ஷேக்ஸ்பியர் நாடகம் – ரோமியோ ஜூலியட்

shakespeareஎன் பதின்ம வயதுகளில் நான் “ஷேக்ஸ்பியருக்கு வயதாகிவிட்டது, அவர் நாடகங்கள் இன்று cliches ஆக மாறிவிட்டன், படிக்க போரடிக்கிறது” என்று நினைத்ததுண்டு. அதுவும் அந்தக் காலத்தில் இதன் நாடக சாத்தியங்களை சிவாஜி கணேசன் மூலமாகவே உணர்ந்திருந்தேன். ஜூலியஸ் சீசராக (சொர்க்கம் திரைப்படம்), ஒதெல்லோவாக (ரத்தத் திலகம் திரைப்படம்) என்று சில இப்போது நினைவு வருகின்றன. ஷேக்ஸ்பியரா, ஆளை விடுங்கப்பா என்று ஓட ஆரம்பித்தேன்.

west_side_storyபல வருஷங்கள் கழித்துப் பார்த்த சில திரைப்படங்கள் – West Side Story, அங்கூர், Ran, Throne of Blood, மக்பூல், சமீபத்தில் ஓம்காரா – எனக்கு ஷேக்ஸ்பியரின் அருமையைப் புரிய வைத்தன. அப்புறம்தான் அவர் நாடகங்களைத் தேடிப் பிடித்துப் படிக்க ஆரம்பித்தேன். அவரது நாடகங்கள் cliches அல்ல, காலம் கடந்து நிற்பவை என்று புரிந்து கொண்டேன். இதை எனக்கு முதல் முதல் உணர்த்திய திரைப்படம் West Side Story-தான். ரோமியோ ஜூலியட் மாதிரி எல்லாருக்கும் தெரிந்த ஒரு கதையை மிகச் சிறப்பாக வேறு ஒரு களத்தில் இன்றைய நிலைக்கேற்ப – நியூ யார்க்கில் போர்ட்டோ ரிகன் மற்றும் போலிஷ் இளைஞர் gangs-இன் பகை, ஒரு போலிஷ் இளைஞன் போர்ட்டோ ரிகன் இளைஞி காதல் – மாற்றி இருப்பார்கள். அற்புதமான திரைப்படம். பாட்டு, நடனத்துக்காகவே பார்க்கலாம்.

romeo_and_julietபல வருஷங்களுக்குப் பிறகு மீண்டும் ரோமியோ ஜூலியட் நாடகம் கண்ணில் பட்டது. ஒரு நாளைக்கு ஒரு பக்கம், இரண்டு பக்கம் என்று ரசித்துப் படித்தேன். இன்று என்னை மூன்று விஷயங்கள் மிகவும் ஈர்த்தன.

  1. இது என்றும் நிலைத்து நிற்கும் கரு – எல்லா நாடுகளுக்கும் பொருந்தி வரும் கரு. அதுவும் விறுவிறுவென்று போகும் நாடகம்.
  2. ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படிக்கும்போது எத்தனையோ நாட்களாக அறிந்திருந்த மேற்கோள்கள் அங்கங்கே தென்படும். அட இதில்தானா அந்த மேற்கோள் என்று தோன்றும். எனக்கு இந்த நாடகங்களின் முக்கியமான சுகம் இதுதான். ரோமியோ ஜூலியட்டும் அப்படித்தான் – “Parting is such sweet sorrow”, “No, ’tis not so deep as a well, nor so wide as a church door; but ’tis enough, ’twill serve.”, “A plague on both your houses!” என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
  3. வார்த்தை விளையாட்டு: உதாரணத்துக்கு ஒன்று – ஜூலியட்டுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை பாரிஸ் சொல்கிறான் – “These times of woe afford no time to woo.” இறப்பதற்கு முன் மெர்குஷியோ சொல்கிறான் – “”Ask for me tomorrow, and you shall find me a grave man…” கலக்குகிறார்!

