லிண்டன் ஜான்சன் – மாஸ்டர் ஆஃப் தி செனட்

Lyndon_JohnsonPassage to Power படித்த பிறகு ஜான்சனைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆசை. ஒரே பிரச்சினை, காரோவின் ஒவ்வொரு வால்யூமும் தடித்தடியாக தலையணை சைசில் இருக்கிறது. Master of the Senate-ஐ தம் கட்டித்தான் படித்தேன்.

ஜான்சனின் ஆளுமை அவரது சிறு வயதிலேயே உருவாகிவிட்டது. வாழ்ந்து கெட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா டெக்சஸ் மாநில காங்கிரஸ்மானாக இருந்தவர். (நம்மூர் எம்.எல்.ஏ. மாதிரி) அகலக்கால் வைத்து பணம் எல்லாம் போய் பயங்கரக் கஷ்டம். சின்ன ஊரில் பல அவமானங்களை ஜான்சன் சந்தித்திருக்கிறார். அது அவரிடம் வெற்றி பெறுவதற்கான வெறியை உருவாக்கி இருக்கிறது. காலம் முழுவதும் அவர் தேடியது அதிகாரம், அங்கீகாரம், பணம், வெற்றி. அவற்றுக்காக, காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த லெவலுக்கும் ஜான்சன் இறங்குவார். சிறு வயதிலேயே அமெரிக்க ஜனாதிபதி ஆக வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறார்.

robert_a_caroMaster of the Senate புத்தகம் அவரது செனட்டராக இருந்த 1948-1960 காலகட்டத்தை விலாவாரியாக அலசுகிறது. எப்படியோ தகிடுதத்தம் செய்து உள்ளே நுழைந்துவிட்டார். ஜனாதிபதி ஆகும் முயற்சியில் முதல் படி. ஆனால் ஜான்சன் டெக்சஸ்காரர். அமெரிக்க சிவில் போரில் டெக்சஸ் பிரிந்து போன தென் மாகாணங்களில் ஒன்று. போரில் தோற்று அமெரிக்கா மீண்டும் ஒன்றானது என்னவோ உண்மைதான். ஆனால் எண்பது வருஷங்களில் எந்த தென் மாகாணக்காரரும் அதற்குப் பிறகு ஜனாதிபதி ஆனதில்லை. தெற்கு மாநிலத்தவர்கள் நிற வெறியர்கள், கறுப்பர்களை ஒடுக்கி வைத்திருப்பவர்கள் என்ற (நியாயமான) கடுப்பு வட மாநிலத்தவருக்கு இருந்தது. மக்கள் தொகை வட மாநிலங்களில் அதிகம். ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கே பலம் அதிகம். அதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டி போடக்கூட ரிபப்ளிகன் கட்சியும் டெமாக்ரடிக் கட்சியும் தென்னகத்தினரை தேர்ந்தெடுப்பதில்லை.

அன்றைய தென்னக செனட்டர்கள் ஒரு powerful minority. தென்னகக் கறுப்பர்களுக்கு அன்று எந்த உரிமையும் இல்லை. நூற்றில் ஒரு கறுப்பருக்கு ஓட்டுரிமை இருந்தால் அதிகம். Segregation என்ற பேரில் கன்னாபின்னா என்று ஒடுக்கப்பட்டார்கள். படிப்பு, வேலை வாய்ப்பு, தொழில், அரசியல் – எந்தத் தளத்திலும் தங்கள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்வது கஷ்டம். அவர்களுக்கு ஆதரவாக கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு சட்டமும் இந்த தென்னக செனட்டர்களால் தடுக்கப்பட்டது.

Richard_Brevard_Russellஜான்சன் முதலில் செனட்டராக தன் அதிகாரத்தைப் பெருக்கும் வேலையில் ஈடுபடுகிறார். தான் அது வரை சொல்லிக்கொண்டிருந்த கொள்கைகளுக்கு எதிராக லேலண்ட் ஓல்ட்ஸ் என்ற நல்ல நிர்வாகிக்கு ஆப்படிக்கிறார். அது அவருக்கு டெக்சசின் எண்ணெய் மில்லியனர்களின் ஆதரவை – குறிப்பாக பணத்தைப் பெற்றுத் தருகிறது. தென் மாநில செனட்டர்களின் அறிவிக்கப்படாத தலைவரான டிக் ரஸ்ஸலுக்கு ஜால்ரா அடித்து அவருடன் நெருக்கமாகிறார். கறுப்பர்களுக்காக கொண்டு வரப்படும் சட்டங்களை எதிர்க்கிறார். ரஸ்ஸல் இவர் நம்ம ஆளு என்று நினைக்கிறார். ரஸ்ஸலின் ஆதரவு ஜான்சனுக்கு பத்திரிகையில் பேர் வரக் கூடிய சில வாய்ப்புகளைப் பெற்றுத் தருகிறது. அவரது ஆதரவால் டெமாக்ரடிக் செனட்டர்களின் துணைத்தலைவர் ஆகிறார்.

