அந்தக் கால எழுத்தாளர்கள் – மு.வ.

இதை அனுப்பிய டாக்டர் கைலாசத்துக்கு நன்றி! மு.வ. நூற்றாண்டு தருணத்தில் இதை டாக்டர் கைலாசம் அனுப்பி இருப்பது மிகவும் பொருத்தமானது. இது கலைமகள் இதழில் பிரசுரமானது. கலைமகளுக்கும் நன்றி!

டாக்டர் கைலாசம் மலர்ச்சோலை மங்கை, கயல், மணிமகுடம் உட்பட்ட சில சரித்திர நாவல்களை எழுதி உள்ளார். இன்னும் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஓவர் டு டாக்டர் கைலாசம்!

mu_ varadarajanஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்? ஊருக்கு உலகுக்கு குற்றம் இல்லா உரைதனை உரைப்பவராகவும், எல்லோருக்கும் பொதுவானவராகவும், சத்தியத்தின் வழிதனில் வாழ்பவராகவும், சமத்துவத்தை ஊணில் கலந்து ஊட்டும் நெறி தவறாதவராகவும் இருக்க வேண்டும் அல்லவா? இந்தக் குணங்கள் அனைத்தும் கொண்டு, இந்த புவிதனில் அழியா இடம் பெற்ற எழுத்தாளராகவும் விளங்கியவர் மு. வரதராசனார் அவர்கள். மலர் போன்ற இரக்க நெஞ்சமும், மலை போன்ற கொள்கையும் கொண்ட பண்பாளர்; அறிவுத் தந்தையாய், அன்புள்ளமும் கொண்ட தாயுள்ளமும் கொண்டு கொள்கைப் பிடிவாதமும், நெறியுடன் வாழ்ந்த பெருந்தகையாளர் வரதராசனார் அவர்களின் வாழ்வும் எழுத்தும் பற்றிப் பார்ப்போம்.

ஆறுகாடுகளை கொண்ட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்த திருப்பத்தூரின் அருகில் அமைந்த வேலம் என்ற சிறிய ஊரில் முனுசாமி முதலியார் அவர்கள் பெருவாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் துணைவியார் அம்மாக்கண்ணுவுக்கும் ஏப்ரல் 15ஆம் தேதி 1912 ஆம் ஆண்டு வேங்கடவன் அருளால் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு திருவேங்கடம் என்று பெயரிட்டு சீராட்டி வளர்த்து வந்தார்கள். முனுசாமி அவர்களின் தகப்பனார் பெயர் வரதராசனார். தனது தந்தையின் பெயரையே தனது மகனுக்கும் இட்டு வரதராசனார் என்று அழைத்து வந்தார். வேலம் கிராமத்தில் அமைந்த தொடக்ககல்வி நிலயத்தில் வரதராசனாரை கல்வி பயிலச் சேர்த்தார்.. அதன்பிறகு உயர்நிலைக் கல்விக்காக வரதராசனார் திருப்பத்தூர் சென்று ஆழ்ந்து படித்தார். தனது பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். அந்த சிறிய வயதிலேயே திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராக வரதராசனார் பணியாற்றினார்.

