பெர்னார்ட் ஷா எழுதிய “சீசர் அண்ட் கிளியோபாட்ரா”

bernard_shawஷா எனக்கு மிகவும் பிடித்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். பல சிறப்பான நாடகங்களை எழுதி இருக்கிறார்.

ஷாவின் குறை நிறை எல்லாம் அவரது வசனங்கள்தான். Paradoxical ஆக இருக்க வேண்டும் நிறைய மெனக்கெடுவார். அவரது முக்கியப் பாத்திரங்கள் எல்லாரும் கூர்மையான அறிவுடையவர்கள், வாழ்க்கையை வெகு லாஜிகலாக அணுகுபவர்கள், மனதில் உள்ளதை மறைக்கவே மாட்டார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். சரி நாடகத்தில் பேசாமல் வேறு என்ன செய்ய என்று நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொண்டாலும் சில சமயம் அலுப்புத் தட்டும்.

caesar_and_cleopatraசீசர் அண்ட் கிளியோபாட்ரா அவரது பிரமாதமான நாடகங்களில் ஒன்று. அவரது சீசர் தன்னைத் தானே நன்றாக புரிந்து கொண்ட ஒரு அதிபுத்திசாலி மனிதன். அவனுக்கு பலவீனங்கள் இல்லை என்பதில்லை. அந்த பலவீனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டமிடும் ஒரு மனிதன். தன் வழுக்கைத் தலை (ஆஹா, இதை எழுதும்போது எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்), வயது போன்றவற்றைப் பற்றி அவனுக்கு வருத்தம் உண்டு. கிளியோபாட்ராவோ பதின்ம வயது இளம் பெண். சுயநலமி. அடுத்தவரைப் பற்றி யோசிப்பதெல்லாம் இல்லை. இருவருக்கும் உறவு ஏற்படுவதும், சீசர் கிளியோபாட்ராவை மெதுமெதுவாக தனது அணுகுமுறையைப் புரிய வைப்பதும்தான் கதை.

“காட்டுமிராண்டி” சீசர் எகிப்தை நோக்கி பெரும் படையோடு வருகிறான் என்று தெரிந்து கிளியோபாட்ரா ஸ்ஃபின்க்ஸ் சிலையில் ஒளிந்து கொள்கிறாள். சீசர் அங்கே வந்து அந்தச் சிலையைப் பார்த்து பெரிதாக வசனம் பேச, கிளியோபாட்ரா அவனைப் பார்த்து “கிழவா, காட்டுமிராண்டி சீசர் வருகிறான், நீயும் என்னுடன் ஒளிந்துகொள்” என்கிறாள். உண்மை தெரியும்போது சீசர் ராஜ மாளிகையைக் கைப்பற்றி இருக்கிறார். கிளியோபாட்ராவின் கனவு ஆண் மார்க் அந்தோனி என்றாலும் பரஸ்பர ஈர்ப்பு உருவாகிறது. ஆனால் சீசரை எதிர்த்து ஒரு பெரும் படை வருகிறது. சீசர் இருக்கும் மாளிகையைச் சுற்றி முற்றுகை. கிளியோபாட்ரா வெளியில். யாரும் சீசர் இருக்கும் இடத்துக்குப் போக முடியாது. Of course, கிளியோபாட்ரா போகிறாள். தற்செயலாக எகிப்து படைகளை இன்னொருவர் தாக்க, சீசர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெல்கிறார்.

கதையின் பலம் சீசரின் அணுகுமுறைதான். சீசர் எதிரிகளை வெல்வதை விட அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுவதில்தான் குறியாக இருக்கிறார். சீசர் ஒரு தலைவர், அரசு எப்படி செயல்படவேண்டும் என்று புரிந்து கொண்டவர். தன் நண்பர்களை, தன்னிடம் பணி புரிபவர்களை, எதிரிகளை கையாளும் விதம் அறிந்தவர். அந்தச் சித்திரம் அருமை.

பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கிறது. கிளியோபாட்ரா ஒரு டீனேஜர் போலத்தான் தெரிகிறாள். அவளுடைய கோபங்கள், ஆசைகள் எல்லாம் நன்றாக வெளிப்படுத்தபட்டிருக்கின்றன. கிளியோபாட்ராவின் தாதி ஃப்டாடாடீட்டா, சீசரின் காரியதரிசி பிரிட்டானிகஸ், எகிப்திய மந்திரி போதினஸ், வீரன் ரூஃபியோ என்று மிகவும் கச்சிதமான பாத்திரங்கள்.

நகைச்சுவை மிளிரும் படைப்பு. ஹாஹாஹா என்றூ சிரிக்க இல்லை, புன்னகைக்க வைக்கும்.

ஷாவின் சிறந்த நாடகங்களில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பார்ப்பது இன்னும் உத்தமம். இரண்டு முறை திரைப்படமாகவும் வந்திருக்கிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

மகாபாரதம் படிப்பது எப்படி

ganesh_vyasa_mahabharathaமகாபாரதத்தைப் படிப்பது எப்படி என்று எஸ்.ரா. ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அவருடைய பரிந்துரைகள் எல்லாவற்றையும் நான் ஏற்கவில்லை. ஆனால் முக்கியமான பதிவு, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

s.ramakrishnanஎஸ்.ரா. சொல்வது போல பெரிய preparation எதுவும் தேவை இல்லை என்பது என் நினைப்பு. சும்மா ஆரம்பியுங்கள்!

என் கண்ணோட்டத்தில் பாரதத்தைப் படிக்க ஆரம்பிக்க சிறந்த வழி ராஜாஜியின் புத்தகம்தான். அமர் சித்ர கதா காமிக்ஸ் இன்னொரு நல்ல ஆரம்பப் புள்ளி. ஆர்.கே. நாராயணின் புத்தகமும் நல்ல ஆரம்பப் புள்ளி. எஸ். ரா. பரிந்துரைக்கும் ஆரம்பப் புள்ளிகள் அமர் சித்ர கதாவும் தேவதூத் பட்நாயக் எழுதிய ஜெயம் என்ற புத்தகமும். பி.ஆர். சோப்ராவின் மகாபாரத சீரியல் கொஞ்சம் இழுவை என்றாலும் அதுவும் ஒரு நல்ல ஆரம்பப் புள்ளி. சோவின் மகாபாரதம் பேசுகிறது புத்தகத்திலும் ஆரம்பிக்கலாம்.

அடுத்த படியாக எஸ்.ரா. பரிந்துரைக்கும் முன்ஷியின் “கிருஷ்ணாவதாரா” புத்தகம் மோசமான ஒன்று. என் போன்ற மகாபாரதப் பைத்தியங்களுக்கு மட்டும்தான்.

mahabharathamகவிதை என்றாலே ஓடும் நானே கூட வில்லிபாரதம் படித்திருக்கிறேன். வில்லிபாரதம் என் மனம் கவர்ந்த கவிதை இல்லை. கதைக்காகவே படித்தேன். எஸ்.ரா. வில்லியையும் நல்லான் பிள்ளை பாரதத்தையும் படிக்கச் சொல்கிறார். நான் படிக்க விரும்புவது அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி, சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் போன்றவை. என்று முடியுமோ?

எஸ்.ரா. சொல்கிறார்:

எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி, எஸ்.எல். பைரப்பா எழுதிய கன்னட நாவலான பர்வா, காண்டேகரின் யயாதி, எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், பிரதிபா ரேயின் யக்ஞசேனி, வங்காள நாவலான சாம்பன், இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா, சோவின் மகாபாரதம், நா. பார்த்தசாரதியின் அறத்தின் குரல், சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சய் என்ற கர்ணன் நாவல், ஜெயமோகன் எழுதிய பத்மவியூகம், வடக்கு முகம், பதுமை, சஷி தரூர் எழுதிய, Great Indian Novel, பாலகுமாரன் எழுதிய பீஷ்மர், சித்ரா பானர்ஜி திவாகருனியின் The Palace Of Illusions, மற்றும் பாஷனின் உறுபங்கம், தாகூரின் சித்ராங்கதா, பாரதி எழுதிய பாஞ்சாலி சபதம், பி.எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், எம்.வி. வெங்கட்ராமின் மகாபாரத பெண்கள், இத்துடன் எனது நாவல் உபபாண்டவம் போன்றவற்றைப் படிக்கலாம்.

