வாசந்தியின் “நிற்க நிழல் வேண்டும்”

Vaasanthiஜெயமோகனின் social romances பட்டியலில் இடம் பெறும் நாவல். என் கண்ணில் இதை வணிக இலக்கியம் என்பது இதன் வீச்சைக் குறுக்குவது ஆகும். எனக்கு இது இலக்கியமே. சமகால (Contemporary) வரலாற்று நாவல் என்று சொல்லலாம்.

பின்புலம் இலங்கைத் தமிழர்கள். கதையின் காலம் எண்பதுகளின் நடுவில். இந்தியா ஒரு காலத்தில் விமானப் படையை அனுப்பி உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட தமிழர்கள் வாழும் பகுதிகளில் போட்டது. அந்த நிகழ்ச்சி பெரிதாக விவரிக்கப்படுகிறது. துரையப்பா கொலையிலிருந்து இந்த நிகழ்ச்சிக்கு கொஞ்சம் பின்னால் வரை.

ஒரு தமிழ் இளைஞன்-இளைஞி, ஒரு பத்திரிகை நிருபன் இவர்கள் கோணத்திலிருந்து கதை. எல்லார் பக்கத்தையும் காட்டுகிறது. போராளிகள் போராட ஏன் ஆரம்பித்தார்கள், ஆனால் பிற்காலத்தில் எப்படி பரிணமித்தார்கள், சிங்களர்களின் அடக்குமுறை, இந்தியாவின் அரசியல் விளையாட்டுகள், அகதிகள், இலங்கையிலிருந்து கள்ளத் தோணி வழியாக தப்பிப்பவர்கள், ஏன் தமிழர்களின் மீது அடக்குமுறை சரியே என்று வாதிடும் சிங்களர்களைக் கூட விடவில்லை.

கதையின் குறை என்றால் கதையின் ஒரே சரடான காதல் அழுத்தமாக இல்லாததுதான். கதையே எல்லார் பக்கத்தையும் காட்ட பயன்படுத்தப்படும் ஒரு சட்டகம்தான்.

படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


சிவா கேட்டதற்காக pdf வடிவத்தில். காப்பிரைட் பிரச்சினை வந்தால் எடுத்துவிடுவேன்.

நண்பர் ராஜ் சந்திரா சொல்கிறார்:

இந்த நாவல் பிரபாகரனை மிகவும் வருத்தம் (அல்லது கோபம்) கொள்ள வைத்திருக்கிறது. 2002-ல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டபோது வாசந்தி பிரபாகரனை பேட்டி எடுக்க விரும்பினார். ஆனால் பிரபாகரன் இந்த நாவலைக் காட்டி பேட்டி கொடுக்க மறுத்தார். வாசந்தியே ஒரு கட்டுரையில் இதை விரிவாக எழுதியிருக்கிறார். அனிதா ப்ரதாப் போன்று ஒரு பிரமிப்பில் வாசந்தி இல்லாதது பிரபாகரனை ஏமாற்றம் கொள்ள வைத்திருக்கலாம்.

கதை வந்த காலத்தில் அவ்வளவாகப் பரபரப்பு ஏற்படுத்தவில்லை. கல்கியில் வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம் (சர்க்குலேஷன் கம்மி). விகடன், குமுதத்தில் வந்திருந்தால் எதிர்ப்பு பலமாக இருந்திருக்கலாம். ஆனால் வாசந்தி காட்ட முயன்ற போராளிகள் வாழ்க்கை பொது ஊடகங்களிலிருந்து மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருந்தது. சீலன் போராளியாக இருந்தாலும் அவனால் இயக்கத்தின் கொடூரங்களோடு ஒன்ற முடியவில்லை. அதுவே நம் தமிழ் (போலி) ஆதரவாளர்களை கொஞ்சம் யோசிக்க வைத்திருக்கலாம்.

