கமலா தாசின் “எண்டே கதா”

கமலா தாசின் பேரையும் இந்த சுயசரிதையைப் பற்றியும் சிறு வயதிலேயே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் படிக்க 35 வருஷங்கள் ஆகிவிட்டன.

இந்தப் புத்தகத்தை நான் என் பதின்ம வயதில் படித்திருந்தால் நிச்சயமாக ஒரு மறக்க முடியாத புத்தகமாக இருந்திருக்கும். பெண், அதுவும் மணமான ஒரு பெண், தனக்கு பிற பெண்கள் எழுதிய காதல் கடிதங்கள், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் பற்றி எல்லாம் இவ்வளவு தூரம் வெளிப்படையாக எழுதுவது என்னைத் தாக்கி இருக்கும். இன்று இத்தனை சின்ன புத்தகமாக இருந்தாலும் இவ்வளவு இழுவையாக இருக்கிறதே, புத்தகம் முடிய இன்னும் எத்தனை பக்கம் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் கடைசி பக்கத்துக்குப் போய் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன்.

kamala_das_youngகமலா தான் பெரிய அழகி இல்லை என்று அடிக்கடி இந்தப் புத்தகத்தில் சொல்லிக் கொள்கிறார். அவரது இளமைக்கால புகைப்படத்தைப் பார்த்தால் அப்படி ஒன்றும் மோசமாக இல்லை.

சரி, நேர்மையாக எழுதப்பட்ட சுயசரிதை என்றாவது கொஞ்சம் மதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். இந்தப் பதிவை எழுதும் முன் விக்கியில் கமலா தாஸ் பற்றி படித்தேன். சுயசரிதை என்று பேரே தவிர நிறைய கற்பனை சேர்த்து எழுதி இருக்கிறாராம். இருந்த மரியாதையில் பாதி போய்விட்டது.

1973-இல் வெளிவந்த புத்தகம். எழுபதுகளில் குமுதத்தில் ஒரு மொழிபெயர்ப்பு வந்தது என்று ஞாபகம். எங்கள் வீட்டில் எழுபது-எண்பதுகளில் ரெகுலராக குமுதம், விகடன் வாங்குவோம், அப்படித்தான் இதைப் பற்றி கேள்விப்பட்டேன் என்று நினைக்கிறேன். அப்போது நிச்சயம் பெரிய ஷாக் வால்யூ இருந்திருக்கும். இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவமே அதுதான்.

kamala_das_oldபெரிய கவிஞர் என்று கேள்வி. எனக்கும் கவிதைக்கும் காத தூரம். ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இருக்கும் கவிதைகளையே என்னால் படிக்க முடியவில்லை.

கமலா தாஸ் எனக்கான எழுத்தாளர் அல்லர் என்றுதான் நினைக்கிறேன். அவரது தாக்கம், எழுத்து பற்றி மாற்று கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆவல். ஜெயமோகன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்று தேடினேன். ஜெயமோகன் அவரது ஆளுமை பற்றி எல்லாம் நிறைய எழுதி இருக்கிறார். நான் ஒரு minimalist, எனக்கு எழுத்துதான் முக்கியம், எழுத்தாளர் இல்லை. என் கண்ணில் ஜெயமோகனின் முக்கியமான கருத்து இதுதான்:

‘மாதவிக்குட்டி’ ஒரு நல்ல சிறுகதையாசிரியர். அவரது கலைத்திறனுக்கு அந்தக் கிறுக்கு – மதுரமான கிறுக்கு என்று நித்யா சொல்வார் – ஒரு வகையில் பலம் சேர்த்தது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவும் உணர்ச்சிகரமான மனம் கொண்டவர் அவர். காம இச்சையும் சுயவலியுறுத்தலுமே அவரது ஆளுமையின் சாரம். அவற்றின் மூலம் அவர் அறிந்த ஒரு வாழ்க்கையை அவர் எழுதினார். அது அவரது தனித்தன்மை கொண்ட அழகியலை உருவாக்கியது. அது ஓர் இலக்கிய சாதனை. நிலையில்லாது அலைந்த பேரிலக்கியவாதிகள் பலர் உண்டு. நிலைத்த ஞானம் கொண்ட பேரிலக்கியவாதிகளும் உண்டு. இலக்கியம் என்பது பார்வையினால் அல்ல வெளிப்பாட்டினால்தான் இலக்கியத்தன்மையை அடைகிறது.

இலக்கிய சாதனை போன்ற வார்த்தைகளை ஜெயமோகன் casual ஆகப் பயன்படுத்த மாட்டார். அவரது சிறுகதைகளை என்றாவது படித்துப் பார்க்க வேண்டும்.

கமலா தாஸின் ஆக்கங்களை வேறு யாராவது படித்திருக்கிறீர்களா? உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்!


தொகுக்கப்பட்ட பக்கம்: இந்திய அபுனைவுகள்

தொடர்புடைய பதிவுகள்:
கமலா தாஸ் பற்றிய விக்கி குறிப்பு
ஜெயமோகனின் அஞ்சலி, இரு கட்டுரைகள் – 1, 2