இவற்றில் திவாகருணியின் புத்தகத்தைத் தவிருங்கள். நா.பா.வின் அறத்தின் குரல் ஒன்றும் பிரமாதம் இல்லை. எனக்கு மிருத்யுஞ்சய் ரொம்ப ஒன்றும் பிடிக்கவில்லை.

கட்டுரைகளில் ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தா, குருசரண் தாஸ் எழுதிய The Difficulty of Being Good, Gender and Narrative in the Mahabharata edited by “Brodbeck & B. Black” and published by Routledge, Reflections and Variations on the Mahabharata by T.R.S.Sharma published by Sahitya Akademi, Great Golden Sacrifice of The Mahabharata – Maggi Lidchi Grassi, Rethinking the Mahabharata: A Reader’s Guide to the Education of the Dharma King by Alf Hiltebeitel, The Questionable Historicity of the Mahabharata by SSN Murthy. யட்சப் பிரசனம், விதுரநீதி போன்றவற்றை படிக்கலாம்.

எஸ்.ரா. பரிந்துரைக்கும் கட்டுரைகளில் நான் கார்வேயை மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று.

எஸ்.ரா. பீட்டர் பரூக்கின் நாடகம் நான்கு மணி நேரம் என்கிறார். நான் பார்த்தது ஒன்பது மணி நேர நாடகம். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைப்பேன்.

பதின்ம வயதில் நான் பார்த்த தெருக்கூத்துக்கள் (திரவுபதி துகில் உரிதல்) என் மனத்தைக் கவரவில்லை. எம்ஜிஆர் படம் பெட்டர் என்று அப்போது தோன்றியது. ஆனாலும் இன்று எஸ்.ரா. சொல்வது போல பதினெட்டு நாள் கூத்து பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது.

கும்பகோணம் ம.வீ. ராமானுஜாச்சாரியார் மகாபாரதப் பதிப்பு இன்று கிடைக்கிறதாம். வாங்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி S.Venkataramanan, Sri Chakra Publications, 9/135 Nammalwar street, East Tambaram, Chennai – Ph: +91 9894661259, மொத்த விலை ரூ 4500 என்று எஸ்.ரா. தகவல் தருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்
தொடர்புடைய பதிவு:
பாரதம் சார்ந்த படைப்புகள்
மகாபாரதத்தைப் படிப்பது எப்படி – எஸ்.ரா. பதிவு

சரவண கார்த்திகேயன் சிபாரிசுகள்

எனக்கு சரவண கார்த்திகேயன் யார் என்று தெரியவில்லை. ஆனால் லிஸ்டைப் பார்த்தால் பதித்துவிடும் மனநிலையில் இருக்கிறேன். 🙂 இதுவும் பழைய லிஸ்ட். இவருடைய டேஸ்ட் மிகவும் catholic ஆக இருக்கிறது. வாலியின் கவிதையையும், விஷ்ணுபுரத்தையும் ஒரே லிஸ்டில் பார்ப்பது எனக்கு பெரிய ஆச்சரியம்!

சரவண கார்த்திகேயன் tamilpaper.net இல் தொடர்ந்து எழுதுகிறார்; குங்குமத்தில் தற்போது ஒரு தொடர் எழுதுகிறார்; பரத்தை கூற்று, தேவதை புராணம் கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார்; விகடன் நடத்திய கவிதைப் போட்டி ஒன்றில் வென்றார் என்றும் நினைவு என்று கோபி தகவல் தருகிறார்.

என் இஷ்டத்துக்கு வரிசையை மாற்றி தொகுத்திருக்கிறேன்.

