எனக்கு வரலாற்றில் ஆர்வம் ஏற்பட்டது கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகுதான். பொதுவாக இந்திய வரலாறு என்பது மன்னர்களின் வம்சாவளியும், அவர்களின் மெய்க்கீர்த்தியும்தான். ஆனால் அதுவும் என்னை பல சமயங்களில் குழப்பும். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் யார் மொகலாய மன்னர் என்று பிடிபடாது. ஆதி சங்கரர் காலத்தில் (ஆதி சங்கரர் காலம் எது என்றே சர்ச்சைகள் உண்டு என்று நினைவு) பல்லவ அரசு இருந்ததா என்றால் குழப்பம்தான். சேரர் குலத்தில் குலசேகர ஆழ்வார் எங்கே வருகிறார் என்று தெரியாது. அப்புறம் உள்ளூர் வரலாறு தெரியவே வராது. நான் சென்னை, அதன் புறநகர் பகுதிகளில்தான் நிறைய நாள் வாழ்ந்திருக்கிறேன். பல்லாவரத்தில் பல்லவர்களின் அடையாளம் ஏதாவது உண்டா என்று சிறு வயதில் தேடத் தோன்றியதில்லை; கூடுவாஞ்சேரி (நந்திவரம்) சிவன் கோவில் பழமையானது போலத்தான் தோன்றியது ஆனால் அதை யார், எப்போது கட்டியது என்று கேட்கத் தோன்றியதில்லை.
இப்படிப்பட்டவர்களுக்காகவே எழுதப்பட்ட புத்தகமோ என்று தஞ்சை வெ. கோபாலன் எழுதிய இந்தப் புத்தகம் தோன்ற வைக்கிறது. தஞ்சாவூரில் எப்படி மராத்தியர்கள் வந்தார்கள், யாருக்கப்புறம் யார் ராஜாவானது என்ற அடிப்படைத் தகவல்கள் மட்டுமே உள்ள புத்தகம்தான். ஆனால் தகவல்கள் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூர் அடையாளங்கள், தமிழகத்து சக மன்னர்கள் எல்லாம் விவரிக்கப்படுகின்றன. மெக்கன்சி சுவடிகள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை அடிப்படையாக வைத்து இந்தப் புத்தகத்தை எழுதி இருக்கிறார்.
நான் இணையத்தில் படித்தேன். புத்தகமாகவும் வந்திருக்கிறது. (முகப்பில் சால்வடார் டாலியின் ஓவியம் எதற்கு என்பது புரியவில்லை) இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் சுவாரசியப்படும் என்பதை அழுத்திச் சொல்லிவிடுகிறேன்.
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் அபுனைவுகள்