இந்தக் கதை தமிழ்ப் போராளிகளின் அனைத்துக் கோணங்களையும் வைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் (அப்படி செய்ய வேண்டுமா என்பது வேறு). ஒரு இந்தியப் பத்திரிக்கையாளனின் அனுபவங்களாக அது முடிந்து போனது. சில இடங்களில் கதை தானானவே எழுதிக்கொண்டு சென்றதை உணர முடியும் (உதா-சீலனும், அவன் தந்தையும் 83 கொழும்புக் கலவரத்தில் சிக்குவது, அதன் பின் சீலன் மாறுவது).

இந்த நாவலோடு ஷோபா சக்தி-யின் ‘ம்’ படிக்கவேண்டும். அதில் இன்னும் தெளிவாக இயக்கங்களுக்கிடையேயான மோதல்கள், மற்றும் வெலிக்கிட சிறை கொலைகள் விவரிக்கப்பட்டிருக்கும் (மென் மனதாளர்கள் விலகவும்). அவரின் தளத்தில் இலவசமாக pdf கிடைக்கிறது. Just a trivia: அசோகமித்திரனின் ஒரு சிறுகதை வெலிக்கிட சிறைக் கொலைகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கிறது.

நிச்சயம் படிக்கவேண்டிய நாவல்.


இந்த நாவல் உருவான கதையைப் பற்றி வாஸந்தி:

ஒரு நாள் வெற்றிச்செல்வன் என்ற பெயர் கொண்ட ஓர் இலங்கைத் தமிழர் என்னைக் காண வந்தார். தான் சில காலமாக தில்லியில் இருப்பதாகச் சொன்னார். அன்று காலை அவரது தலைவர் லண்டனில் இருந்து அவரைத் தொலைபேசியில் அழைத்து, என்னைச் சந்திக்கச் சொன்னதாகச் சொன்னார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“யார் உங்கள் தலைவர்?” என்றேன்.

“அது கதைக்க இயலாது” என்றார் புன்சிரிப்புடன்.

வெற்றிச்செல்வனுக்கு சிவந்த உப்பிய கன்னங்கள். சிரிக்கும்போது கண்கள் அமுங்க, கன்னங்கள் பளபளத்தன. குழந்தை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின. அவரது தமிழ் எனக்குப் புதுமையாக இருந்தது. உச்சரிப்பின் ராகம் ஆகர்ஷித்தது. ஆனால், அந்தப் பூடகப் பேச்சு எனக்குப் புதிது. எனது குழப்பத்தைக் கவனித்த வெற்றிச்செல்வன், தான் ஒரு இலங்கைத் தமிழர் என்றும் தமிழரின் விடுதலைக்காகப் போராடும் ஒரு போராளிக்கும்பலைச் சேர்ந்தவர் என்றும் சொன்னார். அவரது தலைவர் உயிருக்கு மற்ற ஒரு போராளிக்கும்பலால் ஆபத்து ஏற்பட்டவுடன் தலைமறைவாக லண்டனில் இருப்பதாகச் சொன்னார்.

“எதற்கு என்னைப் பார்க்கச் சொன்னார் உங்கள் தலைவர்?” என்றேன் இன்னமும் புரியாமல்.

“அவர் உங்கள் ‘மௌனப் புயல்’ நாவலை வாசிச்சிருக்கார். சீக்கியர்களுக்கு ஆதரவாக நீங்கள் எழுதியிருக்கும் நேர்மையைப் பாராட்டுகிறார். உங்களால்தான் எங்களது போராட்டத்தைப் பற்றி நேர்மையாக எழுத இயலும் என்று நினைக்கிறார். இலங்கைத் தமிழர் இனப் பிரச்னையைப் பற்றி ஒரு நாவல் எழுதுங்களேன்! இது எங்கள் தலைவரின் விருப்பம்.” என்றார் வெற்றிச்செல்வன் புன்சிரிப்பு மாறாமல்.