கவிதைகள்:

 1. பாரதியார் கவிதைகள்
 2. பட்டினத்தார் பாடல்கள்
 3. பாரதிதாசன் கவிதைகள்
 4. கண்ணதாசன் கவிதைகள்
 5. வைரமுத்து கவிதைகள்
 6. சுந்தர ராமசாமி கவிதைகள்
 7. கலாப்ரியா கவிதைகள்
 8. கல்யாண்ஜி கவிதைகள்
 9. கொங்குதேர் வாழ்க்கை
 10. கவிதை மழை – கலைஞ‌ர் மு. கருணாநிதி
 11. அவதார புருஷன் – வாலி
 12. பாண்டவர் பூமி – வாலி
 13. கிருஷ்ண விஜயம் – வாலி
 14. காமக் கடும்புனல் – மகுடேஸ்வரன்
 15. தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் – விக்ரமாதித்யன்
 16. அகி – முகுந்த் நாகராஜன்
 17. பித்தன் – அப்துல் ரகுமான்
 18. கருவறை வாசனை – கனிமொழி
 19. பாலகாண்டம் – நா. முத்துக்குமார்

சிறுகதைகள்:

 1. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
 2. லா.ச.ரா. சிறுகதைகள்
 3. சுந்தர ராமசாமி சிறுகதைகள்
 4. அ. முத்துலிங்கம் கதைகள்
 5. ஜெயமோகன் சிறுகதைகள்
 6. விசும்பு – ஜெயமோகன்
 7. அம்பை சிறுகதைகள்
 8. ஆதவன் சிறுகதைகள்
 9. யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
 10. பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்
 11. துப்பறியும் சாம்புதேவன்
 12. சுஜாதாவின் மர்மக் கதைகள்
 13. நாட்டுப்புறக் கதைகள் – கி.ராஜநாராயணன்
 14. விஞ்ஞான சிறுகதைகள் – சுஜாதா
 15. ஸ்ரீரங்கத்துக் கதைகள் – சுஜாதா
 16. தேர்ந்தெடுத்த சிறுகதைகள் – சுஜாதா
 17. பீக்கதைகள் – பெருமாள் முருகன்
 18. ஜெயமோகன் குறுநாவல்கள்
 19. ஜி. நாகராஜன் ஆக்கங்கள்
 20. என் வீட்டின் வரைபடம் – ஜே.பி. சாணக்யா
 21. சித்தன் போக்கு – பிரபஞ்சன்
 22. உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன்
 23. ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
 24. காக்டெய்ல் – சுதேசமித்திரன்

நாவல்கள், நாடகங்கள்:

 1. சுஜாதாவின் நாடகங்கள்
 2. பொன்னியின் செல்வன்கல்கி
 3. ஒரு புளியமரத்தின் கதைசுந்தர ராமசாமி
 4. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
 5. பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்
 6. விஷ்ணுபுரம்ஜெயமோகன்
 7. ஏழாவது உல‌கம்ஜெயமோகன்
 8. புலிநகக் கொன்றைபி.ஏ.கிருஷ்ணன்
 9. சில நேரங்களில் சில மனிதர்கள்ஜெயகாந்தன்
 10. குருதிப்புனல்இந்திரா பார்த்தசாரதி
 11. யாமம் – எஸ். ராமகிருஷ்ணன்
 12. கங்கணம்பெருமாள் முருகன்
 13. ராஸ‌லீலா – சாரு நிவேதிதா
 14. பகடையாட்டம் – யுவன் சந்திரசேகர்
 15. என் பெயர் ராமசேஷன் – ஆதவன்
 16. சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன்
 17. தேரோடும் வீதி – நீல. பத்மநாபன்
 18. ஆதலினாற் காதல் செய்வீர் – சுஜாதா
 19. இனியெல்லாம் சுகமே – பாலகுமாரன்
 20. வால்கள் – ராஜேந்திர குமார்
 21. மீனின் சிறகுகள் – தஞ்சை பிரகாஷ்
 22. இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா

அபுனைவுகள்:

