நோபல் பரிசு பெற்ற வில்லியம் ஃபாக்னர் எழுதிய துப்பறியும் கதைகள்

william_faulknerபுத்தகம்: Knight’s Gambit – ஐந்து சிறுகதைகள், ஒரு குறுநாவல்

நோபல் பரிசை வென்றவர் துப்பறியும் கதைகளும் எழுதினார் என்பது ஆச்சரியப்படுத்தலாம். ஆனால் இவை ஃபாக்னரின் பாணி கதைகளே. இவற்றில் உள்ள மர்மம் ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் போலவோ அகதா கிரிஸ்டி கதைகள் போலவோ நம்மை என்ன நடந்திருக்கும் என்றெல்லாம் யூகிக்க வைப்பதில்லை. கதாபாத்திரங்கள், சூழல் போன்றவற்றுக்குத்தான் முக்கியத்துவம். மெல்வில் டேவிசன் போஸ்ட் எழுதிய அங்கிள் ஏப்னர் கதைகளைப் போன்ற நடை. மாற்றிச் சொல்கிறேனோ – துப்பறியும் கதை விரும்பிகளைத் தவிர வேறு யாருக்கும் போஸ்ட் யாரென்று தெரியப் போவதில்லை! அங்கிள் ஏப்னர் கதைகள் காலத்தால் முற்பட்டவை. அதனால் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

knights_gambitகதைகளின் நாயகன், துப்பறிபவர், காவின் ஸ்டீவன்ஸ் என்ற அரசு வக்கீல் (Prosecutor). கொஞ்சம் அத்தைப்பாட்டி ஸ்டைலில், விவிலிய ஸ்டைலில்தான் பேசுவார். ஃபாக்னரின் நடையே கொஞ்சம் விவிலிய ஸ்டைல்தான். கதைகள் அவரது மருமகனும் பதின்ம வயதினனும் ஆன சக் மாலிசனின் கண்ணோட்டத்தில் விவரிக்கப்படுகின்றன.

ஏற்கனவே மேலோட்டமாகத்தான் எழுதுகிறேன் என்று குறை சொல்கிறார்கள். 🙂 ஏன், எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது. வாசிப்பு அனுபவம் ஒவ்வொருவருக்கும் பர்சனல், அதை அடுத்தவர்களுக்கு உணர்த்த முடியாது என்று எனக்கு இப்போதெல்லாம் தோன்றிக் கொண்டே இருக்கிறது. மர்மக் கதைகளுக்கோ கதைச்சுருக்கம் கூட எழுதுவதற்கில்லை. கதைகளை ட்விட்டர் ஸ்டைலில் அறிமுகம் செய்ய வேண்டியதுதான்!

இந்தக் கதைகளில் நான் தலை சிறந்ததாகக் கருதுவது Monk என்ற சிறுகதைதான். அதை மர்மக் கதை என்றெல்லாம் சொல்வது அதை குறைத்து மதிப்பிடுவது. மர்மமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். கொஞ்சம் முட்டாள் பயல் – சிறையிலிருந்து விடுதலை ஆகும் சமயத்தில் ஒரு கொலை செய்கிறான். ஏன் என்று மெதுவாகப் புரிகிறது.

Tomorrow என்ற சிறுகதையையும் குறிப்பிடலாம். குற்றவாளி என்று எல்லாருக்கும் தெரிகிறது ஆனால் ஜூரி அவனை விடுவிக்கிறது. ஏன்? இது 1971-இல் ராபர்ட் டுவால் நடித்து திரைப்படமாகவும் வந்தது

Smoke மற்றும் An Error in Chemistry என்ற இரண்டு சிறுகதைகளும் சிறந்த துப்பறியும் சிறுகதைத் தொகுப்புகளில் சேர்க்கப்படுகின்றன. படிக்கலாம்.

மற்ற கதைகளை – Hand upon the Waters மற்றும் Knight’s Gambit ஆகியவற்றை நான் பெரிதாக ரசிக்கவில்லை.

படியுங்கள் என்று நான் பரிந்துரைப்பேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம், துப்பறியும் கதைகள்