தாலுகா அலுவலகத்தில் எழுத்து வேலை மிகவும் அதிகம். விடாது வேலை செய்ததால் வரதராசனாரின் உடல் நலம் குன்றியது. வேறு வழியில்லாமல் ஓய்வு எடுக்க வேண்டி வந்தது. தனது சொந்த ஊரான வேலம் கிராமத்துக்குச் சென்று சிறிது நாள் ஓய்வு எடுத்தார். அந்த சமயங்களில் தமிழ் பண்டிதரான முருகையா முதலியாரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு வரதராசனாரின் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது. முருகையா முதலியாரின் தமிழ் ஆர்வம் வரதராசனாரையும் தொற்றிக் கொண்டது. அவரிடம் ஆழ்ந்து தமிழ் கற்றார். தனது பத்தொன்பதாவது வயதில் வித்வான் முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றார். தமிழ் வரதராசனாரின் இரத்தத்தில் ஓட ஆரம்பித்தது. தானாகவே பயின்று தனது இருபத்து மூன்றாவது வயதில் வித்வான் தேர்வில் மாநிலத்தில் முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்று திருப்பனந்தாள் மடத்தின் மிக உயரிய பரிசனான ஆயிரம் ரூபாய் பரிசினைப் பெற்றார். இந்த சமயத்தில் வரதராசனாருக்கு திருமணப் பேச்சு நடந்தது. தனது மாமன் மகளான ராதா அம்மையாரை 1935ஆம் ஆண்டு மணம் செய்து கொண்டார். ராதா அம்மையாரை திருமணம் செய்ததும், அவரது வாழ்வில் பெரும் மகிழ்ச்சியும் மாற்றமும் ஏற்பட்டது. அந்த ஆண்டே திருப்பத்தூர் தமிழ் ஆசிரியராக பணிக்குச் சேர்ந்தார். தனது மனம் விரும்பியபடியே தமிழ் அமுதத்தை மாணவர்களுக்கும் ஊட்ட முடியும் என்பதே அவருக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆசிரியராக வேலை பார்த்தாலும் அவர் தனது படிப்பை விடவில்லை. பி.ஓ.எல். தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார்.

நான்கு ஆண்டு ஆசிரியப் பணிக்கு பின்னர் பச்சையப்பன் கல்லூரியில் அவருக்கு விரிவுரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ‘கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்’ என்ற அந்த பதவியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட வரதராசனார், ‘தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்‘ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். ஆனாலும் அவர் தமிழாராய்ச்சியை விடவில்லை. பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த் துறையின் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். தனது முப்பதாறாவது வயதில் ‘சங்க இலக்கியத்தில் இயற்கை’ என்ற தலைப்பில் பெரும் ஆராய்ச்சி செய்தார். அந்த ஆராய்ச்சியின் முடிவுகளை சென்னைப் பல்கலைகழகத்தில் சமர்ப்பித்தார். சென்னை பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது (1948). சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதன் முதலாக தமிழில் முனைவர் பட்டம் வாங்கியவர் வரதராசனார் அவர்களேயாவர்.

பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் போதும் சரி, சென்னைப் பல்கலைகழகத்தில் பணியாற்றும் போது வரதராசனார் அவர்கள் மாணவர்களிடத்தில் மிகுந்த அன்புடன் பழகுவார். அவர்கள் வாழ்வின் ஒவ்வொரு முன்னேற்றத்திலும் அவர் கவனம் செலுத்த தவறியதில்லை. சீடர்களின் எண்ணங்களை சீர்படுத்தி அவர்களை தெளிவடையச் செய்வதில் அவரைப் போல சிறந்தவர் யாரும் இல்லை. மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் அவர் முழுக்கவனமாக இருப்பார். விடுமுறையில் கூட அடுத்த தேர்வுக்கு உரிய நூல்களைப் படிக்கும்படி மாணவர்களிடம் சொல்லுவார். தேர்வில் கடினமான பாடங்களை முதலிலேயே எழுதி தேர்வு பெற வேண்டும் என்று சொல்லுவார். கடினமான பாடங்கள் தேர்ச்சிக்கு இடையூராக இருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டு அதை மாணவர்களிடம் அன்பாக எடுத்துக் கூறி அவர்களை கவனமாகப் படிக்க வைப்பார். தேவையில்லாது நண்பர்களை மாணவ பருவத்தில் பெருக்கினால் அது படிப்புக்கு இடையூராக இருக்கும் என்பதை மாணவர்களுக்கு அன்பாக உணர்த்துவார்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் வசதியாகவும் வளமாகவும் இருக்க வேண்டும் என்பதில் வரதராசனார் அவர்கள் மிகவும் முனைப்பாக இருப்பார். மாணவர் பருவம் நீங்கிய பின்னும் அந்தத் தொடர்பை விடாமல் குடும்பப் பாசத்தோடு அவர்களுடைய தேவைகளை அறிந்து, வாழ்க்கையின் மேடு பள்ளங்களை சமாளிக்கும் சக்தியை அவர்களுக்கு சொல்லித் தருவார். அமெரிக்காவில் படித்துக் கொண்டு இருந்த தனது மாணவரின் அமெரிக்க சூழ்நிலையை அறிந்து, அவரது தேவையை அறிந்து அவருக்கு உதவியாக அவரின் தந்தையை அனுப்பாமல், தாயை அனுப்ப வேண்டிய நியாயத்தை அவரது குடும்பத்தாருக்கு புரிய வைத்து அனுப்பவும் செய்தார். மணமக்களைப் பிரிக்க வரதராசனார் என்றுமே தயங்குவார். உண்மையான காரணங்களை அறிந்து அதை சரி செய்ய முயற்சி செய்வார். மகாநாடு போன்று முன் அறிமுகம் இல்லாத பலரும் கூடும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவர் மற்றவர்களுக்கும் புரிய வைப்பார். புத்தகங்களும், பண உதவியும் செய்ய அவர் என்றுமே தயங்கியது கிடையாது.

