பர்கள், மெக்சிகர்கள், ஏழை வெள்ளையர்கள் – ஆகியோரை பரிவோடு பார்க்கச் செய்கிறது. அதை டெக்சசில் வெளிப்படையாகச் சொன்னால் செனட்டர் ஆக முடியாது என்பதால் கம்மென்று இருந்திருக்கிறார். (கறுப்பர்களுக்கான ஓட்டுரிமை சட்டத்தைப் போராடி நிறைவேற்றியவர் என்றாலும் அவரை எல்லோரும் சந்தேகத்தோடுதான் பார்த்தார்கள்.)

முதல் சில வாரங்களில் ஜான்சன் கறுப்பர்களுக்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றபோது அவரது ஆலோசகர்கள் இப்போது ரிஸ்க் வேண்டாம் என்று சொன்னார்களாம். “Well, what the hell is the presidency for?” என்று ஜான்சன் பதில் சொல்லி இருக்கிறார். அவரது ஆளுமையை எனக்கு இந்த இடம் சிறப்பாக வெளிப்படுத்தியது.

அதே நேரத்தில் வியட்நாம் போரில் முடிவுகளைத் தள்ளிப் போடுகிறார். தான் ஒரு நிலை எடுப்பது அடுத்த தேர்தலில் தன் வாய்ப்புகளைப் பாதிக்கும் என்று நினைக்கிறார். ராபர்ட் கென்னடியோடு பல கசப்புகள் இருந்தாலும் அடக்கி வாசிக்கிறார்.

மூன்று பேருமே தலைமைப் பண்பு உடையவர்கள். சிறந்த தலைவர்களாக இருக்கக் கூடியவர்கள். ஜான்சனுக்கு அடக்கப்பட்டவர்களிடம் இருந்த பரிவு, ஜான் கென்னடியின் charisma, ராபர்ட் கென்னடியின் விசுவாசம், மூவருக்கும் இருந்த முடிவெடுக்கும் திறன், ஜான்சனுக்குத் தெரிந்திருந்த சட்டசபை நுணுக்கங்கள் எல்லாமே நமக்கு புரிகிறது. ஆனால் ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது – அதனால் கென்னடி ஜான்சனை அமுக்கினார். ஜான்சனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, தோல்வியை வெற்றியாக்க முடியவில்லை. கென்னடி இறந்திராவிட்டால் ஜான்சனின் அரசியல் வாழ்வு முடிந்துதான் போயிருக்கும். ரா. கென்னடி எதையும் கறுப்பு வெள்ளையாகப் பார்ப்பவர். கம்யூனிஸ்டுகளின் எதிரி. ஆனால் பதவி, பொறுப்புகள் அவரை பதப்படுத்தியது. அவரும் ஜனாதிபதியாக வந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். (நிக்சனுக்கு நல்ல போட்டியாகவாவது இருந்திருப்பார்.)

robert_a_caroஒரு அரசியல் மாற்றத்தை இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியும் என்று நான் நினைத்ததில்லை. Unputdownable. காரோ ஜான்சன்/கென்னடிகளின் calculation, அவர்களது ஆளுமைகள், ஆளுமைகளின் குறைநிறைகள் ஆகியவற்றை மிகச் சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். யாருடைய தவறுகளையும் பூசி மறைக்கவில்லை.  ஜான்சனின் ஊழல்கள், கள்ள ஓட்டு ஆகியவற்றையும் எழுதுகிறார். இந்த மாதிரி இந்தியத் தலைவர்களைப் பற்றி ஒரு புத்தகம் வராதா என்று ஏங்க வைத்துவிட்டார். கோகலே-திலக், காமராஜ்-ராஜாஜி, நேரு-சுபாஷ் என்று எத்தனையோ போட்டிகள் இந்தியாவிலும்தான். ஆனால் காந்தியைப் பற்றி மட்டும்தான் இங்கே என்ன வேண்டுமானாலும் எழுத முடியும் என்பதுதான் சோகம். ஒரு வேளை சர்வபள்ளி கோபால், ராஜ்மோகன் காந்தி மாதிரி யாராவது எழுதி இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.

ஜான்சனைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை காரோ உண்டாக்கி இருக்கிறார். அவர் ஜான்சனின் வாழ்வைப் பற்றி எழுதிய புத்தகங்களில் இது நான்காவது பகுதி. எல்லாம் தலையணை சைசுக்கு இருக்கின்றன. இருந்தாலும் படித்துப் பார்க்க வேண்டும். காரோ எழுதிய இந்தப் புத்தகம் 2012-இல் வெளிவந்திருக்கிறது.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


 

தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்

தொடர்புடைய சுட்டிகள்: ராபர்ட் ஏ. காரோ – விக்கி குறிப்பு