 1. வந்தார்கள் வென்றார்கள் – மதன்
 2. சத்திய சோதனை – மகாத்மா காந்தி
 3. திருக்குறள் – மு.வ. உரை
 4. அசோகமித்திரன் கட்டுரைகள்
 5. நீங்களும் முதல்வராகலாம் – ரா.கி. ரங்கராஜன்
 6. நூறு பேர் – மணவை முஸ்த‌ஃபா
 7. கண்மணி கமலாவிற்கு… – புதுமைப்பித்தன்
 8. சிந்தாநதி / பாற்கடல் – லா.ச. ராமாமிருதம்
 9. ஆளுமைகள் விமர்சன‌ங்கள் – சுந்தர ராமசாமி
 10. இவை என் உரைகள் – சுந்தர ராமசாமி
 11. நினைவோடை – சுந்தர ராமசாமி
 12. அங்க இப்ப என்ன நேரம் – அ. முத்துலிங்கம்
 13. கோணல் பக்கங்கள் – சாரு நிவேதிதா
 14. இலக்கிய முன்னோடிகள் வரிசை – ஜெயமோகன்
 15. சு.ரா. நினைவின் நதியில் – ஜெயமோகன்
 16. சங்க சித்திரங்கள் – ஜெயமோகன்
 17. துணையெழுத்து – எஸ். ராமகிருஷ்ணன்
 18. கதாவிலாசம் – எஸ். ராமகிருஷ்ணன்
 19. தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்
 20. கேள்விக்குறி – எஸ். ராமகிருஷ்ணன்
 21. கணையாழியின் கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
 22. கற்றதும் பெற்றதும் – சுஜாதா
 23. ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
 24. திரைக்கதை எழுதுவது எப்படி? – சுஜாதா
 25. யாருக்கு யார் எழுதுவது? – இளையராஜா
 26. ஓ பக்கங்கள் – ஞானி
 27. தெருவோரக் குறிப்புகள் – பாமரன்
 28. குமரி நில நீட்சி – சு.கி. ஜெயகரன்
 29. சுபமங்களா நேர்காணல்கள் – கோமல் சுவாமிநாதன்+இளையபாரதி
 30. உறவுகள் – டாக்டர் ருத்ரன்
 31. உயிர் – டாக்டர் நாராயணமூர்த்தி
 32. பிரம்ம ரகசியம் – ர.சு. நல்லபெருமாள்

இதெல்லாம் நாவலா சிறுகதையா தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

 1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் – எம்.ஜி. சுரேஷ்

மொழிபெயர்ப்புகள்:

 1. வாரணாசி – எம்.டி. வாசுதேவன் நாயர்
 2. தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரப் பிள்ளை

சுஜாதாவின் “நிஜத்தைத் தேடி” – பிடித்த சிறுகதை

எனக்குப் பிடித்த சுஜாதா சிறுகதை ஒன்றை உப்பிலி ஸ்ரீனிவாஸ்sujatha மீள்பதித்திருக்கிறார். அவருக்கு நன்றி!

இதே கருவை வைத்து நானும் ஒரு சிறுகதை எழுதி வைத்திருக்கிறேன். ஒரு உண்மைச் சம்பவம்தான் இந்தக் கதையை எழுதத் தூண்டியது, இந்தக் கதை அல்ல. என்றாவது ஒரு நாள் அதை மனதுக்குப் பிடித்த மாதிரி திருத்தி வெளியிட வேண்டும்…

2012 ஞானபீட விருது

Ravuri_Bharadwajaதெலுகு எழுத்தாளர் ராவூரி பரத்வாஜாவுக்கு ஞானபீட விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

பரத்வாஜா எழுதிய “பாகுடு ராள்ளு” புத்தகத்துக்கு 2012 ஞானபீட விருது கிடைத்திருக்கிறது. சினிமா பின்புலம் உள்ள நாவலாம்.

பிற இந்திய மொழி எழுத்துக்களைப் பற்றி நமக்கு அதிகம் தெரிவதில்லை. கௌரி கிருபானந்தன் மாதிரி யாராவது பரத்வாஜா பற்றி எழுதினால்தான் உண்டு.

தோழி கௌரி தரும் தகவல்:

அவருடைய பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி எவ்வளவு வெளிப்படையாக சொன்னார் என்றால், அது போன்ற நிலைமை யாருக்கும் வரக் கூடாது என்று நினைக்கத் தோன்றும்.
சிறுவயதில் வீட்டில் இல்லாமை. சரியாக சாப்பிடும் நேரத்திற்கு உறவினர் வீட்டுக்கு போயிருந்த போது அவர்கள் இவரை சீக்கிரம் அனுப்பி விடுவதிலேயே குறியாய் இருந்திருக்கிறார்கள்.அவர்களின் எண்ணம் புரிந்தாலும், பசி அவரை அந்த இடத்தை விட்டு போக அனுமதிக்கவில்லை. எப்படியாவது இன்னும் கொஞ்சம் நேரம் தாக்கு பிடித்தால் சாப்பிட ஏதாவது கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை ஒரு புறம். (பிச்சை போட மாட்டார்களா என்பது தான் அவர் சொன்ன வார்த்தை)
இந்த புதினத்திற்கு அவர் முதலில் “மாய ஜலதாரு” என்று பெயர் வைத்திருந்தாராம். சீலா வீர்ராஜு என்ற சக எழுத்தாளர் “பாகுடு ராள்ளு” என்று மாற்றியதாக பத்திரிகையில் படித்தேன்.