எழில் மிகு தோற்றம், கூரிய மூக்கு, சுடர் விட்டுப் பிரகாசிக்கும் கண்கள், அவற்றின் மேல் மூக்குக் கண்ணாடி, அகன்ற நெற்றி, புன்னகை பூத்த முகம், நீண்ட மெலிந்த கைகள், மிக அழகான பல் வரிசையுடன் பண்பட்ட நெஞ்சம் உடைய வரதராசனாரைப் போன்று இயற்கையை அனுபவிப்பதில் இனி ஒருவர் பிறந்துதான் வரவேண்டும். தனது இல்லமான தாயகத்தில் பெரும் தொட்டியை கட்டி அதிலிருந்து அருவியில் இருந்து நீர் விழுவது போல அமைத்து இருந்தார். நீர்வீழ்ச்சி போன்ற இயற்கை காட்சிகள் அவரை குழந்தையாகவே மாற்றி விடும். ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சியில் யாரோ ஒருவர் கரித்துண்டில் எழுதிய ஆடிப் பதினாறு தங்கம் காவிரியில் கலந்த நாள் என்று சிறிய சொற்றொடர் கூட வரதராசனார் அவர்களை பெரிதும் பாதித்தது.

சென்னைப் பல்கலைக்கழகம் 1961ஆம் ஆண்டு அவரை தனது புகழ் பெற்ற தமிழ்துறை தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொள்ளும்படி அழைத்து அவருக்கு அந்த பெரும் பொறுப்பைக் கொடுத்தது. அந்தப் பொறுப்பை திறம்பட வகித்த வரதராசனாரை 1971 ஆண்டு மதுரைப் பல்கலைக்கழகம் துணை வேந்தராக பொறுப்பு ஏற்கும்படி கேட்டுக் கொண்டது. அதை ஏற்றுக் கொண்ட வரதராசனார், அந்தப் பொறுப்பு மிக்க பதவியை திறம்ப்பட நிர்வகித்தார். அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி வரதராசனாருக்கு 1972ஆம் இலக்கிய பேரறிஞர் என்ற பட்டத்தை கொடுத்து பெருமை படுத்தியது.

அன்னாருக்கு திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய மூன்று ஆண்மக்கள் பிறந்தார்கள். அவர்களை மிக நல்வழிப் படுத்தி இன்று அவர்கள் பெரும் மருத்துவர்களாக பணி புரிகின்றனர்.

