இ.பா. என் மனம் கவர்ந்த எழுத்தாளர் அல்லர். என்னைப் பொறுத்த வரையில் அவரது எழுத்து முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அவருடைய அங்கதம் எனக்கு பெரிதாக அப்பீல் ஆவதே இல்லை. இ.பா.வின் புத்தகங்கள் எனக்கு பியர் மீது இருக்கும் நுரை போலத்தான் தெரிகின்றன. Frothy, but no substance.
என்னைப் பொறுத்த வரை இ.பா.வின் பெரிய பங்களிப்பு என்பது அவரது சிஷ்யர்கள்தான். அவரது பாணியில் அவரை விட பெரும் வெற்றி பெற்ற படைப்புகளை (ஆதவன், என் பெயர் ராமசேஷன்) எழுதி இருக்கிறார்கள். சுஜாதாவில் கூட அவரது பாதிப்பு உண்டு.
இ.பா.வின் பாணி என்பது என்ன? தன் உள்ளத்து உணர்ச்சிகளை, குழப்பங்களை, வாழ்க்கையின் அபத்தங்களை நேர்மையாக, தயங்காமல் வெளிப்படையாகப் பேசும் அறிவு ஜீவிகள். அவ்வளவுதான். அந்த பேச்சு பலரைக் கவர்ந்திருக்கிறது, அதனால்தான் இ.பா.வுக்கு ஒரு இலக்கியவாதி என்ற அந்தஸ்து கிடைத்திருக்கிறது. என்னைக் கவரவில்லை. சும்மா பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் என் கண்ணிலும் அவர் இலக்கியவாதிதான். அவருடைய இலக்கியங்கள் என் வரையில் தோல்வி.
ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டனவும் அப்படித்தான். டெல்லியின் உயர் அதிகாரி அமிர்தம் தன் பழைய காதலியின் சாயலில் இருக்கும் இளம் பெண் பானுவைச் சந்திக்கிறான். இருவருக்கும் பரஸ்பர கவர்ச்சி ஏற்படுகிறது. அமிர்தத்தின் மனைவி திலகம் சண்டை போடுகிறாள். பானு விலக, அமிர்தத்துக்கு திலகத்தின் தேவை புரிகிறது.
கதை எல்லாம் முக்கியமில்லை. அமிர்தத்தின் பலவீனங்களை அமிர்தம், பானு, திலகம், நண்பன் பானர்ஜி எல்லாரும் அணுகும் விதம்தான் முக்கியம். அதுதான் நாவலின் பலம். இளம் பெண் மீது ஆசை. மண வாழ்வை உதற முடியாத மனநிலை. ஆசைக்கு நேர்மையாக இருப்பதா இல்லை திலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கா? பானுவும் பானர்ஜியும் நேர்மையாக இரு என்கிறார்கள். பந்தங்கள் வலிமையாக இல்லாவிட்டாலும் அது எவ்வளவு கஷ்டம் என்பதை திறமையாகக் கொண்டு வந்திருக்கிறார்.
இ.பா.வின் பிற புத்தகங்களைப் போலத்தான் இதுவும். படிக்கலாம். படித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லை.
ஜெயமோகன் இந்த நாவலை சிறந்த தமிழ் நாவல்கள் வரிசையில் வைக்கிறார். அவரது வார்த்தைகளில்:
அறிவு ஜீவித்தனத்திற்கும், அன்றாட வாழ்வின் அபத்தத்திற்கும் இடையேயான இடைவெளியில் முன்நுனியால் கிண்டிப் பரிசோதித்தபடி நகரும் இந்திரா பார்த்தசாரதியின் பார்வை தமிழுக்கு முன்னோடியானது. அறிவு ஜீவி அன்றாட வாழ்வை நடிக்கிறார். இல்லை அன்றாட வாழ்விலிருந்தபடி அறிவு ஜீவிதனத்தை நடிக்கிறாரா? தீர்மானிப்பது சிரமம். ‘கடைசியில வழி தவறின புருஷன் பெண்டாட்டிட்டயே திரும்பி வரான் ‘ — மாமி, ‘அதான் அவனுக்குத் தண்டனையா ? ‘ —- அறிவு ஜீவி மாமாவின் பதில் உரையாடல்களில் பாசாங்கற்ற துல்லியம் இந்திரா பார்த்தசாரதியின் பலம். பிற்பாடு வந்த நகர்சார் எழுத்தாளர்களின் இந்த ‘கையமைதி ‘ இழக்கப் பெற்றுவிட்டது. காரணம் சுஜாதாவின் ஆர்ப்பாட்டமான கூறல் முறையின் தவறான பாதிப்பு.
நான் ரசித்த வரிகளையே அவரும் quote செய்திருக்கிறார். ஆனால் அது அமிர்தமும் திலகமும் பேசுவது. இவர் quote செய்திருக்கும் விதம் பக்கத்து வீட்டு மாமிக்கும் திலகத்தும் நடக்கும் பேச்சு போல தோன்ற வைக்கிறது
தொகுக்கப்பட்ட பக்கம்: இ.பா. பக்கம்
எனக்கும் இவரை படிக்க நிரம்பவே அலுப்பாக இருந்தது. தொண தொண வென பேசிக் கொண்டே இருக்கின்றார்கள். அதுவும் சாதரன பேச்சல்ல, எல்லம் ஒரே சொற்பொழிவாக இருக்கின்றது. கொஞ்சம் அறிவாளித்தனமான அரட்டை அரங்கம். ஜெயகாந்தனை ஆத்ர்சமாக கொண்டு படிப்பவர்களுக்கு கண்டிப்பாக இவரை பிடிக்கும் என்று நினைக்கின்றேன்.
கிருஷ்ணா கிருஷ்ணா சிறப்பாக இருந்தது. அதை படித்துவிட்டு வாங்கிய இரண்டு நாவல்களை ஒரு முறை படித்து வைத்ததுதான். அடுத்த முறை படிக்க முடியவில்லை. வறண்ட நாவல். அங்கதமா? அது எங்கே இருக்கின்றது.
ஆதவனை பிடித்த அளவிற்கு இவரை பிடிக்கவில்லை. அதுவும் பேசிக் கொண்டே இருக்கின்றார்கள், ஆனால் அது சுவாரஸ்யமாக இருக்கின்றது.
LikeLike
ரெங்கசுப்ரமணி, நான், நீங்கள், கேசவமணி மூவருக்கும் சிந்தனை முறை நிறைய ஒத்துப் போகிறது. பேசாமல் மூவரும் ஒரே தளத்தில் எழுதலாம்.
LikeLike