shakespeare_in_loveபார்க்க வேண்டிய இன்னொரு திரைப்படம் Shakespeare in Love (1998). பல ஆஸ்கார்களை வென்றது. ஷேக்ஸ்பியராக நடித்த ஜோசஃப் ஃபியன்னஸ், உயர்குடியில் பிறந்து, நாடகத்தில் ஜூலியட்டாக நடிக்கும் க்வினத் பால்ட்ரோ இருவரும் பிரமாதமாக நடித்திருப்பார்கள்.

romeo_and_julietஆனால் ஒன்று – நாடகம் மற்றும் West Side Story திரைப்படத்தால் கவரப்பட்டு லெஸ்லி ஹோவர்ட், நார்மா ஷியரர் நடித்து ஜார்ஜ் குகார் இயக்கிய ரோமியோ அண்ட் ஜூலியட் திரைப்படத்தைப் (1936) பார்த்தேன். தாங்க முடியவில்லை – குறிப்பாக மெர்குஷியோவாக நடித்த ஜான் பாரிமோர் கொடுமையாக நடித்திருப்பார். He rrrrrolls his RRRRRRs!

நாடகத்தைப் படியுங்கள், முடிந்தால் பாருங்கள். Shakespeare in Love மற்றும் West Side Story இரண்டையும் தவறாமல் பாருங்கள்.


தொகுக்கப்பட்ட பக்கம்: ஷேக்ஸ்பியர் பக்கம்

சுஜாதாவின் “ஜன்னல் மலர்”

sujathaஇன்னொரு நேர்த்தியான கதை. பதின்ம வயதில் விகடனில் படித்தபோது மிகவும் இம்ப்ரஸ் செய்தது. இப்போதும் இதன் கச்சிதம் வியக்க வைக்கிறது. தொடராக வந்தாலும் சுஜாதாவே இதை குறுநாவல் என்றுதான் குறிப்பிடுகிறார். தொடர்கதைகளில் சில நேரம் ஏற்படும் சொதப்பல்கள் எதுவும் இருக்காது.

jannal-malarஜெயிலில் புருஷன் மூன்று வருஷம்; மனைவி எப்படி சமாளிக்கிறாள்? அதைக் கணவன் மெதுமெதுவாக உணர்வதுதான் கதை.

கணவனுக்கு முன்னால் நமக்கு புரிந்துவிடுகிறது. அதனால் கதையின் போக்கில், கணவன் துயரத்திலிருந்து தப்பமுடியாது என்று தெரிந்து கொள்கிறோம். அந்த துயரத்தை நோக்கி கணவன் மெதுமெதுவாக செல்வது அருமையாக வந்திருக்கும்.

குழந்தை அப்பாவை அடையாளம் காண முடியாமல் பயப்படும் காட்சிகள் நன்றாக வந்திருக்கும்.

ஓரினச் சேர்க்கை பற்றி எல்லாம் எழுதி இருக்கிறார். என் சின்ன வயதில் புரிந்திருக்காது!

யாருக்கு யார் காவல் என்று ஶ்ரீகாந்த், ஶ்ரீப்ரியா, எம்.ஆர். ராதா நடித்து மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் திரைப்படமாகவும் வந்தது. ஓடவில்லை.

உடுமலை தளத்தில் கிடைக்கிறது. விலை 75 ரூபாய்.

சுஜாதாவின் இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகவே இதை நான் கருதுகிறேன். படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: சுஜாதா பக்கம்

தொடர்புடைய சுட்டி: யாருக்கு யார் காவல் திரைப்படம் பற்றி சுஜாதா

அசோகமித்ரன் எழுதிய “பயாஸ்கோப்”

asokamitran2பயாஸ்கோப் அசோகமித்ரன் சினிமா பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அசோகமித்ரனின் சினிமா ரசனை பொதுவாக அவரது இளமைப் பருவத்தில் பார்த்த சாகச சினிமாவினால் உருவானது. அவருக்குப் பிடித்த எர்ரால் ஃப்ளின் திரைப்படங்கள், எம்ஜிஆர் நம்பியார் சண்டை போடும் சர்வாதிகாரி போன்ற திரைப்படங்களுக்கும் அவரது எழுத்து பாணிக்கும் ஸ்னானப் ப்ராப்தி கூட கிடையாது. (அவர் கலைப் படங்களை வெறுத்தார் என்றில்லை, ஆனால் இந்த மாதிரி படங்களைப் பற்றி எழுதும்போது அவர் அடையும் உற்சாகம் தெளிவாகத் தெரியும்.) இந்த முரண்பாடு எப்போதுமே என்னை வியக்க வைக்கும் விஷயம். சமயத்தில் அவர் இந்த மாதிரி படங்களை நக்கல் அடிக்கிறார், நமக்குத்தான் புரியவில்லை என்று தோன்றுவதும் உண்டு. 🙂 (குறிப்பாக பஹூத் தின் ஹுவே பற்றி அவர் எழுதி இருக்கும் கட்டுரை.)