வரதராசனார் பல மொழிப் பண்டிதராவார். அவருக்கு தமிழையும் ஆங்கிலத்தையும் தவிர, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழியும் தெரியும். சென்னை பல்கலை கழகத்தைத் தவிர திருப்பதி, அண்ணாமலைப் பல்ககலைக் கழங்களின் செனட் உறுப்பினராக பதவி வகித்தார். இதைத் தவிர கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திரா, தில்லி பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்தார்.

பல்கலைகழகங்களைத் தவிர, சாகித்ய அகாதெமி, பாரதிய ஞானபீடம், தேசிய புத்தக்குழு, இந்திய மொழிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ் அகராதிக் குழு, தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் மத்திய அரசு பணி தேர்வாணைக்குழு, தமிழ் நாட்டு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சி மொழிக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்று கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பல நிறுவனங்களிலும் அங்கம் வகித்து தனது அரிய பணிகளையும் ஆற்றியுள்ளார்.

புத்தகங்களை வரதராசனாரைப் போல பாதுகாப்பார் யாருமில்லை. தன்னிடம் இருக்கும் புத்தகங்களின் நடுவில் வேப்பிலை வைத்து இருப்பார். கரையான் பெரும் புத்தகப் பூச்சிகளை இந்த வேப்பிலை அண்ட விடாது. இந்த எளிமையான புத்தகப் பாதுகாப்பு முறையை தனது மாணாக்கர்களுக்கும் சொல்லி தருவார்.

வரதராசனார் அவர்கள் ஆறு மொழியியல் நூல்களும், கட்டுரை தொகுப்புகள் பதினொன்றும், பதிமூன்று புதினங்களும், சிந்தனைக் கதைகள் இரண்டும், ஆறு நாடகங்களும், இலக்கிய கட்டுரைகள் இருபத்து நான்கும், சிறுகதைகள் இரண்டும், நான்கு கடித இலக்கியங்களும், வாழ்க்கை வரலாறு நான்கும், ஆங்கில நூல்கள் இரண்டும் எழுதியுள்ளார். வரதராசனார் சிறுவர்களை என்றுமே மறந்ததில்லை. அவர்கள் நாளைய பாரத நாட்டு பெருமை மிகு குடிமக்கள் என்ற எண்ணம் அவருக்கு என்றும் இருந்தது. சிறுவர் இலக்கியத்துக்கு அவர் என்றும் முக்கியத்துவம் கொடுத்தார். சிறுவர்களுக்காக ஐந்து தொகுப்புகள் அவர் எழுதியுள்ளார். அவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை என்பத்தைந்து. வரதராசனார் எழுதிய ‘திருக்குறள் தெளிவுரை‘ பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. இந்த உரை சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிடப்பட்டன.

வரதராசனாரின் புதினங்கள் எளிதில் புரியும்படி எழுதப்பட்டிருக்கும். பண்பாட்டுச் சிக்கல்களை கதை மாந்தர்களின் வாயிலாக முன் வைப்பதில் வரதராசனாரைப் போலச் சிறந்தவர் யாரும் இல்லை எனலாம். வாழ்க்கையில் சந்தர்ப்பச் சூழ்நிலையால் தவறிப் போய்விட்ட பெண்களின் வாழ்க்கையைப் பல நாவல்களில் காட்டியுள்ளார். அவர்கள் தவறு செய்வதற்கான பல்வேறு காரணங்களை வரதராசனார் விளக்கியுள்ளார்.