என் வழக்கமான புலம்பல்: அசோகமித்ரனுக்கு விருது கொடுத்து ஞானபீடம் பெருமை அடையட்டும்.

தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள்

தொடர்புடைய சுட்டிகள்:
ராவூரி பரத்வாஜா – விக்கி குறிப்பு
ஞானபீட விருது தளம்

அன்டோயின் டி செயின்ட்-எக்சூபரி எழுதிய “லே பெடிட் ப்ரின்ஸ்”

antoine_de_saint-exuperyகுட்டி அஸ்டிராய்டிலிருந்து பாலைவனத்தில் வந்து இறங்கிய சின்ன இளவரசனின் கதை எல்லாருக்கும் தெரியும். இதைப் பற்றி புதிதாக என்ன சொல்வது? ஃபிரெஞ்ச் மொழிப் புத்தகங்களில் இதுவே மிகவும் படிக்கப்பட்ட புத்தகம், மிகவும் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் என்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த ஃபிரெஞ்ச் மொழிப் புத்தகம் என்று தேர்ந்தெடுக்கப்பட்டதாம்.

le_petit_princeஎனக்கு புத்தகத்தில் பிடித்த அம்சம் படங்கள். அதுவும் முதலில் வரும் யானையை விழுங்கிய மலைப்பாம்பின் படம் பிரமாதம்! அதை சரியாக அடையாளம் கண்டு கொள்ளும் ஒரே ஜீவன் இளவரசன் என்பது நல்ல டச்.

இந்தப் புத்தகம் சிம்பிளாக இருக்க ரொம்ப கஷ்டப்பட்டு எழுதப்பட்டது என்று நான் கருதுகிறேன். கொஞ்சம் pretentiousness தெரியும். இருந்தாலும் படிக்கலாம். அதுவும் சிறு வயதில் நிச்சயமாகப் படிக்கலாம். படங்களோடு உள்ள ஒரு மின்புத்தகத்தை இணைத்திருக்கிறேன். மின்புத்தகத்தை இணைக்கத்தான் இந்தப் பதிவே. படிக்காதவர்கள் படித்துக் கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளைப் படிக்க வையுங்கள், படித்துக் காட்டுங்கள்.

Boa Constrictor Digesting Elephant Drawing 1 from The Little Prince 1


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்

தி.ஜா. சிறுகதைகள்

தமிழ்ச் சிறுகதை : ஜெயமோகன் பட்டியல் பாகம் 3

தி. ஜானகிராமன் சிறுகதைகளில் எட்டு ஜெயமோகனின் சிறந்த தமிழ்ச் சிறுகதைகள் லிஸ்டில் இடம் பெறுகின்றன.

 1. தீர்மானம்
 2. சிலிர்ப்பு
 3. பாயசம்
 4. பரதேசி வந்தான்
 5. கடன் தீர்ந்தது
 6. கோதாவரிக்குண்டு
 7. தாத்தாவும் பேரனும்
 8. மாப்பிள்ளைத் தோழன்

சிலிர்ப்பு, பாயசம், பரதேசி வந்தான், கடன் தீர்ந்தது ஆகியவற்றை தி.ஜா.வின் சிறந்த கதைகளாக நானும் கருதுகிறேன். சிலிர்ப்பில் சிறுவனிடம் தெரியும் உயர்ந்த மானுட நேயம்; கடன் தீர்ந்ததுவில் இருபத்து நாலாயிரம் ரூபாய் மோசடி செய்தவன் மனைவியிடம் இரண்டணா வாங்கிக் கொண்டு அம்மா பராசக்தி ஆணையாக உன் கணவன் கடன் தீர்ந்து போய்விட்டது என்று சொல்லும் உச்சம்; பரதேசி வந்தானில் தெரியும் அறச்சீற்றம்; பாயசத்தை விட எங்கும் அசூயையை இவ்வளவு சிறப்பாகக் காட்டிவிட முடியாது. தவம் என்ற சிறுகதையும் எனக்குப் பிடித்தமானது.