செனட்டர்களின் தலைவர், துணைத்தலைவர் எல்லாம் அப்போது அலங்காரப் பதவிகள் மட்டுமே. ஜான்சன் மெதுமெதுவாக தன் பதவியை பலமுள்ளதாக மாற்றுகிறார். அவர் செய்வதெல்லாம் ஏறக்குறைய ஒரு பி.ஏ. செய்யும் வேலைகள். ஆனால் எந்தக் கேள்வி வந்தாலும் ஜான்சனிடம் பதில் இருக்கிறது. அது அவரது செல்வாக்கை உயர்த்துகிறது. டெக்சஸ் மில்லியனர்களின் பணத்தை மற்ற செனட்டர்கள் பெற வழி ஏற்படுத்தித் தருகிறார்.

அடுத்த தேர்தலில் டெமாக்ரடிக் செனட்டர்களின் தலைவர் தோற்றுப் போகிறார். ஜான்சன் இப்போது தலைவர். தன் co-ordination வேலைகளை விரிவுபடுத்துகிறார். அடுத்த தேர்தலில் டெமாக்ரடிக் கட்சிக்கு ஒரு வோட்டு வித்தியாசத்தில் செனட்டில் மெஜாரிடி கிடைக்கிறது. ஜான்சனின் தாக்கம் இன்னும் அதிகரிக்கிறது.

செனட்டர்களுக்கு முக்கிய விஷயம் கமிட்டிகள். அதில் மூக்கை நுழைக்கிறார். யார் யார் எந்த கமிட்டியில் அங்கம் பெறுவது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை எடுத்துக் கொள்கிறார். அன்றிலிருந்து செனட்டில் அவர் ராஜ்யம்தான்.

ஜான்சனைப் பற்றி நமக்கு இந்தப் புத்தகத்தில் தெரிவது அதிகார வெறி பிடித்த, அதற்காக எதையும் செய்யக் கூடிய ஒரு சராசரி அரசியல்வாதி. ஒரு கருணாநிதி என்றே சொல்லலாம். அதிகாரம் கிடைத்த பிறகு தன்னுடன் ஒத்துழைக்காத செனட்டர்களைப் பழி வாங்குகிறார். செனட்டின் விதிகளை வளைக்கிறார். அவரை மீறிய செனட் இல்லை என்ற நிலையை உருவாக்குகிறார்.

தென் மாகாண செனட்டர்களின் ஆதரவு அவருக்கு பரிபூரணமாக இருக்கிறது. அது இருக்கும் வரையில் செனட் அவரது கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்பது தெளிவு.

ஆனால் 1956-இல் ஜனாதிபதி தேர்தலுக்கு டெமாக்ரடிக் வேட்பாளராக முயலும்போது தென் மாகாணத்தவர், கறுப்பர்களுக்கு எதிரானவர் போன்றவை எத்தனை பெரிய பலவீனம் என்று அவருக்குப் புரிய வருகிறது. அப்போதுதான் ஜான்சனின் மறுபுறம் நமக்குத் தெரிகிறது. ஜான்சனின் ஒரு பக்கம் அதிகார வெறி என்றால் இன்னொரு பக்கம் ஏழைகளிடம் கனிவு. தான் ஏழையாக இருந்து அவமானப்பட்ட நாட்களை அவர் மறந்ததே இல்லை. வெள்ளை, கறுப்பு போன்றவை அவருக்கு பெரிய விஷயம் இல்லை. ஆனால் அதைச் சொன்னால் டெக்சாசில் ஜெயிக்க முடியாது. அவரது power base ஆன தென்னக செனட்டர்களின் ஆதரவு போய்விடும்.

கறுப்பர்களின் எதிரி என்ற பிம்பம் போக வேண்டும். அதற்கு ஒரே வழி civil rights சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் தென்னக செனட்டர்கள் விடமாட்டார்கள். இந்த நிலையில் விடாமல் முயற்சி செய்து கிடைக்கும் சிறு வாப்புகளைப் பயன்படுத்தி தொண்ணூறு வருஷங்களுக்குப் பிறகு கருப்பர்களுக்கான ஓட்டுரிமை சட்டம் ஒன்றை ஜான்சன் நிறைவேற்றுகிறார். இந்த சட்டத்தால் பெரிய பயன் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஒரு symbolic வெற்றி. அவரே சொன்ன மாதிரி கன்னிப் பெண்ணுடன் ஒரு முறை உறவு கொண்டுவிட்டால் அடுத்த முறை சுலபமாக இருக்கும். பின்னாளில் இன்னும் சட்டங்களைக் கொண்டு வரலாம்.

ஜான்சன் ஜனாதிபதி ஆன பிறகு பல civil rights சட்டங்களை நிறைவேற்றினார் என்பது வரலாறு.

ஒரு சராசரி, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதி. கொள்கை கிள்கை எதுவும் கிடையாது. வெற்றி மட்டும்தான் முக்கியம். ஆனால் லிங்கனுக்கு அடுத்தபடியாக கறுப்பர்களுக்காக உருப்படியாக உதவி செய்தவர் அவர்தான். அவரது ஆளுமை fascinating ஆக இருக்கிறது.

நான் பரிந்துரைப்பது Passage to Power வால்யூமைத்தான். ஆனால் இது ஒரு அருமையான ஆராய்ச்சி. இந்தியத் தலைவர்களைப் பற்றி இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் வராதா என்று ஏக்கமாக இருக்கிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: அபுனைவுகள்
தொடர்புடைய சுட்டிகள்: Passage to Power

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.