எனக்கு மீண்டும் தூக்கிவாரிப் போட்டது. “இலங்கைத் தமிழர் இனப்பிரச்னையைப் பற்றி மேலெழுந்த வாரியாகத்தான் தெரியும். தவிர நான் வெகு தொலைவில், தில்லியில் இருக்கிறேன். உங்கள் உணர்வுகளுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ள முடியாத தொலைவு அது. தமிழ் நாட்டில் இருப்பவர்களுக்கு இலங்கைப் பிரச்னையைப் பற்றி எழுதுவது சாத்தியம். அங்கிருக்கும் எழுத்தாளர்களைப் பாருங்கள்”.

வெற்றிச்செல்வன் திடமாகத் தலையை அசைத்துச் சொன்னார்: “எங்கள் தலைவருக்கு நீங்கள் எழுதவேண்டும் என்றுதான் விருப்பம்”.

இது என்ன கிறுக்குத்தனம் என்று நினைத்தபடி சமையலறைக்குச் சென்று என் பணிப்பெண் பிரேமாவிடம் தேநீர் தயாரித்துக் கொண்டு வரும்படி சொன்னேன். வெற்றிச்செல்வன் விடுவதாக இல்லை. “தில்லியில் இருந்தால் என்ன, உங்களுக்கு என்ன விவரங்கள் வேண்டுமோ எல்லாவற்றையும் நாங்கள் தருவோம்.”

எனக்குச் சிரிப்பு வந்தது. “அப்படியெல்லாம் அத்தனை பெரிய விஷயத்தைப் பற்றி எழுத முடியாது. பஞ்சாபுக்குச் செல்லாமல் என்னால் மௌனப் புயலை எழுதியிருக்க முடியாது. இலங்கைக்கு, முக்கியமாக யாழ்ப்பாணத்துக்குச் செல்லாமல் எப்படி உங்கள் பிரச்னையைப் பற்றி எழுத முடியும்? இன்றையச் சூழலில் (1985) இலங்கைக்கு ஒரு எழுத்தாளர் / பத்திரிகையாளர் என்ற முறையில் எனக்கு விசா கிடைக்காது.”

“ஓ! எதுவும் தேவை இல்லே! தலைமன்னாரிலிருந்து கள்ளத் தோணியிலே வழுக்கிடலாம்!”

கண்கள் இடுங்க, கன்னங்கள் உப்பிப் பளபளக்க வெற்றிச்செல்வன் சிரித்தார். பிரேமா கொண்டுவந்த தேநீரையும் சிற்றுண்டியையும் வெற்றிச்செல்வன் ஆர்வத்துடன் ருசித்தார். அவர் ஒரு சுவாரஸ்யமான ஆளாகத் தெரிந்தார். அவரது வேண்டுகோளை ஏற்காமல் போனாலும் அவரிடம் சும்மா பேச்சுக் கொடுக்கலாம் என்ற ஆர்வத்துடன் அவரைப்பற்றி, அவரது இயக்கத்தைப் பற்றி விசாரித்தேன். அவரது பேச்சிலிருந்து அவர் வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. தமிழர் பிரச்னையை சுருக்கமாகச் சொல்லி, சிங்கள அரசுக்கு எதிராக பல தமிழர் இயக்கங்கள் செயல்படுவதாகச் சொன்னார்.

“ஏழையோ, பணக்காரனோ என் தலைமுறையைச் சேர்ந்த பொடியன்கள் யாரானாலும் ஏதாவது ஒரு போராளி இயக்கத்தில் சேராமல் இருக்க இயலாது.”

“எல்லாரும் ஆயுதம் ஏந்திய போராளிகளா?” என்றேன் அப்பாவித்தனமாக.

“ஆயுதம் ஏந்தாமல் இருக்க இயலாது. சும்மா கதைச்சா கேட்க ஆளில்லே!”

வெற்றிச்செல்வன் ஒரு புகைப்பட ஆல்பத்தைக் காண்பித்தார். லிபியாவில் கடாஃபியின் ஆட்களின் கீழ் பயங்கரவாதப் பயிற்சி முகாம்களில் அவரும் அவரது சகாக்களும் பயிற்சி பெற்ற காலத்தில் எடுத்த புகைப்படங்கள். எல்லா இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் பயிற்சி பெற்று வருவது ஓர் இயல்பான விஷயமாக விவரித்தார்.