பரதேசியின் சாபம் பற்றி ஜெயமோகன் அமெரிக்கா வந்திருந்தபோது ஒரு அருமையான உரையாற்றினார்.

தீர்மானமும் நல்ல கதை. பால்ய விவாகம். சம்பந்திகளுக்குள் சண்டை. பெண்ணை பிள்ளை வீட்டுக்கு அனுப்ப மறுக்கும் அப்பா. பொறுமையை இழந்த பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் வீட்டிற்கு வந்து பத்து பனிரண்டு வயதுப் பெண்ணை இங்க பாரும்மா, நீ வந்தா அழைச்சிக்கிட்டுப் போறோம் என்கிறார்கள். வரவில்லை என்றால் உறவு முடிந்துவிடும் என்று தெரிகிறது. வீட்டில் அப்பா இல்லை. இந்தப் பெண்ணும் கிளம்பிவிடுகிறது. அப்பா திரும்பி வந்து பெண்ணின் தீர்மானத்தைப் புரிந்துகொண்டு சாதத்தையும் அவள் விளையாடும் சோழிப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு போய் கொடுக்கிறார். தி.ஜா. ஒரு மாஸ்டர்!

கோதாவரிக் குண்டு நல்ல கதைதான். கடன் வாங்கி சொகுசாக மல்லிகைப்பூ வைத்துக் கொண்டு புது சினிமா பார்க்கப் போகும் கங்காபாய் பாத்திரப் படைப்பு நன்றாக இருக்கிறதுதான். ஆனால் என் லிஸ்டில் வராது.

தாத்தாவும் பேரனும் சிறுகதையும் நன்றாகவே இருக்கிறது, ஆனால் என் லிஸ்டில் வராது. ஜாதியைப் பற்றிய அருமையான கதை.

மாப்பிள்ளைத் தோழன் சிறுகதையும் நன்றாகவே இருக்கிறது, ஆனால் என் லிஸ்டில் வராது. எத்தனையோ சிரமங்களுக்கு நடுவே பாட்டு பாடும் அந்த சமையல்காரர் ஒரு உச்சம்தான்.

பாயசம் எஸ்.ரா.வின் நூறு சிறந்த சிறுகதைகள் லிஸ்டிலும் இடம் பெறுகிறது. (எஸ்.ரா. தேர்ந்தெடுத்த இன்னொரு சிறுகதை – பஞ்சத்து ஆண்டி)

காலச்சுவடு பதிப்பகம் பிரபஞ்சன் மூலம் தி.ஜா. வின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை சிலிர்ப்பு என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறது. அனேகமாக எல்லா சிறுகதைகளுமே நன்றாகத்தான் இருக்கின்றன என்றாலும் துணை (பென்ஷன் வாங்கப்போகும் மூன்று தலைமுறைக் கிழவர்கள்), சிவப்பு ரிக்ஷா (ஜொள்ளர்களை சமாளிக்கும் அன்றைய புதுமைப்பெண்), தேவர் குதிரை (பெருங்காயப் பாண்டமான தேவரின் குதிரையை பவுண்டில் அடைத்தால்?), சத்தியமா (அருமையான கடைசி வரிகள் – சத்தியமா தரேன் என்று சொல்லிவிட்டதால் தான் விரும்பிய காலண்டரை அடுத்த வீட்டுக் குழந்தைக்குத் தந்துவிடும் சிறுவன்), கோபுர விளக்கு (வேசி செத்ததற்கு கோவில் விளக்கை அணைத்து வைக்கும் மானேஜர்) என்ற கதைகளை குறிப்பிட்டுச் சொல்லுவேன். ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிலிர்ப்பு, பாயசம், பரதேசி வந்தான், கோதாவரிக் குண்டு, கடன் தீர்ந்தது ஆகிய கதைகளை பிரபஞ்சனும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

நாவல்களில் தி.ஜா. அரைத்த மாவை அரைப்பது போல எனக்கு சில சமயம் தோன்றுகிறது. ஆனால் என் கருத்தில் தி.ஜா. வின் எல்லா சிறுகதைகளுமே படிக்க வேண்டியவைதான்.