தனது ‘எது குற்றம்?‘ சிறு கதையில் வரதராசனார் அவர்கள் “வாழ்க்கையில் எத்தனையோ ஏமாற்றங்கள் வந்து போகின்றன. ஆனால் இத்தகைய கொடிய ஏமாற்றத்தை எதிர்த்து நின்று என்னோடு போராடும் ஏமாற்றத்தை இது வரையில் கண்டதில்லை. மற்ற ஏமாற்றங்கள் வரும் போது பெருமூச்சு விட்டுத் தெளிவேன். போகும் போது பெருமூச்சு விட்டுக் கலங்குவேன். இந்த ஏமாற்றமோ வரும்போதே என் உயிரைப் பணயமாக வைத்துக் கொண்டு வந்தது. என் உயிரைப் பணயமாகப் பெற்றுக் கொண்டே செல்லும் போல் இருந்தது” என்று அவர் காதலில் ஏமாந்தவரைப் பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார். வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லி தன்னுடன் வரத் தயங்கி வெகுதூரம் சென்று விட்டவளை எண்ணி வாடாமல் தனக்கு அருகில் இருப்பவளை ஏற்றுக் கொண்டு வாழ்வதின் அர்த்தத்தை அவர் இந்த சிறுகதையின் மூலம் அனைவருக்கும் சொல்கிறார். இது போன்று தனது தேங்காய் துண்டுகள், வாய்திறக்க மாட்டேன், எதையோ பேசினார், கட்டாயம் வேண்டும், விடுதலையா போன்ற சிறுகதைகளில் வாழ்வின் எதார்த்தத்தை அவர் சொல்லியுள்ளார்.

வரதராசனார் எழுதிய புதினங்களில் சாகித்திய அகடெமி பரிசு பெற்றது ‘அகல் விளக்கு‘ இந்தப் புதினத்தை வாசிக்கும் பொழுது நற்பண்புகள் பலவற்றையும் குணங்களையும் சொல்லித் தருவது போலிருக்கும். ஆழ்ந்து படிக்கும் பொழுது மனித மாந்தர்களுக்கு வேண்டிய ஆளுமை தன்மைகளை இந்தப் புதினம் சொல்லித்தரும். அகல்விளக்கில் வரும் கதாபாத்திரங்களான வேலுவும், சந்திரனும் வாழ்வின் எதிர் துருவங்களின் குறியீடுகள். அவர்களின் இயல்புகளைச் சொல்லும் பொழுது சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல் ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு மற்றொரு புறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடிக்கு அழகிய மலர்கள் இல்லை, வேருக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும் இலையும் தண்டும் வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது என்கிறார். வேலய்யனிடம் சந்திரன் கதையின் கருப்பொருளை “நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும் அறிவியயும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள், பராட்டினார்கள் என்ன பயன்? வரவர எண்ணெயும் கெட்டது திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கி விட்டேன். நீதான் நேராக்ச் சுடர் விட்டு அமைதியாக எரியும் ஒளிவிளக்கு” என்று சொல்வதாக மிக அழகாக அமைத்துள்ளார். சந்திரனின் சின்னம்மா பாத்திரத்தின் மூலம் பெண் விடுதலையைப் பற்றி மிக அழகாக சொல்கிறார். பெண்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருந்தும் தங்கள் சிந்தனையை நடைமுறை படுத்த முடியாதபடி முடக்கப்படுவதால் குடும்பத்துடன் தாங்களும் அழிந்து போகிறார்கள். வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்கள்யும் கெடுக்கும் என்றும், விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும் தெரியுமா? நீயே அரசர் என்று எண்ணிக்கொண்டு உன் விருப்பம் போல் ஆடமுடியாது என்றும் பல வாழ்க்கைக்கு உதவும் யோசனைகளை-கருத்துகளை இந்த புதினத்தில் பதிந்துள்ளார்.

தமிழ் காப்பியங்களைப் பற்றி கதையின் நடுவில் அவர் சொல்ல தவறுவதில்லை. கோவலனுடைய தவறு நன்றாக தெரிந்திருந்தும் எதிர்த்துப் பிரிந்து வாழ்வதை விட அந்த தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகிக்கு இருந்தது. அதனால்தான் பொருள் இழந்து வருந்திய கணவனுக்கு தன் கால்சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போதும் அந்த வாழ்வுக்கு துணையாக இருந்து விட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்கு கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை அழிக்கத் தூண்டும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்! எவ்வளவு தியாகம் வேண்டும் என்கிறார்.

