குல்தீப் நய்யார் எழுதிய “டிஸ்டன்ட் நெய்பர்ஸ்”

kuldip nayarநய்யார் இன்றைய பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் பிறந்தவர். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது டெல்லிக்கு குடியேறினார். அறுபதுகள், எழுபதுகள், ஏன் எண்பதுகளில் கூட முக்கியமான பத்திரிகையாளர். லால்பகதூர் சாஸ்திரியிடம் பத்திரிகை அதிகாரியாக பணியாற்றியவர். டெல்லியின் அரசியல் பிரமுகர்களிடம் இருந்த பழக்கம் அவருக்கு பல ஸ்கூப்களை பெற்றுத் தந்தது.

Distant Neighbors புத்தகத்தில் அவர் இந்திய-பாகிஸ்தான் உறவுகள் 25 ஆண்டு காலத்தில் (1947-72) எப்படி எல்லாம் பரிணமித்திருக்கிறது என்று விளக்குகிறார். இன்று இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு தெரியாத புது விஷயம் என்று எதுவும் இல்லை. ஆனால் வந்த காலத்தில் (1972) புதிதாக இருந்திருக்கும்.

இதன் குறை என்றால் இது ஒரு பத்திரிகையாளரைப் போல – ஓரளவு மேலோட்டமாக – எழுதப்பட்டிருப்பதுதான். இருந்தாலும் அயூப் கான், புட்டோ, ஷேக் அப்துல்லா, சாஸ்திரி, கரண் சிங் போன்ற பல பிரமுகர்களோடு நேரடியாகப் பேசி அவர்களது எதிர்வினைகளைப் பதிவு செய்திருப்பதால் இது முக்கியமான ஆவணம்தான்.

ஜின்னா பாகிஸ்தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த நாட்களிலிருந்து ஆரம்பிக்கிறார். தனித்து விடப்பட்ட கஃபார் கானின் பரிதாப நிலை, முஸ்லிம் லீக் காங்கிரசைக் களைப்படைய வைத்தது, பிரிவினையின் துயரங்கள், எல்லைகளை நிர்ணயிக்க வந்த சிரில் ராட்க்ளிஃப்பின் near impossible task என்று பல விஷயங்களை விவரிக்கிறார்.

பரஸ்பர அவநம்பிக்கை இருந்தாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் சுமுகமாகப் போயிருக்கலாம். கெடுத்தது காஷ்மீர் மீது பாகிஸ்தானின் “படையெடுப்பு”. இந்தியா தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டது. ஆனால் முழுதுமாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஐ.நா.வுக்குப் போனது முட்டாள்தனம். அன்று ஆரம்பித்த பிரச்சினைகள் இன்னும் முடியவில்லை.

இடைக்காலத்தில் ஷேக் அப்துல்லா தனி காஷ்மீர் என்று கனவு கண்டிருக்கிறார். நேரு என்னதான் செய்வார்? ஷேக்குக்கு ஜெயில். பாகிஸ்தானில் அயூப் கான் ஆட்சிக்கு வந்தபோது சிந்து நதியின் நீரை பங்கிடுவதில் உடன்பாடு கண்டிருக்கிறார்கள். நேருவுக்கு அயூப் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற இளக்காரம் இருந்தாலும் நேரு உயிரோடு இருந்திருந்தால் இணக்கம் அதிகரித்திருக்கலாம். ஆனால் நேரு மறைவுக்குப் பிறகு பாகிஸ்தான் போர் தொடுத்தது. சாஸ்திரியை சும்மா சொல்லக் கூடாது, சூழ்நிலையைப் பிரமாதமாக கையாண்டிருக்கிறார். ஆனால் ரஷிய அழுத்தத்தினால் சமாதானம். ரஷியா எறக்குறைய பிளாக்மெயில் செய்தது என்கிறார் நய்யார். சாஸ்திரி இறக்காமல் இருந்திருந்தால் அந்த விட்டுக் கொடுத்தலுக்கு பொருள் இருந்திருக்கும். அதுவும் போச்சு.

அப்புறம் பங்களாதேஷ் போர். புட்டோ இந்தியாவுக்கு ஜன்ம வைரி. நிக்சன் அமெரிக்காவை பாகிஸ்தான் பக்கம் திருப்பி இருக்கிறார். பிரச்சினைகள் முடியவே இல்லை.

Distant Neighbors என்கிற பேர் poetic ஆக இருக்கிறது.

படிக்கலாம், ஆனால் படித்தே ஆக வேண்டிய புத்தகம் இல்லை.


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்