s_s_vasanஇந்தக் கட்டுரைகளின் ஹீரோ எஸ்.எஸ். வாசன்தான். வாசன் அசோகமித்ரனை மரியாதையாக நடத்தவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தக் கட்டுரைகளில் தெரியும் வாசன் மிகத் திறமையான முதலாளி. அவருக்கு சினிமா மட்டுமே தொழில் இல்லை, அதனால் சினிமாவில் அவருக்கு முழு கவனம் இல்லை, அப்படி கவனம் செலுத்தியபோதெல்லாம் பெரும் வெற்றி பெறுகிறார் என்ற சித்திரம் கிடைக்கிறது. விளம்பர யுத்திகளின் மன்னராக இருந்திருக்கிறார். மனஸ்தாபம் கொண்டிருந்த கல்கியை அவ்வையார் திரைப்படத்துக்கு அழைத்து அவர் மூலம் நல்ல விமர்சனம் பெற்றது, ராஜாஜியை எப்படியோ தாஜா செய்து படத்தைப் பார்க்க வைத்து ராஜாஜி பார்த்த படம் என்று செய்தி கொடுத்து படத்தை பெரும் வெற்றி பெறச் செய்தது என்று பல. (ராஜாஜி படம் மோசம் என்று தனது டைரியில் எழுதி வைத்திருப்பது அசோகமித்ரன் பாணி irony!)

bioscopeபல இடங்களில் அடக்கி வாசிக்கிறார் என்று தோன்றுகிறது. ஆனால் மனிதருக்கு நக்கல் அதிகம். அது அங்கங்கே வெளிப்படுகிறது. உதாரணமாக தமிழ் சினிமாவைப் பற்றி ஒரே வாக்கியத்தில் சொல்கிறார்.

தமிழ்த் திரைப்படங்களை கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும்.

பராசக்தியைப் பற்றி அவர் நக்கல் அடிப்பது பிரமாதம். அவர் வார்த்தைகளில்: 

பராசக்தி தமிழ்த் திரைப்படம் ஒரு மைல்கல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதுவே சினிமாவிற்குரிய சிந்தனைப் போக்கை தமிழ் சினிமா உலகில் வெகு தூரம் பின் தள்ளிவிட்டது. புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு முட்டையிடலுக்கு பின் தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல ‘பராசக்தி’ சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிர் கொலையுயிருமாகச் செய்துவிட்டது.

அவரோடு எனக்கு இசைவில்லை என்பதையும் மீறி புன்னகைக்க வைக்கிறது. மைல் கல் ஒரு pyrrhic victory என்பதை என்னால் ஏற்க முடியவில்லை.

கூர்மையான அவதானிப்புகள். அவரது பாணி irony. (உதாரணமாக பல ஸ்டண்ட்கள் செய்து புகழ் பெற்ற கே.டி. ருக்மணியை வயதான காலத்தில் எஸ்.வி. ஸஹஸ்ரநாமம் வீட்டில் சந்திப்பது) ஆனால் இவை எல்லாம் மேலோட்டமான கட்டுரைகளே. படித்தே ஆக வேண்டிய புத்தகம் என்று சொல்வதற்கில்லை.

கிழக்கு பதிப்பகம் 2006-இல் வெளியிட்டிருக்கிறது. சில கட்டுரைகள் வேறு தொகுப்புகளிலும் வந்திருக்கின்றனவாம். விலை நூறு ரூபாய்.