நான் விளையாட்டாக நினைத்துக் கேட்டேன். “சுமார் எத்தனை பேரை நீங்கள் கொன்றிருப்பீர்கள்?”

“இருநூறுக்குக் குறையாது.”

நான் திடுக்கிட்டேன். இவரா? குழந்தைச் சிரிப்பும் பளபளக்கும் ரோஜாக் கன்னங்களும் கொண்ட இவரால் கொலை செய்ய முடிந்திருக்குமா? கொழும்பில் 1983இல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைகளைப்பற்றின விவரங்கள் அடங்கிய அச்சிட்ட தாள்களை என்னிடம் கொடுத்து, “வாசிச்சுப் பாருங்கள். நான் பிறகு வரன்” என்று வெற்றிச்செல்வன் கிளம்பியபோது, நான் இன்னும் பிரமிப்பிலிருந்து விடுபட்டிருக்கவில்லை. பிரேமாவிடம் அவரைப் பற்றின விவரங்களைச் சொன்னேன். அவளுடைய கண்கள் பீதியில் விரிந்தன. “ஆப் ஏக் ஆதக்ங்வாதிகோ சாய் பிலாரஹே ஹைன்?” (ஒரு பயங்கரவாதிக்கா தேநீர் உபசரிக்கிறீர்கள்?) என்று அதிசயித்தாள்.

வெற்றிச்செல்வனைப் போல் வேறு இலங்கைத் தமிழர்கள், பல இயக்கங்களைச் சேர்ந்த ‘பயங்கரவாதிகள்’ என்னுடன் ‘கதைக்க’ வருவது பிறகு ஒரு கால கட்டத்தில் வழக்கமாகிப் போனதும், நான் சொல்வதற்கு முன் பிரேமா அவர்களுக்குத் தேநீர் தயாரிக்கத் துவங்கினாள். இலங்கைத் தமிழராகவே நான் என்னை பாவித்துக் கொண்டு, கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருந்த காலம் அது. ஆனால் அந்த நிலை வெகு நாள் தயக்கத்திற்குப் பின்தான் வந்தது.

வெற்றிச்செல்வன் என்னை சந்தித்த ஆண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு ஃபிஜி தீவுகளுக்கு சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டேன். ஆஸ்திரேலிய நகரம் ஸிட்னி வழியாகவே ஃபிஜி செல்ல வேண்டும். ஆஸ்திரேலிய அரசின் செய்தி சேவைத்துறையின் அழைப்பும் கிடைத்ததால் ஃபிஜியிலிருந்து திரும்பும் வழியில் ஸிட்னியில் எட்டு நாட்கள் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் ஸிட்னி வந்திருக்கும் செய்தி அறிந்து ஒரு மாலை என்னைச் சந்திக்க இரு இலங்கைத் தமிழ் இளைஞர்கள் வந்தார்கள். கொழும்பில் நடந்த இனக்கலவரத்துக்குப் பிறகு, அங்கு இருப்பது ஆபத்து என்று பாதுகாப்பிற்காக பெற்றோர்கள் தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாகச் சொன்னார்கள். தங்களுடைய நண்பர்கள் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் மறு நாள் சனிக்கிழமை மாலை எனக்கு வேறு அலுவல் இல்லாவிட்டால் அழைத்துச் செல்கிறோம் என்றும் சொன்னார்கள். நான் சரி என்று ஒப்புக்கொண்டேன்.

