சுஜாதாவின் “மண்மகன்”

sujathaஇன்னொரு கச்சிதமான குறுநாவல்; கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகும் தமிழன், Son of Soil என்று அடிபடுவது.

சுஜாதா மாதிரி வாரப் பத்திரிகையில் தொடர்கதை எழுதுபவர்களுக்கு ஒரு சிரமம் உண்டு. பிரமாதமாக ஆரம்பிப்பார்கள். ஆனால் போகப் போக வாராவாரம் சரியான நேரத்தில் பத்து பக்கத்தைத் தர வேண்டிய டென்ஷன், 25 வாரம் ஆகிவிட்டதே, எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற டென்ஷன் எல்லாம் சேர்ந்து சொதப்பிவிட நிறைய வாய்ப்பு உண்டு. குறுநாவல், சிறுகதை எழுதும்போது வாரப் பத்திரிகையில் வந்தாலும் இந்த சிரமம் இல்லை. அதனால் பொதுவாகவே அவரது சிறுகதைகள், குறுநாவல்கள், மாத நாவல்கள் ஆகியவற்றின் சராசரி தரம் கொஞ்சம் உயர்வாகவே இருக்கும். இதுவும் அப்படித்தான். மிகவும் கச்சிதமான, ஒரு முடிவை நோக்கி சீராகப் போகும் கதை.

mann_maganசக தொழிலாளி தொழிற்சாலையில் விபத்தில் இறக்க, முருகன் ஒரு பரிதாப உணர்ச்சியில் அந்த தொழிலாளி குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வாங்கித் தரப் போராடுகிறான். மானேஜ்மென்ட் ரூல்ஸ்படி நஷ்ட ஈடு தர மறுக்கிறது. கடைசி அஸ்திரமாக கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் சேர்ந்து பெரிய அளவில் ஆதரவு கிடைத்துவிடுகிறது. இவனை கீழே இறக்க ஒரே வழி – தமிழன் முருகனுக்கு பெங்களூரில் என்ன வேலை, திரும்பிப் போ என்று நாலு பேர் ஆரம்பிக்கிறார்கள். சண்டை ஆகி முருகனுக்கு வேலையே போய்விடுகிறது.

முருகன் தன் மனைவி கலையரசியை சந்திக்கும் தருணங்கள், ஜப்பானிய எந்திரத்தைப் பற்றிய பக்கங்கள், சாந்தம்மாவின் கஷ்டங்கள், அதிகாரிகளின் அணுகுமுறை அத்தனையும் சிறப்பான கோட்டோவியங்கள்.

எத்தனை பொழுதுபோக்கு கதைகள் எழுதினால் என்ன, சுஜாதா இலக்கியவாதிதான் என்று நிறுவ இந்த மாதிரி நாலு கதைகள் போதும்.


தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்