பெர்னார்ட் ஷா எழுதிய “சீசர் அண்ட் கிளியோபாட்ரா”

bernard_shawஷா எனக்கு மிகவும் பிடித்த நாடக ஆசிரியர்களில் ஒருவர். பல சிறப்பான நாடகங்களை எழுதி இருக்கிறார்.

ஷாவின் குறை நிறை எல்லாம் அவரது வசனங்கள்தான். Paradoxical ஆக இருக்க வேண்டும் நிறைய மெனக்கெடுவார். அவரது முக்கியப் பாத்திரங்கள் எல்லாரும் கூர்மையான அறிவுடையவர்கள், வாழ்க்கையை வெகு லாஜிகலாக அணுகுபவர்கள், மனதில் உள்ளதை மறைக்கவே மாட்டார்கள், பேசிக் கொண்டே இருப்பார்கள். சரி நாடகத்தில் பேசாமல் வேறு என்ன செய்ய என்று நம்மை நாமே சமாதானப் படுத்திக் கொண்டாலும் சில சமயம் அலுப்புத் தட்டும்.

caesar_and_cleopatraசீசர் அண்ட் கிளியோபாட்ரா அவரது பிரமாதமான நாடகங்களில் ஒன்று. அவரது சீசர் தன்னைத் தானே நன்றாக புரிந்து கொண்ட ஒரு அதிபுத்திசாலி மனிதன். அவனுக்கு பலவீனங்கள் இல்லை என்பதில்லை. அந்த பலவீனங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு திட்டமிடும் ஒரு மனிதன். தன் வழுக்கைத் தலை (ஆஹா, இதை எழுதும்போது எனக்கு ஒரு அல்ப சந்தோஷம்), வயது போன்றவற்றைப் பற்றி அவனுக்கு வருத்தம் உண்டு. கிளியோபாட்ராவோ பதின்ம வயது இளம் பெண். சுயநலமி. அடுத்தவரைப் பற்றி யோசிப்பதெல்லாம் இல்லை. இருவருக்கும் உறவு ஏற்படுவதும், சீசர் கிளியோபாட்ராவை மெதுமெதுவாக தனது அணுகுமுறையைப் புரிய வைப்பதும்தான் கதை.

“காட்டுமிராண்டி” சீசர் எகிப்தை நோக்கி பெரும் படையோடு வருகிறான் என்று தெரிந்து கிளியோபாட்ரா ஸ்ஃபின்க்ஸ் சிலையில் ஒளிந்து கொள்கிறாள். சீசர் அங்கே வந்து அந்தச் சிலையைப் பார்த்து பெரிதாக வசனம் பேச, கிளியோபாட்ரா அவனைப் பார்த்து “கிழவா, காட்டுமிராண்டி சீசர் வருகிறான், நீயும் என்னுடன் ஒளிந்துகொள்” என்கிறாள். உண்மை தெரியும்போது சீசர் ராஜ மாளிகையைக் கைப்பற்றி இருக்கிறார். கிளியோபாட்ராவின் கனவு ஆண் மார்க் அந்தோனி என்றாலும் பரஸ்பர ஈர்ப்பு உருவாகிறது. ஆனால் சீசரை எதிர்த்து ஒரு பெரும் படை வருகிறது. சீசர் இருக்கும் மாளிகையைச் சுற்றி முற்றுகை. கிளியோபாட்ரா வெளியில். யாரும் சீசர் இருக்கும் இடத்துக்குப் போக முடியாது. Of course, கிளியோபாட்ரா போகிறாள். தற்செயலாக எகிப்து படைகளை இன்னொருவர் தாக்க, சீசர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வெல்கிறார்.

கதையின் பலம் சீசரின் அணுகுமுறைதான். சீசர் எதிரிகளை வெல்வதை விட அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுவதில்தான் குறியாக இருக்கிறார். சீசர் ஒரு தலைவர், அரசு எப்படி செயல்படவேண்டும் என்று புரிந்து கொண்டவர். தன் நண்பர்களை, தன்னிடம் பணி புரிபவர்களை, எதிரிகளை கையாளும் விதம் அறிந்தவர். அந்தச் சித்திரம் அருமை.

பாத்திரப் படைப்பும் நன்றாக இருக்கிறது. கிளியோபாட்ரா ஒரு டீனேஜர் போலத்தான் தெரிகிறாள். அவளுடைய கோபங்கள், ஆசைகள் எல்லாம் நன்றாக வெளிப்படுத்தபட்டிருக்கின்றன. கிளியோபாட்ராவின் தாதி ஃப்டாடாடீட்டா, சீசரின் காரியதரிசி பிரிட்டானிகஸ், எகிப்திய மந்திரி போதினஸ், வீரன் ரூஃபியோ என்று மிகவும் கச்சிதமான பாத்திரங்கள்.

நகைச்சுவை மிளிரும் படைப்பு. ஹாஹாஹா என்றூ சிரிக்க இல்லை, புன்னகைக்க வைக்கும்.

ஷாவின் சிறந்த நாடகங்களில் ஒன்று. கட்டாயம் படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன். பார்ப்பது இன்னும் உத்தமம். இரண்டு முறை திரைப்படமாகவும் வந்திருக்கிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: உலக இலக்கியம்