அன்று காலைதான் எனக்கு ஒரு சங்கடமான அனுபவம் ஏற்பட்டிருந்தது. நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் இருந்த ஷாப்பிங் மாலுக்குச் சென்றிருந்தேன். கடையில், தொலைந்துபோன பார்வையுடன் நடந்து வந்த ஒரு சேலை கட்டிய பெண்மணியைப் பார்த்தேன். தமிழ்ப் பெண்ணாகத் தோன்றிற்று. நெருங்கி “தமிழா ?” என்றேன். அந்தப் பெண் மகிழ்ச்சியுடன் “ஓம், ஸ்ரீலங்கா” என்றார். என்னை இந்தியர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, “எத்தனை நாட்களாக ஆஸ்திரேலியாவில் இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். கேட்ட மாத்திரத்தில் அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து பொல பொலவென்று நீர் வழிந்தது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஒரு வருஷமாச்சு. சொந்த மண்ணைவிட்டு இத்தனை தூர தேசம் வந்து தவிக்கிறன். இங்கே பாதுகாப்புன்னாலும் சொந்த ஊர் சொந்த வீடு போல வருமா? எப்ப திருப்பிப் போக இயலுமோ?” என்று எனக்குப் பரிச்சயமற்ற யாழ்ப்பாணத் தமிழில் அரற்றினார். முன்பின் தெரியாத என்னிடம் தமிழ்ப் பேச்சைக்கேட்ட மாத்திரத்தில் உடைந்து, வெள்ளைக்காரர்கள் நடத்தும் கடை மையத்தில் நின்று புலம்பிக் கண்ணீர் விட்டது மிக ஆழமாக என்னை அன்று முழுவதும் சலனப்படுத்திற்று.

மறுநாள் குறித்த நேரத்தில் அந்த இளைஞர்கள் வந்து என்னைத் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது இளைஞர்களும் யுவதிகளும் இருந்தார்கள். அனைவருமே இருபத்தைந்து வயதுக்குள்தான் இருப்பார்கள். அந்த வயதுக்குரிய உல்லாசமோ, சிரிப்போ அவர்களிடையே இல்லாததை நான் கவனித்தேன். நாட்டுச் சூழலே தங்களைப் புகலிடம் தேடி வேறு நாட்டுக்குத் துரத்தியதாகவும் சொந்த மண்ணை விட்டு வந்திருப்பது தங்களுக்கு மிகவும் வேதனை அளிப்பதாகவும் சொன்னார்கள். அவர்களை ஒரு குற்ற உணர்வும் வாட்டுவதாகத் தோன்றிற்று. 1983 தமிழ் இனப் படுகொலைகளைப் பற்றின செய்திக் குறிப்புகளும் புகைப்படங்களும் மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டு, பிரச்சார வினியோகத்துக்கு ஏற்ற வகையில், அவர்களிடம் கத்தை கத்தையாக இருந்தன. அவர்களில் சிலர் என்னுடைய மௌனப்புயலைப் படித்திருந்தார்கள். நாங்கள் பட்ட, படும் துயரத்தைப் பற்றி நீங்கள் எழுதவேண்டும் என்றார்கள். அவர்கள் காட்டிய புகைப்படங்கள் மிக பயங்கரமாக அடிவயிற்றைக் கெல்லும் காட்சிகளைக் கொண்டவையாக இருந்தன.

மற்ற தமிழ்ப் போராளி இயக்கங்களைவிட விடுதலைப் புலிகளின் இயக்கம் அப்போது துரித வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்தது. இந்த இளைஞர்கள் அவர்களின் ஆதரவாளர்கள் போலப் பேசினார்கள். அவர்களது நிலையைக் கண்டு எனக்குப் பரிதாபமாக இருந்தது. ஆனால் அவர்களது பிரச்னையைப் பற்றி எழுத வேறு வகையான தாக்கமும் அனுபவமும் புரிதலும் தேவை. எனக்கு அத்தகைய அனுபவம் அங்கு கிட்டவில்லை. ஆனால் அவர்களது பிரச்னையிலிருந்து நான் விலகி நிற்கப் பார்த்தாலும் அது என்னை விடாமல் துரத்தி வரும் என்று நான் அப்போது அறியவில்லை.

இந்தியா திரும்பியதும் ஒரு நாவல் எழுத, கரு லட்டு போல என் கையில் இருந்தது. அது நான் ஃபிஜியில் சந்தித்த, சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்ணின் அசாதாரணக் கதை. நிஜக் கதை.

தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் நாவல்கள்