அது மட்டுமல்லாமல் தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளை எல்லாம் இந்தப் புதினத்தில் சொல்கிறார். இந்தக் கதையைப் படிக்கும் பொழுது இது வெறும் பொழுதுபோக்குக்கு படிப்பதன்று வாழ்க்கையின் சிக்கல்களை உணர்ந்து அதை சீர்படுத்த உதவும் கருத்துகள் என்று புரிகின்றது.

கரித்துண்டு‘ புதினத்தில், ஓவியக் கலையில் சிறந்த கணவன் முடமானதால் அவரை விட்டு விலகி பேராசிரியருடன் சேர்ந்து வாழும் ஓவியரின் மனைவியைப் பற்றியும், மனைவி விலகியதாலும், முடமானதாலும் ஏழ்மை அடைந்த ஓவியரைப் பற்றியும் அந்த நிலையிலும் ஓவியர் ஒரு குழந்தைக்கு தாயான பெண்ணை அவர் ஏற்றுக்கொள்வதையும் வரதராசனார் மிக அருமையாகச் சொல்லியுள்ளார். இது தவிர ஆந்திர தமிழக எல்லை தகராறு, அமெரிக்க தனமான வாழ்க்கையின் சாதக பாதகங்கள், தேர்தல் முறையில் உள்ள பலவீனங்கள் போன்ற பல விவரங்களையும் அவர் தனது கதையில் சொல்லத் தவறுவதில்லை. நெஞ்சில் ஒரு முள் நவீனம் வறுமைக்காக தன் உடலை ஒரு பெண் விற்பதாக காட்டுகிறது. கயமை என்ற கதையில் பகட்டான வாழ்வை விரும்பி அதற்காகவே பலரையும் கைக்குள் போட்டுக் கொள்வதற்காக வசீகரம் என்ற பெண் கற்பை விற்பதாகச் சொல்கிறார்.

அவர் எழுதிய கள்ளோ காவியமோ, கரித்துண்டு, பெற்ற மனம், நெஞ்சில் ஒரு முள்,அகல் விளக்கு, மண் குடிசை, செந்தாமரை ஆகிய அனைத்துப் புதினங்களும் படிப்பவர்களைக் கவர்ந்தன.

கி.பி.2000 (சிந்தனைக் கதை) என்ற அன்னாரின் புதினத்தில் அவரின் கனவுகள் பதிவாகியுள்ளன. கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகியவற்றுக்கு தமிழக அரசின் பரிசு கிடைத்தது. அவரின் ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சி கழகத்தின் பராட்டு பெற்றவை. அவரின் பல நூல்கள் ஆங்கிலம், இந்தி, மராத்தி, ரஷ்ய மொழி, சிங்கள மொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பலரின் பாராட்டையும் பெற்றது.

கலை என்பது நெஞ்சத்தில் இருந்து பொங்கி வரும் உணர்ச்சியாக இருக்க வேண்டும். கலைஞர்கள அதை வெளிப்படுத்துகிறார்களைத் தவிர அதை உற்பத்தி செய்வதில்லை. கவிஞர்கள், போன்ற கலைஞர்களைப் பற்றி வரதராசனார் அவர்கள்