இந்தப் புத்தகம் அசோகமித்ரன் பிரியர்களுக்காக. தமிழ் சினிமா, அதுவும் பழைய தமிழ் சினிமா பிரியர்களுக்காக. எனக்கு இரண்டு தகுதியும் உண்டு. அதனால் பிடித்திருக்கிறது.


தொகுக்கப்பட்ட பக்கம்: அசோகமித்ரன் பக்கம், சினிமா பக்கம்

தொடர்புள்ள பதிவு: ரெங்கசுப்ரமணியின் பதிவு

சாகித்ய அகாடமி விருது பெற்ற “தூப்புக்காரி”

malarvathiமலர்வதி என்ற இளைஞி 2011இல் எழுதி இருக்கிறார். அடுத்த வருடமே இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது.

thooppukkariதூப்புக்காரி என்றால் துப்புரவுத் தொழிலாளி என்று அர்த்தமாம். இந்தப் புத்தகத்தைப் பற்றி கேள்விப்படும் வரை எனக்குத் தெரியாது. மலர்வதியே (ஒரிஜினல் பெயர் ஃப்ளோரா) ஒரு தூப்புக்காரியின் மகளாம். தனது அனுபவங்களை, தான் கண்டவற்றை அடிப்படையாக வைத்து கதை எழுதி இருக்கிறார். எந்த வித சமரசமும் இல்லாமல் சாக்கடையில் இறங்கி வாருவது, தூமைத் துணியை அலசிப் போடுவது, பீ அள்ளுவது என்று விவரிக்கிறார். பல இடங்களில் என் மிடில் க்ளாஸ் மனதுக்கு “அய்யய்யே” என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கொஞ்சம் கூட இலக்கிய நயம் இல்லாத நாவல் என்பதையும் சொல்லித்தான் தீர வேண்டும். ஏழைகள் அடக்கப்படும் “முற்போக்கு நாவல்”. ஆவண ரீதியான முக்கியத்துவம்தான். தூப்புக்காரி குடும்பத்தில் பிறந்து இவ்வளவு தூரம் எழுதி இருப்பதற்கு பாராட்ட வேண்டும் என்று சொல்வது patronizing ஆக இருக்கிறது என்றாலும் அப்படித்தான் தோன்றுகிறது.

இலக்கியம் என்ற முறையில் தோல்வி என்றாலும் படைப்பின் பலங்கள் என்ன என்று தேடத் தோன்றுகிறது. சூழலை உண்மையாக எழுதி இருக்கிறார். ஸ்டீரியோடைப் பாத்திரங்கள்தான் என்றாலும் உண்மையாகத் தெரிகின்றன.

சிறு வயதில் மாதம் ஐந்து ஆறு ரூபாய்க்கு தினமும் வீட்டில் கழிப்பறையைக் கழுவிவிட ஒரு தெலுகுப் பெண்மணி வருவார். பேர் கூடத் தெரியாது, லச்சி (ஜாதிப் பெயரோ?) என்று சொல்வோம். அவரை என் சின்னத் தங்கை கூட நீ வா போ என்றுதான் கூப்பிடுவாள். பொதுவாக அவருடன் பேச யாருக்கும் தோன்றியதில்லை. பல வருஷம் கழித்து இன்று அவர் முகத்தை நினைவுக்குக் கொண்டு வந்ததுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றி.

மலர்வதி தன் அனுபவங்களை, துன்பங்களை, எண்ணங்களை இலக்கியம் ஆக மாற்ற இன்னும் கொஞ்சம் தூரம் போக வேண்டும்தான். அப்படிப் போக வேண்டும் என்று மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.


தொகுக்கப்பட்ட பக்கம்: விருதுகள், தமிழ் நாவல்கள்

விகடனில் எம்.ஏ. சுசீலா பேட்டி

விகடனுக்கு நன்றி!

m_a_ suseelaaஃப்யோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய ‘இடியட்’ என்ற ஆயிரம் பக்க நாவலை ‘அசடன்’ என மொழிபெயர்த்திருக்கிறார் பேராசிரியை எம்.ஏ. சுசீலா. இதற்காக இந்த ஆண்டின் கனடா ‘தமிழ் இலக்கியத் தோட்டம்’ வழங்கும் மொழிபெயர்ப்புக்கான இயல் விருது, ‘திசை எட்டும்’ மொழியாக்க இலக்கிய விருது என அங்கீகாரங்கள் வரிசை கட்டுகிறது! இதற்கு முன்னர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்’ நாவலை ‘குற்றமும் தண்டனையும்’ என மொழிபெயர்த்திருந்தார் சுசீலா. இரண்டு நாவல்களுமே மனித உணர்வின் ரத்தமும் சதையுமான சித்திரங்கள்.

தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற சுசீலா, மதுரை ஃபாத்திமா கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியையாக 36 ஆண்டுகள் பணிபுரிந்து பணிநிறைவு பெற்றபின் புரிந்த சாதனைகள் இவை. வார்த்தை வார்த்தையாகக் கோத்து மென்மையாகப் பேசத் தொடங்கினார் சுசீலா.

“‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ இந்த இரண்டு நாவல்களுமே சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்டவை. மொழி, கலாசாரங்களில் நம்மிடம் இருந்து மிகவும் விலகி இருப்பவை. காலம், கலாசாரம், மொழி எல்லாமே முற்றிலும் அந்நியப்பட்டவை. மொழிபெயர்க்கும்போது இதனால் ஏற்பட்ட சவால்கள் எப்படிப்பட்டவை?”

“‘ஒரு கலாசாரச் சூழலில் இருந்து மற்றொரு கலாசாரச் சூழலுக்கு ஒரு படைப்பைப் பரிவுடன் விரல் பற்றி இட்டுச்செல்வதுதான் மொழிபெயர்ப்பின் தலையாய சவால்’ என்கிறார் ஜெயகாந்தனின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன். ‘அசடன்’ படிக்கும்போது அதை நீங்கள் உணர முடியும். அயல்நாட்டு இலக்கியங்களில் இடம்பெறும் பெயர்கள், குடும்பத் துணைப் பெயர்கள் மற்றும் சுருக்கமாகக் குறிப்பிடும் செல்லப் பெயர்கள், பல ஊர்ப் பெயர்கள், தட்பவெப்ப சூழல்கள், உணவு வகைகள் இவை நம்மை அந்த நாவலுக்குள் செல்லவிடாமல் தடுப்பது போன்ற ஒரு நிலை ஏற்படுத்துவது இயல்புதான். ‘விசித்திர விபரீத உடையுடன், பாஷையுடன் காணப்பட்டாலும் அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே மொழியாக்கம் முயற்சி செய்கிறது’ என்கிறார் புதுமைப்பித்தன். ஆக, அந்தக் கட்டத்தை மட்டும் தாண்டிச்சென்றுவிட்டால், எங்கும் வியாபித்துக் கிடக்கும் மனித இயற்கையும் உணர்வுகளுமே பிறமொழி நாவல்களிலும் உயிர்த் துடிப்போடு விரிந்துகிடப்பதை தரிசிக்க முடியும்!”

“அந்த நாவல்களின் உணர்வுச் சித்திரிப்புகளை இங்கே பொருத்திப் பார்க்க முடியுமா?'”

“ஒரு குற்றத்தைப் புரிந்துவிட்டு அதையே தண்டனையாய்க் கொண்டு அவதிப்படும் ‘குற்றமும் தண்டனையும்’ ரஸ்கோல்நிகோவ் போன்றவர்கள் நாடு, இனம், மொழி என்ற பேதமின்றி நம்மைச் சுற்றி நிறைந்திருப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ‘அசடன்’ நாவலில் பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து, அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைத்து நினைத்தே தன்னிரக்கம் கொண்டவளாகிறாள் ஒருத்தி. முறையான திருமண வாழ்வுக்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்கு தகுதியற்றவளாக தன்னைக் கருதி, ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்துவிட்டு ஓடிப்போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா, ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துகிறாள்.
ஒரு சில கலாசார வேறுபாடுகளை மட்டும் சற்று கவனத்தோடு உள்வாங்கிக்கொண்டு நாவலின் முதல் 50 பக்கங்களைக் கடந்துவிட்டால் உணர்ச்சிமயமானதும் நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஓர் உலகம் அங்கே காத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்!”

