மகாபாரதம் படிப்பது எப்படி

ganesh_vyasa_mahabharathaமகாபாரதத்தைப் படிப்பது எப்படி என்று எஸ்.ரா. ஒரு பதிவு எழுதி இருக்கிறார். அவருடைய பரிந்துரைகள் எல்லாவற்றையும் நான் ஏற்கவில்லை. ஆனால் முக்கியமான பதிவு, படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

s.ramakrishnanஎஸ்.ரா. சொல்வது போல பெரிய preparation எதுவும் தேவை இல்லை என்பது என் நினைப்பு. சும்மா ஆரம்பியுங்கள்!

என் கண்ணோட்டத்தில் பாரதத்தைப் படிக்க ஆரம்பிக்க சிறந்த வழி ராஜாஜியின் புத்தகம்தான். அமர் சித்ர கதா காமிக்ஸ் இன்னொரு நல்ல ஆரம்பப் புள்ளி. ஆர்.கே. நாராயணின் புத்தகமும் நல்ல ஆரம்பப் புள்ளி. எஸ். ரா. பரிந்துரைக்கும் ஆரம்பப் புள்ளிகள் அமர் சித்ர கதாவும் தேவதூத் பட்நாயக் எழுதிய ஜெயம் என்ற புத்தகமும். பி.ஆர். சோப்ராவின் மகாபாரத சீரியல் கொஞ்சம் இழுவை என்றாலும் அதுவும் ஒரு நல்ல ஆரம்பப் புள்ளி. சோவின் மகாபாரதம் பேசுகிறது புத்தகத்திலும் ஆரம்பிக்கலாம்.

அடுத்த படியாக எஸ்.ரா. பரிந்துரைக்கும் முன்ஷியின் “கிருஷ்ணாவதாரா” புத்தகம் மோசமான ஒன்று. என் போன்ற மகாபாரதப் பைத்தியங்களுக்கு மட்டும்தான்.

mahabharathamகவிதை என்றாலே ஓடும் நானே கூட வில்லிபாரதம் படித்திருக்கிறேன். வில்லிபாரதம் என் மனம் கவர்ந்த கவிதை இல்லை. கதைக்காகவே படித்தேன். எஸ்.ரா. வில்லியையும் நல்லான் பிள்ளை பாரதத்தையும் படிக்கச் சொல்கிறார். நான் படிக்க விரும்புவது அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி, சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் போன்றவை. என்று முடியுமோ?

எஸ்.ரா. சொல்கிறார்:

எம்.வி. வெங்கட்ராமின் நித்யகன்னி, எஸ்.எல். பைரப்பா எழுதிய கன்னட நாவலான பர்வா, காண்டேகரின் யயாதி, எம்.டி. வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம், பி.கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும், பிரதிபா ரேயின் யக்ஞசேனி, வங்காள நாவலான சாம்பன், இந்திரா பார்த்தசாரதியின் கிருஷ்ணா கிருஷ்ணா, சோவின் மகாபாரதம், நா. பார்த்தசாரதியின் அறத்தின் குரல், சிவாஜி சாவந்தின் மிருத்யுஞ்சய் என்ற கர்ணன் நாவல், ஜெயமோகன் எழுதிய பத்மவியூகம், வடக்கு முகம், பதுமை, சஷி தரூர் எழுதிய, Great Indian Novel, பாலகுமாரன் எழுதிய பீஷ்மர், சித்ரா பானர்ஜி திவாகருனியின் The Palace Of Illusions, மற்றும் பாஷனின் உறுபங்கம், தாகூரின் சித்ராங்கதா, பாரதி எழுதிய பாஞ்சாலி சபதம், பி.எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், எம்.வி. வெங்கட்ராமின் மகாபாரத பெண்கள், இத்துடன் எனது நாவல் உபபாண்டவம் போன்றவற்றைப் படிக்கலாம்.

இவற்றில் திவாகருணியின் புத்தகத்தைத் தவிருங்கள். நா.பா.வின் அறத்தின் குரல் ஒன்றும் பிரமாதம் இல்லை. எனக்கு மிருத்யுஞ்சய் ரொம்ப ஒன்றும் பிடிக்கவில்லை.

கட்டுரைகளில் ஐராவதி கார்வே எழுதிய யுகாந்தா, குருசரண் தாஸ் எழுதிய The Difficulty of Being Good, Gender and Narrative in the Mahabharata edited by “Brodbeck & B. Black” and published by Routledge, Reflections and Variations on the Mahabharata by T.R.S.Sharma published by Sahitya Akademi, Great Golden Sacrifice of The Mahabharata – Maggi Lidchi Grassi, Rethinking the Mahabharata: A Reader’s Guide to the Education of the Dharma King by Alf Hiltebeitel, The Questionable Historicity of the Mahabharata by SSN Murthy. யட்சப் பிரசனம், விதுரநீதி போன்றவற்றை படிக்கலாம்.

எஸ்.ரா. பரிந்துரைக்கும் கட்டுரைகளில் நான் கார்வேயை மட்டுமே படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று.

எஸ்.ரா. பீட்டர் பரூக்கின் நாடகம் நான்கு மணி நேரம் என்கிறார். நான் பார்த்தது ஒன்பது மணி நேர நாடகம். கட்டாயம் பாருங்கள் என்று பரிந்துரைப்பேன்.

பதின்ம வயதில் நான் பார்த்த தெருக்கூத்துக்கள் (திரவுபதி துகில் உரிதல்) என் மனத்தைக் கவரவில்லை. எம்ஜிஆர் படம் பெட்டர் என்று அப்போது தோன்றியது. ஆனாலும் இன்று எஸ்.ரா. சொல்வது போல பதினெட்டு நாள் கூத்து பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது.

கும்பகோணம் ம.வீ. ராமானுஜாச்சாரியார் மகாபாரதப் பதிப்பு இன்று கிடைக்கிறதாம். வாங்க வேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி S.Venkataramanan, Sri Chakra Publications, 9/135 Nammalwar street, East Tambaram, Chennai – Ph: +91 9894661259, மொத்த விலை ரூ 4500 என்று எஸ்.ரா. தகவல் தருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: தொன்மங்கள்
தொடர்புடைய பதிவு:
பாரதம் சார்ந்த படைப்புகள்
மகாபாரதத்தைப் படிப்பது எப்படி – எஸ்.ரா. பதிவு