கேசவமணி தரும் தகவல்: சிலிர்ப்பு கதை உருவானது எப்படி என்று தி.ஜா.சொல்கிறார்:

என் மகன் ஆறு வயதில் ஒரு விடுமுறைக்கு அவன் தாத்தா வீட்டுக்குப் போயிருந்தான். நான் போய்த் திரும்பி அழைத்து வந்தேன். குணத்தில் எனக்குநேர் விரோதம் அவன். கூப்பிடாததற்கு முன் போய் யாரோடும் பேசிச் சிரித்து, நெடுநாள் சிநேகம் போல ஐக்கியமாகிவிடுகிற சுபாவம். பார்ப்பதற்கும் அப்போது கஷ்கு முஷ்கென்று உருட்டி விட்டாற்போல் இருப்பான். கூடப் பிரயாணம் செய்தவர்களோடு பேசிச் சிரித்துக் களைத்துப்போய் அவன் தூங்கத் தொடங்கினான். ஆரஞ்சுப் பழத்திற்காகக் கத்திவிட்டு, வாங்கிக் கொடுத்ததும் சாப்பிடாமல் தூங்கிவிட்டான். அது கையிலிருந்து உருண்டு ஒரு ஓரமாகக் கிடந்தது. அவ்வளவு கத்தினவன் ஏன் உடனே அதைத் தின்னவில்லை? எனக்கு அப்போது முன்பொருதடவை ரயில் பயணம் செய்தபோது பார்த்த அந்தப் பெண்ணின் ஞாபகம் வந்தது. இந்த இரண்டு படங்களும் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருவதுண்டு. ஆனால் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. சுமார் ஒரு வருடம் கழித்து கலைமகள் தீபாவளி மலருக்காக அழைப்பு வந்தபோது,இந்த இரண்டு படங்களும் இணைந்து கலந்து “சிலிர்ப்பு” என்ற கதையாக உருவாயின. அதை வேகமாக எழுதின ஞாபகம் எனக்கு. கம்ப்யூட்டரில் கொடுத்தது போல இந்த இரு நிகழ்ச்சிகளும் அந்த ஒரு வருஷ காலத்திற்குள் ஒரு கதையை உருவாக்கிவிட்டனவோ என்னவோ! உட்கார்ந்து கதையை எழுதி முடிக்கிற வரையில் என்னால் துயரம் தாங்கமுடியவில்லை. ஒரு அபூர்வமான உணர்ச்சிலயம் அது. உடல், உள்ளமெல்லாம் நிரம்பி அன்று நான் கரைந்து கொண்டிருந்த ஞாபகம். 13 வருஷம் கழிந்தும் இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது. கடைசி வரிகளை எழுதும்போது ஒரு குழந்தையின் நிர்மலமான அன்பில் திளைக்கும் சிலிர்ப்பும் கசிவும் என்னைக் கரைத்துக் கொண்டிருந்தன. எழுதி முடித்ததும் ஒரு அதிசயமான சுமையிறக்கமும் விடுதலையும் நெஞ்சு கொள்ளாத நிறைவும் என்னை வந்து அணைத்துக்கொண்ட நினைவு இன்னும் எனக்கு இருக்கிறது. “சிலிர்ப்பு’ என்றே பெயர்வைத்துக் கதையை அனுப்பினேன். (எழுதி முடித்த பிறகுதான் தலைப்புக் கொடுக்கிற பழக்கம் எனக்கு.)

தொகுக்கப்பட்ட பக்கம்: தி.ஜா. பக்கம்

தொடர்புடைய பதிவுகள்:
ஜெயமோகனின் சிறுகதை லிஸ்ட்
பரதேசி வந்தான் சிறுகதையைப் பற்றி ஜெயமோகன்
பாயசம் சிறுகதையைப் பற்றி நான்
தி.ஜா.வின் சிறுகதைத் தொகுப்பு – கொட்டுமேளம்