“உங்களின் அடுத்த முயற்சிகள் என்ன?”

“வாழ்க்கை வரலாற்றுப் பாணியிலான புனைவு ஒன்றை எழுதி முடித்து அதைச் செம்மைப்படுத்தும் பணியில் இருக்கிறேன். அதை அச்சுக்கு அனுப்பியதும் தமிழில் இதுவரை பெயர்க்கப்படாத இன்னும் சில உலகப்பேரிலக்கியங்களை மொழியாக்க விருப்பம். குறிப்பாக, தஸ்தயெவ்ஸ்கியின் ‘கீழுலகின் குறிப்புக்களை‘ மொழிபெயர்க்கத் திட்டமிட்டிருக்கிறேன்!”

“பெண் எழுத்தாளர்களுக்கான படைப்புச் சுதந்திரம் எப்படி உள்ளது?”

“படைப்புச் சுதந்திரம் என்பது தனிப்பட்ட படைப்பாளிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்தது மட்டுமே. அதில் ஆண், பெண் என்ற பாலினப் பாகுபாடுகளுக்கு இடமில்லை. அவரவர் முன்வைக்க விரும்பும் கருத்தைச் சொல்லும் உரிமையும் சுதந்திரமும் அனைவருக்கும் உண்டு!”

“நீங்கள் போற்றும் பெண் எழுத்தாளர்கள்?”

ஆர். சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், காவேரி லட்சுமி கண்ணன், அம்பை, கிருத்திகா, வாஸந்தி, பாமா, சிவகாமி ஆகியோர் என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய பெண் படைப்பாளிகள். சமகாலப் பெண் படைப்பாளிகளில் கவிஞர்கள் மிகுந்திருக்கும் அளவுக்குப் புனைகதை எழுத்தாளர்கள் அதிகமில்லை என்பது சற்றே வருத்தமும் சோர்வும் அளிக்கிறது.”

“அரசாங்கம், சினிமாவுக்கும் மதுவுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கலைக்கும் இலக்கியத்துக்கு கொடுப்பதில்லையே?”

“சினிமாவும் மதுவும் அளிக்கும் வருவாயைக் கலைகளும் இலக்கியங்களும் அளிப்பதில்லை அல்லவா? வருங்காலத் தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக உருவாக்க வேண்டும் என்ற மெய்யான ஆர்வமும், தரமான கலை இலக்கியங்கள் வழியாகத்தான் அவற்றை சாதிக்க முடியும் என்ற விழிப்போடுகூடிய முனைப்பும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஏற்படும் வரையில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் தரமான படைப்புகளை அரசு நூலகங்களுக்கு வாங்கினால் கூட அது எழுத்தாளர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கும்.”


தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

தொடர்புடைய சுட்டி: எம்.ஏ. சுசீலாவின் தளம்

வெ.சா. கட்டுரை – “தமிழ் இலக்கியம்: ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும்”

venkat_swaminathanஇணைய இதழான சொல்வனத்தில் வெங்கட் சாமினாதன் தமிழ் இலக்கியம் – ஐம்பது வருட வளர்ச்சியும் மாற்றங்களும் (பகுதி 1, பகுதி 2, பகுதி 3) என்ற தலைப்பில் தன் பழைய கட்டுரை ஒன்றை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கழுகுப் பார்வை (bird’s eyeview) கிடைக்கிறது. படியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

எண்பதுகளில் தமிழ் இலக்கியம் (பகுதி 1, பகுதி 2) என்ற கட்டுரையையும் இதன் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்.


தொகுக்க்ப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்

ரெயில்வே ஆன்ட்டி

Mohan_Sikkab_a_passThe Railway Aunty விறுவிறுவென்று செல்லும் pulp சிறுகதை. ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு pulp சிறுகதையைப் படிப்பதாலோ என்னவோ பிடித்திருக்கிறது. B.A. Pass என்று திரைப்படமாகவும் வந்திருக்கிறது. படித்துப் பாருங்களேன்!

நண்பர் நட்பாஸ் இந்தக் கதையை சரவணன் என்பவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் என்று தகவல் தருகிறார்.


தொகுக்கப்பட்ட பக்கம்: எழுத்துக்கள்