மனுபென் காந்தியின் grand-niece. காந்தியின் கடைசி காலத்தில் – குறிப்பாக நவகாளி யாத்திரையின்போது – அவர் கூடவே இருந்து அவரைக் கவனித்துக் கொண்டவர். காந்தி இறக்கும்போது அவருக்கு பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கலாம். கஸ்தூரிபாவின் கடைசி காலத்திலும் அவரோடு (13, 14 வயதில்) இருந்து அவரை கவனித்துக் கொண்டவர். காந்தியை தன் தாயாக வரித்துக் கொண்டிருக்கிறார். காந்தியும் தன்னை அவரது தாய் – தந்தை இல்லை, தாய் – என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார். (புகைப்படத்தில் காந்தியின் வலது பக்கம் தலையில் முக்காடு இல்லாமல் இருப்பவர் மனு.)
புத்தகம் என்னை கவர்ந்தது. காந்தி எப்பேர்ப்பட்ட மகாத்மா என்றெல்லாம் மனு பேசவில்லை. காந்தியைப் பார்த்துக் கொள்ளூம், அவருக்கு பணிவிடை செய்யும், அரசியல் தெரியாத ஒரு சிறு பெண்ணின் நோக்கில்தான் காந்தியைப் பற்றி எழுதுகிறார். நவகாளியில் நடந்த கொடுமைகளை விட காந்திக்கு அங்கே ஆட்டுப்பால் கிடைக்கவில்லை, தேங்காய்ப்பால் குடித்து பேதி ஆனது என்ற விவரங்கள்தான் நிறைய. மிகவும் genuine ஆன புத்தகம்.
உண்மையாகச் சொல்கிறேன், காந்தி ஒரு நச்சுப் பிடித்தவர். அவரை ஒரு பதின்ம வயதுப் பெண் எப்படி பொறுத்துக் கொண்டாள் என்பது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நவகாளி யாத்திரையின்போது கிராமம் கிராமமாக போயிருக்கிறார். ஒரு கிராமத்தில் அவர் குளிக்கும்போது தேய்த்துக் கொள்ளும் ஒரு கல்லை மறந்துவிட்டு வந்ததால் மனுவை மீண்டும் அந்த கிராமத்துக்குப் போய் அதைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். என்ன இந்தியாவில் கல்லா கிடைக்காது? நானாக இருந்தால் ஓடிவிட்டிருப்பேன். அவருக்கு மாலை போட்டவர்களை பணவிரயம் என்று திட்டிவிட்டு, பூக்களைக் கோர்த்த நூலைப் பிரித்து சுற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஏதோ ஒரு பழைய படத்தில் சுருளிராஜன் கஞ்சன் என்று காட்டுவார்கள். அவர்கள் எல்லாம் காந்தியிடம் பிச்சை வாங்க வேண்டும்!
ஆனால் அப்படி அவர் இருந்ததால்தான் – எந்த விதமான தக்குனூண்டு சமரசமும் செய்து கொள்ளாமல் இருந்ததால்தான் – அவர் காந்தியாக இருக்கிறார். என் போன்றவர்கள் அவருடைய நிலையில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அடைய முடியவில்லை.
மனுபென் என்றால் உடனே நினைவு வருவது காந்தி தன் பிரமச்சரிய சோதனை என்று மனுவோடு நிர்வாணமாக படுத்து உறங்கியதுதான். அப்படி உறங்கும்போது ஒரு முறை அவருக்கு விறைத்துக் கொண்டதாம். விவரம் தெரியாத ஒரு சிறு பெண்ணை இப்படி நடத்துவது கொடுமை இல்லையா என்று அவ்வப்போது காந்தி எதிர்ப்பாளர்கள் எழுதுவார்கள். உண்மைதான், இது நெருடலாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் காந்தி தன் மனதுக்கு உண்மையாக இருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் இது நமக்கெல்லாம் தெரிய வந்ததே காந்தி சொல்லித்தான்! இதைப் பற்றி மனு குறிப்பிடவே இல்லை.
சின்ன புத்தகம். மின் புத்தகத்தை இணைத்திருக்கிறேன். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: காந்தி பக்கம்