பூனையின் கண்கள் மனிதன் கண்களைவிட ஆற்றல் மிகுந்தது. ஆதலால் நள்ளிருளில் மனிதருடைய கண்ணுக்கு தெரியாதவையெல்லாம் பூனையின் கண்ணுக்குப் புலனாகின்றன. நாயின் மூக்கு ஆற்றல் மிகுந்தது. அதனால் மனிதனைவிட முகர்ந்தறியும் திறன் மிகுந்ததாக மோப்பத்தாலேயே பலவற்றை அறியவல்லதாக உள்ளது. இவ்வாறே கவிஞனுடைய உள்ளமும் மற்ற மக்களின் உள்ளத்தைவிட உணர்ச்சி மிக்கதாக இருக்கிறது. அதனால் மற்றவர்கள் உணர்கின்றவற்றையும் அவர்களை விட ஆழ்ந்து உணர முடிகிறது. கவிஞனுடைய அகக்கண்ணும் மிக வளர்ந்து பண்பட்டதாகையில் கற்பனையில் பலவற்றையும் படைத்து காக்கவும் அவனால் முடிகின்றது. இத்தகைய கற்பனை உலகில் உணர்ச்சி மிக்கவனாக கவிஞன் இருக்கும் நேரமே மிக மிகச் சிறந்த நேரம். அந்நிலையில் அவன் மனிதனாக வாழவில்லை. படைக்கும் கடவுள் போன்றவனாக அந்த நேரத்தில் வாழ்கிறான். அவனுடைய சாதாரண வாழ்க்கை வேறு. கற்பனை உலகில் திளைக்கும் அந்தப் பொழுது சிறிது நேரமே ஆயினும் அவன் உயர்ந்த கலைச் செல்வத்தைப் படைக்கும் நேரம் அது. அவன் தன்னை இழந்து தன்னை மறந்து கலையின் கருவியால் ஏய்த்து அமைந்துள்ள நேரம் அது. புல்லாங்குழலில் நுழையும் காற்று தானகாவே இசையைப் பிறப்பித்தல் போல அவனுடைய உள்ளத்தில் எழும் உணர்ச்சிகள் அவனை அறியாமலேயே பாட்டுகளைப் படைத்துக் கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர்களில் ஒரு பிரிவினராக எழுத்தாளர்களைப் பற்றி வரதராசனார் அவர்கள் சொல்லும் பொழுது திருவள்ளுவர், இளங்கோ போன்ற கவிஞர்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு காலம் நம்மைப் பிரித்து வைத்த போதிலும் அவர்களின் நூல்கள் அந்த அரிய தொடர்பை ஏற்படுத்தித் தருகின்றன. திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் பயின்றவர்கள் வேண்டும் இடத்தில் வேண்டும் காலத்தில் அந்த பெருமக்களின் திருவுள்ளங்களோடு தொடர்பு கொள்ள முடிகிறது என்றவர் ஆங்கில அறிஞர் ரஸ்கின் சொன்னதான அரசர், அமைச்சர் முதலானவர்களைக் காண்பதற்கு நாம் காத்திருக்கும் நிலை போல் அல்லாமல் நாம் எளிதில் கண்டு மகிழுமாறு நமக்காக அந்தப் புலவர் பெருமக்கள் என்றும் எங்கும் கருணை கொண்டு நூல் வடிவில் காத்திருக்கின்றனர். ஆகவே நல்ல நூல் என்பது எழுத்துச் சொற்பொருள்களால் ஆன ஏடுகள் அடங்கிய ஒன்று அன்று; நமக்காக காத்திருக்கின்ற பெருந்தகையின் திருவுருவம் எனலாம் என்று சொல்லி முடிக்கிறார்.

இன்றும் அன்னாரின் நூல்களைப் படிக்கும் போது அவரே நேரில் வந்து நம்மிடம் சொல்வது போல்தான் இருக்கிறது. அன்னாருக்கு அறுபத்திரண்டு அகவை ஆகும் போது அவரின் உடல் நலம் குன்றியது. அக்டோபர் மாதம் 10ஆம் தேதி 1974ஆம் ஆண்டு தமது கருத்துகளை நூல் வடிவில் நமக்கு தந்து விட்டு நம்மையெல்லாம் விட்டு பிரிந்து சென்றார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டிகள்:
மு.வ. நூற்றாண்டு
அகல் விளக்கு பற்றி பக்ஸ்
கரித்துண்டு

1 thoughts on “அந்தக் கால எழுத்தாளர்கள் – மு.வ.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.